12 Aug 2019

சாவு முனைச் சம்மதங்கள்



செய்யு - 174
            சுந்தரி சித்துவீரனோடு கல்யாணம் வேண்டாம் என்று சொல்வதைக் கேட்டு சரசு ஆத்தாவுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது. கட்டிக்கப் போறவனோட அழகையும், பவுசையும் பார்த்து கல்யாணத்துக்குப் பிறவு கஷ்டப்படறதை விட, காசையும், சம்பாத்தியத்தைப் பார்த்து சந்தோஷமா இருக்கிறதுதானே நல்லதுங்றத சுந்தரிக்கு எப்படிதாம் புரிய வைக்கிறதுன்னு சரசு ஆத்தாவோட மனசுல ஒரு போராட்டமே ஆரம்பிக்குது. நம்மளப் பார்த்து அனுபவப்பட்டுமா இவளுக்கு அது இன்னமும் புரியாம இருக்குது?னு நினைச்சு சுந்தரி மேல சரசு ஆத்தாவுக்குக் கோபமாவும் இருக்குது. இதெல்லாம் புரிஞ்சிக்கிற அளவுக்கு வயசு பத்தாது மட்டுமா? அவ்வே வயசுக்கு ஆசைகள்னு எதுவும் இல்லாம போயிடுமா? அப்பிடின்னு நினைச்சு சுந்தரி மேல சரசு ஆத்தாவுக்குப் பரிதாபமாவும் இருக்குது. மனசு அதுக்கு இப்படியும் அப்படியுமா அலைபாஞ்சி மாய்ஞ்சிப் போவுது.
            சுந்தரி புள்ளே சொல் பேச்சு கேக்காத புள்ளே இல்ல. எடுத்துச் சொன்ன புரிஞ்சிக்கிற புள்ளேதாம். கொஞ்சம் பொறுமையாத்தான் எடுத்துச் சொல்லணும். தெனமும் பேசிப் பேசித்தான் மனச மாத்தணும். இதுல அவசரம் காட்டக் கூடாதுன்னு முடிவு பண்ணிகிட்டு மறுபடியும் கொஞ்சம் நிதானமாவே பேச ஆரம்பிக்குது சரசு ஆத்தா.
            "யம்மாடி! எங் கண்ணுல்ல! ஒங்கப்பஞ் சாமியார நம்பிட்டு இருந்தீன்னா காலம் முழுக்க கல்யாணம் ஆகாமலே போனாலும் போயிடும் தாயீ. பட்டினி கெடக்குற வயித்துக்கே சம்பாதிச்சிப் போட வக்கில்லாத ஆளா இருக்காம் ஒங்கப்பம். ஒங்க அண்ணம் வேலைக்கிப் போயி சம்பாதிச்சி கல்யாணம்லாம் பண்றதுக்கு நாளாயிடும்டி குட்டி. ஒனக்கு பெறவு பாரு ஒங் தங்காச்சி இருக்கா. ஒன்னயே கெளப்பி விட்டாத்தாம் அவளுக்கு ஒரு ஏற்பாட்டப் பண்ண முடியும். ஒனக்குப் பிடிச்சிருக்கோ யில்லீயோ குடும்பத்துக்காக யோஜனப் பண்ணிப் பாரு. யாருக்காகவும் இல்லன்னாலும் அம்மாவுக்காகவாவது பண்ணிக்கோடி. ஒனக்குக் கோடி புண்ணியமா போவும்!" என்கிறது சரசு ஆத்தா.
            இதென்னடா இது! இவ்வளவு அழுத்தமாய்ப் பல்லைக் கடித்துக் கொண்டு சொல்லியும் அம்மா இப்பிடி புரியாத கணக்காய்ப் பேசுகிறதே என்று மருண்டு பார்க்கிறது சுந்தரி. நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ, நமக்குக் கல்யாணம் வேணாம் என்பதைக் கொஞ்சம் இறங்கி வந்து சொல்வது போல அந்தப் பார்வை இருக்கிறதே தவிர, சரிம்மா உனக்காக ஒத்துக்கிறேன் என்று சொல்வதைப் போல இல்லை.
            "ன்னாடி கட்டிக்கச் சம்மதம்தானே?" என்கிறது சரசு ஆத்தா உறுதிபடுத்திக் கொள்ளும் நோக்கில்.
            சுந்தரி அப்படியே நடந்து போய் சுவரின் மூலையில் சாய்ந்து அப்படியே சுவரைத் தேய்த்துக் கொண்டே உட்காருகிறது.
