27 Aug 2019

எனக்கு வரும் மின்னஞ்சல்கள்!



            சமீப காலமாக மெயில் அனுப்புபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இது எப்போதும் இல்லாத ஓர் அளவாகும். அப்படி வரும் மெயில்களில் கணிசமானவர்கள் சோம்பலை ஒழிப்பது எப்படி? தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது எப்படி? நினைவாற்றலைப் பெருக்குவது எப்படி? பரீட்சையில் அதிக மதிப்பெண்களைக் குவிப்பது எப்படி? படிக்காமலே ஒரு வினாவுக்கானப் பதிலை மனப்பாடம் செய்வது எப்படி? நுழைவுத் தேர்வில் தேர்வாவது எப்படி? என்பது குறித்து எல்லாம் எழுத வேண்டும் என்று பணிக்கிறார்கள்.
            எழுதுவதால் சோம்பல் ஒழிந்து விடுமா? அப்படி எழுதி அதை ஆர்வமாகப் படிப்பவர்கள் எப்படிச் சோம்பேறியாக இருப்பார்கள்? சோம்பலாய் இருப்பவர்கள் அதைப் படிப்பதற்கு சோம்பல்பட்டுக் கொண்டு அதைப் படிக்கவே மாட்டார்கள்.
            தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் தன்னம்பிக்கை குறைவு உடையவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் அபாரமான தன்னம்பிக்கைவாதிகள். அவர்கள் எதிர்பார்ப்பது அதிதன்னம்பிக்கை. அது தேவையில்லாத ஒன்று. அப்படி ஒன்றை வளர்த்துக் கொண்டு முட்டுச் சந்தில் போய் முட்டிக் கொண்டு நிற்க வேண்டியதில்லை.
            பரீட்சையில் மதிப்பெண்கள் எடுப்பதெல்லாம் இப்போது ஒரு விசயமே இல்லை. நுழைவுத் தேர்வில் தேர்வாக வேண்டும். அதுதான் முக்கியம்.
            படிக்காமலே ஒரு வினாவுக்கானப் பதிலை எழுதுவதற்கு நீங்கள் யூடியூப்பைப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான் விசயம். யூ டியூப்பில் அதற்கான சங்கதிகள் எல்லாம் நிறைய இருக்கின்றன.
            நுழைவுத் தேர்வில் தேர்வாவது சவாலான ஒன்றுதான். பதில் சொல்லக் கூடாது என்பதற்கேற்ப கேள்விகள் உருவாக்கப்படும் தேர்வு அது. இந்த சூட்சமத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு எப்படிப் பதில் கண்டுபிடிப்பது என்பதை அறிந்து கொள்ள நிறைய யூடியூப்பு வீடியோக்கள் இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் காசைக் கொடுத்து ஏதாவது பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறுங்கள். வேறு வழியில்லை.
            இதைத் தவிர சர்க்கரை வியாதியிலிருந்து மீளுவது எப்படி? மது போதையின் பிடியிலிருந்து மீளுவது எப்படி? புகைப்பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி? என்றெல்லாம் எழுதச் சொல்லி மின்னஞ்சல்கள் வருகின்றன. அதையெல்லம் மக்கள் விட்டு விட்டால் நாட்டின் வருமானம் என்னாவது என்று யோசிப்பவர்கள் இருக்கும் வரை அதை எப்படி நீங்கள் விட முடியும்? நீங்கள் அதைப் பற்றிக் கொண்டு இருக்கவில்லை. நீங்கள் அந்தப் பற்றை விட்டு விடக் கூடாது என்பதற்காகச் சிந்திக்கும் நிறைய மூளைகள் இருப்பதால் அதை விடுவதெல்லாம் சாதாரணமில்லை.
            இது எல்லாவற்றுக்கும் மேலாக யோகாவைப் பற்றி எழுத வேண்டும் என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ஒரு யோகாசிரியனிடம் அப்படிக் கேட்கும் போது எழுதாமல் இருக்க முடியுமா? எழுதலாம். உங்களுக்கு அதைச் செய்ய நேரம் இருக்க வேண்டுமே என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. சும்மா எழுதி வைத்ததைப் படித்து அதனால் யோகாவின் பலனைப் பெற முடியுமானால் அதைச் செய்யலாம். அதைச் செய்ய வேண்டியிருக்கும் என்பதுதான் அதில் உள்ள சிக்கல். அந்த இடியாப்பச் சிக்கலை முன்னிட்டே பல நேரங்களில் அந்த யோசனையை நிராகரிக்க வேண்டியிருக்கிறது.
            இன்னும் இது போல நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றாகச் சொல்கிறேன். இப்படி நான் சொல்லிக் கொண்டிருப்பதால் மின்னஞ்சல் எழுதுவதை விட்டு விடாதீர்கள். நான் உங்கள் மின்னஞ்சலை நிரம்பவே மதிக்கிறேன். நேசிக்கிறேன். அதன் பேரிலே இருக்கிறது பாருங்கள் மின்னல். அது சுருக்கென்று மனதில் தைக்கும் போது ஏற்படும் அனுபவம் இருக்கிறதே! அது அலாதியானது!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...