3 Aug 2019

கல்வி முறையே கல்வியாகுமோ?



            அனைவரையும் மேதாவிகளாக்குவது என்ற நோக்கில் இந்தக் கல்வி முறை செயல்படுகிறது. அடிப்படையில் அனைவரும் மேதாவிகள்தான் என்பது இந்தக் கல்வி முறைக்குத் தெரியாது. பல பேரின் மேதாவித் தனத்தைச் சிதைத்ததில் கல்வி முறைக்கு கணிசமான பங்கு இருக்கிறது. நீங்கள் இந்த இடத்தில்தான் கவனமாக கவனிக்க வேண்டும். கல்வி மனிதனை மேம்படுத்துகிறது. கல்வி முறை சரியாக இல்லையென்றால் அது மேம்பட வேண்டியதை மேம்பட விடாமல் செய்வதோடு நன்றாக இருந்த சுவரையும் குட்டிச் சுவராக்கி விடுகிறது.
            சாப்பாட்டில் என்ன இருக்கிறது? அம்மா ஊட்டி விடும் சோறு உள்ளுக்குள் இறங்குவதைப் போலத்தான். இந்தக் கல்வி என்பது சாப்பாட்டைப் போன்றது. கல்வி முறை என்பது ஊட்டி விடுவதைப் போன்றது. உலகில் அம்மா ஊட்டி விடும் போதுதான் சாப்பிடுவது தெரியாமல் சாப்பிடுகிறோம். கல்வி முறையும் அப்படித்தான் இருக்க வேண்டும். கற்பது தெரியாமலேயே கற்க வேண்டும்.
            நிலைமை அப்படியா இருக்கிறது?
            எல்.கே.ஜி., யு.கே.ஜி. என்று மழலையர் வகுப்புகள் படிக்கும் பிள்ளைகளே மனஇறுக்கம் எனும் பொருள்படும் டென்ஷன் என்ற வார்த்தையை அதிகம் பிரயோகிக்கின்றன.
            விருப்பம் போல கைகளையும், கால்களையும் ஆட்டி, இஷ்டம் போல் விளையாடி, விரும்பும் போதெல்லாம் தூங்கி, தன் போக்குக்கு இருக்க வேண்டிய குழந்தைகளை ப்ளாஸ்டிக் சேர்களும் டேபிள்களுமாய் உட்கார வைத்து கை, கால்களை அசைக்க விடாமல் செய்து, அங்கே இங்கே ஓடாதே அசையாதே என்று வாயில் விரலை வைக்கச் செய்து, கண்களில் லேசாகத் தூக்கம் தெரிந்தால் தூங்காதே என்று குச்சியால் அடி போட்டு, மிஸ் எனும் ஆசிரியரின் போக்குக்குக் குழந்தைகள் வாழப் பழகிக் கொண்டிருக்கின்றனர்.
            வளர்ந்த நாடுகளில் ஐந்து வயதுக்கும், ஆறு வயதுக்கும் மேல் தொடங்குகின்ற கல்வி முறை நம் நாட்டில் இரண்டரை வயதிலும் மூன்று வயதிலும் தொடங்கி விடுகிறது. ஆக நாம் கல்வி முறையைத்தான் தொடங்குகிறோம். கல்வியைத் தொடங்குவதில்லை. நம் நாடு வளரும் நாடு என்பதால்  குழந்தைகள் வளரத் தொடங்கியவுடனே கல்வி முறையைத் தொடங்கி விடுகிறோமா என்னவோ!
            நாம் இந்தக் கல்வி முறையின் அதீத வளர்ச்சியில் இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாகத்தான் புற்றுநோய் போல கல்விக் கட்டணக் கொள்ளையோடு தொடங்கப்படும் பள்ளிகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஓர் அதீத ஓட்டத்தை நோக்கிய ஆட்டத்தில் நாம் இருக்கிறோம். குழந்தை தாயின் வயிற்றில் கரு தரித்தவுடன் விண்ணப்பம் செய்ய பெற்றோர்கள் கல்விக் கூடங்களின் முன் வரிசையில் நிற்பதும், திருமண நிச்சயதார்த்தம் ஆனவுடன் கல்விக் கூட சேர்க்கையை நிச்சயதார்த்தம் செய்யும் வகையில் மனிதர்கள் மாறிப் போகும் அளவுக்கு கல்வி முறை ஒரு தாக்கத்தை நம் சமுதாயத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.
            ஒவ்வொருவரையும் கற்றவர்கள் ஆக்கவதுதான் கல்வி முறையின் நோக்கம். கல்வி முறையில் கற்றவர்களை உருவாக்கி மனிதர்களாய் இருக்கும் அவர்களை மாமனிதர்களாய் மேம்படச் செய்வதுதான் கல்வியின் நோக்கம். இங்கு கல்வி முறையின் நோக்கம் சரியில்லாமல் போகும் போது கல்வியின் நோக்கம் சிதைந்து விடுகிறது. கல்வி முறையின் நோக்கமே கல்வியின் நோக்கமாகக் கொள்ளப்பட்டு அதுவே கல்வியின் இறுதியான இலக்கு என்பது போல நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் படிப்பையே கல்வி என்பதாக நிலைமை மாறிக் கொண்டு போகிறது.
            மனிதர்களுக்காகத்தான் இந்தக் கல்வியே. இந்தக் கல்வி முறைக்காக மனிதர்கள் அல்லர். இந்தக் கல்வி முறையில் மனிதர்களும் மனிதமும் பலியிடப்படுவது கூர்மையாக நோக்கப்பட்டு மாற்றப்பட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொருவரும் கல்வி முறை என்று சொல்லப்படும் பாடநூல் படிப்பில் மட்டும் மேதாவிகள் அல்லர். ஒவ்வொருவரும் அவரவர்களின் விருப்பமான துறையில் மேதாவிகள்தான் என்பது அவர்கள் பிறந்த போதே நிச்சயமான ஒன்று. ஒருவரை மேதாவியாக்காவிட்டாலும் பரவாயில்லை. அவரை அதிமேதாவியாக்குகிறேன் என்ற கல்வி முறையின் பெயரால் எவரையும் அடி முட்டாளாக்கும் வேலையைச் செய்து விடக் கூடாது.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...