24 Aug 2019

உதிர்த்துப் பரவும் சிவப்பு



செய்யு - 186
            குழந்தைப் பொறக்காதான்னு ஏங்குறவங்க நாட்டுல நிறைய பேரு இருக்காங்க. எத்தனையோ கோயில் குளம், தர்கா, சர்ச்சுன்னு ஏறி எறங்கிட்டே, ஆஸ்பிட்டலு ஆஸ்பிட்டலா ஏறி எறங்குவாங்க அவங்க. டாக்கடரு மேல டாக்கடர பார்த்து தவமா தவம் கெடப்பாங்க. இல்லாதவங்களுக்குத்தானே அதோட அருமை தெரியும். ஏங்கித் தவிக்குறவங்களுக்குதானே அந்த ஏக்கத்தோட தவிப்பு தெரியும். எதிர்பார்த்துக் கிடக்குறவங்களுக்கு அது கிடைக்கிறப்ப ஏற்படுற சந்தோஷமே வேற. இதெல்லாம் அப்படி இருக்கிறவங்களுக்குத்தான்.
            எதையும் எதிர்பார்ககாம, ஏங்காம ஒண்ணு கெடைக்குதுன்னு வெச்சிக்குங்க, அதோட அருமைப்பாடு தெரிஞ்சவங்க கொஞ்சந்தான். சுந்தரிக்குப் பொறந்திருக்கிற கொழந்தையோட அருமை தெரியலன்னுதான் சொல்லணும். அதெ விடவும் அது ஏன் இப்போ வந்து பிறந்திருக்குன்னு திக் திக்குன்னு இருக்கு அதுக்கு.
            யாருக்கு விசயம் தெரியலன்னாலும் அம்மாகாரிக்கு விசயம் தெரியாம போயிடுமா? லாலு மாமாவுக்குத்தான் புரியாம போயிடுமா? ஏதோ தப்பு நடந்திருக்குங்றது மட்டும் புரியுது. குழந்தைச் சிரிச்சு விளையாடுறதைப் பார்த்து அவங்களால இப்போ சிரிக்க முடியல.
            எந்தக் குழந்தைக்கு யாரு தகப்பன்ங்றது ஒரு தாயி மட்டுமே அறிந்த ரகசியம். அதெ அவதான் சொல்ல முடியும். தகப்பன் யாருங்றத அவ மட்டுமே கை காட்ட முடியும். இதான் இப்போ நிலைமையோட சிக்கல்.
            சரசு ஆத்தாவுக்கு வர்ற கோபத்துக்கு புள்ள பெத்த பச்ச ஒடம்புக்காரின்னு பார்க்காம சுந்தரிய அடிச்சு வெளுத்து வாங்கணும்னு தோணுது. லாலு மாமாவுக்கு அதுக்கு மேல கோவம் வருது. சுந்தரிய மிதிச்சே கொன்னாலும் தேவலன்னு அதுக்குத் தோணுது. அடிச்சு வெளுத்து வாங்கறதும், மிதிச்சுக் கொல்லணுங்றது மனசோட ஆத்திரமா இருந்தாலும், அதை விட மனசுக்கு அதுல இருக்குற புதிரு விடுபடறதுதானே முக்கியம். அந்தப் புதிரு மட்டும் விடுபடலேன்னா மண்டையே இல்ல வெடிச்சிடும்! மண்டை வெடிச்சுப் போச்சுன்னா எப்படி அடிக்கிறது? எப்படி மிதிச்சுக் கொல்றது?
            சரசு ஆத்தாவும், லாலு மாமாவும் பார்க்குற பார்வையே சரியில்லைன்னு சுந்தரிக்குப் புரியுது. வேலன் வேற அப்போ பக்கத்துல இல்ல. குழந்தைப் பொறந்திருக்கிதால தேவைப்படுற சாமான்களை எல்லாம் எடுத்துட்டு வர வூட்டுக்குப் போயிருக்கான். தாயும், சேயும் கொஞ்சம் ஓய்வா இருக்கட்டும்னு நர்ஸூங்க தனியா ரூம்ல வுட்டுட்டுப் போயிருக்காங்க. டாக்கடரு அவருக்குன்னு இருக்குற பார்வை நேரத்துலதான் ஒரு சுத்து வந்துட்டுப் போவாரு. அந்த அறையில இப்போ பொறந்த குழந்தைய சேர்க்காம மூணு பேரும்தான் இருக்காங்க. கள்ளங் கபடம் இல்லாம குழந்தை இப்போ சிரிச்சுகிட்டே இருக்கே.
