27 Aug 2019

பைப்படியில் நிற்கும் கதை



செய்யு - 189
            நர்ஸ்ங்க வந்து பதற்றத்தோடயும், பரபரப்போடயும் குழந்தையைத் தூக்கிச் சோதிச்சுப் பார்க்குறாங்க. ஒரு உசுரு போச்சன்னா சும்மாவா? அதுவும் உசுர காப்பாத்துற ஆஸ்பிட்டல்ல போச்சுன்னா அதுக்கு அங்க இருக்குறவங்க இல்ல பதிலச் சொல்லியாகணும். பத்திரிகை, டிவின்னு தெரிஞ்சா கதை கந்தலால்ல ஆயிடும். டாக்கடருகளும் வந்து பார்க்குறாங்க. காசு புடுங்ற ஆஸ்பத்திரின்னு அந்த ஆஸ்பத்திரிக்கு பேரு இருந்தாலும் அந்த ஆஸ்பத்திரியில இது மாரி சம்பவம் இது வரைக்கும் நடந்ததுல்ல. உசுரைக் கொடுத்தாவது உசுரைக் காப்பாத்திக் கொடுத்துப்புடுவாங்க. சோதிச்சுப் பாக்குற டாக்கடருகளுக்கு குழந்தை முன்னாடியே இறந்து போயிருக்கணும்ங்றது நல்லாவே புரியது. மூச்சுத் திணறி குழந்தை சாவுறதுக்கானகான வாய்ப்பு இப்போ இல்லேன்னாலும் அது மூச்சு விட முடியாமத் திணறிப் போய்த்தான் செத்திருக்குங்றது அவங்களுக்குப் புரியுது. புரிஞ்சு என்னா பண்றது? தஞ்சாவூரில்ல பேரு போன சுபாஷினி ஆஸ்பிட்டலில்ல இப்படி ஒண்ணு ஆயிடுச்சுன்னு தெரிஞ்சா... அதால ஆஸ்பிட்டலுக்கு ஏற்படப் போற கெட்டப் பெயரை நினைச்சு டாக்கடருகங்க யோசிச்சுகிட்டு நிக்குறாங்க. வெளியில விசயம் போனா கண்ணு காது மூக்கு வெச்சி ஒண்ணுக்கு நூறால்ல கதைய கட்டி விடுவாங்க.
            இந்த இடந்தான் வேலனுக்கு வசதியாகப் போவுது. "நானும் டாக்கடருக்குத்தாம் படிச்சிட்டு இருக்கேம். ஒங்க ஆஸ்பிட்டல்ல சேர்த்தா தாயுக்கும், சேயுக்கும் உசுருக்கு உத்தரவாதம்னுதாம் சேர்த்தேம். எம்மாம் காசு வேணாம்னாலும் தர்ற தயாரா இருக்கோம். கொழந்தைய உசுரோட கொடுக்க வேண்டியது ஒங்க பொறுப்புதாம். இப்போ என்னான்னா கொழந்தை இறந்துப் போச்சு. இதுக்கு ஒங்க ஆஸ்பிட்டலு நிர்வாகம்தான் பொறுப்பேக்கணும். உசுர இழந்துட்டு நிக்குறோம்! சரியான காரணத்தச் சொல்லல்ன்னா போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேம்! நாம்ம கோர்ட்டுக்குப் போவேம்!" என்கிறான் வேலன்.
            இப்பிடி எடுத்த உடனேயே போலீஸ், கோர்ட்டுன்னு பேசி பீதிய வேலன் கிளப்பி வுட்டதுல,             டாக்கடருங்க வேலனை வெளியே அழைச்சுகிட்டுப் போறாங்க. இதுல லாலு மாமா வேற, "டேய் வேலா! ஒருத்தனயும் விடாதடா! எல்லாரையும் புடிச்சி ஜெயில்ல போடணும்டா! ன்னடா ஆஸ்பிட்டலு நடத்துறானுங்க. நல்லா இருந்த கொழந்தைய வந்து பாத்துப்புட்டு கொழந்தை செத்துப் பூயிட்டுன்னு சொல்றானுங்க. என்னத்த ஊசிய போட்டு, மருந்த கொடுத்து கொன்னானுங்கன்னு கேளுடா! அவனுங்க உண்மையைச் சொல்லன்னா நாம்ம அவனுங்கள கொன்னுப்புட்டு ஜெயிலுக்குப் போறேம்." என்று சத்தம் வுடுது பாருங்க. டாக்கடருங்க வெளியில தைரியமாக முகத்தை வெச்சிகிட்டு இருந்தாலும் உள்ளுக்குள்ள குலை நடுங்கித்தாம் போறாங்க. அவங்க அப்பிடியே வேலனைக் கையோட கையா அழைச்சுகிட்டு கொண்டுட்டுப் போறாங்க. "பெரியவர சத்தமா எதயும் பேச வாணாம்னு சொல்லுங்க!"ன்னு வேற கெஞ்சிக் கேட்டுக்கிறாங்க. என்னென்னவோ பேசி அங்க வெச்சி வேலனைச் சமாதானம் பண்ணப் பாக்குறாங்க. அவங்களப் பொருத்த வரைக்கும் ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க. விசயத்தை வெளியில தெரியாம அமுக்கிப் புடணும்னு. கடைசியில் பீஸ் ஏதும் கொடுக்க வேணாம்னும், ஆஸ்பிட்டல் தரப்பிலிருந்து இருபத்தஞ்சாயிரம் தருவதுன்னும், விஷயத்தை வெளியில் விடக் கூடாதுன்னும் பேசி முடிவாகுது.
