25 Sept 2019

விளக்க முடியா வாழ்க்கை



செய்யு - 218
            வாழ்க்கையில நல்லதும் நடக்குது. கெட்டதும் நடக்குது. தொடர்ந்து கெட்டதா நடக்குறப்போ ஒரு நல்லது நடக்காதாங்ற எதிர்பார்ப்புதான் அவ்வளவு கெட்டதையும் தாண்டி மனுஷனை வாழ வைக்குது.
            நாம்ம சந்திக்கிற மனிதர்கள்ல நல்லவங்களும் சாவுறாங்க. கெட்டவங்களும் சாவுறாங்க. நல்லவங்க என்னமோ சீக்கிரமே செத்துடறது போலவும், கெட்டவங்க எல்லாம் சொகமா வாழ்ந்து ஆண்டு அனுபவிச்சு சாவுறது போலவும் தோணுது. அப்படி அல்பாயுசுள நல்லவங்க போயிச் சேர்ந்தாலும் எவனாவது ஒரு நல்லவனாவது கெட்டவனா வாழ்றது தப்புன்னு காட்டி, நல்லா நிலைச்சி வாழ்ந்து காம்பிப்பாங்ற நம்பிக்கைதான் நல்லவனா வாழணுங்ற எண்ணத்தைக் கொடுக்குது.
            இஸ்மாயிலு வாத்தியாரோட மரணத்துல இந்த ரெண்டுமே இருக்குது. அவருக்குச் சாகக் கூடிய வயசு இல்ல. அவரு சாவ வேண்டிய ஆளும் இல்ல. இன்னும் பத்து பன்னெண்டு வருஷத்துக்கு மேல வேலைப் பார்த்து சம்பாதிக்க வேண்டிய சர்வீஸூ இருக்கு. அவரோட மனைவிக்கு அவரையும், வீட்டையும், பிள்ளைங்களையும் விட்டா எதுவுமே தெரியாது. இதுல மூணு பொம்பளைப் புள்ளைகளை வெச்சி எப்படி கரை சேர்க்கப் போறாங்களோ அப்பிடிங்ற கவலை அவங்களை விட வாத்தியார்மார்களுக்கு அதிகமா வந்துப் போச்சி. டிஸ்மிஸ் ஆகாம இருந்து இஸ்மாயிலு வாத்தியாரு இறந்து போயிருந்தா அவரு வேலைக்காகக் கிடைக்க வேண்டிய பணப்பலன்கள், குடும்ப ஓய்வூதியம்னு நெறைய விசயங்கள்ல உதவ முடியும். இப்போ இருக்குற நிலமையில என்ன பண்றதுன்னு தெரியாம எல்லாரும் முழி பிதுங்கித்தான் நின்னாங்க.
            இஸ்மாயிலு வாத்தியாரு மாதிரி வேலை பார்க்கணும், பள்ளிக்கூடம் போவணும், பாடம் நடத்துணும் அப்படின்னு நெனைச்சுகிட்டு இருந்த நிறைய வாத்தியாருமாருங்க இப்போ யோசிக்கிறாங்க. இவரு போல நேர்மையா இருந்து நேர்மையா வேலைப் பார்த்தா இப்படித்தான் ஆகும் போலன்னு. அவரு குடும்பமேயில்ல இப்போ நடுத்தெருவுல நிக்குது. ஊருல, தெருவுல அவரோட குடும்பத்துக்கு எல்லாரும் அனுசரணையாத்தான் இருக்காங்க. அவருகிட்ட படிச்சு நல்ல நிலையில இருக்குற பிள்ளைங்க ஏதோ உதவி செஞ்சிட்டுத்தான் இருக்காங்க. இருந்தாலும் எத்தனை நாளு அப்படிச் செய்ய முடியும்ங்றது வேற ஒரு கேள்வியால்ல மனசுல நிக்குது.
