8 Aug 2019

வேட்டியும் எட்டுப் பவுனும்



செய்யு - 170
            ஒரு பிரச்சனையைப் பேசி முடிக்கும் போது அடாவடியான ஆள் பேசினால் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது. இல்லையென்றால் அந்தப் பிரச்சனை வழவழ கொழகொழவென்று இழுத்துக் கொண்டே போகிறது. பஞ்சாயத்து விசயங்களைப் பொருத்த மட்டில் பேசுகின்ற ஆட்களைப் பொருத்துதான் முடிவுகள். பேசித் தீர்க்கவே முடியாத பஞ்சாயத்துகளை அட்டாதுட்டிப் பண்ணுகின்ற அடாவடியான ஆளை வைத்துப் பேசினால் பத்தே நிமிஷத்தில் முடிந்து விடும்.
            மனுஷனுக்கு உயிர் மேல் இருக்கும் பயம்தான் கடைசி. அந்த உயிர் போய் விடும் என்றால் மசிந்து வருவான். அடாவடியான ஆட்கள் அந்த இடத்தில்தான் கை வைப்பார்கள். இந்த முடிவுக்கு ஒத்து வரவில்லை என்றால் கொன்னே புடுவேன் என்று மிரட்டுவார்கள். அதற்கு அச்சாரம் வைப்பது போல ரெண்டு உதை கொடுப்பார்கள். நாலு அடி அடிப்பார்கள். உடலில் விழும் அடியும், உதையும் உயிர் வரை பாய்ந்து விடுமோ என்ற பயம் மனுஷனைத் தோற்றிக் கொண்டால் எந்த முடிவுக்கும் பணிந்து விடுவான். இதுதான் இதில் உள்ள சூட்சமம். அந்த சூட்சமம் அடாவடிப் பஞ்சாயத்து பண்ற ஆட்களுக்கு நன்றாகவே பாடமாயிருக்கும்.
            பெருமாள்சாமிக்கு இந்தப் பாடம் தண்ணிப் பட்ட பாடு. பஞ்சாயத்துப் படியவில்லை என்றால் அடிக்க பாய்ந்து விடுவார். அடிக்கும் அளவுக்கு அவருக்கு உடம்பு போதாதுதான். அடிக்க பாயும் போது வெளிப்படும் அந்த ஆக்ரோஷமும், கோபமும், வேகமும் எதிராளிக்குப் பயத்தை உண்டு பண்ணி விடும். எதிராளியும் அதே போல எகிறி வந்தால் பெருமாள்சாமியின் உடம்பில் உயிர் இருக்காது என்பது வேறு விசயம். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் எதிராளிக்கு அப்படி ஒரு தைரியம் வந்து விடாது. அவன் பெருமாள்சாமியின் பாய்ச்சலைக் கண்டே பயந்து விடுவான். அது பெருமாள்சாமிக்கு வசதியாய்ப் போய் விடும். பஞ்சாயத்தில் அடிக்க வேண்டியதில்லை. அடிக்கப் பாய வேண்டும். அதுவும் எதிராளிக்குத் திரும்பியடிக்கும் எண்ணம் தோன்றாத அளவுக்குப் பயத்தை உண்டு பண்ணும் வகையில் பாய வேண்டும். எதிராளிக்குத் திரும்ப அடித்து விட முடியும் என்ற எண்ணம் தோன்றி விட்டால் காரியம் கெட்டு விடும். அதற்குத் தகுந்தாற் போல சில முஸ்தீப்புகளை முன்கூட்டியே செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பெருமாள்சாமி அப்படிதான் செய்து கொள்வார். நீங்களே பாருங்கள் அந்த முஸ்தீப்புகளை.