            இதையெல்லாம் வேலன் லாலு மாமாவிடம் சொல்லச் சொல்ல லாலு மாமாவுக்கு ஏக குஷியாகிப் போகிறது. "இது ன்னடா கொழந்தையையும் நாமளே கொன்னுபுட்டு, அதுக்கு கூலியா இருபத்தஞ்சாயிரத்தையும் வாங்கிக்கிற மாரில்லடா இருக்கு! இவனுங்க ன்னடா முட்டாப் பயலுகளா இருக்கறதுக்காகவே படிச்சிருக்கானுங்களா?" என்கிறது லாலு மாமா.
            "அப்பிடில்லப்பா! கொழந்தையோட மாரைப் பிடிச்சி அழுத்தி அதால மூச்சு வுட முடியாமத்தான் அது இறந்துப் போயிருக்குங்றது அவனுங்களுக்கும் ஓரளவுக்கு தெரியுது. இருந்தாலும் இந்த ஆஸ்பிட்டல்ல பிரசவம் ஆயி அதுக்கப்புறம் கொழந்தை இறந்துப் போச்சுங்றது செய்தி பரவுனா பெறவு எவனும் இந்த ஆஸ்பிட்டலுக்குப் பெரசவம்னா வர யோசிப்பாம். பேரு கெட்டுப் போயிடும். இந்த இருபத்தஞ்சாயித்தப் பாத்தான்னுவோன்னா அவனுங்களுக்கு லட்சம் லட்சமா நஷ்டம் ஆயிப் போயிடும். அதுவும் இல்லாம போலீஸ், கேஸூ, கோர்ட்டுன்னு போயி நிக்கணும். பேப்பர்ல செய்தி வந்துச்சுன்னா நாறிப் போயிடும். நாம்ம டாக்கடருக்குப் படிக்கிறதால டெக்குனிக்கல்லா பேசுனேம். அதெக் கேட்டுட்டு பயந்துட்டானுங்க. நமக்கு ஏம் வம்புன்னு காதோடு காதா கதெய முடிச்சிடுவோம்னு பாக்கறானுங்க! இதெ நாம்ம இல்லேன்னா எல்லாத்துக்கும் சார்ஜ் பண்ணிவுட்டு எல்லாத்தையும் நம்ம தலையில கட்டி அம்பதாயிரத்துக்கு மேல சார்ஜைப் போட்டு அனுப்பிடுவானுங்க. வெவரத்தோட பேசிப் பயமுறுத்துறதலதாம்ப்பா எல்லாமும் இருக்குது! அதாலதாம் எல்லாமும் இப்பிடி உல்ட்டாவா நடக்குது. இல்லேன்னா நம்மள கூண்டோட கைலாசத்துக்கு ஏத்திடுவானுங்க!" என்கிறான் வேலன்.
            "கேட்குறதுதாம் கேட்ட ஏம்டா இருபத்தஞ்சாயிரத்தோட நிப்பாட்டிப்புட்டே! உசுருல்ல போயிருக்கு. ரண்டு லட்சம் மூணு லட்சம்னு கறந்தா ன்னா?" என்கிறது இப்போ லாலு மாமா.
