நிதர்சனத்தில் கூட்டுக் குடும்பங்கள் சிதறி
விட்டாலும், புலனம் எனும் வாட்ஸப்பில் கூட்டுக் குடும்பங்கள் உருவாக ஆரம்பித்து விட்டன.
சித்தப்பா, பெரியப்பா, மாமா குடும்பங்களை இணைத்து புலனக்குழு எனும் வாட்ஸ்அப் குரூப்
ஆரம்பிப்பவர்கள் சிறிய வயதினராக இருந்தாலும் குடும்பத்தில் பெரிய மனிதர்களாகி விடுகிறார்கள்.
அவர்களுக்கு இதில் கிடைக்கும் மரியாதை இருக்கிறதே! சொல்லி மாளாது.
அப்படி புலனக்குழுவை உருவாக்குபவரிடம்
இந்தக் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அந்த எண்ணைச் சேர், இந்த எண்ணைச் சேர்
என்று சொல்லி பல தலைமுறை அறியாத பந்தங்களையெல்லாம் சேர்த்து விடுகிறார்கள். பூர்வ
ஜென்ம ஞாபகம் வந்து விடும் அளவுக்கு அவ்வளவு சொந்த பந்தங்களால் உருவாகும் இந்த புலனக்குழு
ஆதிமனிதன் வரை நமக்கு இருந்த சொந்த பந்தங்களைக் காட்டாத குறைதான்.
இந்தப் புலனக்குழுக்களில் அரசியல், நடப்புச்
செய்திகள், உலக நடப்புகள், நாட்டு நடப்புகள், ஆன்மீகம், சோதிடம், தமிழுணர்ச்சி, இலக்கியம்,
சினிமா என்று பேசப்படாத போருட்கள் இல்லை. அத்தனை குறித்தும் பார்வேர்டுகள் எனும் வழிமொழிவுகள்
அல்லது பரிமாற்றங்கள் - அது குறித்த காரசாரமான விவாதங்கள் என்று தூள் பறக்கின்றன.
இந்த புலனக்குழுக்குள்ளே காதுகுத்தல்,
கல்யாணம், கருமாதி, முதலாம் ஆண்டு பிறந்த நாள், நினைவு நாள் என்று எல்லாவற்றுக்கும்
பத்திரிகை வைத்து அமர்க்களம் பண்ணி விடுகிறார்கள். விழாக்களுக்கு நேரில் வர முடியாதவர்கள்
இதன் மூலமே வாழ்த்துகள் சொல்லி விடுகிறார்கள். ஒரு விழா நடந்தால் புலனக்குழு தள்ளாடும்
அளவுக்கு புகைப்படங்களாக வந்து விழுகின்றன. எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அழித்தால்தான்
திறன்பேசி எனும் ஸ்மார்ட்போனையே திறக்க முடியும் எனும் நிலை ஆகி விடுகிறது.
இதற்கு மத்தியில் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?
என்ற தலைப்பில் நாளுக்கு ஐம்பது செய்திகளாவது பார்வேர்டு ஆகி விடுகின்றன. உண்மையான
தமிழனாக இருந்தால் ஷேர்(!) செய் என்று அந்த ஷேர் என்பதற்கு தமிழ்ச்சொல் என்னவென்று
தெரியாமல் ஆங்கில தமிழுணர்ச்சியோடு எப்படியும் நூறு செய்திகளைப் போட்டு விடுகிறார்கள்.
கட்டயாம் திருநள்ளாறு கோயிலுக்கு மேலே நாசாவின் ஸ்டேட்லைட் கோமா நிலைக்குச் சென்றது
குறித்த செய்தியை அலுப்பு சலிப்பில்லாமல் வாரத்துக்கு நான்கு முறை வழிமொழிதல் செய்து
விடுகிறார்கள். அதற்கு கைதட்டல், பூங்கொத்து போன்ற பட உருக்களை டெம்ப்ளேட் போலாகிப் போடுவதை வழக்கமாக வைத்திருப்பவர்களும் இந்தக் குழுக்களில்
இருக்கிறார்கள்.
இதில் குடும்ப உறுப்பினர்களில் யாராவது
ஒருத்தரின் மகனோ, மகளோ பொதுத்தேர்வோ, நீட் தேர்வோ, ஆசிரியர் தகுதித் தேர்வோ,
தேர்வாணையத் தேர்வோ எழுதினால் புலனக்குழுமம் ஹேங் எனும் தள்ளாடும் அளவுக்கு செய்திகளையும்,
வெற்றி பெற வாழ்த்துகளையும் போட்டுத் தாக்கி விடுகிறார்கள்.