            "ஏய் முருகு! லாலு! சித்து வீரா! மில்லுகார அண்ணே! எல்லாரும் ந்நல்லா கேட்டுக்குங்க! மொதல்ல ஞாயமா பேசுற மாரி ஆரம்பிப்பேம். ஞாயமா முடிச்சிக்கிறதுதாம் நல்லதும்பேம். அவனுங்க கேக்க மாட்டானுங்க. ஒடனே நாம்ம திருச்சி ஜெயிலு, தஞ்சாரூ ஜெயிலுன்னு பல ஜெயில்ல பாத்துட்டு வந்த ஆளும்பேம். அவனுங்க கொஞ்சம் யோஜிப்பானுங்க. அதுலயே காரியம் ஆயிடும். அப்படி ஆகலன்னா வெக்காளி மவனுங்களா பிய்ச்சிப் புடுவேம் பிய்ச்சின்ன அவனுங்கள அடிக்க பாயுவேம். அந்த எடத்துல நம்மள நீங்க பாய வுட்டுடக் கூடாது. அப்டியே பாய வுடாம என்னை இழுத்துப் பிடிச்சக்கணும். நாம்ம திமுறுவேம். அதுக்காக நம்மள வுட்டுப்புடக் கூடாது. அடிதடிலாம் வேண்டாம்ண்ணே பாவம் பொழச்சிப் போவட்டும்ண்ணேன்னு நம்மள சமாதானம் பண்ற மாரி பண்ணணும். அதுக்கலாம் அச மடங்காத மாரி நாம்ம அவனுங்கள அடிக்கப் பாய்வேம். யாரும் நீங்க நம்மள வுட்டுப்புடக் கூடாது பாத்துக்குங்க. அதுலயே அசமடங்கிடுவானுங்க. அதுக்கும் அசமடங்கங்கலன்னா வுடுங்கடா அவனுங்கள ரெண்டுல ஒண்ணு பாத்துடுவேன் அப்டின்னுட்டு கண்ண சிமுட்டுவேம். அப்பதான் நீங்க நம்மள வுடணும். நாம்ம ஓடிப் போயி அஞ்ஞ இருக்குற சோதாப் பயலுவோ ரெண்டு பேர பிடிச்சி கன்னத்துல ரெண்டு இழு இழுப்பேம். அதுலயே காரியம் முடிஞ்சிடும். அதுலுயும் முடியலன்னா கத்திய எடுத்துட்டு குத்துற மாரி எறங்குவேம். ஒடனே நீங்கலாம் அண்ணே கத்திய எடுத்துட்டாப்புல, ரத்தம் பாக்காம வுட மாட்டாப்ல, இன்னிக்கு ஒரு கொலதாம் வுழப் போவுதுன்னு கெளப்பி வுடணும். அதுல எப்டியும் முடிஞ்சிடும். அதுக்கு மேல பஞ்சாயத்துப் போவாது. அதுக்கு மேலயும் போனிச்சின்னா குத்திட்டுதாம் மறுவேல. பெறவு போலீஸூ, கோர்ட்டு, கேஸூ, ஜாமீனு செலவுலாம் ஒங்களுதுதாம். சொல்ல முடியாது எவனயாவது ஒருத்தன போட்டாலும் போட்டுத் தள்ளிடுவேம்! இதாம் மொற. ஒங்க எல்லாத்துக்கும் புரிஞ்சிதா?"
            புரிந்தது என்பது போல எல்லாரும் தலையை ஆட்டுகிறார்கள். போட்டுத் தள்ளிப்புடுவேன் என்று பெருமாள்சாமி சொன்னதில் முருகு மாமா, லாலு மாமா, சித்துவீரனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. அந்தப் பயலுகளை அப்படிப் பண்ணத்தான் சரிபெட்டு வருவானுங்க என்று மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்கள். சரியான ஆள்தான் பெருமாள்சாமி என்று உள்ளுக்குள் ஒரு குஷி அவர்களுக்கு.
            "நம்மள திமிறிட்டுப் போறப்ப யாரு பிடிச்சுக்கப் போறா? கொஞ்சம் பெலமான ஆளா பிடிச்சிகிட்டா நல்லாருக்கும்! மில்லுகார அண்ணனும், லாலுவும்தான் அப்டி இருக்கீங்க! மில்லுகார அண்ணன பிடிச்சுக்கச் சொல்ல முடியாது. கோவிச்சுக்கும் நாம்ம ன்னா ஒம்மோட அடியாளான்னு. அதால யப்பாடி சித்து வீரா, நீயும் ஒங்க சித்தப்பனும் சேந்து பிடிச்சுக்குங்க! மில்லுகார அண்ணே! நீங்களும் முருகுவும் குறுக்க வந்து மறிக்கி மாதிரி உதாரு வுடுங்க! பாத்துப்போம்!" என்கிறார் பெருமாள்சாமி.
