1 Sept 2019

படி தாண்டல்



செய்யு - 194
            இந்தச் சமூகத்தில் ஒரு சங்கதி என்னன்னா... ஆம்பளைத் தப்புப் பண்ணுனா அறிவுரைச் சொல்லித் திருத்தப் பார்ப்பாங்க. பொம்பளைத் தப்புப் பண்ணுனா அடிச்சே கொல்லப் பார்ப்பாங்க. ஆம்பளைப் பண்ற தப்புக்கு அவ்வளவா தப்புக் கணக்குச் சேராது. ஆனா பொம்பளைப் பண்ற தப்புக்குத் தப்புக் கணக்கு அதிகம். ஆம்பளைக்குத் தேவையில்லாத கற்பு பொம்பளைக்கு அவசியம் தேவைன்னு எதிர்பார்ப்பாங்க. இதெல்லாம் பஞ்சாயத்து ஆவுறப்ப பொம்பளைக்கு அவ்சாரின்னு பேரு வைக்கிற மாரி ஆம்பளைக்கு ஒரு பேரு இருக்கான்னு கேட்டா அது இல்லேன்னுதான் சொல்லணும். அதுக்காக பொம்பளைப் பண்ற தப்பைக் கொறைச்சுப் பாக்கணும்னோ, ஆம்பளைப் பண்ற தப்பை அதிகமா பாக்கணும்னு அர்த்தமில்லன்னு உங்களுக்குத் தெரியும். தப்பு யாரு பண்ணாலும் அது ஆம்பளையோ, பொம்பளையோ அதுல ஒரு சமமான பார்வை இருக்கணுமில்ல. அது நம்மச் சமூகத்துல இல்லங்றதுதாம் நாம்ம பேச வர்ற சங்கதி.
            இப்போ வேக வேகமாக உள்ளே வந்து பார்க்குறான் சித்துவீரன். அவன் பாக்கற பார்வை அடிச்ச அடியில சுந்தரி உசுரோட இருக்காளா? இல்லையா?ங்றத பாக்குற மாரிதாம் இருக்கு. அந்த வூட்டோட உள்ளறைக்குள்ள மெத்தைப் போட்ட கட்டிலில்ல நினைவு இழந்து கிடக்கிறா சுந்தரி. அவன் அடிச்ச அடிங்க இருக்கே. அது இப்போதுதான் வேலை செய்ய ஆரம்பிச்சு இருக்கு. அடி வாங்குறப்ப வலிக்குற வலிய விட, வாங்குன பெற்பாடு வலிக்கும் பாருங்க ஒரு வலி. அதெ தாங்குறது ரொம்ப செரமம். அவளைப் பார்க்கையில்ல உசுரு போன பிணத்தைப் போல தோற்றம் ஏற்படுது சித்துவீரனுக்கு. அவள் செத்துட்டாளாங்ற தோற்றம் மயக்கமும் சில நேரங்களில் ஏற்படுது.
            "சுந்தரி!" ங்கிறான் சித்துவீரன்.
            அவள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் படுத்துக் கிடக்கிறா.
            செத்துட்டாளோ என்கிற பயத்தில தொட்டுப் பார்க்கிறான். அவள் தொட்ட இடத்தை இழுத்துக் கொண்டு சுருட்டிகிட்டுப் படுக்ககுறா. "இதுக்கொண்ணும் கொறைச்சலில்ல தேவிடியாளுக்கு!" என்று சன்னமாக முணகுறான் சித்துவீரன்.
            "அதாங் தேவிடியான்னு தெரியுதில்ல. பெறவு ஏம்டா வெச்சிருக்கா. கொண்டு போயி அவங் கூடவே வுட வேண்டியத்தானடா!" என்கிறா சுந்தரியும் சன்னமாக.
            "இவ்ளோ அடி வாங்கியும் கொழுப்பு அடங்குதா பாரு! அரிப்பெடுத்த கழுதே!" என்று படுத்திருக்கும் சுந்தரியை கட்டிலில் ஏறி நின்று மிதி மிதியென்று மிதிக்கிறான். அவனோட எந்த மிதியையும் தடுக்கணும்னு சுந்தரிக்கு தோணல. ஒனக்கு அடிக்கிறத. மிதிக்கிறதத் தவுர வேற என்னடா தெரியங்குற மாரி படுத்திருக்கா. அத்தனை மிதிகளையும் வாங்கிக்கிட்டு வலியில லேசாக முணக மட்டும் செய்யுறா. மிதிக்கிறதோட வலியைச் சில நேரங்கள்ல அவளால தாங்க முடியலத்தான். அப்போ கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்குது. ஆனாலும் எவ்வளவு நேரந்தான் மிதிக்க முடியும்? மிதிச்சதோட களைப்பு தாங்க முடியாம சித்துவீரன் கட்டில்லேர்ந்து மிதிக்கிறத விட்டுட்டு கீழே இறங்குறான்.
            "இவ்ளோ மிதி மிதிக்கிறதுக்கு ரண்டு நிமிஷம் மேல ஏறிப் படுக்குறது!" என்கிறா சுந்தரி நக்கலா சிரிச்சுகிட்டே.
