25 Aug 2019

கடைசிச் சிரிப்பு



செய்யு - 187
            பொண்ணு தப்புப் பண்ணதாக கன்னத்தில் மாறி மாறி அடித்த சரசு ஆத்தாதாம் இப்போ பொண்டோ அடிவயிற்றிலிருந்து கிளம்பிய ரத்தத்தைப் பார்த்ததும் மாரிலும் தலையிலும் அடித்துக் கொண்டு ஓலமிடுகிறது. 
            ஆத்திரங்கள் கடைசியாக ரத்தத்தில் வந்து முடிகின்றன. ரத்தத்திற்கு மேல் ஆத்திரத்துக்கு வேறு வழி என்ன இருக்கிறது? ஆத்திரம் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். ரத்தம் ஒரு பரிதாப உணர்வை உண்டு பண்ணி விடும். அது நிலைமையைத் தலைகீழாக்கி விடும்.
            சரசு ஆத்தா அப்படிச் செய்யுமென்று யோசிப்பதற்குள் அது            அறையின் கதவைத் திறந்து கொண்டு கைக்குழந்தையைத் தூக்கியபடி வெளியே ஓடுகிறது. லாலு மாமாவுக்கு மனசில் ஆரம்பித்து பயம் உடம்பு முழுக்க நீளுகிறது. எங்கே தான் உதைத்து அதனால்தான் இப்படி ஆகி விட்டது என்ற விசயம் வெளிப்பட்டு விடுமோ என்று அதோட மனசு குலை நடுங்குகிறது.
            வெளியே ஓடிய சரசு ஆத்தா டாக்கடர்களையும், நர்ஸ்களையும் அழைத்தபடி வருகிறது. "போச்சுடா மோசம்!" என்று தலையில் கையை வைத்து அப்படியே தரையில் குந்துகிறது லாலு மாமா. நர்ஸ்கள் வேக வேகமாக காரியத்தில் இறங்குகிறார்கள். "இப்படி ஆகறதுக்கு வாய்ப்பு இல்லையே!" என்றபடி டாக்கடர்கள் அவசர அவசரமாக மறுபடியும் ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு போகிறார்கள். மறுபடியும் அங்கே வைத்த என்னென்னவோ செய்கிறார்கள். சுந்தரிக்கு இரத்தப் போக்கோடு தீவிரமான காய்ச்சலாகிப் போகிறது. லாலு மாமாவுக்கும் காய்ச்சலடிக்காத கொறைதான். ஆனால் பாருங்க! சரசு ஆத்தா நடந்தது குறித்து எதையும் வாயைத் திறக்கவில்லை.
            இந்த நிலைமை சரியாவதற்கு ரெண்டு நாட்கள் ஆகுது. பெறவுதான் சுந்தரியை தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வழக்கமான அறைக்கு மாற்றுகிறார்கள். பாவம் குழந்தைதான் சரியாகத் தாய்ப்பால் கிடைக்காமல் துவண்டு போய் கிடக்கிறது. பார்ப்பதற்குப் பாவமாக இருக்கிறது.
            இந்த ரெண்டு நாளுல்ல பலவிதமா யோசனைப் பண்ணி ஒரு விதமா கொழம்பியும், ஒரு விதமா தெளிஞ்சும் ரெண்டுக் கெட்டான் நிலைமையில இருக்கு சரசு ஆத்தா.
            அதுக்குள்ள நடந்ததையெல்லாம் வேலனிடம் ஒரு வாறாகச் சொல்லி யோசனை கேட்டு வைக்கிறார்கள் சரசு ஆத்தாவும், லாலு மாமாவும்.
            குழந்தை யாருக்குப் பிறந்தது என்பதையும் அவர்களால் ஒருவாறாக அனுமானிக்க முடிகிறது. என்றாலும் அது சுந்தரி வாயால் வந்தாத்தானே உறுதி பண்ணிக்க முடியும். அத்தோட வாயால் உண்மை வெளிப்பட வேண்டுமென்று கர்ண கொடூரமாக நடந்தாயிற்று. இதற்கு மேல் என்றால் அதைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டால்தான் உண்டு என்பது லாலு மாமாவுக்கு மட்டுமில்லாமல் சரசு ஆத்தாவுக்கும், வேலனுக்கும் புரிகிறது.
