9 Aug 2019

அடி குடி காரன்



செய்யு - 171
            ரகுவுக்கு வயசு ஏறிக் கொண்டே போகிறது. எப்படியும் முப்பத்தைந்தை நெருங்கிக் கொண்டிருக்கும். ரகுவுக்கு ஒரு கால் கட்டைப் போட்டு விட வேண்டும் என்று நினைக்கிறது முருகு மாமா. ரகுவைப் பற்றி ஊருக்கே தெரியும். குடியென்றால் ஒங்க ஊரு குடி, எங்க ஊரு குடியா? மொடாக்குடி. சுகர் வந்துப் போய் கால் கட்டை விரலைக் காவு கொடுத்து விட்டு வேறு அலைகிறது. ஒரு நிலையான புத்தி கிடையாது. குடும்பத்தில் ஒரு பெரிய பூகம்பமே வந்து ஆட்டமாய் ஆடினாலும், "இப்ப எவம்டா நம்மள தொட்டிலுல போட்டு ஆட்டுறது"ன்னு அசால்ட்டா கேட்டுட்டு குப்புற படுத்துக்குற ஆளு. ரகுவால் குடும்பத்தில் யாருக்கும் பெரிசாக தொந்தரவு கிடையாது என்றாலும் வைத்து சுமக்க வேண்டுமே. எத்தனை நாள்தான் முருகு மாமா சுமக்கும்? ஒரு பெண்ணைப் பார்த்து கட்டி விட்டால் பிறகு அது அந்தப் பெண்ணின் பாடு, ரகுவின் பாடு. அந்தப் பொண்ணு இவனைச் சுமந்து கொள்ளும். இப்படித்தான் இந்த வகையறா குடும்பங்களில் ஆண்களை வைத்து சுமப்பது பெண்களுக்கு ஒரு வேலையாகப் போய் விடுகிறது. அதற்காகவே கல்யாணமும் நடக்கிறது.
            ரகுவுக்கு அக்கம் பக்கம் ஊர்களில் பெண்ணெடுப்பது கொஞ்சம் கஷ்டந்தான். ஓரளவுக்கு திருவாரூ ஜில்லா, சுற்றுப்பட்டு ஜில்லாவுக்கும் இந்த வகையறாவில் சேதி தெரியாமல் இருக்காது.  ரகுவுக்குப் பெண் பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பதற்குள் முருகு மாமா படாத பாடு படுகிறது. ரகுவைப் பற்றி சேதி தெரிந்த எவனும் பெண்ணைக் கொடுப்பதற்கு ரொம்பவே யோசித்து, அதுவும் இந்த ஜில்லாவுக்குள் எவனும் பெண்ணைக் கொடுக்கக் கூடாது என்பதில் ஒவ்வொருத்தனும் சொல்லி வைத்த மாதிரி அவ்வளவு உறுதியாக இருக்கிறானுங்க. இதுக்கு எல்லாம் கூட்டிக் கழித்து ஒரு கணக்கைப் போட்டுப் பார்த்த முருகு மாமா ஜில்லா தாண்டி ஜில்லா எல்லாம் பெண்ணைத் தேடிப் பார்க்கிறது. லாலு மாமாவின் முயற்சியும் இதில் சேர்ந்து கொண்டு பத்திரிகைகளில் வரும் மணமகள் தேவை பகுதிக்கு எல்லாம் எழுதிப் போட்ட போது பெண் தேடும் படலம் மாநிலம் தழுவிய அளவில்  விரிவடைந்து, பொண்ணு நம்ம வகையில பெங்களூரு, மும்பை, கல்கத்தான்னு இருந்தாலும் பரவாயில்லன்னு முருகு மாமா சொல்லப் போக அது நாடு தழுவிய தேடலாக ஆகிப் போனது.
            இப்போ இந்த குடும்ப உறவுகள்ல பேச்செல்லாம் ரகுவுக்குப்பெண் பார்க்கிறத பத்தியே இருக்கு. ஒரு உறவு முறை விஷேசம்னு சந்திச்சா போதும், ரகுவுக்குப் பொண்ணு அமைஞ்சிட்டாங்றதே பேச்சா இருக்குது. அவ்வேன் எவ்வோ தலையில விடியணும்னு எழுதியிருக்கோன்னு தெரியலயே என்று பெரிசுகள் அலமலந்து கொள்கிறதுகள்.
            கடைசியல பாத்தீங்கன்னா...
