13 Aug 2019

ரெண்டுங்கெட்டான் பொழைப்பு!



செய்யு - 175
            இரவும் பகலும் சேர்ந்தது போலதான் ஒரு நாளுங்ற மாதிரி, அமாவாசையும், பெளர்ணமியும் சேர்ந்ததுதான் நிலாங்ற மாதிரி, நல்லதும் கெட்டதும் சேர்ந்ததுதானே வாழ்க்கை. இந்த ரெண்டுக்கும் நடுவுல கெட்டுப் போயி நிக்குறதாலதாம் ரெண்டுங்கெட்டாங்ற வார்த்தைப் பிரயோகமே வந்திருக்குதோ என்னவோ!
            நல்லதா வாரதெல்லாம் வரும் போது கூடவே ஒரு கெட்டதையும் அழைச்சுட்டு வருதே என்பதை நினைக்கும் போது சரசு ஆத்தாவுக்கு ஆற்றாமையாக இருக்கிறது. அதனாலென்ன? சித்துவீரனைக் கட்டிக்கிறது பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ கட்டிக் கொள்ள சுந்தரியிடமிருந்து சம்மதம் வாங்கியாயிற்று என்ற நினைப்பு அதுக்கு ஆசுவாசமாக இருக்கிறது. எப்படியோ இந்தக் கல்யாணம் நடந்து விட்டால் குடும்ப பாரத்தில் பாதி இறங்கி விடும் என்று நினைக்கிறது அது. 
            சீக்கிரமே நிச்சயமும் முடிஞ்சி, கல்யாணத்தையும் முடிச்சி சுந்தரியை வடவாதி அனுப்பி விட்டுட்டா தேவலாம் போலிருக்கிறது சரசு ஆத்தாவுக்கு.
            நிச்சயதார்த்தத்தைப் பாதிக் கால்யாணங்ற அளவுக்கு நடத்துறவங்களும் இங்கே இருக்காங்க. சித்துவீரனுக்கும், சுந்தரிக்கும் நடந்த நிச்சயதார்த்தம் பேருக்கு ஒப்புக்குச் சப்பாணிங்ற அளவுக்குத்தாம் நடந்துச்சி. ஜமாய்க்கிற வேலையெல்லாம் கல்யாணத்துல பாத்துக்கலாம்னு இருந்துகிட்டாங்க. அந்தப் பக்கத்துல முருகு மாமாவுக்கும், நீலு அத்தைக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்ல. கூறுகெட்டப் பயெ சித்துவீரங்கிட்ட பேசி ஆகப் போறது ஒண்ணுமில்லங்ற கணக்கா அவங்க ஒதுங்குன மாதிரி இருந்துகிட்டாங்க. இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். இந்தப் பக்கத்துல சுந்தரிக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல. இது சரசு ஆத்தாவுக்கும் மட்டுமே தெரிஞ்ச விசயம்.
            நிச்சயம்னு பண்ணா ஆரம்பிச்சா அது பெரும் செலவுல இழுத்து விட்டுடும்ங்றது ராசாமணி தாத்தாவுக்கும் தெரியும். கையில காசு இல்லாத நேரத்துல அதெ வேற எப்பிடிச் சமாளிக்கிறதுங்ற யோசனையில நிச்சயம் இந்த மாதிரி நடக்குறதே நமக்கு நல்லதுன்னு அதுவும் நடக்குறதையெல்லாம் ஏத்துக்கிற ஞானியைப் போல இருந்துக்குது.
            கல்யாண செலவு வேற ஏகத்துக்கும் இருக்குறப்ப நிச்சய செலவு எதுக்கு தேவையில்லாமன்னு லாலு மாமாவும் நினைக்குது. அதனால் நிச்சயம் இப்பிடி சுமாரா நடக்குறதுல யாருக்கும் எந்த ஆட்சேபனையும் பெரிசா இல்ல. ஏதோ பேருக்கு நடந்தா சரிதாம்னு இருந்துகிட்டாங்க.