            சுந்தரியை வழமையான அறைக்கு மாற்றிய பின் எங்கெங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சரசு ஆத்தாவும் லாலு மாமாவும். வேலனும் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
            சுந்தரியே மெதுவாக ஆரம்பிக்கிறது. மனம் மருண்டது போலிருக்கிறது அதுக்கு. இந்தக் கடுமையான காய்ச்சல் அதை என்னவோ பண்ணி பயத்தை உண்டு பண்ணியது போல அத்தோட முகம் அப்படியே வெருண்டு கிடக்கிறது.
            "இத்து கல்யாணத்துக்கு முன்னாடியே உண்டான புள்ளே. ஆதிகேசவுதாம் கலைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாம். அதாங் கலைக்க விரும்பல. எப்படியாவது சமாளிச்சுப்போம்னு அவ்வேம் சொன்னதை நம்பி இருந்துட்டேம்! என்னை மன்னிச்சிடுங்க!" என்று அழுகிறது சுந்தரி. கண்கள் ரெண்டும் அதுக்கு பொல பொலவென கண்ணீராய் உதிர்ந்து கொட்டுகிறது.
            "அடிப் பாவி மவளே! இப்பிடி வயித்துல நெருப்ப அள்ளிக் கொட்டுறீயேடி! இத்தப் பத்தி ஒரு வார்த்த சொன்னீயா? சொன்னீன்னா கல்யாணத்த நிறுத்திப் போட்டுருப்பேம்டி. இப்டி வந்து சொல்றீயே! நீயி ந்நல்லா இருப்பீயா? குடும்பத்த கெடுக்க வந்த பிடாரிடி நீயி!" என்கிறது.
            "நாந்தாம் கல்யாணமே வாணாம்னு ஓடிப் போனேனே. எஞ்ஞ என்னய வுட்டீங்க? அஞ்ஞயும் வந்து பிடிச்சிட்டு வந்தீங்க. ஆதிகேசவ்வ போட்டு அடியோ அடின்னு அடிச்சிப் போட்டீங்க! நாம்ம ன்னத்தாம் பண்றது? அதாங் சமாளிச்சிப்போம்னு இருந்துட்டேம். அவ்வேம் எட்டு மாசத்துக்கு மேலத்தாம் கொழந்தை பொறக்கும்னு சொன்னத நம்பி இருந்துட்டேம். எஞ்ஞயோ மாசக்கணக்கு விட்டுட்டோம் போலருக்கும்மா!" என்கிறது சுந்தரி.
            "ஏய் பாதகத்தீ! அவனுக்கு எப்பிடிடி கல்யாணத்துக்கு அப்புறமா இதெல்லாம் தெரியும்?" என்கிறது சரசு ஆத்தா.
            "அவ்வேம்தான் வடவாதிக்கு வந்தானே! நம்மள அவ்வேம் எஞ்ஞ விட்டாம். அவ்வேம் வுட மாட்டேங்றாம்மா! குடும்பத்துல கூட்டா இருக்கக் கூடாதுன்னு தனியா பிரிச்சிட்டு வாரச் சொன்னாம். தனியா பிரிச்சிட்டு வந்தா... நமக்குக் கட்டி வெச்சீங்களே மவராசன் அவ்வேம் வெளிநாடு போனதும் இந்தப் பயெ அஞ்ஞ ராத்தரி ஆனாக்கா மாசத்துல நாலு தடவே வந்திடுவாம். அவனெ அஞ்ஞ யாருக்கும் தெரியாம சமாளிச்சு அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிப் பூடும். இனுமே நம்மால தாலிய ஒருத்தனுக்குக் கட்டிகிட்டு, இன்னொருத்தனோட வாழ முடியாதும்மா! நம்மள அவ்வேம் கூடவே அனுப்பிச்சு வுட்டுப்புடு. நாம்ம கொழந்தையோட போயிடுறேம். நம்மாள ஒங்ககிட்ட அடிவாங்கிச் சாவ முடியாதும்மா! முடியல. வலி தாங்கல. செத்துப் போயிடுவேன்னு பயமாக இருக்கும்மா. நம்மள வுட்டுப்புடுங்க. யாருக்கும் தெரியாம எஞ்ஞயாவது போயி எப்படியாவது இருந்துக்கிறேம். நம்மள மறந்துப்பூடுங்க. நாம்ம ஒரு அனாதி. நாம்ம ஒரு கேடு கெட்டவ. நாம்ம இருந்த ஒங்களுக்குத்தாம் அசிங்கம். நம்மள தொலைச்சி தலைமுழுவிப்புடுங்க!" என்கிறது சுந்தரி.