            திருவாரூ தமிழ்நாட்டு வடக்குக்கும் தெற்குக்கும் நடுவுல உள்ள ஒரு மாவட்டம்னாலும் வடக்கு மாவட்டம்னே சொல்றாங்க. தூத்துக்குடி எப்படிப் பார்த்தாலும் தெற்கு மாவட்டம்தான். இந்த வடக்கு மாவட்டக்காரனான ரகுவுக்கு தெற்கு மாவட்டமான தூத்துக்குடியில இருந்து ஒரு பொண்ண அது இதுன்னு ஆயிரம் பொய்ய சொல்லிக் கட்டி வைக்குற மாதிரி ஆயிடுச்சு. பொதுவா சொந்த மாவட்டத்துல எடுபடாத எந்த ஆயிரம் பொய்யும் ரெண்டு மூணு மாவட்டம் தள்ளிப் போனா எப்படியும் எடுபட்டுப் போயிடும். தூரம் தள்ளிப் போறப்ப ஒருத்தருக்கொருத்தர் விசாரிக்கிறதுக்கான நெருங்குன சொந்தங்கள் இல்லாம போயிடுதுல்ல. அப்போ ஒருத்தர விசாரிச்சி விவரங்கள தெரிஞ்சிக்கிறதுல ஒரு எடைவெளி வுழுந்து போயிடும். நெறைய விசயங்கள மூடி மறைச்சிடலாம். அத வெச்சித்தான் இப்பிடி கல்யாணம் ஆவாம கெடக்குறவங்களுக்கு தூர மாவட்டமா பார்த்து எதாச்சி பண்ணி விட்டுடுறது.
            பொண்ணு ரொம்ப ஏழ்மைப்பட்ட குடும்பத்துப் பொண்ணுதாம். அஞ்சுப் பொண்ணுங்க பொறந்த குடும்பத்துல இது மொதலாவது பொண்ணு. பொண்ணு குடும்பத்துலயும் எப்படியாவது கல்யாணத்த முடிக்கணுங்ற நெலைமை. அப்பிடி இருந்த குடும்பத்துலயே இந்த முருகு மாமாவும், லாலு மாமாவும் ஏதேதோ பேசி இருவது பவுனு நகை, லட்ச ரூவா கல்யாணச் செலவுக்குப் பணம், சீரு சனத்தி அது இதுன்னு வாங்கிப் புட்டாங்கறது வேற விசயம்.
            தூத்துக்குடி பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. நம்ம பயெ ரகுதான் அதுக்கு சேத்தியில்லாதவன்னு கொஞ்ச நாள்லயே தெரிஞ்சிப் போச்சி. இதுவரைக்கும் அவ்வேன் யாரையும் கைநீட்டில்லாம் அடிச்சதில்ல. பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா போதும் இவனுங்களுக்கு எங்கேருந்து அடிக்கிற துணிச்சல் வருதோ? தண்ணியைப் போட்டுட்டு வந்து பொண்டாட்டியை வெளுத்து எடுத்துறானுங்க. இதுக்குன்னே நம்ம ஆளுங்க கல்யாணத்த பண்ணி வைக்கிறானுங்களோ யில்ல இதுக்குன்னே இவனுங்க கல்யாணத்த பண்ணுறானுங்களோ? யாருக்குத் தெரியும் சொல்லுங்க. அவ்வேம் அடிக்கிற அடியைப் பார்த்தா குடிகாரனுங்க நாட்டுல கல்யாணமே பண்ணக் கூடாதுன்னு நீங்க ஒரு சட்டத்தைப் போட்டுடுவீங்க.
            என்னமோ அந்த பொண்ணும் தூத்துக்குடியிலேந்து திருவாரூக்கு கல்யாணம் பண்ணிட்டு அடி வாங்கிறதுக்குன்னே வந்த கணக்கா அத்தனையும் அடிகளையும் பொறுமையா வாங்கிகிட்டும் தாங்கிகிட்டும் இவனுங்ககிட்டே கிடக்குது. இப்பிடி அடிக்கிறானேன்னு நீலு அத்தைகிட்ட சொன்னா, "ஆம்பளன்னு அப்பிடி இப்பிடிதாம்டி இருப்பாம். அடிய வாங்கிட்டு இருக்குறதுன்னா இரு. யில்ல இப்பயே தூத்துகுடிக்குக் கெளம்பு. ஒனக்கு அவ்வேங் கூட வாழணும்னு விருப்பம் இல்லடி. கல்யாணத்துக்கு முன்னாடி எவனெ மனசுல நெனைச்சுகிட்டு இவ்வேனே கட்டிகிட்டே? ஒன்னய போயி ஜில்லா வுட்டு ஜில்லா தாண்டி கட்டிட்டு வந்தேம் பாரு!" என்று அது தன் பங்குக்கு வார்த்தையால போட்டுத் தாக்குது. பாவம் அந்தப் பொண்ணு ராத்திரி முழுக்க அவ்வேங்கிட்ட அடி வாங்கிகிகட்டு, பகலு முழுக்க இவனுங்களுக்கு வடிச்சி கொட்டிக்கிட்டும், வூட்டு வேலைகள் அத்தனையும் பார்த்துகிட்டும் பாடாய்ப் படுது. அது சரி! இப்பிடி இவங்கிட்ட அடி வாங்கிட்டு கெடக்குறதுக்கு ஏத்த மாதிரி பொண்ண பாத்துதான் கல்யாணத்த கட்டி வெச்சிருக்கானுவோ இந்த முருகுவும், லாலுவும்னு அத வேற இந்த சனங்க பேசிப் பேசிச் சங்கடப் பட முடியாம சங்கப்படுதுங்க. நெசமாலுமே அடின்னா அடி அந்த மாதிரி அடி. வேற ஒரு பொண்ணுன்னா அந்த அடிக்கு செத்தே போயிருக்கும். இந்தப் பொண்ணு எப்பிடிதாம் உசுரோட இருக்குதுங்றதே ஆச்சரியமாத்தாம் இருக்குது.