            "ரொம்ப மெரட்டிக் கேட்டா உஷாரு ஆயிடுவானுவோப்பா! அவனுங்க விழிச்சிக்கிறதுக்குள்ள காரியத்த முடிச்சிட்டு எடத்தைக் காலி பண்ணியாகணும். நாம்ம ஐம்பாதியிரம்னுதாம் பேசுனோம். அவனங்க அப்பிடி இப்பிடின்னு இருபத்தஞ்சாயிரத்துல வந்து நின்னாங்க. லட்சம் அது இதுன்னு நின்னுகிட்டு இருந்தா அது அவனுங்களுக்குப் பெரிய காசா இருக்கேன்னு யோசிப்பானுங்க. கோர்ட்டு கேஸீன்னு பாத்துப்போம்னு நெனைச்சுப்புட்டா போஸ்ட்டு மார்டம் அது இதுன்னு நாம்மளும் மாட்டிகிடுற மாரி ஆயிடும். அதுவும் இல்லாம இது மொறையா பொறந்த கொழந்தை வேற இல்ல. எல்லாமும் வெளியில வந்துபுடும். கெடைச்ச வரிக்கும் ஆதாயம்னு சாமர்த்தியமா நடந்துக்கணும். கழுவுற மீனுல நழுவுற மீனா இருந்துட்டுப் போகணும். கழுவுற கையில ஒணக்கையத் தேடக் கூடாது. பெறவு கொழம்புல கொதிச்சி இரையாக வேண்டியதுதாம்!" என்கிறான் வேலன். இப்போ லாலு மாமா வாயை மூடிக்கிது. ஆக வேண்டிய காரியங்கள் மளமளவென்று நடக்குது.
            சுபாஷினி ஆஸ்பிட்டல்காரனிடமே இருபத்தைந்தாயிரத்தையும் வாங்கிகிட்டு, அவன் அனுப்பி வெச்ச ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே தஞ்சாவூரு லாலு மாமாவின் வூட்டுக்கு வந்து, கொல்லைப் புறத்தில் பெரிய குழியாய் வெட்டி குழந்தையைப் புதைத்து ஆனது. ஊருக்கெல்லாம் சுந்தரிக்கு அபார்ஷன் ஆகி தஞ்சாவூரில் இருப்பதாக செய்தி சொல்லப்படுது.
            சுந்தரிக்கு அபார்ஷன் ஆனதுக்கு அது சாப்பிட்ட கோழிக்குழம்பும், ஷாக் அப்சார்கள் சரியாக இல்லாத பழைய பைக்கில் சுந்தரியை வேலன் அழைச்சிட்டுப் போய் வந்தது எல்லாம் காரணமாக அப்படியும் இப்படியுமாகச் சொல்லப்படுது. அந்தக் காரணத்தைக் கேட்கும் போது நம்புகின்ற மாதிரித்தானே இருக்கிறது. இதால லாலு மாமா மேலயும், வேலன் மேலயும் லேசாவோ, பயங்கரமாவோ கோபம் வருதுல்ல. இந்த லாலு மாமா மட்டும் தஞ்சாரூக்குச் சுந்தரிய அழச்சிட்டுப் போவாம இருந்தா, இந்த வேலன் பயெ பைக்குல வெச்சிக் கொண்ட்டுட்டுப் போவாம இருந்தா இந்த மாரில்லாம் நடந்து இருக்காதுல்லன்னு இந்தக் கோபத்துல  மத்த விசயங்கள யோசிக்காம எல்லாம் அதுக்குள்ள மூடி மறைஞ்சிப் போவுது இல்லையா!
            உங்களுக்கு ஞாபவம் இருக்கும்னு நினைக்கிறேன். தம்மேந்தி ஆத்தாவும், வெங்குவும் பைப்படியில கதை பேசிகிட்டு இருக்குறது.
            இந்த கரு கலைந்த கதையோட அதுக்கு அப்புறம் இப்போ நடந்துகிட்டு இருக்கற கதையைக் கேட்கத்தான் தம்மேந்தி ஆத்தா வெங்குவிடம் குத்த வைச்சு பைப்படியில மாய்ஞ்சு மாய்ஞ்சு கதை கேட்டுகிட்டு இருக்குது. வெங்குவும் தனக்குத் தெரிந்த வரையில் சொல்லுது. "இஞ்ஞ வடவாதியில இருந்த வரைக்கும் சுந்தரி நல்லாத்தாம் இருந்தா. இந்த முருகு மாமாவும், நீலு அத்தையும் போயிப் பாத்திருந்தா இஞ்ஞயே இருந்திருப்பா. யாரும் வந்துப் பார்த்துக்கலேன்னு தஞ்சாரூக்குப் போயிருக்கா. திருச்சிப் போயிருக்கா. திருச்சிலேந்து தஞ்சாரூ வந்திருக்கா. வயித்துப் புள்ளக்காரி இப்படி பஸ்ல நெடுந்தூரம் அலயலாமா? அதுவும் ல்லாம்ம கோழிக்கறிய வளச்சி வளச்சி தின்னுருப்பா போலருக்கு. இந்த வேலம் பயெ பைக்குல வேற வெச்சி அழச்சிட்டுப் போயிருக்காம். புள்ளதாச்சி ஆட்டோவுல கீட்டோவுல போவணுமா இல்லையா. இவ்வேம்ங்க இப்பிடி பண்ண வேலயில கர்ப்பம் கலஞ்சிப் போயிருக்குக்கா! ஆஸ்பிட்டல்ல வெச்சி கலச்சி வுடுற மாரி ஆயிடுச்சாம். இன்னிக்கு ஆத்துல உடம்புல தண்டுனதா நெனச்சா அத்து ஞாபவம் வந்திடுச்சிக்கா. கலைக்குற கருவையெல்லாம் ஆத்துலதாமே வுடுறானுவோ! ஒருவேள அது இதுவா இருக்குமான்னு ஒரு மாரியா ஆயிப் போச்சக்கா!" என்கிறது வெங்கு.
