15 Sept 2019

ரோஷப்பட்டவனுக்கு அகப்பட்ட குளத்துக்கரை!



செய்யு - 208
            தன்னைப் பற்றிக் குறைச் சொல்லிப் பேசுவதை எந்த மனசு விரும்பும்? எல்லா மனசுக்கும் ஒரு அடிப்படையான குணாதிசயம் இருக்கு. அந்தக் குணாதிசயம் என்னான்னா தான் இருக்குற நிலையைும், தன்னுடைய நிலைப்பாட்டையும் சரிதான்னு சொல்லணும்னு எதிர்பார்க்குறதுதாம். தன்னைத் தானே தப்பாப் பார்க்குறதுக்கு ஒரு மனசுக்கு அவ்வளவு லேசுல சாத்தியப்படாது. தன்னுடைய நிலையை, நிலைப்பாட்டைக் கேள்வி கேட்குறதுக்கு அதுஅவ்வளவு சுலுவுல உடன்படாது. கொஞ்சம் பொறுமையாக திரும்பிப் பார்க்க மனசு சம்மதிச்சா அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழாமயில்ல போயிடும். அப்படிச் சம்பவங்கள் நிகழாமல் போச்சுன்னா அங்கே கதையேது? கதையின் ஆதாரச் சக்கரமே சொழல்கின்ற மனசை வைச்சுதானே. அந்த இடத்திலதான ரோஷம் பொத்துக் கொண்டு வந்து மனச்சக்கரம் சுழலுது. ஆத்திரம் ஆத்திரமா வந்து என்ன பண்றதுன்னு தெரியாம என்னென்னவோ மனசு பண்ணுது.
            கோபம் கொப்புளிக்க கிளம்புன விகடு போன நேரத்துக்கு எட்டாம் நம்பர் பஸ் பப்பாம் சத்தத்தோடு சரியா வந்து தொலையுது. கையை நீட்டுற எடத்துக்கெல்லாம் நிக்குற பஸ் இல்லையா அது. இவன் கையை நீட்டுனதும் பஸ் நிக்குது. இவன் ஏறிக்கிறான். ஏன் ஏறுறோம்? எதுக்கு ஏறுறோம்?னு எந்த வினாவும் இல்லாம ஏறிட்டான் விகடு. இந்த பஸ்ல ஏறி உள்ள போறதுங்றது சாதாரணமா என்ன? அந்தக் கஷ்டத்தை ஒரு நிமிஷம் நெனைச்சுப் பாத்து இருந்தான்னா கூட இவன் ஏறியிருக்க மாட்டான். அவன் நேரம் பாருங்க! அது ஒரு கஷ்டம்னு தோணாமல ஏறிட்டான். இந்த பஸ்ஸோட படிக்கட்டு இருக்கே அது அப்படியே ஆகாசத்துக்கு தூக்கி வெச்ச கணக்கா இருக்கும். அது மேல கால வெச்சு ஏறிப் போறதுன்னா அது சர்க்கஸ் வித்தைதான். இந்தப் பஸ்ஸூக்கு மட்டும் ஏறிப் போறதுக்கு வசதியில்லாம ஏன் எட்டாத உசரத்துல இப்படி படிக்கட்டு இருக்கோ புரியல. அவனுக்கு அப்போ இருந்த ரோஷத்துக்கு ஆகாசத்தைத் தாண்டி செவ்வாய் கெரகத்துல போயி விழணும்னு சொன்னாலும் விழுந்துடுவாங்ற நெலமை. அதால அது எதுவும் அவனுக்குப் பெரிசா தெரியல. இப்படி படியிருந்தும் இந்த பஸ்ல ஏறுற சனத்துக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல. திமு திமுன்னு ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் சனம் ஏறிகிட்டே இருக்கு. நீங்களே பாருங்க! வடவாதி பஸ் ஸ்டாண்டுலேந்து மூணாவது ஸ்டாப்பிங் கிட்டத்தலு கைய நீட்டி ஏறுன விகடுவே நின்னுகிட்டுதான் போயிருக்கான். ஒரு பஸ்ஸூ ரெண்டு ஸ்டாப்பிங்கைக் கடந்து வர்றதுக்குள்ள நிறைஞ்சுப் போயிடுதுன்னா அது நம்ப எட்டாம் நம்பரு பஸ்ஸூதான். 
