26 Aug 2019

சூறாவளிக் கிணறு



செய்யு - 188
            உலகத்தில உசுரோட நடமாடி, நாம்ம கண்ணாரப் பார்த்த ஆளுகளையே அடையாளம், ஆதாரம் இல்லாம கொன்னுப் போட்டுட்டு போயிட்டே இருக்காங்க. கொலைங்றது சாதாரணமா போயிடுச்சி உலகத்துல. நாம்ம பாத்துகிட்டு இருந்த அந்த ஆளு எங்கேன்னு தேட ஆரம்பிக்கும் போதுதான் அவங்களப் பத்தின விவரங்கள் ஒண்ணு ஒண்ணா வெளியில வரத் தொடங்குது. நாளுங்க கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் உண்மை எப்படியோ வெளியில வந்துடுதுங்றதுதான் இதுல ஒரே ஆறுதல். மத்தபடி போன உசுரு போனதுதான். திருப்பியா கொண்டு வர முடியுது? கொலைப் பண்ணவன் பாட்டுக்கு அந்த உசுரைத் திரும்பக் கொடுக்காம ஜெயில்ல போயி உக்காந்துப்பான். அதுதான் நடக்கும்.
            இப்படிதாம் வடவாதிக்கு கொஞ்சம் வடக்கே புருஷன் பொண்டாட்டிச் சண்டையில ஒரு ஆத்திரத்துல புருஷங்காரன் பொண்டாட்டிய கழுத்த நெரிச்சே கொன்னுபுட்டான். தம்மேல கொலைகேஸூ ஆயிப் போயிடும்மேன்னு பயந்து போயி யாருக்கும் தெரியாம வடவாதிக்கு கெழக்கால இருக்குற சூறாவளிக் கிணத்துலக் கொண்டு போயி பொணமா போயிட்ட பொண்டாட்டிய ராத்திரி நேரத்துல ராத்திரியோட ராத்திரியா கொண்டு போயிப் போட்டுட்டு வந்துட்டான். கொண்டு போயி போட்டுட்டு ஊருக்குள்ள வந்தவன் பொண்டாட்டி சண்டை போட்டுக்கிட்டு கோவிச்சிகிட்டு எங்கேயோ போயிட்டாங்ற மாரி கதெ அளந்துகிட்டு இருந்தான். ஊருலயும் அவங்கக்குள்ள அப்பிடி சண்டை நடக்குறதும், அவளும் கோவிச்சுகிட்டு எங்கயாவது போயி கொஞ்ச நாளைக்கு அப்புறம் திரும்ப வாரது சகஜமா இருந்ததால அதெ நம்புனாங்க.
            ஆனா பாருங்க செத்துப் பொணமா கெடந்த அவனோட பொண்டாட்டி சூறாவளிக் கெணத்துல அழுகி நாறிப் போயிக் கெடக்குறா.
            சூறாவளிக் கெணத்துலேந்து பொண நாத்தமா அடிக்குது. என்ன நாத்தம் அடிச்சாலும் யாரும் அந்தக் கெணத்துப் பக்கம் மட்டும் போக மாட்டாங்க. அதுக்குள்ள காட்டுப்பூனை, நரி, ஆடு, மாடுங்கன்னு விழுந்து செத்துக் கெடக்கும். சூறாவளிக் கெணத்த நெருங்கிப் பாக்குறதுன்னா எல்லாத்துக்கும் ஒரு பயம் இருக்கு. அது தெய்வத்துக்குக் கட்டுபட்டதுன்னு ஊருல பேசிப்பாங்க.
            எப்படி சூறாவளி அடிக்கிறப்போ வெளில நின்னா ஆளச் சுருட்டி அப்படியே சுத்திகிட்டே கொண்டு போவுமோ அப்படித்தான் இந்தச் சூறாவளிக் கெணறும். எட்டிப் பார்த்தா போதும் அப்படியே ஆளச் சுருட்டி சுத்திகிட்டே உள்ளே கொண்டு போயிடும். அப்படி இந்தச் சூறாவளிக் கெணத்துல விழுந்து ஏகப்பட்ட பேருங்க செத்துப் போயிருக்காங்க. அதைச் சாவுன்னு சொல்றதை விடவும் தெய்வக் குத்தம்னு சொல்லி அதை ஏத்துப்பாங்க இந்த ஊரு சனங்க.