            அந்தப் பொண்ண தூத்துக்குடியிலேந்து எப்பவாச்சிம் வந்து பாக்குற அப்பன், ஆயி, சொந்த பந்தமாவது எதாவது பண்ண முடியாதுன்னா அதுவும் முடியல. எதாச்சிம் கேட்டா, "ஒம் பொண்ண இப்பயே அழச்சிட்டுக் கெளம்பு! இதல்லாம் கேட்டுட்டு இந்தப் பக்கம் வர்ற வேலய வெச்சிக்காதே. ஒரு டீத்தண்ணிய குடிக்கணுங்றதுக்காக அஞ்ஞ இருக்க முடியாம இஞ்ஞ கெளம்பி வந்திடறது! வந்தா டீத்தண்ணியா குடிச்சமா, கெளம்புனமான்னு இருக்கணும். சொத்துல உப்பதாம்ள போட்டுச் சாப்புடுறீங்க? இல்லேன்ன சொல்லுங்க வேதாரண்யம் பக்கந்தான். போயி அப்டியே அஞ்ஞயேந்து வாங்கிட்டுப் போங்க. அத்தே வாங்குறதுக்காவது காசி இருக்கா இல்லியா? இல்லேன்னா சொல்லுங்க! காசியத் தர்றேம். மொதல்ல அத்தே வாங்கிப் போட்டு தின்னுபுட்டு அப்புறம் வாங்கய்யா!" என்கிறது முருகு மாமாவும், நீலு அத்தையும் ஜோடி போட்டுக் கொண்டு. ரெண்டும் நல்ல ஜாடிக்கேத்த மூடிதாம் போங்க.
            இவ்வேன் அடிக்கிற அடியை முருகு மாமாவால ஒரு கட்டத்துல பாத்துட்டுத் தாங்கிக்க முடியல. மனசு மரத்துப் போன மனுஷன்தான்னாலும், மனசே இல்லாத மனுஷன்தான்னாலும் மனசுக்குள்ள ஏதோ பண்றது போல இருக்கு முருகு மாமாவுக்கு. அதுக்குள்ள ரெண்டு புள்ளைகளாக வேற ஆகிப் போயிடுச்சி ரகுவுக்கு.
            முருகு மாமா ஒரு யோசனைப் பண்ணிச்சி. ரகு இப்போ வேலைப் பார்க்குற கொல்லுமாங்குடி சர்க்கரை ஆலைக்குப் பக்கத்துலயே ஒரு இடத்தைப் பார்த்து குடி வெச்சிடலாமான்னு அதுக்கு ஒரு யோசனையும் வருது. எங்கேயாவது போயி கண்காணாத எடத்துல அடிச்சிகிட்டுக் கெடக்கட்டும் அப்படிங்ற எண்ணம்தான் இது. இந்த யோசனை வந்ததும் அதெ தூத்துக்குடி பொண்ணுகிட்டே சொன்னா, அது முருகு மாமா காலுல்ல விழுந்து அழுவுது, "மாமா! இஞ்ஞன இருந்தாலாவது இஞ்ஞன இருக்குறவங்கள பாத்துட்டு அடிக்குற அடி கொஞ்சம் கொறைச்சலா வுழுவும். தனியா வுட்டுட்டீங்கன்னா அடிச்சே கொன்னு புடுவாரு. தயவுபண்ணி தனியா மட்டும் வுட்டுடாதீங்க!" இப்படில்லாம் கெஞ்சுது அந்தப் பொண்ணு.