            "ஏம்டி ஒனக்குப் பிடிக்கலையாடி? இவ்ளோ சொல்றேம்னே பிடிக்கலையாடி? தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைதாம்டி நீயி? சொல்றது புரியலையாடி? குடும்பம் இருக்குற நெலமைக்கு இவ்வே வேற! ஒனக்கு என்னதாம்படி பெரச்சனை? அதையாவது சொல்லித் தொலையேம்டி!" என்கிறது சரசு ஆத்தா.
            "ப்ளீஸ்ம்மா! தப்பா நெனைச்சிக்காதே! ஸ்கூல்ல படிக்கிற பையன ஒருத்தம்தான் நமக்கு இஷ்டம். கட்டிகிட்ட அவனெதாம் கட்டிப்பேம். இல்லேன்னா இப்பிடியே இருந்துப்பேம்!" என்கிறது சுந்தரி.
            "அடி கொலகாரி! இதுக்குத்தாம் கல்யாணம் வாணங்றீயா? நீயி எவனயோ இழுத்துட்டு ஓடுனா ஒந் தங்காச்சிக்கு நாம்ம எப்பிடிடி கல்யாணத்த பண்ணித் தொலைக்கிறது? ஒந் அண்ணனுக்கு எவம்டி பொண்ணு கொடுப்பாம்? ஏ நாற முண்டே! கல்யாணத்த பண்றதுக்கே வக்கில்லாம குடும்பத்தோட நெலமெ இருக்கு. இப்ப ஒன்னய கட்டிக்க சித்துவீரேம் வந்த மாரி ஒந் தங்காச்சிய கட்டிக்க எவனாவது வாரதயும் கெடுத்துப் புடுவே போலருக்கே. ஏ பழிபாவத்துக்கு அஞ்சாதவளே! ஒன்னால ஒந் தங்காச்சி, ஒந் அண்ணே அல்லாரு வாழ்க்கையும் கெட்டுடும் போலருக்கே. ஏற்கனவே கெட்டுப் போன மாரி இருக்குற குடும்பம், ஒன்னால வேற வேற மாரி கெட்டுட போயிடக் கூடாதுடி. ஒழுங்கு மரியாதியா எம்ம அண்ணேம் பையனெ கட்டிக்கே! எதாச்சிம் ஏடாகூடம் பண்ணுனே பொண்ணுன்னு பாக்க மாட்டேம். அருவாமனெயில கறி காய அரிஞ்சு போடுற மாரி அரிஞ்சுப் போட்டுட்டு போயிட்டே இருப்பேம். பொண்ணும் வாணாம் மசுரும் வாணாம்!" என்கிறது ஆக்ரோஷமாக சரசு ஆத்தா.
            "அதப் பண்ணித் தொல. ஒரு பொணத்தக் கட்டிக்கிறதுக்கு பொணமா போறது எவ்வளவோ பரவாயில்ல. பொணந்தின்னிப் பயலே கட்டிக்க வெச்சி காலத்துக்கும் கஷ்டப்படணும்னு நெனைக்கிறே நீயி! ஒன்னு நம்மள கொன்னுப் போட்டுடு. கொல்லாம வுட்டியேன்னா நாம்ம அவனெதாம் கட்டிப்பேம்." என்கிறது சுந்தரியும் ஆவேசம் கொண்டதைப் போல.
            "எம் பாதகத்தீ! எம்மாம் திமிரா பேசுறா? ஒழுங்கா சோறு போடாமலயே இம்மாம் கொழுப்பாடி ஒனக்கு? ஒழுங்கா சொறு போட்டிருந்தா எவனயாவது இந்நேரத்துக்கு இழுத்துகிட்டு ஓடியிருப்பேயில்ல நீயி! ஒம் மசுர அறுத்தா ன்னாடி? வயசு ன்னாடி ஆச்சுடி ஒனக்கு? ஏம்டி இப்டி அரிப்பெடுத்து அலயறே பீத்த முண்டே!" என்கிறது சரசு ஆத்தா ஆத்திரத்தை அடக்க முடியாமல்.
            "நீயி ன்னா வாணாலும் பேசிக்கோ. நாம்ம ஒண்ணும் அரிப்பெடுத்துலாம் அலயல. கட்டிகிட்ட அவனெ கட்டிப்பேம், இல்லேன்னா கட்டிக்காம இருப்பேம் அப்டின்னுதாம் சொல்றேம். இத்தாம் எம்ம முடிவு. இவ்ளோ பேசுறீயே! நாளு கெழமன்னா ஒரு நல்ல துணி போட்டிருப்போமா? அஞ்ஞ இஞ்ஞன்னு எங்கயாவது அழச்சிட்டுப் போயிருப்பீயா நீயி? பள்ளியோடத்துக்கு நல்ல சோறு எடுத்துக் கட்டிக் கொடுத்திருக்கீயா? பொம்பள புள்ளேன்ன எதாச்சியும் ஒரு நக நெட்டு செஞ்சிப் போட்டிருப்பீயா? பெருசா பேச வந்துட்டே பேச!" என்கிறது சுந்தரி.
