24 Aug 2019

அதாகப்பட்ட வருமான வரிச் சலுகை வழிமுறைகள்



            நம்மைப் பார்ப்பவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க மாட்டார்கள். வரிச் சலுகைக்கு என்ன பண்ணப் போறதா உத்தேசம்? என்ற கேள்வியை எதிர்கொள்ளாத மாதாந்திர வருமானம் வாங்கும் மனிதர்களும் உண்டோ என்ன!
            அதிகபட்சமாக என்ன செய்யலாம் என்றால் வருமானத்தோடு செலுத்தும் நலநிதி அல்லது பங்கேற்பு ஓய்வு நிதியில் பணத்தை நம்மை அறியாமலே செலுத்தும் பணத்தை வருமான வரிச் சலுகைக்காகக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். அத்தோடு இன்ஷ்யூரன்ஸ்க்கு பணம் செலுத்துவதைப் போலவே மாதா மாதம் வருமான வரிக்காகவும் ஒரு தொகையைச் செலுத்தி வைக்கலாம்.
            பணம் கொஞ்சம் கையில் தேறினால் பப்ளிக் பிராவிடன்ட் பண்ட்டில் ஐநூறு ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் வரை வருஷத்துக்குப் போட்டு வைத்து சலுகையைத் தேடிப் பார்க்கலாம். பெண் பிள்ளைகளைப் பெற்ற மகராசன்கள் செல்வமகள் திட்டதிலும், ஆண்பிள்ளைகளைப் பெற்ற தர்மபிரபுக்கள் செல்வமகன் திட்டத்திலும் பணத்தைப் போட்டு அதை வருமான வரிச் சலுகைக்காகக் காட்டிக் கொள்ளலாம். இதெல்லாம் பதினைந்து வருடத்துக்கு பணத்தை எடுக்க முடியாத அசைக்க முடியாத திட்டங்கள் என்பதால் ஐந்து வருட நிரந்தர வைப்பு நிதியில் எந்த பாங்கிலும் போட்டு வைக்கலாம். ஐந்து வருட வைப்பு நிதிக்குக் கிடைக்கும் வட்டிக்கு பின்னர் வரி செலுத்த வேண்டும் என்பது வேறு விசயம். அதே போல கிசான் விகாஸ் பத்திரங்களை வாங்கி வைத்து வரிச் செலுகைப் பெற்றுக் கொண்டு ஐந்து வருட முடிவில் கிடைக்கும் வட்டித் தொகை்கு வரியைச் செலுத்தலாம்.
            பிள்ளைகளை அரசாங்கப் பள்ளியில் சேர்க்காமல் ஏதாவது பிரைவேட் பள்ளியில் சேர்த்து டியூசுன் பீஸூக்கு கணக்குக் காட்டி வருமான வரிச் சலுகை கோரலாம். இது அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்குத்தான். அதிகபட்சமும் நம் சமூகத்தில் குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள்தான் இருக்கின்றன என்பது வேறு விசயம்.
            கொஞ்சம் இந்த வருமான வரிச் சலுகையை முதலீடாக செய்ய நினைத்தால் பரஸ்பர நிதியென்று ஒன்று இருக்கிறது. தனியார் பாங்குகளில் தடுக்கி விழுந்தால் போதும். அவர்களே அதற்கென்று இருக்கும் இ.எல்.எஸ்.எஸ்ஸில் சேர்த்து விட்டு மாதா மாதம் SIP எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென் பிளான் மூலம் நமது வங்கிக் கணக்கிலிருக்கிலிருந்து பணத்தை உருவிக் கொள்வார்கள். வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன் அவர்களிடம் போய் நின்றால் போதும் அதற்கான ஸ்டேட்மெண்டை எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.
            இதிலெல்லாம் எதுவும் நம் ஜபர்தஸ்துக்கு ஆக வில்லை என்றால் ஹவுசிங் லோன் ஒன்றைப் போட்டு விட்டு அதை வட்டியோடு கட்டுவதற்கு வரிச் சலுகையைக் கோரலாம்.
            இல்லையென்றால் அடிபட்டு விழுந்து அதற்கு மருத்துவச் செலவு செய்ததைக் காட்டி வரிச்சலுகையைப் பெறலாம். அதற்கெல்லாம் பில்கள் முக்கியம் மக்களே!
            இதையெல்லாம் விட முக்கியமாக அதிக வருமானம் தரும் மாதாந்திரப் பணிகளில் சேராமல் மாதம் இருபதாயிரம், முப்பதாயிரம் வருமானம் தரும் வேலைகளில் இருந்தால் போதும் எந்த வருமான வரியும் கட்ட வேண்டியதில்லை.
            பதவி உயர்வில் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் வருமானம் தரும் மாதாந்திரப் பதவிகளில் போய் உட்கார்ந்து கொண்டு பதவி உயர்வும் வேண்டும், வருமான வரிச் சலுகையும் வேண்டும் என்றால் டீ புரோமோட் ஆகிக் கொள்வதைத் தவிர சத்தியமாக பெரிதாக எதுவும் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.
            சமயத்தில் ஒரு நல்ல காரியத்துக்கு பத்து பைசா கொடுக்க முடியாத கஷ்டகாலங்கள் மாதாந்திரச் சம்பளக்காரனுக்கு வந்து விடுவதுண்டு. அப்படி கொடுக்க முடியாத அந்தக் காசை வருமான வரிப் பணமாக நினைத்து அரசாங்கத்துக்குக் கட்டி விட்டால் அவர்கள் பார்த்து மக்களுக்குத் தேவையான நல்லதைச் செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோடு வருமான வரியில் எந்தச் சலுகையையும் எதிர்பார்க்காமல் கட்டி விடலாம்.
            இதற்கு மேல் வழியென்றால் கொஞ்சம் கட்டணத்தைச் செலுத்தி இதற்கென்றே நிபுணர்களிடம் ஆலோசனைக் கேட்டால் சொல்வார்கள். அது கட்டண விதிகளுக்கு உட்பட்டது. நாம் சொல்வது கட்டண விதிகள் இல்லாதது என்பதால் அவ்வளவுதான் சமாச்சாரங்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...