செய்யு - 165
"நடந்துருக்குறது சாதாரண சம்பவம்
இல்ல. உசுரு போயிருக்கு. அத திரும்ப மீட்டுக் கொண்டு வாரது முடியாத காரியம். எங்க
ஊரு பொண்ண பறிகொடுத்துட்டு தவிச்சி தெகச்சிப் போயி நிக்கிறேம். இந்த எழப்பை ஈடுகட்ட
முடியாது." என்று சொல்லி விட்டு வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பைத் தடவி சீவல்
பாக்கெட்டிலிருந்து சீவலை அள்ளி உள்ளே வைத்து வெற்றிலையை மடித்து வாய்க்குள் வைத்து
ஒரு அதக்கு அதக்கி விட்டு சம்பந்தமில்லாமல் ஏதோ ஒரு பக்கம் வெறித்துப் பார்க்கிறார்
மில்லுகாரர். மேற்கொண்டு என்ன பேசப் போகிறார் என்று எல்லாரும் அவரையே பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்.
"ஒங்க எடத்துல ஒரு உசுரு போயிருக்கிறது
ஒங்களுக்கும் நல்லதில்ல. ஒங்க குடும்பத்துக்கும் நல்லதில்ல. வாழ வேண்டிய ஓர் ஆத்மா
அணைஞ்சிப் போயிருக்கு. அது சாவுறப்ப என்ன நெனைச்சிச்சோ ஏது நெனைச்சிச்சோ அது ஆண்டவனுக்கே
வெளிச்சம். நாஞ் சொல்றது ஒங்க எல்லாருக்கும் புரியும்னு நெனைக்கிறேன்!" என்று
வெற்றிலைச் சீவலை மென்றபடி பேசிய மில்லுகாரர் அப்படியே ஒரு ஓரமாக ஒதுங்கி புளிச் புளிச்
என்று துப்புகிறார்.
"போலீஸூ, கேஸுன்னு போறது ரெண்டு
குடும்பத்துக்கும் நல்லதில்ல. மாப்பிள்ள வூட்டுப் பக்கத்துக்கு அது சுத்தமா நல்லதே
இல்ல. இங்க பொண்ணு வீட்டுப் பக்கத்துக்கு அது அலச்சலு, மன உளைச்சலுதாம். இப்பவே வெறுப்பு
உண்டாகிப் போச்சி. அலைய அலைய அது இன்னும் அதிகமாகத்தான் ஆகும். பின்னாடி ஒரு வெட்டு
கொலையின்னு ஆயிடப்புடாது பாருங்க. அப்டிலாம் நடக்காதுன்னு சொல்ல முடியாது. ஏதோ ஒரு
வேகத்துல அப்போ ஒண்ணு கெடக்க ஒண்ணு நடக்கவும் சம்பவிக்க வாய்ப்புங்க இருக்கு. போனது
போயாச்சி. நடந்தது நடந்தாச்சி. இத்தே இத்தோட முடிக்கணும். ன்னா சொல்றீங்க?"
என்று சொல்லிவிட்டு மில்லுகாரர் ரெண்டு பக்கமும் பார்க்கிறார்.
"நீங்க ன்னா சொன்னாலும் அதுக்கு
நாங்க கட்டுபடுறோம்ங்க! நீங்களா பார்த்து எது பேசி விட்டாலும் சரிதாங்!" என்கிறது
மாப்பிள்ளை வூட்டுத் தரப்பு.
"எங்க உசுர வுட்டுட்டு நிக்கிறேம்.
அத்தே யோஜிச்சுப் பேசுங்க!" என்கிறது லாலு மாமாவும், முருகு மாமாவும்.
"அது செரி! உசுருக்கு மதிப்பு கெடையாது.
அதுக்கு மதிப்பும் போட முடியாது. ஒப்படைச்ச உசுரை அவுங்க பாதுக்காப்பத்தாம் வெச்சிருக்கணும்.
வுட்டுட்டாங்க. நடந்ததெ கெளறுனா அது சுத்தப்படாது. பழைய குருடி கதவெ தெறடின்னு ஆயிடும்.
ஆக வேண்டியதப் பேசணும்! பொண்ணுவூட்டுத் தரப்புல ன்னான்ன செஞ்சிருக்கீங்க. அதச் சொல்லுங்க
மொதல்ல!" என்கிறார் மில்லுகாரர்.