            இஸ்மாயிலு வாத்தியாரோட சாவுக்குப் பிறவு சுப்பு வாத்தியாரு ஒரு முடிவுக்கு வந்தாரு. இனுமே கொஞ்சம் கூட படுத்துக் கிடக்கக் கூடாதுன்னு. ரொம்ப படுத்துக் கிடந்ததுக்கு பொண்டாட்டியும், புள்ளையுமா சேர்ந்து ஒரு வித்தியாசமான பிரச்சனையை உண்டு பண்ணி அது ஒரு வகையா போயிட்டு இருக்கு. அத்தோட ரொம்ப படுத்துக் கிடந்ததைக் குறைச்ச சுப்பு வாத்தியாரு கொஞ்சமா படுத்துக் கிடக்க ஆரம்பிச்சாரு. இப்போ அதுவும் வேண்டாங்ற முடிவுக்கு வந்துட்டாரு. எழுந்து நடமாட ஆரம்பிக்கிறாரு. ஏதாவது செய்யணும்னு ‍தோணுது. ஆனா என்ன செய்யுறதுன்னு ஒரு யோசனை பிடிபடல. இத்தனை வருஷமா புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த அவரோட மூளை அவருக்கு ஒரு பாடம் சொல்லி வழிய காட்டிக் கொடுக்குறதுக்கு ரொம்பவே யோசிக்குது. கிட்டத்தட்ட டிஸ்மிஸ் ஆனதிலேந்து நாளு கணக்கு, வாரக் கணக்கு, மாசத்த கடக்குற அளவுக்கு காலம் ஓடிட்டு இருக்குது.
            அப்போ கோர்ட்டுல ஓடிகிட்ட இருந்த வழக்குல, எப்படி விளக்கம் எதுவும் கேட்காம ஒரு நேரத்துல ஒரு லட்சத்து எழுத்து ஆறாயிரம் பேரை டிஸ்மிஸ் பண்ணீங்கங்ற கேள்வி வந்துப் போகுது.
            உடனே அரசாங்கம் டிஸ்மிஸ் பண்ண ஆளுங்க ஒவ்வொருத்தருக்கும் அதுக்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்குது. அந்த நோட்டீஸைக் கொடுக்கக் கூட அப்போ அரசாங்க ஆபீஸ்ல ஆளுங்க இல்ல. மூவாயிரத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில அந்த நேரத்துல போட்ட ரண்டு பேருதான் மன்னார்குடி ஆபீஸ்ல உட்காந்து நோட்டீஸை எல்லாருக்கும் கொடுக்க முடியாம தவிச்சுகிட்டு இருக்காங்க. அதைப் பார்த்த டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியரு ஆட்களும், வாத்தியார்களும் உதவி பண்றாங்க. அதாவது அவங்களுக்குக் கொடுக்க வேண்டிய நோட்டீஸை அவங்களே அவங்கவங்ளுக்குக் கொடுக்க தயாரு பண்றாங்க. அதாவது தன்னோட விரலை எடுத்து தன்னோட கண்ணைக் குத்திக்கிற மாதிரி அவங்க இப்படிப் பண்றது வேடிக்கையாத்தான் இருக்குது. வேற வழி என்ன இருக்கு?
            பொதுவா இந்த மாதிரி நோட்டீஸ் வீடு தேடி வரும். யாரும் இப்படி ஆபீஸூ போயி என்னவோ பரிசு கொடுக்குறதை வாங்குற கணக்கா யாரும் வாங்க மாட்டாங்க. நிலமை இப்போ அப்படி இல்லையே. அதால எல்லாரும் அவங்கவங்க வேலை பார்க்குற வட்டாரத்துல வர்ற ஹெட் ஆபீஸ்க்குப் போயி அதெ வாங்கறதுல மும்மரம் காட்டுறாங்க. எப்படியாவது அந்த விளக்கம் கேட்குற நோட்டீஸை வாங்கி விளக்கம் கொடுத்தா மறுபடியும் வேலையில சேர்த்துப்பாங்களா அப்பிடிங்ற தவிப்புதாம் அதுக்குக் காரணம்.
