19 Aug 2019

சண்டை ஒரு தொடர்கதை



செய்யு - 181
            கறிவிருந்து முடிஞ்சு ஒரு மாசமோ ஒன்றரை மாசமோதான் சித்துவீரன் வடவாதியில இருந்துச்சு. அதுக்கு அப்புறம் அது வெளிநாடு கிளம்பிப் போயிடுச்சி. அந்த ஒரு மாசத்துக்குள்ள நடந்த கூத்த கேட்டா இதென்னடா புதுக்கூத்தா இருக்குன்னு சொல்லிடுவீங்க. ஆமா! அப்படித்தான் நடந்துச்சு! வார்த்தைகள் கொஞ்சம் நாராசமாத்தான் இருக்கும். காத்துல கலந்து விட்ட மூக்குக்கு வாரக் கூடாதுன்னு சொல்ல முடியுமா என்ன!
            சித்துவீரன் சீக்கிரமே வெளிநாடு கிளம்பப் போறதா சொன்னதுமே சுந்தரியோட நடத்தையில ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்குது. முருகு மாமாவையும், நீலு அத்தையையும் கவனிச்ச கவனிப்புல ஒரு சுணக்கம் வந்திடுச்சி. கல்யாணம் கட்டுனவன் பாட்டுக்கு தாலிய கட்டிப்புட்டு வெளிநாடு பறந்துட்டா, இங்க இருக்குறவ பாடு இதுங்களுக்கு எல்லாம் வடிச்சுக் கொட்டுறதுதாம் வேலையாங்குற கணக்கா ஆயிடுமேங்ற எண்ணம் வந்திடுச்சு போலிருக்கு சுந்தரிக்கு.
            விழுந்து விழுந்த கவனிச்ச மாமனையும், அத்தையையும் இப்போ அது நிமிஷத்துக்கு ஒரு குறைய சாடை மாடையா சொல்லுது. அதுவும் முருகு மாமாவையும், நீலு அத்தையையுமா? அவங்களப் பொருத்த வரைக்கும் அவங்கதான் மத்தவங்கள குறை சொல்லணுமே தவிர அவங்களை யாரும் குறை சொல்லக் கூடாது. அதால ஊருல உள்ள மத்த மாமனார், மாமியாருங்க போல ரெண்டு பேரும் அதைப் பொறுத்துக்கு தயாரில்ல.
            "பொழுதேனைக்கும் வேல பாத்து அசந்து வருது. சித்தே காய்கறிகள அரிஞ்சு கொடுங்க அத்தே! கொழம்ப சட்டுபுட்டுன்னு வெச்சிப்புடுறேன்!" அப்பிடின்னு ஆரம்பிக்குது சுந்தரி.
            சரிதாம் போ! யாருக்குச் செய்யுறோம்? நம்ம வூட்டு மருமவப் பொண்ணுக்குதானேன்னு நீலு அத்தையும் அது எடுத்துப் போடுற காய்கறிகள அரிவா மனையில அரிஞ்சுப் போடுது. அது அரிஞ்சுக் கொடுத்ததை எடுத்து கொதிக்குற கொழம்புல போடுறப்ப சுந்தரி, "இப்படியா மண்ட மண்டையா அரிஞ்சுப் போடுவாங்க! இதெ கொழம்புலந்து சாப்புடுறவங்களுக்கு எடுத்துப் போட்டா சரியா வேகலன்னு கொழம்பு வெச்ச நம்ம மேலேல்ல கொறையா போவும். நாம்ம மேல கொறை வரணும்னே அரிஞ்சிக் கொடுக்குறீங்களா அத்தே?" அப்பிடின்னு கொஞ்சம் எடுத்து விடுது.
            "ஏண்டியம்மா! நமக்குதாம் அரிய வரலீயே! நீயே அரிஞ்சுக்க வேண்டியத்தானே?" அப்பிடின்னு நீலு அத்தை ஆரம்பிக்க...
