நம்ம மக்களோட சோம்பேறித்தனத்தைச் சொல்லி
மாளாது. சோம்பேறித்தனத்தை ஒழிக்கிறது எப்பிடின்னு சோம்பேறித்தனமாக உக்கார்ந்து சோம்பேறித்தனமா
யோசிக்கிறதையே பெரிய சாதனையா பேசிகிட்டு இருக்கும்.
இப்பிடி, அப்பிடின்னு பேசிகிட்டு இருக்குற
அந்த ரெண்டு மணி நேரத்துல ஒரு பத்து நிமிஷம் எழுந்திரிச்சிப் போயி மெனக்கெட்டிருந்தா
அந்த வேலை ஆயிருக்கும். இருந்தாலும் கண்டமேனிக்கு அப்படியெல்லாம் பேசி என்னைக்கோ ஒரு
நாளைக்கு மூடு வாரப்ப அந்த வேலையச் செய்யறதைத்தான் பெருமையா நினைக்குதுங்க நம்ம மக்கள்.
இதுங்களுக்கு மூடு வந்து காரியம் நடக்குறதுக்குள்ள
முடி கொட்டி அதுக்கு அப்புறமா சீப்பு வந்தா கதையாகத்தான் போயிடுது நம்ம சமுதாயத்தோட
நிலைமை. ஏதோ ஒரு கட்டாயம், ஏதோ ஒரு நெருக்கடி இருந்தா மட்டும்தான் நம்ம சமுதாயத்துல
மக்கள் வேலை பார்க்குதுங்க. அது எதுவும் இல்லேன்னாலும் நம்மோட கடமைன்னு வேலை பாக்குறவங்க
எண்ணிக்கை நம்மோட சமுதாயத்துல ரொம்பவே கம்மி.
இந்தச் சோம்பலான மனநிலை யாருக்குதாம்
இல்லை சொல்லுங்க. நல்லா சுறுசுறுப்பா இருக்கிறவங்கிட்டயும் இது இருக்கும். ஆனா அதை
அவங்க வளர விட மாட்டாங்க. மத்தவங்க வளர விட்டுடுறாங்க. அதுதாம் வித்தியாசம்.
நல்லா சுறுசுறுப்பா இருக்கிறவங்க என்ன
செய்வாங்கன்னா, சோம்பலா இருக்குலாம்னு தோணுனாலும் சரின்னு அந்தச் சோம்பல் உணர்வு
போகட்டும்னு உட்கார்ந்திட மாட்டாங்க. அது பாட்டுக்கு சோம்பலான உணர்வு இருக்கட்டும்.
நாம்ம பாட்டுக்கு ஆகுற வேலையில எதாச்சிம் ஒண்ண அப்டியே செஞ்சிகிட்டே இருப்போம்னு நெனைச்சிகிட்டு
செஞ்சிகிட்டு இருப்பாங்க. அந்த வேலையை ஆரம்பிச்சு ஒரு பத்து நிமிஷம் செஞ்சா போதும்
மனநிலை தானாவே பிறகு மாறிப் போயிடும். எங்கடா சோம்பாலா இருப்போம்னு நினைத்த அந்த
மனநிலையைத் தேடினாலும் அப்போ கண்டுபிடிக்க முடியாது.
ஆக விசயம் இதுதான். ஒவ்வொண்ணுலயும் ஈடுபடறப்ப
மனசு மாறிகிட்டே இருக்குது. ஆகவே ஏதாச்சிம் ஒண்ண செய்ய ஆரம்பிச்சிட்டா சோம்பலான மனநிலையாவது?
மண்ணாங்கட்டியாவது? அதை விட்டுட்டு சோம்பலான மனநிலை மாறுனாத்தான் வேலையைச் செய்வேன்னு
உட்கார்ந்திருந்தா வாழ்நாள் முழுமைக்கும் அப்படியே உட்கார்ந்திட வேண்டியதுதான். ஏன்னு
கேட்டீங்கன்னா, வேலையைச் செய்ய ஆரம்பிச்சா பத்து நிமிஷத்துக்குள்ள வேலைக்கான மனநிலை
உண்டாயிடும். சோம்பால உட்கார்ந்திருந்தா பத்து நிமிஷத்துக்குள்ள அதுக்கான மனநிலைதானே
மறுபடியும் உருவாகும்.
இந்தச் சின்ன மனநிலை மாற்றத்தைப் புரிஞ்சிகிட்டவங்க
சோம்பலா உட்கார மாட்டாங்க. அப்புறம் சோம்பலாவே உட்கார்ரு மாதிரி ஆயிடும்னு அவங்களுக்கு
நல்லாவே தெரியும். இந்தச் சின்ன மனநிலை மாற்றத்தைப் புரிஞ்சிக்காதவங்கதான் மனநிலை சுறுசுறுப்பா
மாறட்டும்னு உட்கார்ந்து சோம்பலான மனநிலைக்கு அடிமையா ஆகியிடுறாங்க.
இதைப் புரிஞ்சிகிட்டுதான் பாரதி, 'இமைப்பொழுதும்
சோராதிருத்தல்!" அப்டிங்றார் போலருக்கு.
*****
No comments:
Post a Comment