            "யய்யோ யம்மா! ஏம் வயித்துல வந்து இப்டி பொறந்திருக்கீயேடி! வெளில விசயம் தெரிஞ்சா நாண்டுகிட்டு சாவ வேண்டியதுதாங். ஒங்கப்பம், ஒங்கண்ணம்கிட்ட சொல்லாம போனீயே! கொன்னே போட்டுடுவானுங்க. ஏஞ் செல்லம் அதயெல்லாம் வுட்டுப்புடு. நல்லகதியா நீயி வாழணோம். கருத்தா இருந்துக்கே. புரிஞ்சுக்குடி. நீங்கலாம் ந்நல்லா இருந்தாத்தாம் நாம்ம ந்நல்லா இருக்க முடியும். ஏடி யாத்தா! எங் கொலக்கொழுந்தே! நீதாம்டி எங் குடும்பத்த காப்பாத்தணும்!" என்று சரசு ஆத்தா சுந்தரியே எதிர்பார்க்காத நேரத்தில் பட்டென்று காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து சுந்தரியின் காலைக் கட்டிக் கொண்டு கிடக்கிறது. அதைப் பார்க்க பார்க்க பதறிப் போகிறது சுந்தரிக்கு.
            "ஏய் யம்மா! எழுந்திரும்மா!" என்று சுந்தரி காலை இழுத்துப் பார்க்கிறத. சரசு ஆத்தாவின் கைகளின் பிடி வலுவாக இருக்கிறது. "யய்யோ இப்டி பெத்தப் பொண்ணோட கால பிடிச்சிகிட்டு யம்மா மானத்த வாங்குறீயே! ந்நல்லாவா இருக்கு. மொதல்ல எழுந்திரும்மா!" என்கிறது சுந்தரி.
            "அவனெதாம் கட்டிப்பேம்னு சொல்லு! வுடறேம். ல்லேன்னா எழுந்திருக்க மாட்டேம். ஒங் காலடியிலயே கெடந்து செத்துப் போயிடுறேம்!" என்கிறது சரசு ஆத்தா.
            "யய்யோ! நாம்ம இந்த கணக்கா ஒங் காலுல விழுந்து கெஞ்சணும். இஞ்ஞதாம் எல்லாம் மாறி மாறி நடக்குதே. யம்மா எங் கால வுடு. ஒம் பாவத்த வாங்கி கட்டிக்க வைக்காத." என்று சுந்தரி அப்பிடியே உட்கார்ந்த கணக்காய், காலைப் பிடித்துக் கிடக்கும் சரசு ஆத்தாவின் தலையைப் பிடித்துக் கொண்டு அழுகிறது.
            "நீயி சம்மதம்னு சொல்லு. இப்பயே எழுந்திருக்கிறேம்!" என்கிறது சரசு ஆத்தா.
            "யய்யோ யம்மா! நம்மால இந்த நெலமையே தாங்க முடியலயே. செத்துப் போயிடலாம் போலருக்கே! யாராச்சிம் வந்திடப் போறாங்கம்மா! எழுந்திரிச்சித் தொலையேம். ஏம் இப்டி பண்றே?"
            "ன்னாடி நெஞ்சழுத்தம் நாம்ம பெத்த கழுதே ஒனக்கு? அப்போ நமக்கு எவ்ளோடி இருக்கும்?"
            "அதுக்கு ஏங் இப்டி காலுல விழுந்து உசுரெ எடுக்குறே? யிப்போ எழுந்திருக்கிறீயா யில்லியா?"
            "நாம்ம எதுக்குடி ஒன்னய கொல்லணும். ஒன்னய பெத்த பாவத்துக்கு நீயே நம்மள கொன்னுப் போட்டுடி. எஞ் சாவுதாம் இதுக்கு தீர்வுன்னா அப்டியே ஆயிட்டுப் போவட்டும்!" என்கிறது சரசு ஆத்தா.