            "ஏம்ப்பா பெருமாளு! கத்திய உருவுவேங்றீயே அதல்லாமா வெச்சிருக்கிறே?" என்கிறார் மில்லுகாரர்.
            "என்ணண்ணே! இப்டி கேட்டுப்புட்டீங்க! இஞ்ஞ பாருங்க!" என்று இடுப்பில் கட்டியிருக்கும் கருப்பு பெல்ட்டைக் காட்டுகிறார் பெருமாள்சாமி. அதில் பெல்ட்டுக்குள் உறைவாள் கணக்காய்ச் செருகி வைக்கிற மாதிரி பெல்ட்டோடு பெல்ட்டாக ஒரு சாண் அளவுக்கு ஒரு கத்தி செருகியிருக்கிறது.
            "அடங் கொன்னியா! இந்த அளவுக்காடா நீயி ரெளடியா ஊரு ஒலகத்துல செட்டாயிருக்கே! இத்து தெரியாமப் போச்சே நமக்கு!" என்கிறார் மில்லுகாரர்.
            "நம்மூரு பஞ்சாயத்துல இதுலாம் தேவைப்படாதுண்ணே. வெளியூரு பஞ்சாயத்துன்னு சமயத்துல எறங்கி வூடு கட்டிடுறதுதாம். கத்திய எடுத்துட்டா எப்டியும் மலெ எறங்கிடுவானுங்க!" என்கிறார் பெருமாள்சாமி.
            "அந்த அளவுக்குப் போகாம எல்லாம் நல்லவெதமாக முடிஞ்ச பரவாயில்ல. பாப்பேம்!" என்கிறார் மில்லுகாரர்.
            "இத்து என்னண்ணே பகல் கொள்ளையா இருக்கு. நம்ம வூட்டு சாமான வாங்கி வெச்சிகிட்டு நம்ம கண்ணுல வெரலு வுட்டு ஆட்டுறானுவோ?" என்கிறான் இடையில் புகுந்து சித்துவீரன்.
            "நீங்களாதாம்டா சாமானல்லாம் கொண்டு போயி கொட்டியிருக்கீங்க! அவனுங்களே பொண்ணு கெடைக்காம ஊரு ஊரா அலஞ்சிருக்கானுங்க. திருட்டுப் பெயலுவோ. ச்சும்மா பொண்ண கொடுத்தாவே கட்டிட்டுப் போக நின்னுருக்கானுங்க. அவனுக்குப் போயி தங்க விக்கிரகம் கணக்கா இருக்குற பொண்ணயும் கட்டிக் கொடுத்து, பவுனு மேல பவுன போட்டு, பொண்ண போட்டு அடிச்சத வேற பொறுத்துகிட்டு பணத்த அறுபதாயிரத்த வேற கொண்டு போயி கொடுத்திருக்கீங்களேடா! அவ்வேம் ஒங்ககிட்ட கேட்டானாடா? நம்மகிட்ட ஒரு அய்யாயிரத்த கொடுத்து போ பேசிட்டு வான்னு அன்னிக்கு வுட்டிருந்தீங்கன்னா ரண்டுல ஒண்ணு பண்ணிருப்பேம். ஒங்க தாத்தன் சொத்தய எப்டி வவுந்து கொடுத்தேம்னு ஒங்க அப்பனயும், சித்தப்பனயும் கேளு! இவனுங்களயெல்லாம் எப்டி மொற ‍வைக்கணுமோ அப்டி வெச்சி பண்ணணும்டா! பண்றேம் பாரு!" என்கிறார் பெருமாள்சாமி மீசையைத் தடவி விட்டு அப்படியே முறுக்கி விட்டபடி.
            மில்லுகாரரின் கார் மாப்பிள்ளை வூட்டின் முன் போய் நிற்கிறது. டிரைவரோடு ஒட்டி உட்கார்ந்திருந்த முருகு மாமாவும், சித்து வீரனும் இறங்கி பின்பக்கக் கதவைத் திறந்து விடுகிறார்கள். பின் சீட்டில் உட்கார்ந்திருந்த லாலு மாமா, மில்லுகாரர், பெருமாள்சாமி எல்லாரும் இறங்கி வருகிறார்கள்.
