20 Aug 2019

கடின உழைப்போ, விடா முயற்சியோ தேவைதானா?



            கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிறார்கள்! சாதிக்க வேண்டுமானால் இவை இரண்டும் வேண்டியது அவசியமாக இருக்கலாம். சராசரியாக வாழ்வதற்கு கடின உழைப்பும், விடா முயற்சியும் வேண்டியதாக இருக்கும் என்பது எந்த அளவுக்கு ஏற்புடையதாக இருக்கும்? நிலைமை அப்படித்தானே இருக்கிறது.
            ஒரு சராசரியான வேலையைத் தேடுவதற்கு கடின உழைப்பும், விடா முயற்சியும் தே‍வையென்றால், கடினமாக உழைக்கவும், விடா முயற்சியும் செய்யாதவர்களுக்கு சராசரியான வேலை கிடைக்காது என்பதுதானே நிதர்சனம்.
            மனிதர் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?
            மனிதர் ஏன் விடா முயற்சி செய்ய வேண்டும்?
            ஒரு மனிதர் எந்த அளவுக்கு உழைக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு உழைத்தால் போதாதா?
            ஒரு மனிதர் எந்த அளவுக்கு முயற்சி செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்தால் போதாதா?
            செல்வம் நிறைய சேர்த்தவர்களும், சமூகத்தால் சாதித்தவர்களாக அடையாளம் காட்டப்படுபவர்களும் கடின உழைப்பையும், விடா முயற்சியையும் தங்களது பின்னணிக்குக் காரணமாகச் சொல்லலாம். அவர்களின் கடின உழைப்பும், விடா முயற்சியும் மென்மேலும் செல்வம் சேர்ப்பதற்கும், சாதிப்பதற்கும் துணையாக இருந்திருக்கலாம். அதில் அவர்களின் செல்வம் பெருகிறது, சாதனை தொடர்கிறது என்பதால் அதில் ஒரு நியாயம் இருக்கலாம்.
            மூன்று வேளை சாப்பாட்டுக்கும், உடுத்த ரெண்டு துணி மணிகளுக்கும், இருக்கும் நூறு சதுர அடி இடத்துக்காகவும் ஒரு மனிதர் கடின உழைப்பையும், விடா முயற்சியும் செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்றால் அங்கு அவரது உழைப்போ, முயற்சியோ மதிக்கப்படவில்லை என்பதுதானே அதன் பொருளாக இருக்க முடியும். அத்துடன் அவரது கடின உழைப்பும், முயற்சியும் சுரண்டப்படுகிறது என்பதும் அல்லவா அதன் பொருளாக இருக்க முடியும்.
            ஒரு சமூகம் சுரண்டப்படுவதற்கும், மதிக்கப்படாமல் போவதற்கும் கடின உழைப்பையும், விடா முயற்சியையும் செய்வதை விட செய்யாமல் இருப்பதே நல்லது. கடின உழைப்பும், விடா முயற்சியும் மனித சமூகத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே செய்யப்பட வேண்டியது. மாறாக தனிமனித மேம்பாட்டுக்காகவோ, சுயநலத்துக்காகவோ செய்யப்பட வேண்டியது அல்ல. நம்முடைய கடின உழைப்போ, விடா முயற்சியோ நமக்குத் தேவையான பெற்றுத் தருபவையாக இருப்பதோடு, அது அடுத்தவர்களின் தேவைகளை உறிஞ்சி இழுத்து விடும் சுயநலம் தன்மை கொண்டவைகளாக ஒரு போதும் இருந்து விடக் கூடாது.
            ஆக ஒரு மனிதரின் தேவைக்கான அளவான உழைப்பும், முயற்சியுமே எப்போதும், எக்காலத்தும் போதுமானது. நமது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் எழுதப்படும் சாதனைகள் நம்மை உயர்த்தி, ஒரு சமூகத்தைத் தாழ்த்துவதாக அமையாமல், மனித சமூகத்தை உயர்த்தி அத்துடன் நம்மையும் உயர்த்துவதாக அமைய வேண்டும்.
            பொதுவாக கடின உழைப்போ, விடா முயற்சியோ தேவையற்றதாகவே இருக்கலாம். அளவான உழைப்பும், அதே போல அளவான முயற்சியும் போதுமானதாக இருக்கலாம்.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...