"பவுனு கணக்குல ஒரு முப்பதெட்டு.
கட்டிலு, பீரோ சாமாஞ் செட்டு பித்தளைப் பாத்திரங்க, எவரு சில்வரு சாமானுங்க, சீரு
சனத்தி எல்லாமும் செஞ்சுது. இது பத்தாதுன்னு நகையைக் மீட்டுகுறதுன்னு அதுக்கு வேற அறுபதாயிரத்த
அப்படியே சொளையா எண்ணி வெச்சிருக்கு!" என்கிறது முருகு மாமா.
"ஒங்க தரப்புல கல்யாணச் செலவு அது
இதுன்னு செலவு பண்ணிருப்பீங்க! அதெல்லாம் எவ்ளோ இருக்கும்!" என்கிறார் மாப்பிள்ளை
வீட்டுத் தரப்பைப் பார்த்து மில்லுகாரர்.
"அது ஒரு அஞ்சாறு லட்சம் இருக்கும்!"
என்று அலட்சியமாய்ச் சொல்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டுத் தரப்பில்.
"த்துப்பூ! அஞ்சாறு லட்சத்துக்கு
அப்படி ன்னாடா செஞ்சீங்க? கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு சாப்பாடு கூட போடல. ஒரு நல்ல
கல்யாண மண்டபம் பிடிச்சிருப்பீங்களா? ஒரு பீத்த மண்டபத்துலதாம்டா கல்யாணத்த முடிச்சீங்க!"
என்கிறது லாலு மாமா.
"இந்தாருங்க வாத்தியாரே! இந்த மாரி
பேசுறதுன்னா நம்மள விட்டுடுங்க. நாம்ம கேட்குறோம். அவங்க பதிலு சொல்றாங்க. அவ்வளவுதாம்.
கூடவோ கொறைச்சலோ இருக்கலாம். முடிவெல்லாம் அப்பொறம் பார்த்துக்கலாம். கேக்குறதுக்கு
தவுர பாக்கி எல்லாத்துக்கும் பேயாம இருக்கணும்." என்கிறார் மில்லுகாரர். ஒரு நிமிடம்
ரெண்டு பக்கமும் எல்லார் முகத்தையும் பார்த்து ஒரு நோட்டமும் விட்டுக் விடுகிறார்.
"பவுனு நக நெட்டு, அறுபதினாயிரம்
பணம் இத்தே கையோட கொடுத்துப் புடணும். பொண்ணு உசுரு போயிருக்கு. இந்தப் பக்கம்
இழப்பு சாஸ்தி. எது கொடுத்தாலும் அதுக்கு ஈடு பண்ண முடியாது. அதுக்குதாங் ன்னா பண்றதுன்னு
யோசிக்கிறேம்!" என்று நெற்றியைச் சுருக்கிக் கொண்டு
"கட்டிலு பீரோ பாத்திரம் பண்டமெல்லாம்
விட்டுடுங்க. பொண்ணு ந்நல்லா இருந்தா அதுதாங் அனுபவிக்கப் போகுது. ஒங்கப் பக்கமும்
கல்யாண செலவு கூடவோ கொறைச்சலோ ஆயிருக்கு. அதெ கணக்குப் பண்ண வாணாம். கல்யாணத்துக்கு
வந்ததுல சாப்பாடு பவுசோ பவுசு இல்லியோ ரண்டு பக்கமும்தான் சாப்பிட்டு இருக்காங்க.
அதல்லாம் கணக்குப் பார்க்க முடியாது. பவுனு நக நெட்டு, அறுபதினாயிரம் பணம் அத்தோட
ஒரு லட்சம் பணம். அவ்வளவுதாங். கொடுத்தீங்கன்னா மேக்கொண்டு அவங்க சோலிய பாத்துட்டு
அவங்கப் போயிக்கிறது. நீங்க ஒங்க சொலிய பாத்துகிட்டு நீங்க போயிக்கிறது. இதாஞ் சரின்னு
நாம்ம நினைக்கிறேம். ஒங்க நெனப்புல ன்னா இருக்குன்னு நீங்கதாஞ் சொல்லணும்!" என்கிறார்
மில்லுகாரர்.