அப்படித் தேர்வெழுதி செமத்தியா மதிப்பெண்களோ
அல்லது தேர்வில் தேறி விட்டாலோ மறுபடியும் புலனக்குழு தள்ளாடும் அளவுக்கு மீண்டும்
வாழ்த்துச் செய்திகள் குவிந்து விடும்.
சொந்த பந்தங்களில் யாருக்கேனும் உடம்பு
சரியில்லாவிட்டால், நேரில் போய் பார்க்கிறார்களோ இல்லையோ புலனக்குழுவில் எல்லாரும்
பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
தீபாவளி என்றால் பாவந்தான் புலனக்குழு.
அவரவர் எடுத்த ஆடைகளைப் படம் பிடித்து போட்டு புலனக்குழுவை அலங்கோலம் செய்து விடுகிறார்கள்.
மார்கழி மாதம் வந்து விட்டால் அவரவர் வீட்டு
வாசலில் போட்ட கோலங்களைப் போட்டு மார்கழி வந்ததைச் சொல்லாமல் சொல்லி விடுகிறார்கள்.
பொங்கல் வைத்ததைப் புலனக்குழுவில் போட்டு
அதற்கு நான்கு பேர் ஏதேனும் பட உருவையோ, வாழ்த்துச் செய்தியோ போட்டால்தான் அது பொங்கல்
விழாவாக இருக்கிறது.
முக்கியமான விசயமே இந்தப் புலனக் குழுவில்
பெண் பார்க்க, மாப்பிள்ளை பார்க்க பரிமாறப்படும் புகைப்படங்களும், சாதகங்களும்தான்.
இந்த நட்சத்திரத்துக்கு, இந்த நட்சத்திரம்தான் பொருந்தும், இன்ன ராசிக்கு இன்ன ராசிதான்,
இந்த சாதகத்துக்கு இன்னும் கல்யாணம் யோகமே வரவில்லையே என்று எல்லாரும் ஜோசியக்காரர்கள்
ஆகாத குறைதான் புலனக்குழுவில்.
அப்புறம் தேர்வாணையப் பாடத் தயாரிப்புகள்,
பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள், வருமான வரி கணக்கிடுவது எப்படி?, மருத்துவ குறிப்புகள்,
சமையல் குறிப்புகள், மழைக்கால வெள்ள அபாய குறிப்புகள், டெங்குவிலிருந்து பாதுகாக்கும்
வழிமுறைகள், பொன்னியின் செல்வன், கந்த சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி என்று வகை வகையான
பி.டி.எப்.களை படிப்பார்களா? மாட்டார்களா? என்று யோசனை இல்லாமல் ஆள் மாற்றி ஆள் பார்வேர்ட்
பரிமாற்றங்கள் பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள்.
யாருக்கேனும் அடிபட்டு விட்டால்... மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு விட்டால்... இவர்களே மருந்து மாத்திரைகளை எழுதி, அறுவைச் சிகிச்சையே
பண்ணி விட்டு அளவுக்கு அவ்வளவு ஆலோசனைகள். இந்தக் கோயிலுக்கு வேண்டிக்கோ, அந்தக்
கோயிலுக்கு வேண்டிக்கோ என்று எல்லா கோயிலையும் இழுத்து புலனக் குழுவில் விட்டு விடுகிறார்கள்.
இவ்வளவுக்கும் மத்தியில் எனக்கு ஒரு பூங்கொத்து
பட உரு போடவில்லை, வாழ்த்துகள் சொல்லவில்லை என்ற குறைகளும் அவ்வபோது இருந்து கொண்டுதான்
இருக்கிறது. அத்துடன் ஆயிரம்தான் அத்தைப் பெண், மாமன் மகள், அத்தைப் பையன், மாமன் மகனை
டாவடித்து கல்யாணம் செய்து கொள்வதை விட கொஞ்சம் தூரத்தில் செய்து கொண்டால் நல்லது
என்று மருத்துவ உலகம் சொன்னாலும் அதுகள் போடும் ஹார்டின்களுக்காக ஏங்கிக் கிடக்கும்
போது இந்தக் குடும்ப புலனக்குழு புத்துயிர் பெற்று விடுகிறது.
*****
No comments:
Post a Comment