            பஸ் போற வேகத்துக்கு குளுந்த காத்தா அடிக்குது. வெண்ணாத்துல ஓடிக் கொண்டிருக்கிற தண்ணிய தொட்டு அடிக்கிற காத்தாச்சே. அப்படித்தான் இருக்கும். பஸ்ஸூ போற ரோட்டுக்கு வலப்பக்கமா வெண்ணாறு ஓடிகிட்டு இருக்கு. வெண்ணாத்தோட இடப்பக்க கரையிலதாம் ரோடு. அந்த ரோட்டுல பஸ்ஸூ ஓடிகிட்டு இருக்கு. இந்தப் பக்கம் பஸ்ஸூ. அந்தப் பக்கம் வெண்ணாறு. ஒண்ணுக்கு ஒண்ணு போட்டி போட்டுகிட்டு ஓடுறது போல இருக்கு. 
            எட்டாம் நம்பரு பஸ்காரன் நல்லாவே வண்டிய ஓட்டிகிட்டுப் போறான். இடையில எங்க கையைக் காட்டி சனங்க நின்னாலும் ஏத்துறான். ஸ்டாப்பிங் ஒண்ணு விடாம நிப்பாட்டுறான். ஸ்டாப்பிங்ன்னா ஒரு கொடி மரம் நின்னா அது ஒரு ஸ்டாப்பிங். ஓர் அரச மரம் நின்னா அதுவும் ஒரு ஸ்டாப்பிங். ஒரு டீக்கடை இருந்தா அதுவும் ஒரு ஸ்டாப்பிங்க. ரெண்டு ரோடு பிரிஞ்சா அதுவும் ஒரு ஸ்டாப்பிங்தான். ஆளில்லாத ரோட்டுல ஒத்தையா ஒரு பனைமரம் நின்னாலும் ஒத்த பனைமரத்தடின்னு அதுவும் ஒரு ஸ்டாப்பிங். ஆறு போற வழியால்ல இந்த ரோடு போவுது. ஒரு பாலம் வந்தா அதுவும் ஒரு ஸ்டாப்பிங். இப்படி ஏகப்பட்ட ஸ்டாப்பிங் இருக்கு எட்டாம் நம்பரு பஸ்ஸூக்கு. இத்தனை ஸ்டாப்பிங் பத்தாதுன்னு இந்தச் சனங்க வேற அங்கங்க கையைக் காட்டி நிறுத்தி புதுப்புது ஸ்டாப்பிங்கை உருவாக்கிட்டு வேற வர்ருது.
            ஒவ்வொரு இடத்திலயும் பஸ்ஸூ நின்னா சனங்க திமுதிமுன்னு ஏறிகிட்டே இருக்குது. உள்ளே சீட்டுல உக்காந்திருக்க சனங்க தப்பிச்சது. நிக்குறவங்க பாடுதாம் பெரும்பாடா இருக்கு. அய்யோ யம்மா யாத்தாடின்னு சனங்க நசுங்குதுங்க. மணமங்கலத்தத் தாண்டுறதுக்கு உள்ளாற ஒத்த சாக்குல நாலு மூட்டைப் புளிய திணிச்ச கணக்கா ஆயிடுச்சு. இந்த பஸ் விட்ட நாளிலிருந்து வேறு ஒரு பஸ்ஸூ திருவாரூரிலிருந்து இந்த ஊருக்கு வந்த பாடில்ல. வந்தாலும் எட்டாம் நம்பர் பஸ்காரனுங்க வர்ற பஸ்ஸை விட்டபாடில்ல. அதெ தொரத்தி அடிச்சிபுட்டுதாம் மறுவேல பார்ப்பானுங்க. அதால இந்த ஒத்த பஸ்தாம் வடவாதிக்கும் திருவாரூருக்கும் தனி ராஜாங்கம் பண்ணிக்கிட்டு கெடக்கு.
            இந்த எட்டாம் நம்பரு பஸ்ஸூ போற போக்கு இருக்கே. ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. பஸ்ஸூ சும்மா வெட்டி வெட்டி ஓடுது. எப்போ வேகமா போவுது? எப்போ மெதுவா போவுது? எப்போ சடர்ன் பிரேக் போட்டு நிக்குது?ன்னு ஒரு மண்ணும் புரியல. கூட்டம் அப்படி அமுக்கித் தள்ளுறதுல எதைத்தாம் பாக்குறது? எதைத்தாம் கவனிக்கிறது சொல்லுங்க? ஏதோ எங்கயோ போயி விழுந்தா சரிதாம்.
            பஸ்ஸூல உக்காந்தவன் கூட்ட நெருக்கடியிலேந்து தப்பிக்கலாம தவிர கம்பியைப் பிடிச்சிகிட்டு இருக்குறதிலேந்து தப்பிக்க முடியாது. உட்காந்து இருக்குறவங்க, நிக்குறவங்க எல்லாரும் கம்பியை எப்போதும் உஷாரா பிடிச்சிகிட்டு இருக்கணும். இல்லேன்னா முன்னால போயி முட்டிக்க வேண்டியதுதாம். எப்ப வேணாலும் சடார்ன்னு சடர்ன் பிரேக் விழுவும். சூதானமாக கம்பியோட கம்பியா இருக்கணும் எட்டாம் நம்பரு பஸ்ல போறப்ப.