            "இத்து ன்னாடா காரு நிறுத்துறதுக்குக் கூட யோக்கியத யில்லாத எடமா இருக்கு! இஞ்ஞ கொண்டாந்து பொண்ண கொடுத்து கொன்னு வெச்சிருக்கீங்க!" என்கிறார் பெருமாள்சாமி. சொல்லிக் கொண்டே, "இத்தாம் வீடா?" என்று கேட்டபடியே, "எவம்டா வூட்டுக்குள்ள! வெளில வாங்கடா!" என்று குரல் கொடுக்கிறார்.
            லாலு மாமா தடதடவென்று நடந்து வூடே அதிரும்படி அந்த வீட்டின் முன்னே காலை வைத்து ஆஜானுபாகுவாய் நிற்கிறார்.
            வூட்டின் உள்ளே இருந்த மாப்பிள்ளைப் பையன், அப்பங்காரன், அம்மாக்காரி, மகள்காரி என்று எல்லாரும் வெளியே வருகிறார்கள். வெளியே வந்து அதுக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லாத கணக்கா என்ன விசயம் என்பது போல பார்க்கிறார்கள்.
            "ன்னா இது ஊராம் வூட்டு நகையயும் நெட்டையும் சாமாஞ் செட்டையும் ரொக்கத்தையும் வாங்கி வெச்சிகிட்டு அப்டிய்யே ஒண்ணுந் தெரியாத மாரி உக்காந்திருந்தா ன்னாங்கடா அர்த்தம்?" என்று ஆரம்பமே அதிரடியாய் ஆரம்பிக்கிறார் பெருமாள்சாமி.
            "கையில இருந்தா கொடுத்துருக்க மாட்டமா? கைக்கு வாரட்டும் தர்றோம்!" என்கின்றனர் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் அசால்ட்டாக.
            "ஏம்டா நீங்கதாம் கடை கடையா நகைய கொள்ளையடிக்குற ஆளுங்கன்னு கேள்விப்பட்டேம். கொள்ளையடிச்சி வெச்சிருப்பீங்களே அதுல எடுத்துக் கொடுக்குறது!" என்கிறார் பெருமாள்சாமி.
            "அதாம்யா! கொள்ளையடிச்சுதான தாரணும்! ன்னம்மோ கொள்ளையடிக்கிறது ரொம்ப சுலுவுங்க்ற கணக்கா இப்டி அவசரப்பட்டா?" என்கிறார் மாப்பிள்ளையின் அப்பாக்காரர்.
            "இவனுங்க கொடுக்குற யோஜனையில யில்ல. நம்மள வுடுங்க இன்னிக்கு ரண்டுல ஒண்ணு பாத்துடறேம்." என்றபடி கண்ணைச் சிமிட்டியபடி பாய்கிறார் பெருமாள்சாமி.
            சித்துவீரனுக்கு என்ன தோன்றியதோ! பெருமாள்சாமியைப் பிடித்துக் கொள்வதை மறந்து உள்ளே புகுந்து அடிக்கப் பாய்கிறது.
            மாப்பிள்ளைக்காரன் சட்டையைப் பிடித்து பளார் பளார் என்று கன்னத்தில் அறைகிறது.
            மாப்பிள்ளைக்காரன் என்ன நினைத்தானோ சுதாரித்துக் கொண்டு சித்துவீரனைப் பிடித்து கைகளை முறுக்கி அப்படியே பின்னால் கொண்டு போய் ஒரு முறுக்கு முறுக்கி நெட்டித் தள்ளி விடுகிறான். சித்துவீரன் பக்கத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சாக்கடையில் போய் விழுகிறது.
            "எஞ்ஞ அண்ணம் மவனயாடா அடிக்கிறீங்க?" என்று பாய்ந்து போன லாலு மாமா எல்லாரையும் தலையால் முட்டித் தள்ளி அதே வேகத்தில் முன்னோக்கிப் பாய்ச்சலாய்ப் பாய்ந்து உடம்பைப் பிடித்து உருட்டித் தள்ளி விடுகிறது. கீழே விழுந்தவன்கள் விழுந்த வேகத்தில் எழுந்து வந்து லாலு மாமாவின் வேட்டியை உருவி பட்டாப்பட்டி டிராயரோடு தரையில் உருட்டித் தள்ளுகிறார்கள். முருகு மாமா ஓடிப் போய் மாப்பிள்ளைக்காரனையும், அவன் அப்பங்காரனையும் முதுகுக்குப் பின்னால் நங் நங்கென்று குத்துகிறது. பின்னால் குத்திய முருகு மாமாவை முன் பக்கம் திரும்பி கையைப் பிடித்து அப்டியே முறுக்கு முறுக்கி மாப்பிள்ளைப் பையனும் அதன் அப்பங்காரரும் முருகு மாமாவின் வேட்டியை உருவி விட்டு அதையும் பட்டாப்பட்டி டிராயரோடு உருட்டி விடுகிறார்கள்.
