23 Aug 2019

ஆறெழு மாசத்துக் குழந்தை!



செய்யு - 185
            நம்ம கிராமத்துல இருக்குற பாட்டிங்க இருக்காங்களே அவுங்க வயித்துப் புள்ளகாரியோட மூஞ்ச பார்த்தே என்னிக்குப் பிரசவம் ஆவும்னு சொல்லிப்புடுவாங்க. தாய்மாருங்க உட்கார்ற, எழுந்திரிக்கிற, இடுப்புல கை வைக்கிற தோதைப் பார்த்தா அவங்களுக்கு பிரசவ கணக்கு நல்லாவே தெரியும். சில சமயம் நாளிக்குப் பொழுது விடியறதுக்குள்ள கொழந்தைப் பொறந்துடும்னு சொல்லுவாங்க. அப்படியே அச்சரம் பிசகாம நடக்கும். அவங்க கணக்குத் தப்புற கேஸூகளும் உண்டு. இருந்தாலும் ஓரளவுக்கு அணுக்கமா இன்னின்ன நாளுக்குள்ள ஆயிடும்னு கூட கொறைச்சலா சொல்லிப்புடுவாங்க. அது ஓரளவுக்குச் சரியாவும் இருக்கும். இதுல துல்லியமாக இன்னிக்குதான் இந்த மணி நேரத்துக்குத்தான் பிரசவம் நடக்கும்னு யாராலும் சொல்லிட முடியாது. ஏன்னா, மகப்பேறும் மழைப்பேறும் மகாதேவனுக்கு கூட தெரியாதுன்னு கிராமத்துல சொல்லுவாங்க. அப்படிச் சொன்னாலும் அதுலயும் ஒரு கணக்கு இருக்கு.
            எப்படியும் எட்டு ஒன்பது மாசமாவது ஆகும் பிரசவத்துக்கு. ஒன்பது மாசத்துக்கு மேல பத்தாவது மாசம்னுதான் பிரசவம் ஆகும்னு கிராமத்துல அதைக் கணக்கு வெச்சிப்பாங்க. நாம்ம முடிஞ்ச மாசத்துக்கு கணக்குச் சொல்லுவோம். நம்ம படிப்புச் சொல்லித் தந்த கணக்கு. கிராமத்துப் பாட்டிங்க முடிஞ்ச மாசத்துக்கு அடுத்து தொடங்குற மாசத்தைத்தான் கணக்கா வெச்சிச் சொல்லுவாங்க. உதாரணத்துக்கு நமக்கு வயசு இப்போ என்னான்னு கேட்டு, இருபத்து ஒண்ணுன்னு சொன்னா அது இருபத்து ஒண்ணு முடிஞ்சதா கணக்கு. கிராமத்துல இருபத்து ரண்டுன்னுதான் வயசு சொல்லுவாங்க. அதாவது இருபத்து ஒண்ணு முடிஞ்சி இருபத்து ரண்டு நடக்குறதா அவங்க கணக்கு. அப்படித்தான் பத்து மாசம் முடிஞ்சாத்தான் பிரசவம் ஆகும்ங்றது அவுங்க கணக்கு. அதுக்கு முன்னாடி பெரசவம் ஆவுறதுக்கு வாய்ப்பு இல்லங்றது மகாதேவனுக்கு மட்டுமில்ல, அது உலக மக்கள் எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதான். 
            சுந்தரிக்குக் கல்யாணம் ஆகி ஆறெழு மாசம் ஆகியிருந்தா அதிகம். அதுக்குள்ளயே வயிறு ரொம்பவே மேடிட்டுப் போயி பிரசவத்துக்குத் தயாரா இருக்குற பொம்பள கணக்கா இருந்தது சுந்தரி. முன்ன மாதிரியா பொம்பளைக மாசமானா நாட்டு மருந்துகள சாப்பிட்டு, வயித்துல புள்ளை வளர்றத்துக்கு தகுந்த மாதிரி சாப்பாடுகள சாப்புட்டு, குனிஞ்சி நிமிந்து ஓடி ஆடி வேலை பார்க்கறாங்க. வயித்துல கரு உண்டானாவே உடனே டாக்கடருப் பார்த்து மருந்து மாத்திரைகளை டானிக்குகளை எழுதி வாங்கி அதெத்தானே சாப்புடுறாங்க. ஹார்லிக்ஸூம், பூஸ்ட்டுமா வாங்கிக் குடிக்கிறாங்க. அதால வயித்துல வளர்ற குழந்தைகங்க இப்போ பெரிசா போயிடுதுன்னு அப்பிடிங்ற ஒரு நெனைப்புலதான் சுந்தரி விசயத்துல எல்லாரும் இருந்துட்டாங்க. மாசக் கணக்குக்கும் இன்னும் ரெண்டு மூணு இருக்குல்ல பிரசவத்துக்கு. இதுல கணக்கு கொஞ்சம் முன்ன பின்ன கொறைபட்டாலும் பிரசவம் ஆவுறதுக்கு இடுப்பு வலி கண்டுடுமேன்னு எச்சரிக்கையா இருந்திருக்கலாம்.