"அதெல்லாம் முடியாது. ஒத்துக்கவே
முடியாது!" என்கிறது முருகு மாமா.
"நாங்களும் முடியாது!" என்கிறது
மாப்பிள்ளை வூட்டுத் தரப்பு.
"அப்டின்னா நம்மள வுட்டுடுங்க. நீங்க
ன்னா பண்ணணும்னு நெனைக்கிறீங்களோ அத்தே நீங்க பண்ணிக்குங்க. ஒங்க தரப்புல ன்னா பண்ணணும்னு
நெனைக்கிறீங்களோ அத்தே நீங்க பண்ணிக்குங்க. ன்னா லாலு இதுக்கு மேலன்னா போலீஸ்ல கம்ப்ளெய்ண்டு
எழுதிக் கொடுங்க. போஸ்ட்மாடம்தாம் பண்ணுவாங்க. ஆக வேண்டிய காரியத்தப் பாருங்க. ரொம்ப
நேரமா முட்டிகிட்டு நிக்குது. நாம்ம அப்டி ஓரமா ஒதுங்கி சுச்சு போய்ட்டு வார்றேம்!"
என்கிறார் மில்லுகாரர்.
"உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டுனாதாங்
அவனுங்க அடங்குவானுங்க! வாண்ணே ரண்டுல ஒண்ணு பாத்திடுவேம்! ஒரு பயெ வுடாம அள்ளி ஜெயிலுக்குள்ள
போட்டுப் புடணும்!" என்கிறது லாலு மாமா.
ஓரமாய் ஒதுங்கப் போன மில்லுகாரரைச் சுத்திக்
கொண்டு வருகிறார்கள் மாப்பிள்ளை வூட்டுக்காரர்கள். அவரது கையைப் பிடித்து ஏதோ குசுகுசுவென்று
பேசுகிறார்கள்.
"ஓ! அப்டியா சங்கதி! சரி இந்த முட்டிக்கிறதெ
அப்பொறம் பாத்துப்பேம்! சித்தெ இருங்க!" என்றபடி அவர்களை அந்த ஓரத்திலயே நிக்க
வைத்து விட்டு மில்லுகாரர் இந்தப் பக்கம் வந்து முருகு மாமாவையும், லாலு மாமாவையும்
தனியே ஓரங் கட்டிக் கொண்டு போகிறார்.
"இந்தாருங்க சொல்றத ந்நல்லா கேட்டுக்குங்க!
போலீஸூ கேஸூன்னு போனா அவனுங்க அப்டில்லாம் இல்லன்னு தலையில அடிச்சி சத்தியம் பண்ணாத
கொறையா பேசுவானுங்க. ரண்டு பக்கமும் காசு பணம்தான் செலவாவும். நகையும் போடல, பணமும்
கொடுக்கலன்னு அடிச்சி சத்தியம் பண்ணுவானுங்க. ஒண்ணு ரண்டு வாரதையும் மீட்குறது செரமமா
போயிடும். நாம்ம எத்தனையோ பஞ்சாயத்தப் பாத்தாச்சி. எவ்ளவோ அனுபவப்பட்டாச்சி. அதுவும்
வக்கீலு கோர்ட்டுன்னு போனுச்சின்னா ரண்டு பக்கமும் வாதம் பலமாத்தாம் இருக்கும். ஆதாரம்
அது இதுன்னு நிரூபிச்சி முடிவுக்கு வாரதுக்குள்ள முழி பிதுங்கிப் போயிடும் பாத்துக்குங்க.
வாங்கப் போற ஒத்த ரூவாய்க்கு ரண்டு ரூவா செலவாயிடும். அதால..." என்று மில்லுகாரர்
சொல்லிக் கொண்டிருக்கும் போதே லாலு மாமா, "நம்மகிட்ட நக பவுனு சீரு சனத்தி
செஞ்சப்ப எடுத்த போட்டோல்லாம் இருக்கு. ஆதாரம் இல்லன்னு சொல்லாதீங்க." என்கிறது.
"இருக்கட்டும்! நல்லாவே இருக்கட்டும்!