            பஸ்ஸூ இப்போ மணமங்கலத்தைத் தாண்டி ஊட்டியாணியில நிக்குது. அது முக்கா மூணு ரோடு பிரியுற எடம். அங்கங்க கிராமங்கள்ல இருக்குற சனங்க எல்லாம் குமுட்டா வந்து ஏறுற இடம். இதுக்கு மேல எட்டாம் நம்பரு பஸ்ல ஏத்துறதுக்கு இடம் இல்ல. ஆனாலும் ஏறுதங்க சனங்க. பஸ்காரனுங்களும் ஏத்துறாங்க. ஒரு புள்ளதாச்சி வயித்துல ஒரு கொழந்த, ரெண்டு கொழந்தய சுமக்கலாம். பத்து பதினைஞ்சு புள்ளைய ஒத்த வயித்துல சுமக்குறதுன்னா... அது அந்த புள்ளதாச்சிக்கும் நல்லதல்ல, வயித்துல இருக்குற புள்ளைகளுக்கம் நல்லதல்லதான. இந்த பஸ்ஸூ அந்த வகையான புள்ளதாச்சியா? புளி மூட்டையான்னு ஒண்ணும் புரியல.
            பஸ்ஸூ இப்போ ஊட்டியாணியிலேந்து கிளம்புறப்போ திணறிகிட்டு போறது போலத்தான் இருக்கு. சத்தம் ஒரு மாரியா "ம்ம்ம் ர்ர்ர்"னு இருக்கு. பஸ்ஸூக்கு வெளியில இருக்குற காத்து உள்ள வார யோசிக்குது. அம்மாம் கூட்டம். உள்ள இருக்குறவங்க உடம்பெல்லாம் வியர்வையா வழிஞ்சு ஓடுது. "அட யப்பா வண்டிய கொஞ்சம் வேகமாவது வுடுங்கப்பா! காத்தாவது வரட்டும்! வண்டிய அடிச்சு ஓட்டுப்பா!" என்று சில இளந்தாரிகள் சத்தம் விடுது.
            ஊட்டியாணியைத் தாண்டுனா அது வரைக்கும் துணைக்கு வந்த வெண்ணாறு டாட்டா காட்டிட்டு வெள்ளையாத்தை துணைக்கு அனுப்பி வைக்கும். ஊட்டியாணிக்கு முன்னாடி வரைக்கும் வலப்பக்கமா இருக்குற வெண்ணாறுமா, ஊட்டியாணியைத் தாண்டுன பிற்பாடு இடப்பக்கமா இருக்குற வெள்யைாறுமா ஆத்தோட கரை வழியாத்தான் எட்டாம் நம்பரு பஸ்ஸூ மாவூரு வரைக்கும் போயாகணும். வெள்யைாத்துலயும் நல்லா தண்ணிப் போவுது. முறை மாத்தி தண்ணி வுடுறப்போ வெண்ணாத்துல தண்ணி போனா வெள்ளையாறு சோர்ந்து போயிக் கிடக்கும். வெள்ளையாத்துல தண்ணி வுடறப்பபோ வெண்ணாறு சோர்ந்து போயிக் கெடக்கும். இன்னிக்கு என்னவோ ரெண்டு ஆத்துலயும் தண்ணி நல்லாவே போவுது. கொஞ்ச நாளா பேய்ஞ்ச மழை கூட அதுக்குக் காரணமாக இருக்கலாம்.
            இடப்பக்கமா வெள்ளையாறு ஓட, வலப்பக்கமா அதோட கரையில எட்டாம் நம்பரு பஸ்ஸூ ஓடிகிட்டு இருக்கு. நாட்டியத்தான்குடியை நெருங்குறப்போ ஒரு ஸ்டாப்பிங். அங்க நின்னு ஏத்த முடியாம சனங்கள ஏத்கிட்டு டர்டர்னு கெளம்புது பஸ்ஸூ. "யே யப்பா இப்படியே நிப்பாத்தி நிப்பாத்தி ஏத்தி எப்ப கொண்டு போயி திருவாரூ வுடுவீயே!" என்று ரண்டு மூணு குரலு கேட்குது. அவுங்க கேட்குறதும் சரிதாம். ஒரு மணி நேரத்துல போவ வேண்டிய திருவாரூக்கு கால்வாசி தூரம் வரதுக்குள்ளயே நாப்பது நிமிசத்துக்கு மேலல்ல ஆயிடுச்சு. இன்னும் இருவது நிமிசத்துக்குள்ள முக்காவாசி தூரமுல்ல போயாகணும்.
            ஓட்டுற டிரைவருக்கும் யோஜனையாத்தான் இருக்கு.
