1 Sept 2019

மணல் தந்த வாழ்வும் வளமும்



            'வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி' என்று சங்கத்தமிழ் சொன்ன வரிகளைச் சொல்லிப் புளங்காகிதம் அடையாத காவிரிக் கரையின் மைந்தனைப் பார்த்தல் அரிது.
            அதன் பொருள் என்னவாக இருந்தாலும் நீரோடி வரும் நாட்களில் ஆற்று நீராலும், நீரோட்டம் அற்றுப் போகும் நாட்களில் ஊற்று நீராலும் பொய்யாமல் நீராதாரத்தை வழங்கும் காவிரி.
            ஆற்றோட்டம் நின்று விட்டால் ஊற்று தோன்றி நீரைக் காவிரியினின்று பெற்றுக் கொண்டே இருக்கலாம். காவிரியின் அத்தனைக் கிளை ஆறுகளிலும் அப்படித்தான். அந்த ஊற்றின் அடிப்படை மணல்தான். இன்று காவிரியின் எந்தக் கிளை ஆற்றிலும் மணலைப் பார்ப்பது அரிதோ அரிது. காவிரி ஆற்றிலும் அதில் வரும் தண்ணீரைப் போல மணல் குறைந்து கொண்டே இருக்கிறது. பார்ப்பன எல்லாம் களிமண் கால்வாய்கள் போலாகி விட்டன. கோடையில் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன.
            நீரை அள்ளி அள்ளி வழங்கிய காவிரியும் அதன் கிளை ஆறுகளும் மணலையும்தான் அள்ளி அள்ளி வழங்கின. அது எவ்வளவு அள்ளி அள்ளி வழங்கிய போதும் அது போதாமையாகப் போய் விட்டது மணல் மாபியாக்களுக்கு. நீரோடிய ஆற்றில் லாரியோடச் செய்து அத்தனையையும் அள்ளிக் கொண்டு போன பின் இப்போது சாக்கடை ஓடிக் கொண்டிருக்கிறது.
            கருவறுந்த தாயின் வயிற்றில் எது ஜனிக்கும் என்பது போல, மணலற்ற நதியில் நீர் எப்படி நிலைக்கும் என்பதாகி விட்டது நிலைமை. காவிரிக் கரையில் தண்ணீர்ப் பஞ்சம் சர்வ சாதாரணமாகி விட்டது.
            காவிரியில் நீரள்ள முடியாது போய், அங்கே இங்கே கரையைக் குடைந்து வரும் மணலை வாழ்வாதாரம் அற்றுப் போன ஏழை பாழைகள் அள்ளி விற்கும் அவலமும் இங்கே சர்வ சாதாரணமாகி விட்டது.
            லாரி லாரியாய் மணல் அள்ளிய போதெல்லாம் பயப்படாமல் மாபியாக்கள் அள்ளிக் கொண்டு போக, எஞ்சிய மணலை அள்ள அந்த ஏழை பாழைகள் பயந்து பயந்து அள்ளுவார்கள் பாருங்கள் - வாழ்ந்து கெட்ட குடிகளின் ஞாபகம்தான் வருகிறது அதைப் பார்க்கையில். யாராவது 'போலீஸ் போலீஸ்' என்று சும்மா குரல் கொடுத்து விட்டால் அள்ளிய கூடையையும், மண்வெட்டியையும் அப்படியே போட்டு விட்டு விழுந்தடித்து ஓடுவார்கள் பாருங்கள் - காவிரிக் கரை காணும் பரிதாபமான காட்சி அது.
            இப்போது தண்ணீர் வந்து விட்டது. முத்துக் குளிப்பது போல தண்ணீருக்குள் அமிழ்ந்து மணல் அள்ளுவார்கள். வாழ்வாதாரம் இன்மையின் கோரப்பிடி அது. ஒரு கூடை மணல் அறுபதிலிருந்து நூறு ரூபாய் வரை அளவுக்கேற்ப விலை போகிறது. எந்தக் காவிரியாற்றின் நீரால் நெல் விளைந்து அந்த நெல்லை கூடையில் அள்ளி வாழ்ந்தவர்கள், இன்று அதே காவிரியில் கொஞ்சமாவது மணல் வராதா என்று ஏங்கி முக்குளித்து மணல் அள்ளி வாழ்கிறார்கள். அதிகபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கூடை மணலைச் சேகரம் செய்வது பெரிது. அதில் கழிகிறது அவர்களின் வாழ்வு. 'வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி' என்று பாடிய பட்டினப்பாலை காலம் கடந்து வந்து பார்த்தால் காவிரிப்பாலை என்று‍ பெயர் கொண்டு பாடும்.
            அது போக காவிரியாற்று நீர் - அது எப்படி பாய்கிறது என்று கேளுங்கள் - தண்ணீர் வந்தால் ஆற்றை ஒட்டிய மேல் நிலத்துக்காரர்கள் கர்நாடகக்காரர்களாய் ஆகி விடுகிறார்கள். ஆற்றிலிருந்து விலகி இருக்கும் கீழ்நிலக்காரர்கள் தமிழர்களாய் ஆகி விடுகிறார்கள். இந்த மேல்நில கர்நாடகக்காரர்கள் தங்கள் வயல்களுக்கு வைத்தது போக மிச்ச சொச்ச தண்ணீர் கீழ்நிலக்காரர்களுக்குப் பாய்ந்தால் உண்டு. இல்லையென்றால் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தால்தான் உண்டு. வெள்ளம் பெருக்கெடுத்தால் இந்த மேல்நிலக்காரர்கள் முதல் வேலையாகத் தண்ணீரைத் திறந்து விடுவார்கள் பாருங்கள் அது அப்படியே கர்நாடக்காரன் பண்ணுவதைப் போல இருக்கும். யார் சொன்னார்கள் கர்நாடகக்காரன் தமிழ்நாட்டின் வடக்கே இருக்கிறான் என்று? அவன் தமிழ்நாட்டுக்குள்ளும் தமிழனாக தமிழனாகத்தான் இருக்கிறான்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...