            ஒரு பாரா கணக்கில் ஏழெட்டு வரிகளில் இதை எழுதினாலும் இதெல்லாம் சில விநாடி நேரத்துக்குள் நடந்து முடிகிறது.
            மில்லுகாரர் செய்வது புரியாமல் நிற்கிறார். பெருமாள்சாமிக்கு அதை விட குழப்பமாக இருக்கிறது. பெருமாள்சாமியின் இத்தனை வருட அனுபவத்தில் இப்பிடி இடையில் புகுந்து யாரும் இது போல நடந்து கொண்டது கிடையாது. எதாவது செய் என்று மில்லுகாரர் பெருமாள்சாமிக்கு கண்சாடை காட்டுகிறார்.
            "எல்லா பயலும் நிறுத்துங்கடா சண்டையெ! பெரிய மனுஷங்க நாங்க பஞ்சாயத்து வைக்க வந்தா நீங்களே ஒங்களுக்குள்ள பஞ்சாயத்த வெச்சுப்பீங்களா? இப்போ நிறுத்தலேன்னா கத்திய உருவிட்டுதாம் வர்வேம்!" என்றபடி கத்தியை உருவ தயாராகிறார். முதன் முதலாக எந்த ஆளும் பின்னால் நின்று பிடிக்காமல் எடுத்த எடுப்பிலே கத்தியை உருவிக் கொண்டுப் போக கூடாது என்பது இது போன்ற பஞ்சாயத்து பண்ணுவதில் முக்கிய விதி. அந்த விதியை மாறி களத்தில் இறங்கிய பெருமாள்சாமியை மாப்பிள்ளைப் பையனே கைகளை வளைத்துப் பிடித்து கத்தியைக் கைகளிலிருந்து உருவி பெருமாள்சாமியின் வயிற்றில் சதக் என்று ஒரே குத்துதான். பெருமாள்சாமியின் வயிற்றில் சட்டையை சிவப்பாய் நனைத்துக் கொண்டு ரத்தம் வடிகிறது.
            "நிறுத்தித் தொலைங்கடா! பஞ்சாயத்து கேஸூ அடிதடி கேஸாயிடுச்சி. கொல கேஸாயிடப் போவுது!" என்று சத்தம் போடுகிறார் மில்லுகாரர். தெருகாரர்கள் நடந்த கூத்தைப் பார்த்து கூடி விட்டார்கள்.
            "இவனுங்களுக்கு இத்தே வேலயாப் போச்சி. இத்தினி நாளும் அப்பனும் மவனும் சண்டெ வெச்சிகிட்டு நின்னானுங்க. இன்னிக்கு வேற வேற ஊர்லேந்து ஆளுகள கொண்டாந்து வெச்சிச் சண்டைக்கி நின்னுகிட்டு கத்திக்குத்து வரிக்கும் போயி நிக்குறானுங்க. இவனுங்களப் பிடிச்சி போலீஸூல ஒப்படைச்சாத்தாம் நம்ம ஏரியா நல்லா இருக்கும்!" என்று தெருகாரர்கள் சத்தம் போடுகிறார்கள்.