            "அடே பொட்டச் சிறுக்கி எம்மாம் திமிருடி ஒனக்கு?" என்று சமையல்கட்டுப் பக்கம் ஓடிப் போய் குடத்தைத் தூக்கிக் கொண்டு வர்றான் சித்துவீரன். அதை அப்படியே அவள் மேல் ஊத்துறான். சுந்தரியும் நனைஞ்சு, கட்டிலில் போட்டிருக்கும் மெத்தையும் நனைஞ்சு கந்தக் கோலமாயித் தண்ணீர் சொட்ட சொட்ட எழுந்து நிற்கிறா அவள்.
            "முடியலன்னா பேசாமப் போயித் தொலைய வேண்டியதுதான. எதுக்கு இந்த வேல?" என்கிறா சுந்தரி.
            "கெட்ட கோவத்த கெளப்புறே! இஞ்ஞயே இன்னிக்கு ஒனக்கு சமாதியானாலும் ஆனதுதாம் பாத்துக்கோ!" என்கிறான் சித்துவீரன்.
            "அதெயாவது செஞ்சுத் தொலயேம்டா. அதுக்காவது ஒடம்புல தெம்பு இருக்கா. யில்ல லேகிகயம் எதாச்சிம் வாங்கித் தின்னுட்டுதாம் பண்ணுவீயா?"
            "ஏய் கண்டார... நீயிச் செரிப்பட்டு வர மாட்டேடி. கெளம்புடி ஒம் அப்பம் வூட்டுக்கு. கொண்டுப் போயி வுட்டுட்டு ஒன்னய அத்து வுட்டுட்டு வாரேம். அப்பதாம் செரிபட்டு வருவே நீயி! இப்பவே கெளம்பு. கதெய முடிக்கிறேம் ஒன்னய. கெளம்புடி ஊரு மேயுற நாதாரி நாயே! கெளம்புடி!" என்கிறான் சித்துவீரன்.
            "கெளம்புறதுக்கு ன்னா இருக்கு. வா இப்டியே வாரேம் வா. நீயி ன்னா நம்மள கொண்டு போயி வுடறது. நாமளே போயிக்கிறேம்." என்கிறா சுந்தரி.
            "ஆம்மா நீயி ன்னா படி தாண்டா பத்தினியா ன்னா? ஒனக்கு ஒண்ணும் காவலு போட்டுட்டு நாம்ம அஞ்ஞ வரல. கொண்டாந்து வுட்டுட்டு அத்துக்கப் போறேம்னு சொல்லத்தான் வாரேம்டி தே.... நாயே! ஒனக்கு ன்னா மானமா வெட்கமா சூடா சொரனையா ன்னா இருக்கு? இப்டியே கெளம்பு வருவே நீயி! அசிங்கம் புடிச்சிவதாம்டி நீயி. ச்சேய் போயி நல்லதா எதாச்சி உடுத்திட்டு வா. இப்டியே கவர்ச்சிக் கன்னி மாரி வரேங்றீயே! நாயிச் சிறுக்கிதானடி நீயி!" த்துப்பூ என்று காறித் துப்புறான் சித்துவீரன்.
            "நாயி அது இதுன்னுலாம் பேசாதே. அது கூட தெருக்கு தெரு நல்லாத்தாம்டா செஞ்சிகிட்டு கெடக்கு. ஒன்னய மாரியா? குளிருல செத்தப் பொணமாட்டா கெடக்குது?" என்கிறா சுந்தரி.
            "கொன்னே புடுவேம் பாத்துக்கோ. போயி ஒழுங்கு மரிவாதியா கெளம்பு வர்ற வழியப் பாரு." என்று உதைத்துத் தள்ளுறான் சித்துவீரன்.
            "ஒன்னய நமக்குப் பிடிக்கலடா சொம்புப் பயலே! எப்போ அத்து வுடறேன்னு சொல்லிட்டீயோ இனுமே ஒடம்புல கைய வெச்சே நாறிப் பூடுவே பாத்துக்கோ! ஒனக்குலாம் எதுக்கு கையும் காலும் வேல செய்யுது? எது வேல செய்யணும்மோ அது வேல செய்யல. நீயில்லாம் ஒரு ஆம்பளன்னு கைலிய கட்டிட்டுக் கெளம்பிட்டே. நீயி எதுக்கு நம்மள தாலி கட்டுனேன்னு இப்பதான தெரியுது. வா கொண்டாந்து விடுவேல்ல ஒண்ணு பாக்கியில்லாம பச்சப் பச்சயா சொல்லல. அப்ப இருக்கடா ஒனக்கு. போட்டு ன்னா அடி அடிக்குறே? ஒன்னய ன்னடா அஞ்ஞ போயி நாறடிக்கிறது? இஞ்ஞயே இந்த ஊர்லயே நாறடிக்கிறேம். வாடா நடுரோட்டுக்கு வாடா!" என்று கிளம்பும் சுந்தரியை அப்படியே வாயைப் பொத்தி கையாலும் காலாலும் முறுக்கிப் பிடிக்றான் சித்துவீரன்.
