14 Aug 2019

தலைகீழ் உலகு


தலைகீழ் உலகு
            நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் பல வித்தியாசமாகத்தான் இருக்கின்றன.
            அரசியல் உலகம், ஆண் - பெண் உலகம், மருத்துவ உலகம், ஊடக உலகம், உறவுகளின் உலகம் என்று ஒவ்வொன்னையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் உலகம் தழைகீழாக சுற்றுகிறதோ என்று சமயத்தில் ஐயம் என்கிற சந்தேகம் வந்து விடுகிறது.
            தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களில் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் தேர்தல் நின்று விடும். இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. அதிக அளவு பணபட்டுவாடா நடந்தால் தேர்தல் நின்று விடுகிறது.
            ஆண் பெண் நட்பு வித்தியாசமாக இருக்கிறது. முதலில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்கிறார்கள். நாட்கள் ஆனவுடன், நல்ல நண்பர்கள் ஏன் காதலிக்கக் கூடாது என்கிறார்கள். காதலிப்பவர்கள் ஏன் பிரேக் அப் ஆகக் கூடாது என்கிறார்கள். பிரேக் அப் ஆனவர்கள் ஏன் மனம் மாறி கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது என்கிறார்கள். கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் ஏன் விவாகரத்து செய்து கொள்ளக் கூடாது என்கிறார்கள்.
            உடம்புக்கு ஒரு நோய் வந்தால் கை வைத்தியமாய் முயன்று பார்க்கும் ஒரு காலம் இருந்தது. என்ன பெரிய வியாதி வந்தாலும் மருத்துவரைப் பார்க்காமல் சமாளிக்க முடியுமா என்று பார்ப்பார்கள். உடம்புக்கு ஒரு ஊசி போட்டுக் கொள்வது என்றால் அறவே ஒத்துக் கொள்ளாது. மருந்து மாத்திரை என்றால் தெறித்து ஓடி விடுவார்கள். இப்போது நிலைமை அப்படியா இருக்கிறது? இன்னுமா கருப்பப்பையை எடுக்காமல் இருக்கிறாய்? பித்தபையெல்லாம் வேஸ்ட். சீக்கிரமே எடுத்துடு! என்று அசால்ட்டாகப் பேசிக் கொண்டு போகிறார்கள்.
            டிவி வந்தக் காலத்தில் டிவியைக் குறை சொல்லி இப்போது மொபைலைக் குறை சொல்லும்படி ஆகி விட்டது. மொபைலைக் குறை சொல்வதும் மாறி அதில் கேம்ஸ் ஆடுவதையும், டிக் டாக் போடுவதையும், பார்ப்பதையும் குறை சொல்லும் அளவுக்கு வந்து விட்டது. இந்தக் குழந்தைகளும் சும்மா இருக்கிறதா பாருங்கள். பஞ்சு மிட்டாய், குச்சி மிட்டாய், குருவி ரொட்டி என்று கேட்டுக் கொண்டிருந்த குழந்தைகள் காஸ்ட்லி மோபைல்களாக வாங்கித் தரச் சொல்லி அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டன.
            எங்க தாத்தா காலத்தில் அவர்களுக்கு நிறைய தாத்தாக்கள் நண்பர்களாக இருந்தார்கள். இப்போது ஒவ்வொரு தாத்தாவுக்கும் ஒரு நாய்தான் நண்பராக இருக்கிறது. பழக்க வழக்கம் மனிதர்களிடமிருந்து மிருகங்களிடம் மாறி விட்டது. இது மனித நிலையிலிருந்து நாம் மிருக நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறதா? அல்லது மிருக நிலையிலிருந்து நாம் மனித நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறதா? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...