            மில்லுகாரர், ‍தெருகாரர்கள் எல்லாருமாக சேர்ந்து ஆட்களைப் பிடித்து விலக்கி விட்டு ரெண்டு லோடு ஆட்டோவைப் பிடித்து ஒரு ஆட்டோவில் பெருமாள்சாமியைப் போட்டுக் கொண்டு ஆஸ்பிட்டலுக்கும், இன்னொரு ஆட்டோவில் மாப்பிள்ளை வூட்டுக்காரர்களையும், முருகு மாமா, லாலு மாமா, சித்து வீரனைப் பிடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேசனுக்கும் போகிறார்கள். மில்லுகாரர் டிரைவரை விட்டு காரை எடுக்கச் சொல்லி அந்தத் தெருவில் இருக்கும் ரெண்டு முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு அவரும் பின்தொடர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார். அந்த நேரத்திலும் கத்திக் குத்துப்பட்ட பெருமாள்சாமியை தன் காரில் ஏற்றி கறைபடுத்திக் கொள்ளாமல் லோடு ஆட்டோவில் ஏற்றிய சாமர்த்தியத்தை நினைத்து மில்லுகாரர் மனசுக்குள் கர்வப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
            இதில் ஆஸ்பிட்டலை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் லோடு ஆட்டோ போய்க் கொண்டே இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷன் நோக்கிப் போன லோடு ஆட்டோ பாதி வழியில் நிற்கிறது. என்னடா இதுன்னு புரியாமல் மில்லுகாரரும் காரை நிப்பாட்டி இறங்கிப் பார்க்கிறார். எல்லாரும் அங்கேயே இறங்கி மறுபஞ்சாயத்து வைக்கிறார்கள். லோடு ஆட்டோவில் போய்க் கொண்டே ஏதோ பேச்சு நடந்திருக்கிறது.
            மாப்பிள்ளைக்கார பயதான் பேசுகிறான். "போலீஸ்லாம் வாணாம். நகை திருடுனு கேஸ்ல எம் பேரு அஞ்ஞ ஏகப்பட்ட கேஸூங்க இருக்கு. மறுபடியும் போனா அத்தனெ திருட்டு கேஸையும் நம்ம பேருல போட்டு நம்மள உள்ள தள்ளிப்புடுவாங்க. நகெ, பணம், சாமாஞ் செட்டுன்னு கொடுக்க வேண்டி இருக்குறது உண்மைதாம். நகெதாம் நம்ம கையில இப்போ இருக்கு. மொத்தமா எல்லாத்துக்கும் சேர்த்து முப்பதஞ்சிப் பவுனுன்னு முடிச்சிக்கலாம்னா சொல்லுங்க. இப்பவே இந்த எடத்திலயே முடிச்சிக்கலாம்." என்கிறான்.
            "நாப்பதுன்னா முடிச்சிக்கலாம்!" என்கிறது லாலு மாமா வேட்டியில்லாமல் பட்டாப்பட்டி டிராயரோடு நின்று கொண்டு.
            "முப்பத்தைஞ்சிக்கு மேல குண்டுமணி தங்கம் நம்மகிட்ட யில்லே! மறுபடியும் கடெ கடெய்யா போயி கொள்ளையடிச்சாதாம். அது வரிக்கும் பொறுமையா இருக்குறதுன்னா சொல்லுங்க நாப்பது ன்னா ஐம்பதே தாரேம்!" என்கிறான்.
            இவனுங்களை நம்பி எப்படிப் பொறுமையாக இருக்க முடியும் என யோசிக்கும் மில்லுகாரர் "ஒங்களுக்கும் வாண்டாம், எங்களுக்கும் வாண்டாம்! முப்பத்தெட்டா கொடுத்து ஒரே அடியா முடிச்சிப்புடு!" என்கிறார். மாப்பிள்ளைக்காரன் சம்மதிக்கிறான்.
            "சரி முடிச்சிப்பேம். எஞ்ஞ பவுனு?" என்கிறது பட்டாப்பட்டி டிராயரோடு நிற்கும் முருகு மாமா.
            "நாம்ம ன்னா மடியிலயா முடிச்சிருக்கேம்! ஒடனே எடுத்துக் கொடுக்குறதுக்கு? வூட்டுக்குத்தாம்யா போவணும்!" என்கிறான் அவன்.
            "யப்பா! நீ நம்ம காருல ஏறு. அல்லாரும் இஞ்ஞயே இருங்க. வண்டியில இருக்குற முக்கியஸ்தருங்க அப்டியே இருங்க. நாம்ம போயி வாங்கிட்டு வந்திடுறேம்!" என்று சொல்லி விட்டு மில்லுகாரர் மாப்பிள்ளைக்காரனைக் காரில் ஏற்றிக் கொண்டு போகிறார். அவருக்கும் சந்தேகமாகத்தான் இருக்கிறது. அது என்ன வீடு? அந்த வீட்டில் எப்படி முப்பத்தெட்டுப் பவுனை வைத்திருப்பான் என்று.