            சுந்தரி சொல்ல சொல்ல முகமெல்லாம் இருண்டு போகிறது எல்லாருக்கும். இதை எப்படிச் சமாளிப்பது என்று குழப்பமாக இருக்கிறது. விசயம் வெளியே தெரிந்தால் எல்லாருக்கும் அல்லவா அசிங்கமாகப் போய் விடும் என்று யோசிக்கிறது லாலு மாமா.
            "எலே வேலா இத எப்பிடிடா சமாளிக்கிறது? ஒண்ணுமே வெளங்க மாட்டேங்குதுடா!" என்கிறது லாலு மாமா.
            "பொண்ணு நம்ம குடும்பத்தோட பொண்ணு. நடந்தது நடந்துப் போச்சி. இன்னொருத்தங் கூடயெல்லாம் அனுப்பி அசிங்கப்பட்டு நிக்க முடியாது. கருவுல வளர்றது முன்னயே தெரிஞ்சா ன்னா பண்ணுவோம்ப்பா?" என்கிறான் வேலன்.
            "கருவைக் கலைக்கிறதுதாம்பா! நம்ம பொண்ண நாம்ம வுட்டுப்புட முடியுமா?" என்கிறது லாலு மாமா அழுது கொண்டே. சுந்தரியை அப்படி எட்டி உதைத்த லாலு மாமாவா இப்பிடிப் பேசுகிறது என்று சுந்தரிக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மாமாவுக்காக எதையும் செய்யலாம் என்று அதோட மனசு ஒரு கணம் அப்படியே யுடர்ன் அடிக்கிறது.
            "இப்பயும் அதத்தாம் செய்யணும்!" என்கிறான் வேலன்.
            "எலே கொழந்த முழுசா பொறந்திருக்குடா! பொறந்தக் கொழந்தையை வெளில வந்து வுழுந்ததுக்கு அப்பறம் அப்பிடிச் செய்யுறது பாவம்டா! வயித்துக்குள்ள கலைக்கிறது வேற. இது வேறடா கோட்டிப் பயலே!" என்கிறது லாலு மாமா.
            "வயித்துக்குள்ள வெச்சி கலைச்சாலும் அது கொலைதாம். பொறந்ததுக்கு அப்புறம் அதை அழிச்சாலும் கொலைதாம். ஒரு கருவை அழிச்சிகிட்டு மறுபடியும் பெத்துக்காமலா வுட்டுடப் போறேம்? அது போலத்தான் இத்த அழிச்சிட்டு அப்புடியேவா வுட்டுடப் போறேம்? இன்னொன்னு பெத்துக்க வேண்டியதுத்தாம். ஏம் சொல்றேன்னா இது பெரச்சன! சந்தேகம் எப்பிடியும் வரும். கொழந்த மாசக் கணக்குல தப்பிப் பொறந்திருக்கே, அதுவும் ந்நல்லா பொறந்திருக்கேன்னு சந்தேகம் வந்து டி.என்.ஏ. டெஸ்ட்டு அது இதுன்னு பண்ணா போதும் அப்பங்காரம் அது இல்லேங்றது வெளில வந்துபுடும். பள்ட் டெஸ்ட்லயே ஓரஞ்சாரமா விசயம் வெளில வந்துடும். பின்னாடி இப்பிடில்லாம் நடக்காதுன்னு நாம்ம நெனைக்க முடியாது. ச்சும்மா கோழிக் கனால்லாம் கண்டுக்கிட்டு கெடக்க முடியாது. இப்பயே அழிச்சிட்டா கொறை மாசத்துல பொறந்து செத்துப் போயிடுச்சின்கு கதெயே கட்டி வுட்டுப்புடலாம். அத்தே நம்புவாங்க! இத்த வுட்டுப்புட்டு... இத்து வளர்ந்து உண்மை நாம்ம சொன்ன மாதிரிக்கு வெளிப்பட்டுச்சுன்னா அத்த நம்பாம இருக்க மாட்டாங்க. பின்னாடி பெரிய பூகம்பமே பெரளயமே ஆயிப் போயிடும். நம்ம மூணு பேருக்குத் தெரியிறப்பவே நெலமெ இப்பிடி இருக்குன்னா... அவ்வேம் சித்துவீரனுக்குத் தெரிஞ்சா வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்குப் போயி நிப்பாம். கணக்குப் போட்டா அதால சித்துவீரனுக்கும் எதுவும் இல்லாம போயிடுது. அத்தைப் பொண்ணோட உசுரும் இல்லாம போயிடுது. குடும்ப மான மரியாதியும் காத்துல பறந்து போயிடுது. இப்பிடி மூணு விதத்துல எழப்போடும் எழப்புமா ஆகிப் போயி அசிங்கமாயிடுது. இத்தே அழிச்சுப்புட்டா கதெ இத்தோட முடிஞ்சிப் போய்டும். அபார்ஷன் ஆயிடுச்சின்னு ஈஸியா எல்லாத்தியும் க்ளோஸ் பண்ணிப்புடலாம்!"