            இப்போ வலி கண்டு ரோட்டோரத்துல இருக்குறதப் பார்த்தா கர்ப்பம் கலயுதா? பிரசவம் ஆவுதா? அப்பிடின்னு ஒரே குழப்பமாத்தான் இருக்கு ஆயுர்வேத டாக்கடருக்குப் படிக்கிற வேலனுக்கு. இருந்தாலும் அந்த வலி, வலிக்குறப்ப உண்டாகிற தாய்மாரோட ஒடம்பு வாகு இதையெல்லாம் பார்க்கிறப்ப அது பிரசவ வலிதான்னு புரியுது லேவனுக்கு. அதுக்கான மாசம் இன்னும் வரலையேன்னு மனசுல கணக்குப் போட்டுப் பார்த்தா குறை பிரசவமா இருக்குமா? அப்பிடின்னும் மனசுக்குள்ள ஒரு யோசனை ஓடுது அவனுக்கு. ரொம்ப யோசிச்சுகிட்டு நிக்குறதுக்கு இது நேரமில்லை இல்லையா! அவன் ரோட்டுல போற ஒரு ஆட்டோவ பிடிச்சி நிறுத்தி சுந்தரிய தூக்கிப் போட்டுகிட்டு பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரி எதுக்காவது போகச் சொல்றான். தஞ்சாவூருல ஆஸ்பத்தரிக்கா கொறைச்சல். தடுக்கி விழுந்தா ஆஸ்பத்திரிங்கதான். அந்த எடத்திலேர்ந்து அரை கிலோ மீட்டரு தூரம்தான் போயிருப்பாங்க. சுகாசினி ஹாஸ்பிட்டலு வருது. பிரசவத்துக்கு தஞ்சாவூர்ல ரொம்ப பிரபலமான ஆஸ்பத்திரிதான் அது. அதுல என்னா ஒரு விசயம்னா எல்லா பிரசவத்தையும் சிசேரியன்னாத்தான் பண்ணுவாங்க. இப்போ இருக்குற அவசரத்துல அதையெல்லம்மா யோசிக்க முடியும்? ஆத்திர அவசரத்துக்கு ஏதாவது ஒரு ஆஸ்பிட்டல்ல கொண்டு போயி சேர்த்து உசுரைக் காபந்து பண்ணியாவணும். அதால அதுலதான் ஆட்டோவ வுடச் சொல்லி கொண்டு போயி சுந்தரிய சேர்த்தான் வேலன். ஆட்டோகாரரு கூட தஞ்சாரூ மெடிக்கல் காலேஜூக்கு வுடறேன்னு சொல்றாரு. வேலன் வேண்டாம்னு மறுத்து சுகாசினி ஆஸ்பிட்டலயே உட்டுட்டான்.
            அது செல்போன் அறிமுகமான காலகட்டம். எல்லா செல்போனும் சின்ன சோப்பு டப்பா சைஸூக்கு இருக்கும். அதிலேந்து போன் பண்ணாலும் காசு, வர்ற போனை எடுத்துப் பேசுனாலும் காசு. அப்பிடி இருந்த காலகட்டம் அது. மெடிக்கல் காலேஜூல படிச்சிட்டு இருக்குற வேலன் அப்பிடி ஒரு செல்போன வாங்கி வெச்சிருந்தான். அவன் படிக்குற மெடிக்கல் காலேஜ்ல செல்போனு இல்லாம யாரும் படிக்கிறதில்லன்னு அடம் பண்ணி லாலு மாமாட்டே இருந்து பணத்தை வாங்கி அத வாங்கி வெச்சிருந்தான் வேலன். அது அப்பவே எட்டாயிரமோ ஒன்பாதயிரமோன்னு வெலை சொன்னதா ஞாபவம். அப்போ அது ரொம்ப பெரிய காசு. டவுனு பக்கம் நல்லா வேலை செய்யுற அந்த செல்போனுங்க கிராமத்துப் பக்கத்துல சுத்தமா வேலை செய்யாது. நல்ல வேளையா அவன் இருந்தது தஞ்சாவூரு டவுன்லங்றதால அதெ எடுத்து தஞ்சாவூரு வீட்டு லேண்ட்லைன் நம்பருக்குப் போட்டு பேசி விசயத்தைச் சொல்றான். செல்லுல போன் பண்ணதுக்கு அப்புறம்தான் அவனுக்கு ஆஸ்பிட்டல்ல இருக்குற லேண்ட்லைன் போன் ஞாபவத்துக்கு