            "நாம்ம ஒருத்தியே மாடா ஒழைச்சு ஓடா தேயறதுன்னா யாருக்கு இருக்க ஒடம்புல நாதி? அப்பிடி இப்பிடி நீங்களும் ஒழைச்சாதாம் ஒடம்புல சுகரு, கொழுப்புலாம் இல்லாம இருக்கும்!" அப்பிடின்னு சொல்லுது சுந்தரி.
            "யாருக்குடி இஞ்ஞ கொழுப்புங்றே? கொழுப்பெடுத்த நாயே! ஒண்ணுமில்லாதவள கட்டிகிட்டு கொண்டு வந்து நடுவூட்டுல வெச்சா, நாயைக் குளிப்பாட்டி நடுவூட்டுல வெச்ச கதையால்ல இருக்கு! அது வாலைக் கொழைச்சுகிட்டு எஞ்ஞ போகணுமே அஞ்ஞதானே போகும்!" என்கிறது நீலு அத்தை.
            போதாதா சுந்தரிக்கு? "அத்தே என்னை நாயின்னுட்டாங்க!"ன்னு சொல்லி சொல்லி அழுது அழுது ஒப்பாரி வைக்குது. கொதிக்குற குழம்பு அடுப்புல கொதிச்சபடி கெடக்குது. கொழம்பு மட்டுமா கொதிச்சுகிட்டு கிடக்கு அங்கே? குடும்பமே கொதிக்க ஆரம்பிடுச்சு.
            இது என்னான்னு கேட்டுகிட்டு முருகு மாமா உள்ள வந்தா, சித்துவீரனும் உள்ள வருது.
            "ஒண்ணுமில்லாதவள கட்டிட்டு வந்திட்டீங்களாம்! ஒங்க அம்மாவுக்கு போட்டுக்கு வேண்டிய நகெ நட்டுலாம் அதால இல்லாமப் போச்சாம்! வெத்தலைக்குச் சுண்ணாம்பு வாங்கித் தடவிக்கக் கூட காசில்லாம போயிடுச்சாம்! என்ன நாயி, பேயி, நாதாரி, நடத்தெ கெட்டவன்னு கண்டிமேனிக்குத் திட்டுறாங்க!"ன்னு சொல்லிட்டு ஒப்பாரி மேல ஒப்பாரியா வைக்குது.
            "யா யம்மா! யாரப் பாத்து நடத்தெ கெட்டவங்றே! நீ ஒம் கொழுந்தம்கிட்டே பல்ல இளிச்சி இளிச்சிகிட்டு பேசுனது ன்னா நமக்குத் தெரியாதுன்னு நெனைக்குறீயா? ன்னா மேனா மினிக்கி வேலயெல்லாம் பாத்தேன்னு ஊருக்கே தெரியும். மக மாதிரி வெச்சுக்க வேண்டிய மருமவள அவ்வாசரிங்றீயே! யாரு அவ்சாரி? நீ அவ்சாரியா? எம் பொண்டாட்டி அவ்சாரியா?" என்கிறது சித்துவீரன்.
            "யேய் ன்னாடா நாக்கு ரொம்ப நீளுது? எம்மட பொண்டாட்டிய அவ்சாரிங்றே? அப்போ நீ யாருக்குப் போறந்தே? அவ்சாரிக்குதானே பொறந்தே?" என்கிறது முருகு மாமா.
            "அத்து யாருக்குத் தெரியும்?" என்கிறது சித்துவீரன்.
            "போடாங் எங் கேடு கெட்ட நாயே! அப்போ நீயி எனக்குப் பொறக்கலங்றீயா? அப்பிடித்தானே! அப்புறம் நமக்குப் பொறக்காத நாயிக்கு இந்த வூட்டுல ன்னாடா எடம்? நீயி யாருக்குப் பொறந்தீயோ அஞ்ஞனப் போயி சொத்துல பாகம் வாங்கிக்கடா கெட்டசாதிக்குப் பொறந்த பொறம்போக்குப் பயலே! வூட்ட வுட்டு வெளியில போடா நாயே!" என்கிறது முருகு மாமாவும் பதிலுக்கு.
