25 Aug 2019

தங்க. ஜெயராமனின் 'காவிரிக் கரையில் அப்போது...' - ஒரு பார்வை



            சிலப்பதிகாரத்தில் காவிரியும் ஒரு பாத்திரம். கதை மாற்றத்திற்கான பாத்திரமும் அதுவே. கானல்வரி அதைத்தான் சொல்கிறது.
            சிலப்பதிகாரத்தில் ஒரு பாத்திரமாக இருந்த காவிரியை பிரதானப் பாத்திரமாக்கி தங்க. ஜெயராமன் நெய்துள்ள நூல்தான் 'காவிரிக் கரையில் அப்போது...'  21 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ள நூல். இதில் 17 கட்டுரைகள் பாந்தமாக காவிரிக் கரையைப் பேசுகின்றன. 4 கட்டுரைகள் தலைப்புக்குப் பொருந்தா விட்டாலும் காவிரிக் கரையின் கல்வியியல் முறைமையை, வாழ்வியல் முறைமையைப் பார்ப்பதற்கான கட்டுரைகள் என்று அமைதிப்படுத்தலாம்.
            காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை என்று ஆறுகள் பல பாய்ந்த போதிலும் தமிழகத்தின் நெற்களஞ்சியம் காவிரிதான். காவிரியைத் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றால், தங்க. ஜெயராமனின் இந்த நூலைக் காவிரிக் கரையின் சொற்களஞ்சியம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு காவிரியின் டெல்ட்டாவான தஞ்சைத் தரணியில் புழங்கிய அத்தனைச் சொற்களையும் அதன் வட்டாரவியல் தன்மையோடு ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.
            காவிரிச் சமூகம் என்று சொல்லத்தக்க காவிரியின் டெல்டாவில் நிகழ்ந்த,
            1. சூழலியல் மாற்றம் - அதன் விளைவாக நிகழ்ந்த
            2. பொருளாதார மாற்றம் - அதன் விளைவாக நிகழ்ந்த
            3. சமூக மாற்றம் என்று அனைத்தையும் பதிவு செய்கிறது இந்த நூல்.
            சூழலியல் மாற்றம் என்றால் மணல் கிடந்து மிதந்து சென்ற காவிரியாற்று நீர் மணலற்று ஆழப்பட்டு ஓடுவதும், அதன் காரணமாகவே தேக்கி வைத்தும் பாசனத்துக்குப் பாயாமல் போவதும்தான். பொருளாதார மாற்றம் என்று சொன்னால் விவசாயத் தொழிலாளர்கள் திருப்பூருக்கும், ஓசூருக்கும், மாநகர்களுக்கும் இடம் பெயர்ந்து போனதுதான். சமூக மாற்றம் என்று சொன்னால் முழுமையான விவசாயக் குடும்பங்களாக இருந்தவைகள் பகுதி நேர விவசாயக் குடும்பங்களாக மாறியதும், முழுமையான விவசாயத் தொழிலாளர்களாக இருந்தவர்கள் பகுதி நேர விவசாயத் தொழிலாளர்களாக மாறியதும்தான்.
            காவிரிக் கரையில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. காவிரியும் காவிரிக் கரையுமே மாற்றம் கண்டிருக்கிறது. ஆடிப் பெருக்கிற்கு காலந் தவறாமல் வந்த காவிரி கால தாமதாக வருவதில் தொடங்கி, வராமல் போவது வரை காவிரிக் கரை கண்ட மாற்றங்கள் எத்தனை எத்தனை. அத்தனையும் இந்நூலில் பதிவாகியிருக்கிறது.
            நிலவியலோடு சேர்ந்த எல்லாவற்றுக்கும் இங்கு விழா இருக்கிறது. ஆடிப் பெருக்கு, பொங்கல் விழா, கார்த்திகைத் திருநாள் எல்லாம் அப்படியான விழாக்கள்தான். இதில் தீபாவளி மட்டும் எப்படி நிலவியலுக்கு எதிராக இருக்கிறது என்பதைப் பதிவு செய்யும் இந்நூலின் கட்டுரை முக்கியமானது.
            இருபத்தோறாம் நூற்றாண்டில் நின்று கொண்டு அறுபது ஆண்டுகளுக்கு முன் காவிரி எப்படி இருந்தது என்பதைப் பார்க்கும் பரவசம் இந்த நூலில் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஒரு அறுபது ஆண்டுகளுக்குள் இந்த அளவுக்காக ஒரு ஆறு மாறிப் போகும் என்ற அவலத்தை என்ன சொல்ல?
            வாழ்க்கை முறையாக இருந்த விவசாயம் தொழில்முறை விவசாயமாக மாறி, பணப்பயிர் விவசாய முறையாக அவதாரம் எடுத்து, பின் அதுவும் நிலத்தைக் கூறு போடும் ப்ளாட்முறை வணிகமாக மாறிப் போன சோகம் காவிரிக் கரையின் தீராத சோகம்.
            அதே நேரத்தில் பண்ணை அடிமைகளை உருவாக்கி வைத்து, அந்த அடிமைத்தனம் பொதுவுடைமை இயக்கங்களால் மாற்றம் கண்ட வரலாறும் காவிரிக் கரைக்கு இருக்கிறது. அப்படி மாறிய காவிரிக் கரை மீத்தேனுக்கும், ஷேல் வாயுவுக்கு இரையாகப் போகும் அபாயத்திலும் இருக்கிறது.
            தங்க. ஜெயராமன் சமகாலப் பார்வையின் பின் நின்று கொண்டு காவிரிக் கரையைப் பார்க்கும் அந்தப் பார்வையில் ஒரு கவலை தோய்ந்த அக்கறை இருக்கிறது. முந்தைய காவிரிக் கரையின் வாழ்க்கைப் பதிவு இருக்கிறது. அதை மாற்றுவதற்கான ஒரு வரலாற்றுப் பதிவுக்கான வித்தாக இருக்கிறது.
            இந்த நூல் காவிரிக் கரையின் சித்திரம். காவிரிக் கரையின் ஆவணம். காவிரிக் கரைக் குறித்த ஒரு பதிவேடு.
            எதை மாற்றுவதற்கும் ஒரு வரலாறு குறித்தப் புரிதல் அவசியம் இல்லையா! அப்படியான காவிரிக் கரையின் புரிதலுக்கான ஒரு வரலாற்று அவசியத்தைத் தருகிறது தங்க. ஜெயராமனின் 'காவிரிக் கரையில் அப்போது...'
            நாளை தங்க. ஜெயராமன் ஐயாவோடு இருந்த தங்கமான அந்த நேரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...