            "இப்போ ன்னாடா பண்ணச் சொல்றே?" என்கிறது சரசு ஆத்தா.
            "கதெயெ முடி. யோஜனப் பண்ணிட்டு நிக்காதே!" என்கிறான் வேலன்.
            "ஏய் சொல்றத தெளிவா சொல்லுடா!"
            "போங்கடிச் சவட்டு மூதிகளா! கையால அப்பிடியே மார பிடிச்சு அழுத்து. மூச்சுத் தெணறி போயிச் சேர்ந்துடும்."
            "ல்லே இது பாவம்டா! ஏழேழு ஜென்மத்துக்கும் சுத்தும்! நம்மால முடியாதுடா!" என்கிறது சரசு ஆத்தா.
            "இத்து மட்டும் பாலாமணிக்குத் தெரிஞ்சுதுன்னா... யத்தே! ஒன்னயும் ஒம் பொண்ணயும் கொன்னுபோட்டுட்டு ஜெயிலுக்குப் போயிடுவாம். அவ்வேம் ஒரு வேள வுட்டாலும் ஒம் மருமவ்வேம் சித்து வீரனுக்குத் தெரிஞ்சா அவ்வேம் ஒம் குடும்பத்தயே வெட்டிச் சாய்ச்சிப்புட்டு அவனும் ஜெயிலுக்குத்தாம் போவாம். கூட்டிக் கழிச்சி யோஜனப் பண்ணிப் பார்த்தா இந்த ஒண்ணு போனா மசுருப் போச்சுங்றதுதாம் கதெ. இந்த ஒண்ணு போகலன்னா எத்தினி எத்தினி உசுருப் போவுங்றதுக்கு கணக்கு இல்ல. உசுரு போறதோட மட்டுமில்லே குடும்ப கெளரவமே போயிடும். ரண்டாவதா ஒரு பொண்ண பெத்து வெச்சிருக்கீயே பிந்து. அதுக்குக் கல்யாணம் நடக்கணுமா வேணாமா? யில்லே ஒம் மவ்வேம் பாலாமணிக்குத்தாம் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணுமா வாண்டாமா? இந்தச் சங்கதி ஊரு ஒலகத்துக்குத் தெரிஞ்சா ஒங் குடும்பத்தோட எவனும் ஒட்டும் வெச்சுக்க மாட்டாம், ஒறவும் வெச்சிக்க மாட்டாம். யோஜனப் பண்றதுக்கு இத்து நேரமில்ல. ரண்டு நாளா கொழந்தெ வேற சரியா பாலு குடிக்கல. தொவண்டுப் போயிக் கெடக்கு. அப்பிடியே அமுக்கிக் கதெய முடிச்சிட்டீன்னா எல்லாம் முடிஞ்சிடும். மூச்சுத் தெணறி கொழந்த போயிச் சேர்ந்துட்டுன்னு கதெய முடிச்சிட்டு நாமளும் போயிச் சேர்ந்துபுடலாம். ஒம் பொண்ணு பண்ண பாவத்துக்கு ஒம் பொண்ணும், ஒம் பொண்ண பெத்த பாவத்துக்கு நீயுந்தாம் இந்த வேலயப் பண்ணணும்." சொல்லி விட்டு வேலன் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே போகிறான். லாலு மாமாவும் எழுந்து வெளியே போகிறது. இப்போது அந்த அறையில் சரசு ஆத்தா, படுத்திருக்கும் சுந்தரியோட பக்கத்தில் கொழந்தைத் துவண்டு போய் கிடந்தபடியே தன் கடைசிச் சிரிப்பைச் சிரிக்கிறது.
*****

2 comments:

  1. அருமையான படைப்பு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாசிப்புக்கும் நேசிப்புக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். மகிழ்ச்சியும் நன்றிகளும் ஐயா!

      Delete

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...