ஒரு பேச்சுக்கு சொல்றேம்... ஆமாங் அப்போ வாங்குனோம் இப்போ கையில இல்ல. நீங்க கொடுக்குற
ஜெயிலு தண்டனைய கொடுங்கன்னு சொல்லிட்டு அந்தத் தரப்புல உள்ள போயிடுச்சின்னு வெச்சுக்க
உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணாதாம். தம்புடி தேறாது பாத்துக்க. நைஸா பேசி கறக்குறத
கறந்துபுடணும். அதாங் புத்திசாலித்தனம். இது இன்னியோட முடிஞ்சிபுடும். போலீஸூ கேஸூன்னா
நாமதாம் அலயணும். நாமதாங் நிரூபிக்கணும். அதல்லாம் ஆவுற கதெயில்ல. கோர்ட்டு கேஸூன்னு
அலஞ்சிப் பாத்தாதாம் தெரியும். சட்டம் சங்கதியெல்லாம் பெண்ணுக்கு சாதகம்தான். ஒண்ணயும்
அவ்ளோ சுலுவுல நிரூபிச்சிட முடியாது. அந்தத் தரப்புல அவனுங்க பாட்டுக்கு பட்டறயப் போட்ட மாதிரி உக்காந்துடுவானுவோ. கோர்ட்டு
கேஸூன்னு அலைஞ்சு செலவு பண்ண முடியும்னா சொல்லுங்க. இப்டியே வுட்டுப்புட்டு மேக்கொண்டு
ஆவுறதப் பாப்பேம்!" என்கிறார் மில்லுகாரர்.
"அவனுங்க ன்னா சொல்றானுங்க?"
என்கிறது முருகு மாமா கொஞ்சம் நடுக்கத்தோடு.
"கல்யாணத்துல ஏகப்பட்ட செலவு ஆயிட்டுங்றானுங்க.
அதுக்குக் கொஞ்சம் கழிச்சிக்கச் சொல்றானுங்க. முப்பது பவுனு, ஒரு லட்ச ரூபாயி பணத்த
ரண்டு வாரம் டையம் கொடுத்தா எடுத்து வெச்சிடறதா சொல்றானுவோ! ன்னா சொல்றே சொல்லு!"
என்கிறார் மில்லுகாரர்.
"நகையில எட்டு வரைக்குக் கொறையுதே!"
என்கிறது லாலு மாமா.
"நகெக் கட கணக்கா மில்லிகிராமு துல்லியாமல்லாம்
அளக்க முடியாது. வந்த வரைக்கும் லாபம்னு அமுக்கிக்கணும். அதெ வுட்டுட்டு அதுல நொட்ட
இதுல நொட்டன்னா அதுக்குள்ள அவனுங்க மனசு மாறிடுனுவாங்க. சுதாரிச்சிப்புடுவானுங்க பாத்துக்கோ!
அடிச்சி வளைக்கிறதெ சூட்டோ சூடா அடிச்சி வளைக்கிணும். நெல்ல பதமா இருக்கிறப்பவே அரைக்கிறதெ
அரைச்சி முடிக்கிணும்." என்கிறார் மில்லுகாரர்.
"பணத்தெ மட்டும் கொஞ்சம் கூட..."
என்று இழுக்கிறது முருகு மாமா.
"ரண்டு வாரத்துக்குள்ள கொடுத்துப்புடுவானுவோங்றது
ன்னா நிச்சயம்?" என்கிறத லாலு மாமா.
"அப்டில்லாம் வாயி வார்த்தையா பேசி
வுட்டுப்புடுவேம்னு நெனைச்சீங்களா! போயி காருல இருக்குற எம் பேக்கை எடுத்துட்டு வாங்க!"
என்கிறார் மில்லுகாரர்.
லாலு மாமா சின்னப் பிள்ளையைப் போல குடுகுடுவென்று
ஓடி மில்லுகாரரின் பேக்கை எடுத்துக் கொண்டு வந்து பவ்வியமாய் எடுத்து வருகிறது. கருப்பு
நிறத்தில் பள பளவென ஒரு நியூஸ் பேப்பரை ரண்டாய் மடித்தால் எந்த அளவுக்கு இருக்குமோ
அந்த அளவுக்கு இருக்கிறது அந்த லெதர் பேக். அந்த பேக்கில் ஜிப்பை இழுத்து விட்டு விட்டு
இருபது ரூபாய் பத்திரத்தை எடுக்கிறார் மில்லுகாரர். எடுத்துக் காட்டி, "இதுல எல்லாத்தியும்
எழுதி கையெழுத்து வாங்கிப் புடுவேம்!" என்கிறார் மில்லுகாரர்.