            நிச்சயத்துல முருகு மாமாவோட குடும்பம், லாலு மாமாவோட குடும்பம், ராசாமணி தாத்தாவோட குடும்பம் இவ்வளவுதாம் கலந்துகிடுச்சி. ரொம்ப எளிமையா பேசி முடிச்சிகிட்டாங்க. பொண்ணுக்கு முடிஞ்சத செய்யுங்க, பிற்பாடு பாலாமணி வேலைக்குப் போனதுக்கு அப்புறம் செய்ய வேண்டியதெ செஞ்சிக்கலாம்னு ஒரு முடிவும் பண்ணிகிட்டாங்க.
            கல்யாணத்த பாக்குக்கோட்டையில ஒரு மண்டபத்துல வெச்சு முடிச்சி விட்டுறது அப்பிடின்னும் பேசிக்கிறாங்க. அது முழுக்க பொண்ணு வூட்டோட செலவுதாம்னும் உறுதி பண்ணிக்கிறாங்க. இப்பிடி எல்லாத்தையும் முடிவு பண்ணி கல்யாணத்துக்குப் பத்திரிகையும் அடிச்சி ஊரு உலகத்துக்குல்லாம் விநியோகம் பண்ணி முடிச்சா கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னால வீட்டுல சுந்தரியைக் காணும். பாக்குக்கோட்டையில ராசாமணி தாத்தா வீடே அல்லோகலப்படுது. சரசு ஆத்தா லாலு மாமாவுக்கு ரகசியமாக தகவல் தெரிவிச்சி அதெ மட்டும் வீட்டுக்கு வரவழைக்குது. வந்ததும் வாரதுமா லாலு மாமா தாட் பூட்னு தாவிக் குதிக்குது. சரசு ஆத்தா நடந்ததையெல்லாம் பொறுமையா எடுத்துச் சொல்லுது.
            "இவ்ளோ நடந்திருக்கு. நீயி கொஞ்சம் கவனமாக இருந்திருக்கக் கூடாதா?" அப்டின்னு லாலு மாமா சரசு ஆத்தாவைத் திட்டுது.
            "இந்த வூட்டுல இருக்கற பொம்பளைங்கலாம் நெஞ்சழுத்தக்காரிங்க! நடந்தத எதாச்சியும் சொன்னாளுங்களா? வெசயம் அப்பயே தெரிஞ்சிருந்தா அப்பயே வெட்டி கண்டந் துண்டமா வெட்டிப் போட்டிருப்பேன்!" என்கிறது ராசாமணி தாத்தா.
            "போனவெ போயிட்டா! அப்டியே விட்டுத் தொலைஞ்சு தலைய முழுகுங்க!" என்கிறது லாலு மாமா.
            "இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கலேன்னா நாம்ம மருந்தக் குடிச்சிடுவேம்!" என்கிறான் கல்யாணத்துக்காக டாக்கடரு படிப்புக்காக லீவு போட்டு வந்த பாலாமணி.
            "ஓடிப் போனவே ந்நல்லா வாழ்வாளாம்! ஒண்ணுஞ் செய்யாதவன் மருந்து குடிச்சிட்டுச் சாவானாம்! ந்நல்லா இருக்குடா ஒங்க கதெ!" என்கிறது லாலு மாமா.
            "இப்போ என்னாண்ணா பண்றது?" என்கிறது சரசு ஆத்தா.