            விளக்கம் கேட்குற நோட்டீஸை வாங்கிகிட்டு ஒவ்வொருத்தரும் விளக்கம் கொடுக்க ஓடுன ஓட்டம் இருக்கே. அப்படி பரபரப்பும் படபடப்புமா ஓடுறாங்க. ஒரு வாத்தியாரு அந்த நாள்ல பெட்ல இருந்ததா சர்டிபிகேட் வாங்கி விளக்கம் கொடுக்குறாரு. இன்னோரு வாத்தியாரு உறவு வகையில துக்கம் ஆகிப் போச்சு. அந்தத் துக்கம், அதோட கருமாதின்னு துக்கத்துல மீள முடியாம அதால வேலைக்கு வர முடியாமப் போச்சின்னு கருமாதி பத்திரிகை வரைக்கும் அடிச்சு விளக்கம் கொடுக்குறாரு. மத்த சில வாத்தியாருங்க நாங்க பணியிலத்தாம் இருந்தோம், தவறுதலா பணியில இல்லாதது போல டிஸ்மிஸ் ஆயிட்டோம்ங்ற மாதிரி விளக்கம் கொடுக்குறாங்க. பெரும்பாலான வாத்தியாருங்க, அரசு ஊழியருங்க உடம்புக்கு முடியல, வீட்ல இருக்குறவங்களுக்கு உடம்பு சரியில்ல, உறவு முறையில துக்கம், பணியிலத்தாம் இருந்தோம்னு இப்படி பலவிதமா விளக்கம் கொடுக்க, இதுக்கு எல்லாம் விளக்கமும் கொடுக்க முடியாது, அதுக்கான நோட்டீஸை கையில வாங்கவும் முடியாதுன்னு போனவங்களும் இருக்காங்க. இதுல சில பேரு தைரியமா நோட்டீஸை வாங்கி அதை வக்கீலுகிட்ட எடுத்துகிட்டுப் போயி அது மூலமா விளக்கம் கொடுக்கலாம்னு போனாங்க. வக்கீல்கிட்ட கொடுத்து இந்த நோட்டீஸூக்கு எதிரா அரசாங்கத்துக்கு எதிரா கேஸூ போடுங்கன்னு சொன்னவங்களும் அதுல சில பேரு இருந்தாங்க. இப்படி பல விதமா விளக்கம் கொடுக்குற சம்பவம் நடந்துச்சு.
            சுப்பு வாத்தியாரு, விநாயகம் வாத்தியாருன்னு மன்னார்குடிக்குக் கிழக்கு இருந்த ஆட்கள் எல்லாம் ஒரு யோசனை பண்ணி அவங்கவங்க சொந்த வகையில முன்னாடியே செத்துப் போன ஒரு ஆளோட பேரைப் போட்டு அந்தச் செத்துப் போன ஆளாளுக்கு கருமாதி காரியத்துல கலந்துக்குற மாதிரி ஆயிடுச்சின்னு அதுக்கு ஆதாராம காட்டுறது போல பத்துப் பதினைஞ்சி கருமாதி பத்திரிகையை பிரஸ்ல அச்சடிச்சு  அதை வெச்சி அந்த நோட்டீஸ்க்கு விளக்கம் கொடுக்க ஏற்பாடு பண்றாங்க. அப்படி யோசிச்சி இவங்க தயாரு பண்றதுக்கே ரெண்டு நாளைக்கு மேல ஆயி ஒரு வழியா விளக்கத்தைத் தயாரு பண்ணிட்டுப் போறதுக்குள்ள, டெல்லியில சுப்ரீம் கோர்ட்டுல இப்படியெல்லாம் பணிநீக்கம் செய்யுறது ஏத்துக்கிறதுக்கு இல்லன்னு வாதம் கிளம்பி அது தொடர்பா தமிழ்நாட்டு அரசாங்கத்த கோர்ட்டுலேந்து விளக்கம் கேட்குறாங்க. கேஸூ அரசு ஊழியருங்க வாத்தியாருங்க பக்கம் தீர்பாகுங்ற நெலமை உண்டாகி அதுக்குள்ள தமிழ்நாடு அரசாங்கம் டிஸ்மிஸ் செஞ்ச அத்தனைப் பேரையும் மறுபடியும் பணியில சேர்த்துக்கிறதா சொல்லுறாங்க.
