19 Aug 2019

மனிதர்களை உருவாக்குவோம்... ரோபோட்டுகளை அல்ல!



            என்னவோ உலகத்தரமான கல்வி அப்பிடின்னு சொல்றாங்களே? அப்பிடின்னா என்னா? இங்க படிச்சிட்டு வெளிநாட்டுல போயி வெலைப் பார்க்குறானுங்களே! அதுக்குப் படிக்கிற அதானே உலகத்தரமான கல்வி?
            உள்நாட்டுலயே வேலைப் பார்க்குறதுக்கு படிக்கிறானுங்களே! அவனுங்க படிக்கிறதெல்லாம் உலகத் தரமான கல்வி ஆகாதா? அப்படி ஆகாதுன்னா... அப்படி ஆகாம இருக்குறதுதாம் நல்லது.
            இங்க படிச்சி இங்க வேலைப் பார்க்கறதுக்கு என்ன கல்வி தேவையோ அந்தக் கல்வியை நாம்ம கொடுத்தா போதும்.
            ஆனா நாம்ம இன்னும் உலகத் தரமான கல்வியைத்தான் கொடுக்குறோம். அதோட விளைவு பாருங்க! இங்க மேல்  படிப்பையெல்லாம் படிச்சி முடிச்சிட்டு எல்லா பயலும் வெளிநாட்டுல போயி வேலை பாத்துட்டுக் கிடக்குறானுங்க. அதாவது படிக்கிறது இங்க! வேலைப் பார்க்கிறது அங்க! அப்போ வெளிநாட்டுல போயி படிக்கிறப் பயலுங்க? அவனுங்க அங்க படிச்சிட்டு இங்க வந்துதானே வேலை பாக்குறானுங்க!
            இங்க படிச்சிட்டு இங்க பார்க்குறதுக்கு என்ன வேலை இருக்குன்னு ஒருத்தன் கேட்குறான்னா அவனுக்கு நாம்ம எப்படிப்பட்ட கல்வியைக் கொடுத்திருக்கோம்னு கேள்வியா இருக்கு! அவன் இத்தன வருஷமா படிச்ச கல்வியை வெச்சுகிட்டு இங்க இருக்கற எந்த வேலையையும் அவனால புரிஞ்சிக்க முடியல, புதுசா எப்பிடி வேலை வாய்ப்பை உருவாக்கிக்கிறதுன்னு தெரியலைன்னுதானே அதுக்கு அர்த்தம்.
            அதே கல்வியை வெச்சிகிட்டு அவனுக்கு வெளிநாட்டுல வேலை கெடைக்குதுன்னா அடிமைத்தனமாக வேலை பார்க்குறதுக்கான்னா கல்வியைத்தான நாம்ம கொடுத்துருக்கோம். யாருங்க வேளியூர்ல, வெளிநாட்டுல போயி வேலைப் பார்ப்பான்? உள்ளுரூல வேலை இல்லாதவன், உள்ளூருல சுதந்திரமா வேலை வாய்ப்பை உருவாக்க முடியாதவன்தானே வெளியில போவான்.
            உடனே கற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புன்னு சொல்லி இதெ அமுக்கப் பாக்காதீங்க? கற்றவனுக்கு ஏம் உள்ளூர்ல, உள்நாட்டுல சிறப்பு இல்லேங்றதுக்குப் பதிலச் சொல்லுங்க!