            "ஒங்கிட்டே இப்டிக் கேட்டால்லாம் காரியம் ஆவாது. நாம்ம இருக்குறதுதாம் ஒனக்குத் தொல்லையா இருக்கு. நாம்ம போயித் தொலைஞ்சிட்டா நமக்கும் நிம்மதியா இருக்கும். நீயும் நிம்மதியா இருப்பே!" என்றபடி விருட்டென்று சரசு ஆத்தாவின் கைகளிலிருந்து கால்களை விடுவித்துக் கொண்டு எழுந்திருக்கிறது சுந்தரி. ஓடிப் போயி ரேஷன் கடையிலிருந்து கேனில் வாங்கி வைத்திருந்த நீல நிறத்து கிருஷ்ணாயிலை வேக வேகமாக உடம்பெங்கும் ஊற்றிக் கொள்கிறது.
            இதைப் பார்க்கும் சரசு ஆத்தாவுக்குப் பகீர் என்கிறது. அதுவும் ஓடிப் போயி சுந்தரியின் கையிலிருக்கும் கேனை வேக வேகமாக பிடுங்கி தன் மேல் ஊற்றிக் கொள்கிறது. ரெண்டு பேருக்கும் கேனைப் பிடுங்கி ஊற்றிக் கொள்வதில் போட்டோ போட்டியோ அல்லது அடிதடியோ நடப்பது போல இருக்கிறது இருக்குற நெலைமை.
            "இதாம்டி சரியான முடிவு. கொளுத்துடி. ரண்டு பேருமே சேந்து போவோம். குடும்பமாவது வெளங்கட்டும்." என்கிறது சரசு ஆத்தா.
            "யய்யோ! நம்மள சாவவும் வுட மாட்டேங்குதுங்க! வாழவும் வுட மாட்டேங்குதுங்களே! இப்டிப் போட்டு கொல்லாம கொல்லுதுங்களே! யய்யோ தெய்வமே! கடவுளே! நீங்கலாம் ஒலகத்துல இருக்கீங்களா? இல்லீயா? ஒங்களுக்குல்லாம் கண்ணு தெரியலீயா? இப்டி நடக்கவுட்டுப்புட்டு பாத்துட்டு இருக்கீங்களே! நாம்ம ன்னா ஒங்கள ந்நல்லா வாழ வுடுங்கன்னா கேட்குறேம்! நம்மள சாவ வுடுங்ன்னுதானே கேட்குறேம். அதயும் வுட மாட்டேங்றீங்களே! ஏந் தலயெழுத்து ஏம் இப்டி எழுதுனீங்க?" என்று சன்னமாய்ச் சத்தம் போட்டபடியே தரையில் விழுகிறது சுந்தரி.
            அதற்குள் சரசு ஆத்தா ஓடிப் போய் தீப்பெட்டியை எடுத்து குச்சியை உரசப் பார்க்கிறது.
            சுந்தரி அதைப் பார்த்துக் கொண்டே, கேவலான குரலில், "அந்தப் பொணந்தின்னிப் பயலத்தாமே கட்டிக்கணும். கட்டிக்கிறேம். கட்டிக்கிறேம். நம்மாள நீயி சாவ வாணாம். அவனெ கட்டிகிட்டு நாமளே சாவறேம்டி! நம்மள அஞ்ஞ கட்டிக்கொடுத்து நாம்ம நாசமா போறேம். நீங்களாவது ந்நல்லா இருந்துத் தொலயுங்கடி!" என்கிறது சரசு ஆத்தா.
            ஊற்றிய மண்ணெண்ணெய் வழியும் உடம்போடு நின்ற கொண்டிருக்கும் சரசு ஆத்தாவுக்கு சுந்தரியின் இந்தப் பதில் வயிற்றில் பாலை வார்த்ததைப் போல இருக்கிறது.
            "கட்டிக்கிறேல்லடி? கட்டிக்கிறேல்லடி?" என்கிறது சரசு ஆத்தா மறுபடியும் மறுபடியும்.
            "வெறெ ன்னா கதி இருக்கு நமக்கு? கட்டிட்டு சீரழிஞ்சுப் போறேம்!" என்கிறது சுந்தரி.
            "நீ சீரழிஞ்சுப் போவீயோ! சின்னபின்னமா போவீயோ! அவனெ கட்டிகிட்டு எப்பிடி வோணா போவோ! அவனெ கட்டிக்கிறேம்னு சொன்னதே போதும்!" என்கிறது சரசு ஆத்தா. அதன் மனசுக்குள் ஒரு பெரிய பிரளயமே முடிவுக்கு வந்தது போல இருக்கிறது. நல்லவேளையாக இவ்வளவு நேரத்துக்கும் யாரும் வரவில்லை, யாருக்கும் தெரியாமல் இந்த விசயத்தை அமுக்கி மூடி வைத்து விட்டோம் என்று கொஞ்சம் மனசுக்குத் தெம்பாகவும் இருக்கிறது சரசு ஆத்தாவுக்கு.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...