வருது. அடடா இதுல போன் பண்ணிருந்தா காசு கொஞ்சம் மிச்சம் ஆயிருக்குமேன்னு நினைச்சுக்கிறான். சரி ன்னா பண்றது ஒரு அவசரத்துல பண்ணியாச்சின்னு அவனுக்கு அவனே ஆறுதலும் பண்ணிக்கிறான். விஷயம் கேள்விபட்டதும் லாலு மாமா விழுந்தடிச்சி ஓடி வருது. அப்படி வர்றதுக்கு முன்னாடியே பாக்குக்கோட்டை சரசு ஆத்தாவுக்கு அது குடியிருக்குற வூட்டுக்குப் பக்கத்துல இருக்குற போன் நம்பருக்குப் போனைப் போட்டு தகவலையும் சொல்லிப்புடுது. அப்போ அக்கம் பக்கத்துல யார் வூட்டுல போன் இருக்குதோ அந்த பொன் நம்பரை வாங்கி பி.பி.ன்னு அந்த நம்பரை எழுதி வெச்சிகிட்டு இது மாதிரியான அவசர நேரங்கள்ல போன் பண்ணி தகவலைக் கொண்டு போயிச் சேர்த்துபுடறது ஒரு வழக்கம். ஊருக்கு ஒரு போனு இருந்தா போதும். அதுதாம் அந்த ஊரோட அத்தனை வூட்டுக்கும் எங்கெங்கோயிருந்து சேதிகளைக் கொண்டு வந்து சொல்லிட்டு இருக்கும்.
            சுந்தரிய சுகாசினி ஆஸ்பிட்டல்ல அட்மிஷன் போட்டு அரை மணி நேரம் ஆயிருக்காது. சுகாசினி ஆஸ்பிட்டல்ல இருந்த டாக்கடருமாருகளும் சுந்தரிய சோதிச்சுப் பார்த்துட்டு பிரசவ வலிதான்னு முடிவு பண்ணி, ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போயிட்டாங்க. வேலன் சொன்ன சங்கதியான ஆறெழு மாசம்தான் ஆவுதுங்குறதை எல்லாம் அவுங்க கணக்குலயே எடுத்துக்கல. எவ்ளோ பிரசவங்கள பாத்திருப்பாங்க அவுங்க. அவுங்களுக்குத் தெரியாத சங்கதிகளா? அதுவும் இந்த ஆஸ்பத்திரி பிரசவத்துக்குன்னே உள்ள ஆஸ்பத்திரின்னு வேற தஞ்சாரூல பேசிப்பாங்க. எவ்வளவு சிக்கலான பிரசவமா இருந்தாலும் தாயையும், சேயையும் காப்பாத்திப்புடுவாங்க. அதுக்கான எல்லா சாதனங்களயும் வெச்சிருக்காங்க அங்க. ஒருவேளை குறைபிரசவம்னாலும் என்னென்னமோ பொட்டியில வெச்சி, அந்த பொட்டிக்குள்ள என்னென்னமோ லைட்டுகளைப் போட்டு விட்டு கொழந்தையைக் காபந்து  பண்ணிக் கொடுத்துப்புடுவாங்க. காசுதான் செலவாகுமே தவிர உசுருக்கு கேரண்டியான ஆஸ்பத்திரி இது. ஆபரேஷன் தியேட்டருக்குள்ள இப்போ டாக்கடருமாருங்க கத்திய எடுத்தா அதுக்கு வேலையில்லாமப் போயிடுச்சுப் பாருங்க. அங்க லாலு மாமாவுக்குப் போனைப் போட்டு அது இங்க ஆஸ்பிட்டலுக்கு வந்து சேர்றதுக்குள்ள சுகப்பிரசவத்துல அழகான ஆம்பிளைக் கொழந்தைப் பொறந்து குவா குவான்னு கத்துது ஆஸ்பிட்டல்ல. இந்த சுகாசினி ஆஸ்பிட்டல்ல நடந்துருக்குற பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பிரசவங்கல்ல மூணாவது சுகப்பிரசவம்னு சுந்தரியோட பிரசவத்தைப் பேசிக்குறாங்க. அதுவும் ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போயி பிறந்திருக்குற முதல் சுகப் பிரசவம்னா பார்த்துக்குங்க.