            சரசு ஆத்தா படுத்துகிட்டு இருக்குற சுந்தரிய கைத்தாங்கலா பிடிச்சி படுக்கை மேல சாய்ஞ்சாப்புல உட்கார வைக்குது. ஏம் திடீரென்னு இப்படி அம்மா பண்ணுதுன்ன சுந்தரி யோசிக்கிறதுக்குள்ள சுந்தரியோட கன்னத்துல பளார் பாளர்னு விழுவுது பாருங்க அறை. சுந்தரிக்கு அப்படியே பொறி கலங்குனாப்புல இருக்கு. அதுவரைக்கும் சிரிச்சுகிட்டு இருந்த குழந்தைக்கு அம்மாவுக்கு அடி விழுவுதுன்னு எப்படி புரிஞ்சிச்சோ என்னமோ சிரிக்கிற சிரிப்பை வுட்டுப்புட்டு அப்படியே மெளனமா கெடக்கு.
            "சொல்லுடி இத்து யாருக்குப் பொறந்த கொழந்தை?" அப்பிடிங்குது சரசு ஆத்தா.
            எங்கிருந்துதான் அப்படி ஒரு தைரியம் வந்ததோ தெரியல. சுந்தரி பல்ல கடிச்சிட்டு அழுத்தம் திருத்தமா "நீயி யாருக்குக் கட்டி வெச்சியோ அத்துக்குப் பொறந்த கொழந்தைதான்!"  அப்பிடிங்குது.
            "கழுத்த நெரிச்சு கொன்னே புடுவேம் பார்த்துக்கோ! எந்த ஒலகத்துலடி ஏழு மாசத்துல கொழந்த பொறக்குது? யார ஏமாத்துறே? உண்மையச் சொல்லலன்னா ஒன்னைய இஞ்ஞயே வெச்சு கொல பண்றத தவுர வேற வழியில்ல!"
            "ஒண்ணு ஒம் பொண்ணு சொல்றத நம்பு! இல்லே ஒம் மனசு சொல்றத நம்பு! ஒம் மனசு சொல்றத நம்புறதுக்காக நாம்ம சொல்றத பொய்யின்னு சொல்லாதே!" வார்த்தைங்க அப்படியே சரம் சரமா கோத்த மாதிரி வருது சுந்தரிக்கு. அதுக்கு இது தாம்தான் பேசுறோமான்னு ஒரு ஷனத்துக்கு ஆச்சரியமாத்தான் இருக்கு.
            "ன்னா நெஞ்சழுத்தாம் பாத்தியான்னே இதுக்கு? இதயெல்லாம் கண்டம் துண்டமா வெட்டிக் கொன்னாலும் ஆத்திரம் அடங்காதுன்னே!" என்று லாலு மாமாவைப் பார்த்து ஆத்திரம் தீராமல் சொல்கிறது சரசு ஆத்தா.
            "ரெண்டு பொட்டச்சிகளும் சேந்துகிட்டு யாரடி ஏமாத்துறீங்க?" ஓங்கி ஒன்று சரசு ஆத்தாவின் கன்னத்தில் அறை வைக்கிறது லாலு மாமா. சரசு ஆத்தாவுக்கு அப்படியே ஒலகமே தலைகீழா சுத்துற மாதிரி ஆயிடுச்சு. மனத்தாங்கல்ல இதுதாங் பிரச்சனை. யாரு யாரை அடிக்கிறோம்னு எதுக்கு அடிக்கிறோம்னுலாம் புரியாது. ஒருத்தருக்கொருத்தரு புரியாமல அடிச்சிக்க வேண்டிருக்கும். அண்ணன்கள்ல தன் மேல ரொம்ப பாசமா இருக்குறதும், இது வரைக்கும் தன் மேல கை வைக்காம இருக்குறதும் லாலு மாமா ஒண்ணுதான். அதுவே தம் மேல கை வெச்சிடுச்சேன்னு சரசு ஆத்தாவுக்கு அழுகை அழுகையா வருது. தன்னோட பொண்ணு இப்பிடி ஒரு புள்ளைய பெத்து வெச்சி தன்னை அடி வாங்க வெச்சிட்டாளேன்னு அதுக்கு தாங்க முடியல. கண்ணுல தண்ணி போல பொலன்னு கொட்ட ஆரம்பிச்சிடுச்சு.
            "ஒரு அம்மாகாரிக்குத் தெரியாதா? பொண்ணு என்னா நெலமையில இருக்கான்னு? அவ்வே கல்யாணத்தப்பவே முழுகாம இருந்திருக்கணும். அதல்லாம் பாக்குறதில்லயா? பொண்ணு வூட்டுக்குத் தூரமா இருக்காளா இல்லையான்னு கூடவா பார்க்காம ஒரு பொம்பள வூட்டுல இருப்பா? நீயி என்னத்தான் பண்றே? ச்சும்மா சூத்த தேய்ச்சுகிட்டு தின்னுகிட்டு கெடந்தியா? இதல்லாம் அப்பயே கவனிக்கணும்மா இல்லியா? ஏம்டி சண்டாளி நீயாவது இந்த மாதிரி... இந்த மாதிரின்னு... சொல்லக் கூடாது?" என்கிறது காத்திரமாக லாலு மாமா.