            "கட்ட வண்டி! கட்ட வண்டி! அடிச்சு ஓட்டுப்பா! கட்ட வண்டிய!"ன்னு இளந்தாரிப் பசங்க வேற படியில தொங்கிகிட்டு ரவுசு விட்டுகிட்டு வர்றதுங்க.
            "இவனுங்க உசுரோட கொண்டு போயி திருவாரூ சேப்பானுங்களா! யில்ல பொணமா கொண்டு போயிச் சேக்கப் போறானுங்களான்னு தெரியலயே. இந்த வேகத்துல போனா மூச்சுத் தெணறி இஞ்ஞயே சாவ வேண்டியதுதாங்!" என்று பொண்டுகள் வேற குசுகுசுன்னு சத்தம் போடுதுங்க.
            டிரைவருக்கு ஆத்திரம் வந்துச்சா? ரோஷம் வந்துச்சா?ன்னு தெரியல. கால ஒரு அமுக்கு அமுக்கி, பக்கத்துல இருக்குற கம்பிய ரெண்டு தூக்கு தூக்கி எறக்கி விட்டுட்டு உர்ருன்னு கெளப்புறார் பாருங்க. வண்டி ஏக வேகத்துல போவுது.
            மறுபடியும் சொல்றேன்னு கோச்சுக்காதீங்க. இடப்பக்கம் வெள்ளையாறு. முக்காலு ஆறுக்கு மேல தண்ணி ஓடிட்டு இருக்கு. வலப்பக்கமா ஸ்டாப்பிங்க தாண்டுனதுக்கு அப்புறமா ஒரு கொளம். ரோட்டுலேந்து வலப்பக்கமா குத்துவாட்டாமா தணிவா இறங்குனா குளத்தோட கரை. நல்ல ஆழமான கொளம். அதுலயும் தண்ணி நிரம்பக் கெடக்கு. கொளத்துக் கரையில அங்க ஒண்ணு இங்க ஒண்ணுன்னு நாலஞ்சு பனைமரங்க என்னவோ கொளத்தைக் காவலு காக்குறது போல நிக்குதுங்க.
            ஏக வேகத்துல கெளம்புன வண்டிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. அப்படியே வலப்பக்கமா டயரு திரும்பி நிலைகுத்தி நிக்குது. டபார்னு போட்ட சடர்ன் பிரேக்குல சனங்க எல்லாம் வண்டி ஓட்டுற டிரைவரைத் திட்டுதுங்க, "கட்டையில போறவம்! ஒரு டிரிப்புக்கு எத்தனை சடர்ன் பிரேக்குதாம் போடுவாம்? அவ்வேம் நெஞ்சாங்கூட்டுக்குள்ள கொள்ளிய வைக்கோ!" அப்பிடின்னு. வண்டி நின்னது போலத்தான் இருந்துச்சு. ஆனா நிக்கல. அது பாட்டுக்கு வலப்பக்கம் தணிவா இருந்தா சரிவுல சடாருன்னு எறங்குது. சரிவு முழுக்க போடு மண்ணு. அதாவது கொட்டி வெச்ச மண்ணு. வண்டி இருக்குற வெயிட்டுக்கு, அதுல சனங்க இருக்குற வெயிட்டுக்கு பொத பொதன்னு உள்ள இழுத்துகிட்டு வண்டிய உள்ள வாங்குது.
            "அய்யோ கொளம் இருக்குற பக்கமால்ல வண்டி வாங்கிகிட்டுப் போவுது!"ன்னு சனங்கள்ல ஒரு சிலது குரல் கொடுக்கறது கேட்குது.
            அந்தப் பக்கம் முக்கா ஆறா ஓடிட்டு இருக்குற வெள்ளையாத்துப் பக்கமா வாங்காமா, இந்தப் பக்கம் கொளம் இருக்குற தெசையில வாங்குதுன்னா சந்தோசப்பட முடியும்?!
*****

4 comments:

  1. படிக்க மறக்காதீர்கள்
    நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
    http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

    ReplyDelete
    Replies
    1. எளிமையான அருமையான விளக்கம் ஐயா! சிறப்பு! வாழ்த்துகள்!

      Delete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் மகிழ்வும் ஐயா!

      Delete

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...