            வீட்டுக்குப் போனால் மாப்பிள்ளைக்காரன் எல்லாரையும் அப்படியே வெளியே இருக்குமாறு சொல்லி விட்டு வீட்டைச் சுற்றிப் போகிறான். மில்லுகாரர் சுதாரிப்பாக, "யப்பா! ஆளு ஓடிப் போயிட மாட்டில்ல! நம்மளயும் கூட கூப்புட்டுக்கோ! பின்னால வாரட்டுமா?" என்கிறார்.
            "வந்துத் தொலைங்க!" என்கிறான் அவன்.
            "வயசான ஆளு. கீழ மேல தள்ளிவுட்டு ஓடிப் போயிடாத!" என்கிறார் மில்லுகாரர்.
            "வாய்யா கெழட்டு மூதி!" என்கிறான் அவன் இப்போது.
            மில்லுகாரருக்கு ஏம்டா கேட்டோம் என்பது போல இருக்கிறது.
            வீட்டைச் சுற்றி பின்பக்கம் வந்ததும் மண்டிப் போட்டு உட்கார்ந்து சாக்கடையில் கையை விட்டுத் துழாவுகிறான் மாப்பிள்ள. அவன் கையில் சிறிய பை ஒன்று அகப்படுகிறது. சாக்கடைத் தண்ணீருக்குள் ஆணி அடித்து அதில் நரம்பைக் கட்டி வைத்து அந்த நரம்பில் அந்தப் பையைக் கட்டி விட்டு அந்தப் பைக்குள் நகையைப் போட்டு வைத்திருக்கிறான் அவன். அதை அப்படியே எடுத்து பக்கத்து குடத்தில் இருக்கும் தண்ணீரில் போட்டு ரெண்டு அலசு அலசி எடுத்துத் தருகிறான். இதையெல்லாம் பார்க்கும் மில்லுகாரருக்கு பிரமிப்பா இருக்கு.
            "இந்தாய்யா கெழடு! முப்பதஞ்சுதாம் இருக்கும்! பாத்துக்கோ! பத்தாதுன்னா கொடுத்துடு. நாம்ம ஜெயிலுல்லயே போயி உக்காந்துக்கிறேம்!" என்கிறான் மாப்பிள்ள. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் அவன்களிடம் எதையும் வாங்க முடியாது என்று புரியாதவரா மில்லுகாரர். வாங்கிக் கொண்டு எல்லாரையும் அழைத்துக் கொண்டு லோடு ஆட்டோ நிற்கும் இடத்திற்கு வருகிறார்.
            கருப்பு லெதர் பேக்கில் எழுதி வைத்திருக்கும் இருபது ரூபாய் பத்திரத்தை எடுத்து எல்லார் கண் முன்னும் காட்டி அப்படியே கிழித்துப் போடுகிறார்.
            சித்துவீரன், வேட்டியில்லாத முருகு மாமா மற்றும் லாலு மாமா எல்லாரையும் காரில் அழைத்துக் கொண்டு அவர் வரும் வழியெல்லாம் முப்பத்தெட்டுப் பவுனில் மூணு பவுன் குறைந்து விட்டதே என்று வருத்தம் சித்துவீரனுக்கும் ரெண்டு மாமாக்களுக்கும். மில்லுகாரரிடம் அந்த வருத்ததில் எதுவும் பேசாமல் வருகிறார்கள். பின்னர் அந்த வருத்தம் மேலும் அதிகமாகும் வகையில் கத்திக்குத்து வாங்கிய பெருமாள்சாமிக்கு அஞ்சு பவுனை எடுத்து வைக்க நேர்ந்த போது மில்லுகாரரைப் பார்ப்பதையும், பேசுவதையும் அறவே நிறுத்திக் கொண்டனர் முருகு மாமாவும், லாலு மாமாவும். வேட்டிப் போன வருத்தத்தை விட பேசியபடி வராமல் போன மூணு பவுன், பெருமாள் சாமிக்குக் கொடுத்த அஞ்சு பவுன் ஆக எட்டுப் பவுன் அநாமத்தாகப் போனதே என்ற வருத்தத்தைப் பல நாட்கள் பேசிக் கொண்டிருந்தனர் அந்த ரெண்டு மாமாக்களும்.
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...