            "நாம்மதான் இந்தக் கல்யாணம் வேணாம்னு சொன்னேம்ல. தலை தலையா அடிச்சிகிட்டேனே. வூடு தங்காம அவனோட ஓடிப் பார்க்கவும் பார்த்தேனே. அந்தத் தி...... தே..........யா மவேன் ஓடி வாராம ஒங்ககிட்ட வந்து நம்மள காட்டிக் கொடுத்தானே! நீங்கதான் என்னம்மோ குடும்ப கெளரவம் குடும்ப கெளரவம்னு பொட்டப் பயலுக்குக் கட்டி கொடுத்தீங்களே!" என்று ஆங்காரமாய்ச் சத்தம் போடுகிறது சுந்தரி. இப்படி ஓர் ஆங்காரத்தைச் சுந்தரியிடமிருந்து லாலு மாமா எதிர்பார்க்கவில்லை.
            " தி........ தே.......யா! அம்மாவும் பொண்ணும் சேர்ந்து நாடகமா போடுறீங்க?" என்று சொல்லிக் கொண்டே சரசு ஆத்தாவை எட்டி ‍உதைக்கிறது லாலு மாமா. சரசு ஆத்தா தடுமாறியபடி அறைச்சுவரில் முட்டிக் கொண்டு சாய்கிறது.
            "அந்த நாடுமாறிப் பண்ணதுக்கு என்னைய போட்டு ஏம்ணே போட்டு இப்பிடி அடிக்குறே? நாந் எந்த குத்தம் பண்ணேம்? எம் தலயெழுத்து இந்த அவ்சாரிய வயித்துல சுமந்தேம். இவ்வளே கொல்லணும்ணே! அப்பதாம் நம்ம ஆத்திரம் அடங்கும்!" என்கிறது சரசு ஆத்தா விக்கித்துப் போய்.
            "ஆயி மவ்வே ரெண்டு பேரையும் கொல்லணும்! அப்பதாம் நம்ம ஆத்திரம் அடங்கும்!" என்கிறது லாலு மாமா.
            "அதாம்ணே சரி! அதாம்ணே சரி! எங்க ரண்டு பேரையும் கொன்னு போட்டுடு. அதாஞ் சரி! இவ்வே பண்ண வேலைக்கு அதாங் சரியான தண்டனெ! அப்பிடியே பண்ணுண்ணே!" என்கிறது சரசு ஆத்தா.
            "ஒங்கள கொன்னுப்புட்டு நாம்ம ஜெயிலுக்குப் போறதா? என்னா எண்ணத்த பாரு ரண்டு பேருக்கும்? ரண்டு சிறுக்கிகளும் விசத்த வாங்கிக் குடிச்சிட்டு சாவுங்குடி! ஏம்டி நம்ம சீவன வாங்குறீங்க?"
            "அதாம்ணே சரி! ஒங் கையாலயே வாங்கிக் கொடு. குடிச்சிட்டுப் போயிச் சேருறோம்ணே! இந்தாருடி சாவுறதுன்னு ஆயிப் போச்சி. இப்பயாவது சொல்லுடி! இத்து யாருக்குப் பொறந்த கொழந்தே?" என்கிறது சரசு ஆத்தா.
            "ஒண்ணுந் தெரியாத மாரி கேட்காத! அந்தப் பொட்டப் பயலுக்குப் பொறக்கல. அவ்வேம் ஆம்பளையா இல்லையான்னே தெரியாம கல்யாணத்துப் பண்ணி வெச்சிட்டு யாருக்குப் போறந்த கொழந்தே? யாருக்குப் பொறந்த கொழந்தேன்னு கேட்டா ன்னா பதிலு சொல்றது?" என்கிறது சுந்தரி. இதுவரை மெளனமாக இருந்த குழந்தை இப்போ அழ ஆரம்பிக்கிறது.
            லாலு மாமாவுக்கு எங்கிருந்து அப்படி அடக்க முடியாத ஆத்திரம் வந்ததோ! உட்கார்ந்த வாக்கில் இருந்த சுந்தரியின் வயிற்றில் பெட்டின் மீதேறி ஓங்கி ஓர் உதை உதைக்கிறது. "யாரப் போயிடி பொட்டப் பய... பொட்டப் பயன்னு சொல்றே!"ன்னு கத்துது. அது உதைத்த உதையில் சுந்தரி உட்கார்ந்த இடமெங்கும் சிவப்பாய் பரவுகிறது.
            சரசு ஆத்தா ஓடிப் போய் குழந்தையைத் தூக்குகிறது. சுந்தரியை அப்படியே தழுவிக் கொண்டு, "அய்யோ! அய்யோ! எம் பொண்ணு இப்பிடிப் போட்டு கொல்லப் பாக்குறானே! இப்பிடிப் போட்டு கொல்லப் பாக்குறானே! எல்லாருமா சேர்ந்து இப்பிடி எம்ம வம்சத்தெ அழிக்கப் பாக்குறானுங்களே!" அப்பிடின்னு கதறி அழுவ ஆரம்பிக்குது.
            இதைக் கேட்டதும் லாலு மாமாவுக்கு ஒடம்பு வெடவெடன்னு நடுங்க ஆரம்பிக்கிறது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...