            வடவாதியில சர்க்கரை ஆலை வந்தப்போ வயலுக்கு வயலு கரும்பு போட ஆரம்பிச்சப்போ அஞ்சு ஏக்கராவுக்குன்னு கணக்குப் பண்ணி ஏரியாவுக்கு ஏரியா சூறாவளிக் கெணறு வெட்டுனாங்க. அந்த அஞ்சு ஏக்கரா அளவுல எங்க பூமிக்கு அடியில தண்ணி இருந்தாலும் அப்படியே சூறாவளி மாரி ஒரு சொழட்டு சொழட்டித் தண்ணியக் கொண்டாந்துடும் இந்தச் சூறாவளிக் கெணறுங்க. வானத்துல மேகமே வத்திப் போனாலும் இந்தச் சூறாவளிக் கெணத்துல தண்ணி வத்திப் போகாது. சுத்திலும் கல்ல வெச்சி கட்டியிருப்பாங்க இந்தக் கெணத்த. கொஞ்சம் கவனமா கெணத்துக்குள்ள பாத்தீங்கன்னா... அப்படிப் பாக்குறது ஆபத்துன்னாலும்... அதெ பார்த்து ஆளுங்க சொன்ன வெச்சி சொல்லணும்னா... சூறாவளிக் கெணறு எப்படி இருக்கும்னா... எப்படியும் அது ஏழடி ஆரத்துக்கு வட்டமா இருக்கும். உள்ளே போகக் போக அதை விட சின்னதா உள்ள ஒரு கெணறு போகும். அதுக்கும் உள்ளே போகப் போக அதை விட சின்னதா உள்ள ஒரு கெணறு போகும். இப்படி மூணு அடுக்காவோ, அஞ்சு அடுக்காவோ, சமயத்துல ஏழு அடுக்காவோ உள்கிணறுங்கள ஒரு கணக்கு வெச்சி தோண்டிருப்பாங்க. கிணறுக ஒவ்வொண்ணும் செங்கல்லுக் கட்டுமானம்தாம். எல்லாம் பட்டச் செங்கல்லு. இப்போ இருக்கற செங்கல்ல பாதி கணத்துக்குதாம் இருக்கும் பட்டச் செங்கல்லு. அகலம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். நீளம் கிட்டதட்ட அதே அளவுதாம் இருக்கும். இந்த சூறாவளிக் கெணறுகளைத் தூரு பாக்குறதுக்குன்னு ஊருல ஒரு சில ஆளுங்க இருக்குங்க. தூரு பாக்குறதுன்னா இருபத்து எட்டு நாளுங்களுக்கு முன்னாடியே கவிச்சி சாப்பிடாம கொள்ளாம, பொண்டாட்டிய நெருங்காம கொள்ளாமா சுத்த பத்தமா இருந்துதாம் சூறாவளிக் கெணத்துல எறங்குங்க அந்த ஆளுங்க. இல்லேன்னா சூறாவளிக் கெணறு அடிச்சி உள்ள போட்டுடுங்றது நம்பிக்கை. அப்படி சுத்தம் பத்தம் இல்லாம கெணத்துல தூறு பார்க்க எறங்கிச் செத்துப் போன ஆளுங்கள பத்தின கதைங்க இங்க ஏகப்பட்டது இருக்கு.
            வடவாதியைச் சுத்திலும் நெல்லு விவசாயம் அழிஞ்சி கரும்பு விவசாயம் நடந்திட்டு இருந்தது அப்போ. சர்க்கரை ஆலை இருந்த வரைக்கும் சுத்துப்பட்டு ஊர்கள்ல அதுதாம் நெலைமை. நெலைமைன்னா நெலைமை கோடைக்கும், மழைக்கும், குளிருக்கும், பனிக்கும் எப்போதும் முப்போதும் கரும்புகதான். ஊர்ல இருக்குறவனும் கரும்பு வெட்டுவான். அது பத்தாதுன்னு வெளியூர்லேந்து இருந்தும் ஆளுங்க பஞ்ச பொழைக்க வந்த சனங்களும் வெட்டிகிட்டு இருக்கும். கரும்ப போட்டுப் போட்டே வயலுங்க கசந்து போயிக் கெடந்துச்சின்னா நம்புவீங்களா? கரும்ப ஒடைச்சி அப்போ திங்குறவனும் என்னவோ வேப்பங்காய கடிச்சித் தின்னுற மாரி அப்போ அலுத்துப்பானுங்க. ஊரே கரும்போடு கரும்பா வதையழிஞ்சிக் கெடந்திச்சு. அந்த நேரத்துல இந்த வடவாதியைச் சுத்தியுள்ள ஊர்கள்ல அப்போ எவனாது பொண்ணு கொடுப்பானான்னு கேட்டீங்கன்னா ஒருத்தனும் கொடுக்க மாட்டான். பொண்ணக் கொடுத்தா கரும்புக் காட்டுல போட்டு கரும்பு வெட்ட விட்டே கொன்னுபுடுவானுங்கன்னு ஒரு பயம் அப்போ பொண்ண பெத்தவங்களுக்கு. அதாலயே அப்போ கல்யாணம் ஆகாம நெறைய ஆம்பிளைக கெடந்தாங்கங்க. அது ஒரு காலம்.
