26 Aug 2019

தங்க. ஜெயராமன் ஐயாவோடு இருந்த தங்கமான நேரங்கள்



            வாசக சாலையும், திருவாரூர் மைய நூலகமும் நடத்தும் வாசக சாலை அனுபவத்தில் நூலாசிரியர்களோடு நெருங்கிப் பழகும் அனுபவம் அதிகம் வாய்த்ததில்லை எனக்கு. இந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வாசக சாலையில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு தாமதமாய் வந்த வாசகர்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.
            இந்த வாசக சாலை கூட்டத்தில் பேசுபொருளாய் இருந்த 'காவிரிக் கரையில் அப்போது...' என்று நூலின் ஆசிரியரும் பேராசியரும் ஆன தங்க. ஜெயராமன் ஐயா சரியான நேரத்திற்கு வந்திருந்து, நான் அதற்கு முன்பே அங்கு சென்று அமர்ந்திருந்ததால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கூட்டம் ஆரம்பிப்பதற்குச் சற்று தாமதப்பட்ட நேரத்தில் நாங்கள் இருவரும் நன்றாகவே உரையாடினோம். கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய ஏற்பாடுகளிலும், பரபரப்பிலும் நூலகர் ஆசைத்தம்பியும், ஒருங்கிணைப்பாளர் நரேனும் இருந்ததால் என்னை ஐயாவின் அருகில் அமர வைத்து விட்டுச் சென்றது எனக்கு ஆக வசதியாகப் போனது.
            நாங்கள் இருவரும் அவ்வளவு நெருங்கிப் பேசிக் கொண்டிருந்தோம்.
            அணைக்கட்டுகள் வந்ததால் வர வேண்டிய வண்டலும், மணலும் அற்றுப் போய் ஓரஞ்சாரமாய் வந்த மணலையும் மாப்பியாக்கள் அள்ளியது வரை எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருந்தோம்.
            தங்கள் நூலில் காவிரிக் கரையின் மீத்தேன் திட்டங்கள் பற்றி இடம் பெறவில்லையே என்று கேட்ட போது, அரசியல் முடிவுகளுக்குப் பின்னிருக்கம் ஆற்றாமையை வேதனையோடு பகிர்ந்து கொண்டார்.
            காவிரிக் கரைக்கு வறட்சி - வெள்ளம் என்ற இரண்டு முரண் சொற்களும் நன்கு பழக்கப்பட்டு இருப்பதும் அதற்குள்தான் காவிரியின் அனைத்துச் சொற்களும் இருக்கின்றன என்பதை நுட்பமாக விளக்கினார் தங்க. ஜெயராமன் ஐயா.
            வெண்ணாறு பாயும் பகுதியின் மேற்கில் இருக்கும் செழிப்பும், கிழக்கில் இருக்கும் பொட்டல் தன்மைக் குறித்து கேட்டதற்கு வெண்ணாற்றின் வளமை மற்ற ஆறுகளின் வளமைக்கு முன்னால் பின்தங்கி இருப்பதைச் சுட்டிக் காட்டினார். கல்லணையிலிருந்து காவிரி நேராகப் பிரிவதும், வெண்ணாறு சற்று வளைந்து பிரிவதும் அதற்கானக் காரணங்களாகச் சொன்னார். நேராகப் பிரியும் காவிரியில் சேரும் வண்டல், வளைந்து பிரியும் வெண்ணாற்றில் குறைவான அளவே சேரும் என்பதைச் சொல்லி வெண்ணாற்றாங்கரைகள் ஏன் களிமண்ணாய் இருக்கிறது என்பதற்கு அது ஒரு காரணம் என்பதைக் குறிப்பிட்டார்.
            என்னதான் இருந்தாலும் வெண்ணாற்றின் மேற்கில் உருவான அதிகாரமும் செல்வாக்கும் மிகுந்த தற்கால அரசியல்வாதிகளைப் போல வெண்ணாற்றின் கிழக்கில் உருவாகவில்லையோ என்ற ஐயப்பாட்டையும் ஐயா புன்முறுவலோடு எதிர்கொண்டார். அதனால்தான் என்னவோ வெண்ணாற்றின் மேற்கில் பாயும் அளவுக்கு தண்ணீர் கிழக்கில் பாயாமல் அந்தத் தண்ணீரைப் பாய வைப்பதற்காக நடக்கும் போராட்டங்களைப் பற்றிச் சொன்ன போது, தமிழ்நாட்டிலேயே சரியான நீர்ப் பகிர்தல் இல்லாத போது கர்நாடகக்காரனின் நீர்ப் பகிர்தலை என்னவென்று சொல்வது என்றார் ஐயா. காவிரி ஆற்றோடு தொடர்புபடுத்தித் தமிழ்நாடு பிரிக்கப்பட்டு இருந்தால் இது போன்ற நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சனைகள் நேர்ந்திருக்காது என்பதையும் சொல்லி, தமிழ்நாட்டின் மாவட்டங்களே அப்படி இல்லை என்பதையும் விளக்கினார். ஆறுகள்தான் நிலவியல் பிரிப்புக்கான சரியான எல்லையைத் தரும் என்பதும், ஆறுகள்தான் இங்கு உருவான ஊர்களுக்கான நிலவியல் வரையறையைத் தந்தது என்பதையும் ஐயா ஆதாரத்தோடு எடுத்து இயம்பினார்.
            கடைசியாக ஐயா அவர்களைத் துளைத்து விடும் நோக்கில், "தங்களது இந்த நூல் காவிரிக்கும், காவிரியின் மக்களுக்கும் எந்த விதத்தில் உதவும் என்று நினைக்கிறீர்கள்?" என்ற கேட்டதற்கு, "உங்களைப் போன்ற இளைஞர்கள் சிறு சிறு குழுக்களாக இயங்குவதற்கான உத்வேகத்தைத் தரும் வரலாறுக்குச் சிறு பொறியாக இந்த நூல் இருந்தால் அதுவே போதும்!" என்றார்.
            ஒரு நூலாசிரியருக்கு இருக்க வேண்டிய அடக்கத்தையும், பொறுமையையும், விமர்சனத்தை ஆழமாக உள்வாங்கிக் கொண்டு பதிலளிக்கும் தன்மையையும் நிச்சயம் தங்க. ஜெயராமன் ஐயா அவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
            ஒரு நூல் ஆசிரியரோடு அளவளாவும் போது வாசித்த அந்த நூல் உருப்பெறும் பரிமாணத்தைக் காட்டவே ஐயா அவர்களுடனான அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன். அதில் பெருமகிழ்வும் அடைகிறேன். அத்துடன் ‘செய்யு’வில் வெண்ணாற்றைப் பற்றிப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நிலவியலைத் தவிர்த்து விட்டு எழுத வாழ்வியலில் என்ன இருக்கிறது?
                   Golden time is not repeated!
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...