            நம்ம கல்விமுறையோட அணுகுமுறைகள், அது கொண்டுட்டுப் போற இலக்குகள் இதெல்லாம் மாறணும். நாம்ம இன்னும் நுழைவுத்தேர்வுகளுக்குத் தயார் பண்ற கல்வியைத்தான் கொடுத்துகிட்டு இருக்கிறோம். வாழ்க்கையை வாழறதுக்கான கல்வியைக் கொடுக்கல. வெளிநாட்டுலேந்து இங்க ஒருத்தன் வேலைக்கு வந்தான்னா அவனுக்கு இந்த நாட்டோட சூழ்நிலை, நெலைமை தெரியுமான்னு தெரிஞ்சிக்க நுழைவுத் தேர்வு வைக்கலாம். இந்த நாட்டுலயே பொறந்து இந்த நாட்டுலயே இருக்குறவனுக்கு இங்க வேலை பாக்குறதுக்கு, படிக்கிறதுக்கு எதுக்கு நுழைவுத் தேர்வு? ஆனா நாம்ம என்ன பண்றோம்? வெளிநாட்டுல வர்றவனுக்கு எந்த நுழைவுத்தேர்வும் இல்லாம வேலையைப் போட்டுக் கொடுக்கிறோம். இங்கயே படிச்சி எல்லாம் தெரிஞ்சவனுக்கு நுழைவுத்தேர்வு, தகுதித்தேர்வுன்னு வெச்சி அவனை எதுக்கும் லாயக்கில்லன்னு முத்திரைக் குத்தி அகதியாக்கிடுறோம். பிறவு அவன் சமூக விரோதியா ஆயிடுறான், தீவிரவாதியா ஆயிடுறான்னு குறை சொல்றோம்.
            இந்த நாட்டுல பொறந்த எல்லாருக்கும் ஏத்த மாதிரி வேலைவாய்ப்பை உண்டு பண்ணித் தர்றது அரசாங்கத்தோட, நம்ம கல்வி முறையோட கடமை. ஒவ்வொரு மனுஷனுக்கும் அவனுக்கு உரிய திறமைகள் இருக்கு. அதைக் கண்டுபிடிச்சி அவனவனுக்கு அதுக்குத் தகுந்த மாதிரியான வேலைகளை அரசாங்கமும் கல்வியும் தேடிக் கொடுக்கணும். அதை விட்டுப்புட்டு அவனெ வேலை தேடித் திரியுற மனுஷனா வெச்சிருந்தா எப்படி?
            வேலைவாய்ப்புகளுக்காத்தான் மனுஷன் பொறந்திருக்குற மாதிரி அவனெ ஒரு ரோபோட் மாதிரி புரோகிராம் பண்றதுக்கு கல்வி முறைகள் எதுக்கு? அதுக்குப் பேசாம ரோபோட்டுகளையே உண்டு பண்ணிக்க வேண்டியதுதானே! அதுக்கு ஏம் மனுஷனுங்க? நாம்ம நம்ம கல்வி முறையால மனுஷனுங்கள உருவாக்கப் போறோமா, ரோபோட்டை உருவாக்கப் போறோமாங்றது ஒரு முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கு நம்ம கல்விமுறை சரியானப் பதிலைச் சொன்னாத்தான் அது சரியான கல்வி முறை. அதுக்கு சரியான விடை சொல்லி சரியான திசையை நோக்கி மானுட சமூகத்தை அழைச்சிட்டுப் போறதுதான் நம்ம கல்வி முறையோட கடமை. அப்படிப்பட்ட கல்விமுறையைப் பெறுவதுதான் ஒவ்வொரு மனுஷனோட பிறப்புரிமை. அதுக்கு மாறான கல்விமுறையைக் கொடுக்குறது ஒரு வித சமூகச் சுரண்டலுக்குத்தான் வழிவகுக்கும். இதைப் புரிஞ்சுக்காம பண்றதையெல்லாம் பண்ணிட்டு நாட்டுல நேர்மை இல்லை, நியாயம் இல்லைன்னு புலம்புறதுல அர்த்தம் இல்லதானே!
            இதைப் பத்தி நாம்ம தொடர்ந்து பேசியாகணும். நாம்ம சேர்ந்தே பேசுவோமே! ஏன்னா கல்விங்றது ஒருத்தர் மட்டும் பேசுறது இல்லியே! எல்லாரும் பேசுறதுதானே! வாங்க பேசுங்க! ஒங்க கருத்தையும் சொல்லுங்க! இப்படி வெளிவர்ற கருத்துகள்தானே ஒரு மாற்றத்தை உண்டு பண்ணுது! மாற்றத்தை உண்டு பண்ணுவோம் வாங்க! ஆமாம் சரியான மாற்றம் எதுவோ அதை உண்டு பண்ணுவோம் வாங்க!
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...