            எப்போ சர்க்கரை ஆலை வடவாதியை விட்டுப் போனுச்சோ அப்பதாம் இங்க கரும்பு விவசாயமும் நின்னது. ஊருல அதுக்கு அப்புறம்தான் அவனவனும் வேற வழியில்லாம நெல்லு விவசாயம் பண்ண ஆரம்பிச்சான். சூறாவளிக் கெணத்துலந்து ராவும் பகலுமா மோட்டரைப் போட்டு தண்ணி வைக்கிறது கொறைஞ்சது அப்போதான். கெணத்துல போட்டு தண்ணி எடுக்குற முறையும் மாற ஆரம்பிச்சுது. தண்ணி இருக்குற எடத்துல போரைப் போட்டு தண்ணி எடுக்கிறது, இல்லே சாதாரண டீ ஜாயிண்ட்லயே கொழாயப் போட்டு தண்ணி எடுக்கிறதுன்னு நெலைமை மாற ஆரம்பிச்சதும் சூறாவளிக் கெணத்தோட உபயோகம் குறைய ஆரம்பிச்சிடுச்சி. அங்கங்க இருந்த சூறாவளக் கெணறுக பாழடைஞ்சுப் போக ஆரம்பிச்சு. இருந்தாலும் அதுக்குள்ள ஊறுற தண்ணி ஊறிகிட்டேதாம் இருந்திச்சி. கவனிப்பு முன்ன மாரியில்ல. அவ்வளவுதாம். எப்போ அது பொழக்கத்துல இல்லாம போயிடுச்சே அப்பவே அதெ எறங்கி தூறு பாக்குற ஆளுங்களும் கொறைஞ்சிப் போயி இல்லாம போனாங்க. அது ஆள அடிக்குற கெணறா வேற இருந்ததால எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சாங்க. அதுவும் இல்லாம அதுல எறங்குணும்னா இருபத்து எட்டு நாளு எவன் கவிச்சிப் பார்க்காம இருக்குறது? பொண்டாட்டிய தொடாம இருக்குறதுன்னு யோசிச்சுகிட்டு சூறாவளிக் கெணத்த தூறு பார்க்கறதுன்னா அவனவனும் மெரண்டு ஓட ஆரம்பிச்சான். ஒரு சிலருங்க சூறாவளிக் கெணத்த மொறையா மண்ணள்ளிப் போட்டு மூடுனாங்க. மத்த சிலருங்க அதுக்கு ஏன் தேவையில்லாம செலவு பண்ணிகிட்டு மூடிகிட்டுன்னு அப்படியே வுட்டாங்க. சில கெணறுங்க வெள்ளம் வரும் காலங்கள்ல அதுவாவே மண்மூடிச் போயி பள்ளமா ஆகிப் போச்சி. இப்போ இருக்கிறது ஒண்ணே ரெண்டோ சூறாவளிக் கெணறுங்கதான். அந்தக் கெணறுகளப் பத்தி வித விதமா கதை ஒலவுறதால அது பக்கமே சனங்க போகாது. எவனாவது செத்துக் கெடந்தாலும் அப்படியே நாறிப் போக வேண்டியதுதாம். வேற வழியில்ல.