            "போயிச் சொல்லு! லாலு சித்தப்பா மவனோட செல்போன ஆட்டயப் போட்டில்ல. அதெ மொதல்ல அதுக்குப் போன போட்டுச் சொல்றேம். அப்பதாம்டி நீயி அடங்கிப் போவே!" என்கிறான் சித்துவீரன்.
            "பொட்டச்சி ன்னத்தா வைக்கிறேன்னு வாசம் பிடிச்சிட்டே அலைவியாடா நாறப் பயலே! அதல்லாம் பிடிக்கறே? பொட்டச்சியை எஞ்ஞ பிடிக்கணுமோ அஞ்ஞப் பிடிக்கமாட்டே?" என்கிறா சுந்தரி சித்துவீரன் வாயைப் பொத்தியிருப்பதையும் பொருட்படுத்தாமல் திமிறிக் கொண்டபடி.
            "வாயி ஒனக்கு ரொம்ப அதிகமாச்சிடி!" என்று சுந்தரியை அப்படியே சுவரோடு வைத்து அணைத்து சுவரில் முன்னும் பின்னுமாக மோதுகிறான் சித்துவீரன்.
            "ஒரு பொட்டச்சியோட படுக்க முடியலேன்னா அவ்வேளே அடிச்சே கொன்னுடுவீயாடா?" என்கிறா சுந்தரி சுவரில் மோதுவதைப் பொருட்படுத்தாமல்.
            "ச்சேய்! ஒங் கூட இனுமே எவம்டி படுப்பாம்! எப்பப் பாரு அதெப் பத்தியே பேசிகிட்டு. நீயி ஒருத்தங் கூட படுத்தாத்தானே? ஊர்ல உள்ளவம் ஒருத்தம் பாக்கியில்லாம படுத்தவத்தானே! ப்பே! அய்யோ கடவுளே! என்னய ஏம் படைச்சே? இவ்வளே ஏம் படைச்சே? இவ்வே அசிங்கம்! சாக்கடை! அய்யோ அதல்லாம் விட மோசம்!" என்றபடி அவளைக் கீழே தள்ளி விட்டு நடுக்கூடத்தில் வந்து உட்கார்கிறான் சித்துவீரன்.
            சுந்தரிக்கு இப்போ எழுந்திரிக்க முடியல. கேரியாக இருக்கிது. மயக்கம் வருவதைப் போல இருக்கிது. அப்படியே வாரிக் காலைச் சுருட்டிக் கொண்டு அங்கேயே விழுந்து படுக்கிறா. படுத்தவ படுத்தவதான். கண்ணுல விழிப்புத் தட்டிய போது மணி பதினொண்ணு ஆவுது. காலைப் பொழுதுல வாசலு தெளிக்கவும் இல்ல. கூட்டவும் இல்ல. அப்படியே கெடக்குது தேமேன்னு.
            நடுக்கூடத்தில உட்கார்ந்திருந்த சித்துவீரன் ஓட்டலில் இட்டிலி வாங்கி வந்து சாப்பிட்டிருக்கிறான். அது நல்லா தெரியுது. பாலிதீன் பையும், சட்டினி, சாம்பார் ஊற்றிய பைகளும் மூலைக்கு ஒண்ணாய் சாப்பிட்ட பின் சிதிறிக் கிடக்குது. இவள் கண் முழித்ததும் இவளை நோக்கி நாலு இட்டிலி கட்டி, ஒரு சட்டினிப் பாக்கெட்டும், சாம்பார் பாக்கெட்டும் போடப்பட்டிருந்த பாலிதீன் பையைத் தூக்கி வீசுறான். அவள் அதைச் சீந்தக் கூட இல்லை. தலைமுடியை வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறா. கொல்லைப் பக்கம் போயி ஒரு குளியலைப் போட்டு விட்டு வந்தவ, புடவையைக் கட்டிக் கொண்டு, ஒரு பையில தன்னோடதையெல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பத் தயாராகிட்டா. அவள் பையோடு வந்து நிப்பதைப் பார்த்ததும் சித்துவீரன் சொல்றான், "இப்போ கூட ஒண்ணும் கெட்டுப் போவல. இனுமே அவங் கூட பழக மாட்டேம்னு சொல்லு! மன்னிச்சி ஒன்னய ஏத்துக்கிறேம். ஒன்னய வெச்சிக்கிறேம்!" என்கிறான் சித்துவீரன்.
            "ச்சேய் நீயெல்லாம் ஒரு ஆம்பள!" என்று எச்சிலை காறிக் கொண்டு வந்து அவனுக்குப் பக்கத்தில் துப்புறா சுந்தரி.
            சித்துவீரன் முறைச்சுகிட்டே எழுந்திரிச்சி வீட்டுக்கு வெளியே வர்றான். சுந்தரியும் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே செல்றா. இவன் வீட்டைப் பூட்டிக் கொண்டு வரதுக்குள்ள அவள் வேக வேகமாக நடையைக் கட்டுகறா. இவன் வீட்டைப் பூட்டி விட்டு அவள் பின்னே வேக வேகமாக நடக்கிறான்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...