            நம்ம முருகு மாமா அப்போ பேசுன பேச்சக் கேக்கணுமே. "இன்னும் எத்தினி நாளு இஞ்ஞ இருந்துகிட்டு எஞ்ஞ தாலிய அறுக்கணுமுன்னு நெனைக்குறீங்க? கல்யாணம் ஆயி குடும்பம் ஆயிட்டா அவங்கவங்க அவுங்க வேலய பாத்துட்டு போவணும். இஞ்ஞயே கெடந்து மாரடிக்கணும்னா நீயி எத்தன பவுன போட்டுட்டு எம்மாம் சீரு சனத்திய கொண்டுட்டு வந்தே? போயி ஒங்க அப்பம் வூட்டுல அஞ்சு லட்சத்த பணத்த வாங்கிட்டு வந்து இஞ்ஞ இரு. இல்லேன்னா எடத்த காலி பண்ணு. இத்தினி காலம் சொமந்தது பத்தாதா? போதும்டி போங்கடி போயித் தொலயுங்கடி. இருந்து மனுஷம் உசுர எடுக்காதீங்க." என்கிறது.
            பாவம் அந்தப் பொண்ணு ஒண்ணும் சொல்ல முடியாம திக்கத்து தெசை கெட்டு தனிக்குடித்தனத்துக்குப் போவுது. அப்பிடி அந்தப் பொண்ணு கொல்லுமாங்குடி போயி அது முருகு மாமாட்ட சொன்ன மாதிரியே அத்தோட நெலைமை ஆயிப் போச்சு. கொல்லுமாங்குடியில வெச்சு அந்தப் பொண்ண அடிச்சே கொன்னுபுட்டாம் நம்ம ரகு பெய. அவ்வேம் அடிச்சுக் கொன்ன அந்தப் பொண்ண இந்த முருகு மாமாவும், லாலு மாமாவும் போயிப் பார்த்து தூக்குல தொங்க வுட்டுட்டு, ரொம்ப நாளா இருந்த வயித்து வலி தாங்க முடியாம பொண்ணு தூக்கு மாட்டிகிட்டு தொங்கிட்டதா கதெய கட்டி வுட்டுட்டானுங்க.
            பெறவு இந்த ரகு பெய நடுத்தெருவுலதாம் நின்னாம். கொஞ்ச நாளு நல்ல பொண்ண அடிச்சே கொன்னுபுட்டேம்னு உத்தமன் மாதிரி குடிச்சுபுட்டு அழுதும் புலம்புனாம். இனுமே அடிக்கிறதுக்கு பொண்டாட்டி இல்லையேங்ற கவலை கொஞ்ச நாளையில போனதுக்கு அப்புறம் ரகு வேலை பார்த்த சீனி பேக்டரி விருத்தாச்சலத்துக்கு மாறினுச்சு. இப்போ அங்க ஒரு பொண்ண பாத்துட்டு அது கூடவே இந்த ரகு பயெ வாழ்றதா கேள்வி. அந்தப் பொண்ணு இவனே விட வயசு கூடன்னும், ஏற்கனவே ரெண்ட பேர கட்டிக்கிட்டதுன்னும் இப்போ இவ்வேன் மூணாவதுண்ணும் பேசிக்கிறாங்க. எல்லாம் சொல் கேள்விங்கதாம்.
            அந்த தூத்துகுடி பொண்ணு செத்ததுக்கு அப்புறம் முருகு மாமா பேரப் புள்ளைங்க ரெண்டு பேரையும் அழைச்சுகிட்டு வந்து தன்னோட வெச்சிகிட்டு வளர்க்குது. ரெண்டும் ஆம்பளைப் புள்ளைங்களா அமைஞ்சிது அதுக்கு நல்லா தோதாப் போச்சுது. அது மனசுல பேரப் புள்ளைங்க பொண்ணா இருந்தா கல்யாண செலவு வைக்கும், ஆம்பள புள்ளைங்களா போனதால கல்யாண நேரத்துல வரவுதாம்னு ஒரு கணக்கு ஓடுங்றது வேற விசயம். வூட்டு வேலை, அது இப்போ பாத்துகிட்டு இருக்குற யெவார வேலை, வய வேலைன்னு அத்தினிக்கும் கூட மாட அந்தப் பேரப் புள்ளைங்கள வெச்சிக்குது. அந்தப் பேரப் புள்ளைகளும் மாடா ஒழைச்சி ஓடாத்தாம் தேய்ஞ்சிப் போகுதுங்க. ரகு எப்பாச்சிம் நெனைச்சா வடவாதி வர்றதோட சரி. மத்தபடி ஊருல, சொந்த பந்தத்துல எதாச்சிம் விஷேசம்னா வந்து பாத்துட்டுப் போறதுதாம். அப்படி வார்றப்ப புள்ளைங்கல பாத்துட்டு கையில ரெண்டு காச கொடுத்துட்டுப் போவும். அவ்வளவுதான் அதோட கடமை அத்தோடு முடிஞ்சதா அது நெனைச்சிக்கும்.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...