9 Aug 2019

ஆற்றுசூடி



ஆற்றுசூடி
சுத்தம் பண்ணு
ஆற்றங்கரையை அழி
இருப்பதை ஆக்கிரமி
ஈங்கு சாக்கடையைக் கல
உள்ள மணலையும் அள்ளு
ஊர் கூடி கெடு
எதுக்கு ஆற்றங்கரையில் புறம்போக்கு
ஏற்றி விடு ஆற்றை மரணப் படுக்கையில்
ஐயோ ஆற்றைக் காணும் என்று அலறு
ஒடுங்கி ஒடுங்கி ஒழிந்து போகட்டும் ஆறு
ஓகோ இந்த ஊரில் ஆறு இருந்தா என ஆச்சரியப்படு
ஒளடதம் ஏது ஆறில்லாத ஊருக்கு?
*****
மை பிரெண்ட்!
அமைதியா இருந்தால் ஏம்டா இப்பிடி உம்முன்னு இருக்கேங்றான்.
சரின்னு பேசுனா ஏம்டா இப்பிடி தொண தொணங்றேங்றான்.
ரெண்டு வார்த்தையோட நிப்பாட்டிப்போம்னு பார்த்தா, ஏம்டா ஒரு நாலு வார்த்தைப் பேசுனா கொறைஞ்சா போயிடும், குடியா முழுகிடுங்றான்.
சரின்னு ஒரு நாலு வார்த்தை கூடுதலா பேசுனா, ஏம்டா ஒனக்கு சுருக்கமாவே பேச வராதாங்றான்.
சுருக்கமா பேசித் தொலைஞ்சா, ஏம்டா கொஞ்சம் விளக்கமாத்தான் பேசித் தொலையேண்டாங்றான்.
விளக்கமா பேசுனா அறுத்துத் தொலையாதேங்றான்.
இவன் மூஞ்சிலேயே முழிக்கக் கூடாதுன்னு ஒளிஞ்சித் தொலைஞ்சா, என்னடா மாப்ளே ஊரு வுட்டே ஓடிப் போயிட்டீயாங்றான்.
சரிதான்னு அப்பைக்கப்போ தலையைக் காட்டித் தொலைஞ்சா, ஏம்டா இப்பிடி மினுக்கிகிட்டு திரியுறேங்றான்.
நான் எப்பிடி பேச வேண்டும் என்று தீர்மானிக்கிற நீயே எனக்குப் பதிலாக பேசி விடேன் என்றால்...
நான் எப்பிடி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிற நீயே எனக்குப் பதிலாக அப்பிடியே இருந்து விடேன் என்றால்...
நீ நீயாகத்தான் இருக்க வேண்டும் என்கிறான்
நீ நீயாகத்தான் பேச வேண்டும் என்கிறான்
அப்படித்தானே இருக்கேன், பேசுறேன் என்றால்...
ம்ஹூம் அப்டில்ல, இப்டில்ல என்பவனிடம்
என்ன பேசுவது? எப்படி இருப்பது? என்று யோசித்துக் குழம்பிப் போய் புரிந்து கொள்வதில் இருக்கிறது அந்த நண்பன் நம் மீது காட்ட நினைக்கும் அக்கறையை.
*****


No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...