            இங்க சுப்பு வாத்தியாரு, விநாயகம் வாத்தியாரு உட்பட பல வாத்தியாருங்க பல விதமா தயாரு பண்ணிட்டுப் போன விளக்க நோட்டீஸைக் கொடுக்க வாய்ப்பில்லாம, அவங்க வேலையில சேர்றதுக்கான ஆர்டரை வாங்கிட்டு வராங்க. அதாவது அவங்க மறுபடியும் புதுசா வேலைக்குச் சேர்றது மாதிரி ஆர்டரோட. வேலையில மொத மொதலா வேலைக்குச் சேர்ந்தா என்ன சம்பளமோ அந்தச் சம்பளம்தான் இனுமே அவங்களுக்கு. அப்படித்தான் மொதல்ல ஆர்டர் போட்டுக் கொடுத்தாங்க. ஏதோ இப்படியாவது வேலை கெடைச்சுதுன்னு சுப்பு வாத்தியாருக்குல்லாம் சந்தோஷம்னாலும் பல பேருக்கு இது நாளு வரைக்கும் வாங்கிட்டு இருந்த கிரேடு சம்பளம், இன்சென்டிவ்லாம் போயிடுச்சேன்னு வருத்தமாவும் இருந்திச்சி.
            நெலமை மொதல்ல அப்படி இருந்தாலும் பிற்பாடு அரசாங்கத்துக்கும், ஜாக்டோ ஜியோவுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில அது சரியாச்சிதாம். ஆனா கைது பண்ணி ஜெயிலுக்குப் போன வாத்தியார்களையும், அரசு ஊழியர்களையும் அப்போ விடுவிச்சாங்களே தவிர உடனடியா வேலையில சேர்த்துக்கல. அதால ஜாக்டோ ஜியோ சார்புல வேலைக்குச் சேர்ந்த அத்தனை ஊழியர்கள்ட்டேயிருந்து மாசா மாசம் சம்பளம் வாங்குன உடனயே ஆளுக்கு இவ்வளவுன்னு ஒரு தொகையைப் பிடிச்சி அதுலேந்து அவங்களுக்கு வேலை கிடைக்குற வரைக்கும் பணம் கொடுக்குறதுன்னு முடிவாயிடுச்சி. அத்தோட ஒரு சில பேரு அந்தப் பங்குத் தொகையையும் கொடுத்து, நேர்லயும் அப்படி வேலைக் கிடைக்காத அந்த ஆளுங்களைப் பார்த்து கையில ஆயிரம், ஐநூறுன்னு கொடுத்து ஆறுதலும் சொல்லிட்டு வந்தாங்க.
            அந்த நேரத்துல விளக்கம் தயாரு பண்ணியும் அதைக் கொடுக்க அவசியம் இல்லாம போயிட்ட நோட்டீஸ் எல்லாரு கையிலயும் இருந்துச்சி. அது அந்த நோட்டீஸ்க்கு மட்டுமா பொருந்தும்? வாழ்க்கைக்கும்தானே. அதுவும் பல விதமாக விளக்கம் கேட்குது. நாம்ம விளக்கம் கொடுக்கறதுக்குள்ள அது வேற ஒரு திசையில ஓடிப் போவுது. விளக்க முடியா வாழ்க்தைதாம் இது.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...