"பணத்தெ மட்டும் கொஞ்சம் கூட பேசி
வுட்டுடுங்க!" என்கிறது லாலு மாமா.
"வாங்க எல்லாரும் இஞ்ஞ!" சத்தமாய்க்
குரல் கொடுக்கிறார்.
மில்லுகாரரைச் சுத்தி எல்லாரும் வந்து
நிற்கிறார்கள்.
"சொல்றத கேட்டுக்குங்க. பொண்ணு
ஒத்த உசுரா சாகல. வாயும் வயிறுமா செத்துருக்கு. பொண்ணுக்கு மூணு நாலு மாசங்றாங்க.
அது நமக்குத் தெரியாதுன்னு நெனச்சிப்புடக் கூடாது. எல்லா சங்கதியும் நமக்குத் தெரியும்.
அதால எழப்புங்ற வகையில் பார்த்தா எழப்பு ரெட்ட உசுரு. அதால எழப்புங்றது ரெண்டு வூட்டுக்குந்தாம்.
நகநெட்டுன்னு பார்த்தா அந்தப் பக்கத்திலேந்து முப்பதெ இந்தப் பக்கம் கொடுத்துப்புடணும்.
ரொக்க வகையில் ஒண்ணேகாலு லட்சத்த எடுத்து வெச்சிப்புடணும். இது ஒண்ணும் சந்தையில யேவாரம்
பண்ற வேலயில்ல. அதால அப்டி இப்டின்னு கூட கொறைச்சல்னு பேரம்லாம் வாணாம். ரண்டு பக்கமும்
இதுக்குச் சம்மதிச்சி இந்தச் சங்கதியயெல்லாம் ரண்டு வாரத்துக்குள்ள முடிச்சிப்புடணும்.
அதுக்கு ஒத்துக்கிட்டு ரண்டு பக்கத்திலேந்தும் இந்தப் பத்திரத்துல கையெழுத்துப் போட்டுப்புடணும்."
என்கிறார் மில்லுகாரர்.
"செரிதாங்! பத்திரத்தை எழுதுங்க!"
என்கிறது மாப்பிள்ளை வூட்டுத் தரப்பு.
"முடிச்சி வுட்டுடுங்க!" என்கிறது
லாலு மாமா.
மில்லுகாரர் அப்படியே ஓரமாய் ஒர நாற்காலியைப்
போட்டுக் கொண்டு எழுதுகிறார்.
திருவாரூர், நாகப்பட்டிணம்
ரோட்டு, பெரியவேம்படியாள் நான்காம் சந்து, எட்டாம் நெம்பர் வூட்டு ஜாகை விஸ்வேஸ்வர
நகை ஆச்சாரி மகன் தியாகேசன், வடவாதி மெயின் ரோட்டு பதிமூணாம் நெம்பர் வூட்டு முருகு
தச்சு ஆச்சாரியிடம் பெற்ற வகையில் முப்பது பவுன் நகையும், ஒண்ணேகால் லட்ச ரூபாய் ரொக்கத்தையும்
இன்றைய தேதியிலிருந்து கணக்கிட்டு பதினாலு நாட்களுக்குள் எந்தவித வில்லங்கத்துக்கோ,
பிராதுக்கோ இடமின்றி கணக்கை முடித்துக் கொள்வது. இதில் எந்தவித வில்லங்கத்துக்கோ
பிராதுக்கோ இடமானாலும் அதனால் உண்டாகும் போலீஸூ, கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு ரெண்டு
தரப்பும் கட்டுப்பட்டவர்கள் ஆவார்கள். இதை ஏற்று ரெண்டு தரப்பும், ரெண்டு தரப்பின்
சார்பில் ஏரியா பெரியோர்களும் சாட்சி செய்து கையொப்பம் செய்கிறோம்.
இப்படி எழுதி மில்லுகாரர் ரெண்டு பக்கமும்
சர சரவென்று கையெழுத்தை வாங்கிப் பத்திரத்தைப் பத்திரமாக தன் கருப்பு லெதர் பேக்கில்
வைத்துக் கொள்கிறார்.
*****
No comments:
Post a Comment