            "ஏம்டி அது நடந்தது எப்போ? நீ குளிச்சது இப்ப எப்போ? அதெ போட்டு மனசக் கொழப்பிக்காதே. ஏம்டி வேற மாரில்ல கதெ பேசுறாங்க. ஒங்க மாமம் மவ்வேன் வெளிநாட்டுல இருக்குறப்ப வேற மாரி ஆயிப் போயி விசயம் வெளில தெரிஞ்சிடக் கூடாதுன்னு தஞ்சாரூல்ல வெச்சிச் செஞ்சிருக்கதால்ல பேசிக்கிறாங்க!" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            "அது என்னவோ தெரியலேக்கா! அப்டியும் இப்டியும்மாத்தாம் சேதிப் புழங்குது. முருகு மாமாவும் நீலு அத்தையும் சுந்தரி மேல இருக்குற கடுப்புல அப்டி கிளப்பி வுட்டுகிட்டு சொல்றதாவும், அப்டில்லாம் யில்ல அபார்ஷன்தாம் ஆயிடுச்சின்னும் சொல்றாங்க. எது உண்மையோ? அந்த ஆண்டவனுக்குத்தாம் வெளிச்சம்!" என்கிறது வெங்கு.
            "இப்போ அந்தச் சுந்தரிக் குட்டி எஞ்ஞ இருக்கா?" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            "கொஞ்ச நாளு தஞ்சாரூல்ல வெச்சிருந்து பிற்பாடு பாக்குக்கோட்டையில வெச்சிருந்து இருக்காங்க. இப்போ வடவாதியில கொண்டாந்து விட்டாச்சி. விசயமெல்லாம் தெரிஞ்சி அந்த சித்துவீரம் பயலும் வெளிநாட்டுலேந்து இப்போ வடவாதிக்கு வந்துட்டாம்க்கா!" என்கிறது வெங்கு.
            "அத்து செரி! பாக்குக்கோட்டையில ஒருத்தம் இருக்கானாம்ல. அவ்வேம் வடவாதிக்கு வந்து கையும் களவுமா பிடிபட்டு ஒதை வாங்கி பஞ்சாயத்துலாம் நடந்திச்சே! அத்தே சொல்லுவேன்னு பார்த்தா சொல்ல மாட்டேங்றீயே?" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            "அப்போ நீயி எல்லாத்தியும் தெரிஞ்சு வெச்சிகிட்டுதாங் எங்கிட்ட எம் வாயெப் பிடுங்குறீயா?" என்கிறது வெங்கு.
            "ஆம்மா! ஊரே சிரிச்சிப் போயிக் கெடக்கு! நமக்கு மட்டும் தெரியாதுன்னு நெனைக்குறே பாரு! சொன்னாத்தாம் கொறைஞ்சுப் போயிடுவீயா ன்னா?" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            "அதுவுஞ் சர்தாம்! ஒனக்குத் தெரியாத ஊரு கதையா? ஒலக கதையா? வூட்டு வேல, கொல்ல வேல எல்லாத்தியும் அப்டியே போட்டுப்புட்டு நீயி இஞ்ஞ வந்து இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கேன்னா எம் வாயெக் கெளறத்தானே! ஒனக்குத் தெரியாதது ன்னா நமக்குத் தெரிஞ்சிடப் போவுது?"
            "ந்தா! இதல்லாம் வாணாம். எம் மேல நம்பிக்க இல்லேன்னா சொல்ல வாணாம். நாம்ம கெளம்புறேம்."
            "ஒனக்குத் தெரியாதது நமக்கு ன்னா தெரியும் சொல்லு? ச்சும்மா சொல்லு சொல்லுன்னா எதெச் சொல்றது?"
            "அதாங் ஒங்க மாமம் மவ்வேம் சித்துவீரன் அந்தப் பொண்ண வெச்சிக்கப் போறானா? அத்துவுடப் போறானா? அந்தக் கதெய்ய சொல்லு! அதுக்காகத்தான வேல மெனக்கெட்டு இருக்குற வேலய எல்லாம் போட்டுட்டு ஓடியாந்தேம்!" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...