            ஒரு அரை மணி நேரம் கழிச்சி தாயிக்கும், சேயிக்கும் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் பண்ணி பார்க்குறதுக்கு அனுமதிக்கிறாங்க ஆஸ்பிட்டல்ல. போயிப் பார்த்தா குழந்தை மண்டையில முடி கருகருன்னு வளர்ந்து பார்க்க செக்கச் செவேல்னு என்னம்மா அழகா இருக்குங்றீங்க. பார்க்குறதுக்க ஆறெழு மாசத்துல பொறந்த குறைபிரசவக் கொழந்தையாவே தெரியல. கொழந்தைக்கு மண்டையில் முடி கருகருன்னு வளர்ந்திருந்தாவே அது கொறை பிரசவ குழந்தை இல்லைன்னு கிராமத்துல ஒரு கணக்குச் சொல்லுவாங்க. இப்போ லாலு மாமாவுக்கும், வேலனுக்கு மண்டையில உள்ள முடிய பிய்ச்சிக்காத கொறையா போவுது. இந்த அவசர உலகத்துல எல்லாம் ஸ்பீடா நடக்குதுன்னா இப்படியா ஒம்போது மாசத்த தாண்டிப் பொறக்குற கொழந்தையும் இவ்வளவு ஸ்பீடா ஆறெழு மாசத்துக்குள்ள பொறக்கும்னு மண்டை கொழம்புது.
            ஆறெழு மாசத்துல கொழந்தைப் பொறந்திருக்குன்னு வடவாதி முருகு மாமாவுக்கோ, நீலு அத்தைக்கோ, சொந்தக்காரங்களுக்கு சொல்றதுன்னு வேற லாலு மாமாவுக்கு யோசனையா இருக்குது. பொதுவா கொழந்தைப் பொறந்திருக்குன்னு தகவல் சொன்னா சனங்க கல்யாணம் ஆன நாளிலிருந்து குத்து மதிப்பா மாசங்களத்தான் கணக்குப் போட்டுப் பார்க்கும்ங்க. ஊரு உலகத்துல இல்லாத அதிசயமாக இது மாதிரி நடந்தா என்னா பண்றதுன்னு அது வேற ரொம்ப குழப்பமா இருக்கு லாலு மாமாவுக்கு. சரி வடவாதிக்குக் கூட சண்டையுமா கரைச்சலுமா இருக்குன்னு சொல்லாம விட்டாலும், வெளிநாட்டுல இருக்குற சித்துவீரனுக்கு இந்த சங்கதிய எப்பிடிச் சொல்றது? இல்லே சொல்லாமத்தான் எப்பிடி விடுறது? இப்படியெல்லாம் யோசனைங்க எட்டுத் திக்குக்கும் சுழன்றடிக்குது லாலு மாமாவுக்கு.
            அழுவுற கொழந்தை அப்பைக்கப்போ சிரிச்சிகிட்டு கைய காலை ஒதைச்சுக்கிறத பார்க்கிறப்ப ஆசையா இருக்கு. கொழந்தை வேற நல்ல கொழு கொழுன்னு இருக்கா. அது இன்னும் பார்க்கிறதுக்கு ஆசையைத் தூண்டுது. இப்படியா ஆறெழு மாசத்துல எப்பிடி இப்பிடி கொழந்தை பொறந்தது அப்படிங்ற யோசனையிலயும், கொழந்தை சிரிச்சும் அழுதும் கையி கால ஆட்டுறதப் பார்த்துட்டும் லாலு மாமாவுக்கு ரெண்டு மூணு மணி நேரம் கழிஞ்சிப் போவுது. அப்பதான் அவசர அவசரமாக பாக்குக்கோட்டை சரசு ஆத்தா கையில ஒரு மஞ்சப் பையைத் தூக்கிகிட்டு அரக்க பரக்க வியர்த்து விறுவிறுத்து, மண்டை முடியெல்லாம் காத்துல கண்ட மேனிக்குப் பறக்க ஓடி வருது.
            பொண்ணுக்கு ஒண்ணு கெடக்க ஆயிடக் கூடாதுங்ற பயம் சரசு ஆத்தாவுக்கு. பொண்ணுக்கு வயசு வேற சின்ன வயசில்லயா! குடும்ப நிலைமை வேற சரியில்லை இல்லையா! "யம்மாடி யாத்தா பொன்னியம்மா! எங் குலங் காக்கும் வீரஞ் சாமி! எல்லாம் நல்லபடியா இருக்கணும். நல்லபடியா நடக்கணும்!"ன்னு வேண்டிகிட்டு இங்க வந்து பார்த்தா அது பார்க்குற நேரத்துக்கு ஆத்தாளைப் பார்த்து அழுவாம கொள்ளாமல அப்படிச் சிரிக்குது பேரக் கொழந்தை. சுந்தரியோட முகத்துலதான் சவக்கலை. முழியெல்லாம் பிதுங்கி அப்படியே வெளியில வந்திடும் போலருக்கு. ஒண்ணு சிரிக்க, ஒண்ணு அழுவ, ஒண்ணு அழுதுகிட்டே சிரிக்கங்ற நெலைமைதான் அங்க.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...