            "எஞ் சொத்தே பிரிச்சுக் கொடு! நாம்ம ஏங் இஞ்ஞ இருக்கேம்? இது ன்னா நீ ஒழைச்சு சம்பாதிச்ச சொத்தா? எம்மட பாட்டஞ் சொத்து. அதுவும் எவன எவனோயே ஏமாத்திப் பிடுங்குன சொத்து! எடுத்து வையுடா பன்னாடை மவனே எஞ் சொத்த! அடுத்த நிமிஷமே வூட்ட வுட்டு வெளியில போறேம்!" என்கிறது சித்துவீரன்.
            "சொத்துல பங்கு மூணு பேருக்கு இருக்குது. எதுவா இருந்தாலும் நாஞ் செத்ததுக்கு அப்புறம்தாம். இப்ப ஒரு பிடி மண்ணும் கெடயாது. ஒண்ணும் கெடயாது. வெட்கங் கெட்ட தேவிடியா பயளே செத்தப் பெறவுக்கு வாடா!" என்கிறது முருகு மாமா.
            "சீக்கிரம் செத்துத் தொலைடா நாறப் பயலே! இப்பவே எடுத்துகிட்டுக் கெளம்புறேம்!" என்கிறது சித்துவீரன்.
            "போடா பொட்டப் பயலே! பொட்டச்சி சொல்றத கேட்டுகிட்டு பெத்த தாயையும், தகப்பனையுமா அவமானம் பண்றே? ஒனக்கு இந்த வூட்டுல எடம் இல்லேடா!" என்று நீலு அத்தை சாமான்களையெல்லாம் எடுத்து நடுரோட்டில் வீசுகிறது.
            "பாத்தீங்களா! எப்பிடி பேசுறாங்க? ஒங்ககிட்டயே இப்பிடிப் பேசுனா, எங்கிட்ட எப்பிடியெல்லாம் பேசிருப்பாங்கன்னு பாருங்க! இந்த வூட்ட உட்டா ஒலகத்துல வேற வீடா இல்லை? நமக்கு வீடே வாணாங்க. ரோட்டோரத்துல எங்ஙகனாச்சிம் ஒதுங்கியாவது குடும்பம் நடத்தலாம். இந்த நாடுமாறி சனங்களோட ஒரு நிமிஷங் கூட இருக்கக் கூடாது!" என்று கட்டிய துணிமணியோடு வெளியே போகிறது சுந்தரி.
            "போடி! பெரிய படி தாண்டா பத்தினிதாம்!" என்கிறது நீலு அத்தை.
            இதுவரை நடுவீட்டுக்குள் நடந்த சண்டை இடம்பெயர்ந்து திண்ணை, வாசலுக்கு வருகிறது.
            "யேய் அத்தே! சொன்னாலும் சொல்லாட்டியும் நாம்ம படி தாண்டா பத்தினிதாம். ஒன்னய மாரியா படி தாண்டுன அவ்சாரின்னு நெனச்சிகிட்டு இருக்கீயா?" என்கிறது.
            "யாருடி அவ்சாரி? பல்ல ஒடைச்சிடுவேம். எடு வெளக்கமாத்த! செருப்பு பிய்ஞ்சிப்புடும் பாத்துக்கோ!" என்கிறது நீலு அத்தை.
            "இன்னும் வேற ஒரு பவுசுகட்டைக்குப் பல்லு ஒடையணுமா? எல்லா ஒடைஞ்ச மாரிதாம் இருக்கு. இதுல செருப்பு பிய்யுமாம்ல! அது பிஞ்சுதாம்டி கெடக்கு கட்ட வெளக்கமாறே!" என்கிறது சுந்தரி வாசலுக்கு வெளியே நின்றபடி.