            அப்படி ஒரு சூறாவளிக் கெணத்துலதான் அந்தப் புருஷங்காரன் பொண்டாட்டியப் போட்டுட்டு அவ்வேம் பாட்டுக்குக் கதை கட்டி விட்டுட்டு இருந்தான். ஊருலயும் எல்லாரும் நம்பிட்டாங்க வேற இல்லையா! அவ்வேன் அப்படியே இருந்திருந்தா யாருக்கும் விசயம் தெரிஞ்சிருக்காது. பொண்டாட்டியைக் கொன்னு சூறாவளிக் கெணத்துல போட்டு ஒரு மாசத்துக்குப் பின்னாடி தூக்கம் வராம தவிக்க ஆரம்பிச்சான் புருஷங்காரன். ராவுலயும் பகல்லயும் தூங்க முடியாம தவிச்சிப் போனவன் பைத்தியம் பிடிச்சவன் மாதிரி ஊருக்குள்ள அலைய ஆரம்பிச்சான். அங்கங்க தெருவுல வுழுந்து பொரள ஆரம்பிச்சான். அப்படிப் பொரள்றப்ப, "சூறாவளிப் பிடிச்சி இழுக்குது... யாராவது என்னய காப்பாத்துங்களேன்!" அப்படின்னு கத்த ஆரம்பிச்சான். பொண்டாட்டிப் போன ஏக்கத்துல பைத்தியம் பிடிச்சிடுச்சோன்னுதாம் முதல்ல ஊரு நெனைக்க ஆரம்பிச்சிச்சு. நாளுக்கு நாள் அவன் சேட்டை அதிகமாயி அவன் எந்தச் சூறாவளிக் கெணத்துல போண்டாட்டியக் கொண்டு போயிப் போட்டான்னோ அதுக்குப் பக்கத்துல சட்டையைக் கிழிச்சிகிட்டு திரிய ஆரம்பிச்சான். ஊர்ல இருக்குறவங்க கெணத்துல விழுந்துடப் போறான்னு பயந்துகிட்டு அவனைப் பிடிச்சி வூட்டுல கொண்டாந்து சங்கிலியப் போட்டு கட்டி வெச்சாங்க.
            சங்கிலிக் கட்டுகள அவிழ்க்க முடியாம அங்கயும் இங்கயும் பெரண்டு சரியா தூங்க முடியாம கொள்ளாம ஒரு நாளு அவ்வேன் உண்மைய உளற ஆரம்பிச்சான் பாருங்க... அப்பதான் ஊருக்காரனுங்களுக்கு லேசா சந்தேகம் வந்து சூறாவளிக் கெணத்த ஆளுகள வெச்சி எட்டிப் பார்த்தா... உண்மை விளங்குது. அவன் தன் வாயாலேயே எல்லா உண்மையையும் சொன்னதுக்கு அப்புறம்தான் அவன் நிம்மதியா தூங்க ஆரம்பிச்சான். ஒரு நாளு நிம்மதிய தூங்க விட்ட ஊரு சனம் மறு நாளு அவனெ தூக்கிக் கொண்டு போயி வடவாதி போலீஸ் ஸ்டேஷன்ல போட்டுச்சி. கொன்னவன் சூறாவளிக் கெணத்துல போட்டதாலதான் தெய்வத்துக்கு கட்டுப்பட்டு அது வேல செஞ்சாதால உண்மை வெளிவந்திடுச்சுன்னு ஊரு பேசிகிட்டுச்சு.
            ஆனா எப்படியோ கொலை பண்ண விசயம் மட்டும் வெளியில வந்துடுதுங்கறதுக்குதான் இதை இப்போ சொல்ல வேண்டிருக்கு.
            இருந்தாலும் பெரிய மனுஷங்களையே இப்படி சாட்சி இல்லாம கொன்னுட முடியும்ங்றப்போ குழந்தைகளைக் கொல்றதைப் பத்தி என்ன சொல்றது சொல்லுங்க. அதுலயும் பொறந்த குழந்தைகளைக் கொல்றது இருக்கே! கொன்னுபுட்டு அதெ வேற மாரியா மாத்திச் சொல்லிப்புடலாம்ங்ற மாதிரிதானே நிலைமை இருக்கு.
            இப்போ தஞ்சாவூரு சுபாஷினி ஆஸ்பத்திரில நடக்குற கதை இருக்கே...
            குழந்தையோட உடம்பு அப்படியே நீலம் பாரிச்சுக் கிடக்கு. உடம்புல ஒரு சின்ன  அசைவு கூட இல்ல. பொம்மையோடு விளையாட வேண்டிய குழந்தை பொம்மை போல கெடக்குது. அது தன்னோட கடைசிச் சொட்டு சிரிப்பு, அழுகை எல்லாவற்றையும் உதிர்த்து விட்ட கணக்கா சருகு போல கெடக்குது. சரசு ஆத்தாவும் சுந்தரியும் கொன்னதையும் கொன்னுபுட்டு, இப்போ சரசு ஆத்தா தலையிலும், மாரிலும் அடிச்சுக்கிட்டு டாக்கடருகளையும், நர்ஸ்களையும் கூப்பிட ஓடுது. வேலனும், லாலு மாமாவும் ஒண்ணுந் தெரியாத அப்பாவிக் கணக்கா பக்கத்துல உட்கார்ந்துகிட்டு முகத்துல சோகத்த வரவழைச்சுக்க முயற்சிப் பண்ணிகிட்டு இருக்குதுங்க!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...