            "போலீஸ்லதாம் கம்ப்ளெய்ண்ட் கொடுக்கணும்! கம்ப்ளெய்ண்ட் கொடுத்தா நமக்கும் அசிங்கம். அஞ்ஞ அண்ணம் குடும்பத்துக்கும் அசிங்கமாப் போயிடும். கருமத்த அப்டியே கண்டுக்காம விட்டுட வேண்டியதுதாம்! சனியன் தொலைஞ்சதுன்னு தலையை முழுகித் தொலை! நிச்சயத்த பெரிசா பண்ணாம இருக்குறபடி எப்டியோ தெய்வந்தாம் காப்பாத்திருக்கு. ஆனா பத்திரிகை அடிச்சி ஊரு ஊரால்ல கொடுத்திருக்கு! இது ன்ன்னா மதிரியான சோதனையோ தெரியலியே! ஓடிப் போற முண்டம் பத்திரிகை அடிக்கிறது மின்னாடியாவது ஓடித் தொலைஞ்சான்னா?" என்கிறது லாலு மாமா.
            "ஏம் மாமா! ஒங்க ரெண்டாவது பொண்ணு நிச்சயத்து அன்னிக்கு தொலைஞ்சப்ப நீங்க இப்படித்தான் இருந்தீங்களா? தேடிக் கண்டுபிடிச்சி கொண்டாந்தீங்கதானே! ஒங்க பிள்ளைங்களுக்கு ஒரு ஞாயம், ஒங்க தங்காச்சிப் புள்ளைங்களுக்கு ஒரு ஞாயமா?" என்கிறான் பாலாமணி.
            "இவ்வேம் வேற ன்னாடா இந்த மாதிரிப் பேசுறான்? சரி அந்த ஓடுகாளி ஓடிச்சே! யாரோட ஓடிச்சி? யாரு அவ்வேன்? எந்த ஏரியா என்னான்னு எதாச்சியும் தகவலு தெரியுமா?" என்கிறது லாலு மாமா.
            எல்லாரும் லாலு மாமா இப்படிக் கேட்டதும் சரசு ஆத்தாவைப் பார்க்கிறார்கள். சரசு ஆத்தா உதட்டைப் பிதுக்குகிறது. "எனக்கென்ன தெரியும்? எங்கிட்டெ அதயெல்லாம் எஞ்ஞ சொன்னா?" என்கிறது சரசு ஆத்தா.
            "பொண்ணாடி வளத்திருக்கே பொண்ணு?" என்று வேகத்தில் ஓடிப் போயி ராசாமணி தாத்தா சரசு ஆத்தாவை எட்டி உதைக்கிறது. உதைப்பட்ட வேகத்தில் சரசு ஆத்தா அப்படியே வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே உட்காருகிறது.
            "ச்சே வுடுங்க! ன்னா பண்றீங்க? அது ன்னா பண்ணும்? அது நேரம்! அது வெளியில பத்திரிகை வைக்கப் போறப்ப, நீங்க வூட்டுல இருக்குறப்பதாம் போயிருக்கு. அது ன்னா பண்ணும்?" என்கிறது லாலு மாமா.
            "இந்தாரு வாத்தியாரே! அப்போ நாமதான் வெரட்டி விட்டேன்னு சொல்ல வர்றீயா? இந்த எடுக்கு முடக்லாம் நம்மட்ட வாணாம்! ன்னா அண்ணணும் தங்காச்சியும் நாடகம் போறடுறீங்களா? நடந்தத எங்கிட்ட சொன்னா உஷாரா இருந்திருப்பேம்ல்ல! அவ்வே டாவடிக்கிறதுலாம் நமக்கென்னத் தெரியும்?" என்கிறது ராசாமணி தாத்தா.
            "நீங்கதாம் ஜோசியராச்சே! பாக்க வேண்டித்தானே?" என்கிறது லாலு மாமா.
            "அதுலாம் ஊருக்கு வுடுற உதாரு! அதெப் பத்திப் பேசாதே! நமக்குக் கெட்ட கோவம் வந்திடும்!" என்கிறது ராசாமாணி தாத்தா.
            "பண்றவ பண்ணிட்டு ஓடிட்டா! இருக்குறவெ இஞ்ஞ கெடந்து அவஸ்தைப்படுறா!" என்கிறது அந்த உதைப்பட்ட அவஸ்தையிலும் சரசு ஆத்தா.