            "இந்தாருடா அந்தச் சிறுக்கிய மரியாதியா எஞ்ஞாவது அழச்சிட்டுப் போயிடு. இல்லேன்னா வெட்டியே கொன்னுபுடுவேம்!" என்கிறது சித்துவீரனைப் பார்த்து நரம்பு தெறித்து விழும் அளவுக்கு சத்தம் போடுகிறது முருகு மாமா.
            "ஏய் கெழட்டுப் பயலே! அந்த அளவுக்கு வந்துட்டாடா! ஒங்க ரண்டு பேரையும் வெட்டியே கொன்னுப்புடுவேம் பார்த்துக்கோ! போடா கேடு கெட்ட கெழடுட்டு மூதி!" என்கிறது சித்துவீரன்.
            சத்தம் அதிகமாகவே ரோட்டில் போனவர்கள் வேடிக்கைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு சிலர் நெருங்கி அசமடக்கப் பார்க்கிறார்கள். "அப்பனும், மவனுமா பேசிக்குறீங்க? அசிங்கமா இருக்கு! இந்தாரு முருகு ஒண்ணு உள்ளே போகச் சொல்லு. இல்ல இந்தாரு தம்பி நீ மொதல்ல வெளில கெளம்பு. எதா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம். இப்படி மறுக்கா மறுக்கா பேசிகிட்டு ஒங்கள நீங்கள அசிங்கப்படுத்திக்கிட்டு, நல்லாவா இருக்கு! அசிங்கம் புடுங்குது. இதுக்குதாம் வூட்ட மெயின் ரோட்டுல கட்டி வெச்சிருக்கீங்களாக்கும்!" என்கிறார் மத்திசம் பண்ண வந்த பெரியவர்களில் ஒருத்தர்.
            "மொதல்ல அவனெ நிறுத்தச் சொல்லுங்க!" என்கிறது முருகு மாமா.
            "அந்த கெழட்டு மூதிய நிறத்தச் சொல்லுங்க!" என்கிறது சித்துவீருன்.
            "ரண்டு பேருமே நிறுத்துக்குங்க! நீங்க ரண்டு பேரும் பேசுற பெச்சுக்கு ஊரு பஞ்சாயத்தக் கூட்டி அவ்ராதம் போட்டதாஞ் சரிபெட்டு வரும். நீங்க பேசுற பேச்சுக்கு ஊருல இருக்குற சின்னபுள்ளைங்க கேட்டா கேட்டுப்புட்டு கெட்டுப் போறதுக்கு வேற எதுவுமே வாணாம். வயசுல பெரியவம்தானேடா முருகு நீயி! ஏய் சித்து வயசுல சின்னவம்தாம்டா நீயி! போங்கப்பா போங்க அந்தாம்டா!" என்று விலக்கிக் கொண்டு போகிறார்கள் சமரசம் பண்ண வந்தவர்கள்.
            "நம்மள ன்னா வீடு இல்லாதவன்னு நெனச்சிட்டான்னா அந்தக் கெழட்டு நரிப் பயெ மவ்வேன்? பஸ் ஸ்டேண்டு பக்கத்துல அரண்மனை கணக்கா வூடு இருக்குடா கெழட்டுப் பயலே! இந்த பீத்த வூடுன்னு நெனச்சிட்டு இருக்கீயா? நீயி வா சுந்தரி!" என்று கையைப் பிடித்துக் கொண்டு கிளம்புகிறது சித்துவீரன். கிளம்புவதற்கு முன், "எம்ம பொருளுகளெயெல்லாம் ஒரு சின்ன கீறல் இல்லாம எம்மட வூட்டுக்கு வாரணும். அத்தோட எமக்குச் சேர வேண்டிய சொத்துக ரெண்டு நாளைக்குள்ள பிரிச்சி கைக்கு வந்தாகணும். இல்லேன்னா நடக்குறதே வேற? கோர்ட்டுலதாம் சந்திக்க வேண்டிருக்கம். ஜாக்கிரதே!" என்று சொல்லி விட்டுக் கெத்தாகக் கிளம்புகிறது சித்துவீரன்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...