            "வெவகாரம் இப்டி இருக்குங்றப்ப அத்தே எல்லாத்திகிட்டயும் சொல்லி உஷாரா இருக்க வாணாமா? இப்டி கோட்டை வுட்டுப்புட்டு நிக்குறீயே கோட்டிப்புள்ளே கணக்கா?" என்று தலையில் அடித்துக் கொள்கிறது லாலு மாமா.
            "தலயில மண்ணெண்ணெய ஊத்திகிட்டுதாம் கேட்டேம்ண்ணா! சத்தியம்லா பண்ணா கட்டிக்கிறேம்னு! இப்டி பண்ணுவான்னு நெனைக்கலீயே!" என்கிறது சரசு ஆத்தா அழுகையின் ஊடே.
            "நாங்கலாம் நாண்டுட்டுச் சாவணுங்றதுக்காகவே பொண்ண பெத்து வெச்சிருக்கீயா? மொதல்ல நீயி சாவு. பெறவு நாங்க சாவறோம்!" என்று ஓடிப் போய் பாலாமணி சரசு ஆத்தாவின் தலைமயிரைப் பிடித்து தலையைச் சுவரில் மோதுகிறான்.
            "ச்சீ! நிறுத்துடா! ன்னாடா பழக்கம் இது? பெத்தத் தாயைப் போயி அடிக்கப் போறே? இந்தான்ட வாடா! இனி ஆவுறது ன்னான்னு பாக்கணுமே தவுரே நமக்குள்ளயே அடிச்சிகிட்டு நிக்கக் கூடாது. சுந்தரியோட சிநேகிதிங்ககிட்ட விசாரிச்சுப் பாத்துதாம் ஏதாச்சியும் பண்ணணும். அவளோட சிநேகிதிங்க வூடாவது தெரியுமா ன்னா?" என்கிறது லாலு மாமா.
            "எல்லா சிறுக்கி மவளுகளும் அந்தத் தெரு, இந்தத் தெருன்னுதாம் கிடக்குறாளுவோ! ஒருத்தியாவது இவ்வே மாதிரி ஓடுனாளா? இவ்வளே ஓட விட்டுட்டு வேடிக்கப் பாத்துட்டு நிக்குறாளுவோ! எம் மவளுக்கு யாரோ செய்வினைதாம் பண்ணிப்புட்டாங்க! சொல்லுபடி கட்டிக்கிறேம்னு சொன்னவே இல்லேன்னா இப்டியா ஓடவா? அந்தப் பாவிப்பயதேம் ஏதோ மந்திரிச்சி வுட்டுருக்காம்னு நெனைக்கிறேம்! அவ்வேம் மட்டும் எங் கையில கெடைச்சாம் கொன்னே புடுவேம்! ம்! கொன்னுபுட்டுதான் மறுவேல! அவனெ கொன்னுப்புட்டு ஜெயிலுக்குப் போனாத்தாம் ஆத்திரம் அடங்கும்!" என்கிறது சரசு ஆத்தா.
            "செரி வாங்க வெளிக்கெளம்பிப் போவேம்! பேசிட்டு இருக்குறதுல புண்ணிமில்ல! ஒண்ணு அப்டியே வுட்டுப்புடணும். இல்லாட்டி எதாச்சியும் செஞ்சியாகணும்! யோஜிக்கிறதுக்கு ஒண்ணுமில்ல." என்று வெளிக்கிளம்ப தயாராகிறது லாலு மாமா. ராசாமணி தாத்தாவும், பாலாமணியும் உடன் கிளம்புகிறார்கள்.
            அப்போது ஒடிசலான தேகத்தோடு, முகத்தில் செரைக்காத முடியோடு ஒரு பையன் வந்து நிக்குறான். யாருடா இவன்? என்று எல்லார் முகத்திலும் ஓரு கேள்விக்குறி படர்ந்து முகம் அப்படியே அஷ்டகோணலாய் மாறுகிறது.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...