10 Aug 2019

பொறந்தப்பயே பார்த்த பொண்ணு!



செய்யு - 172
            அது என்னமோ என்ன மாயமோ? இங்க கல்யாணம் நடக்குதுன்னு ஆம்பளைக்கு வயசு ஏறிப் போயும், பொம்பளைங்களுக்கு ரொம்ப சின்ன வயசுலயுமா நடக்குது. இப்டி வயசு ஏறி கல்யாணம் நடந்தது ரகுவுக்கு மட்டுமா? சித்துவீரனுக்கும்தான். சித்துவீரனுக்குக் கல்யாணம் நடந்த போது வயசு எப்படியும் அதுக்கு முப்பது இருக்கும். இப்போ நாம்ம பேசிட்டு இருக்குற இந்தக் காலகட்டத்துல வெளிநாடு போயி வந்த மாப்பிள்ளன்னா அந்த மாப்பிள்ளைக்கு ஏக கிராக்கி. சித்துவீரன் துபாய்க்குப் போய் வந்திருந்ததால் நான் நீயென்று பெண் கொடுக்க ஊரில் ஒரே போட்டி. என்ன வயசுதான் கொஞ்சம் ஜாஸ்தி. அதனாலென்ன கையில் காசு இருக்கிறது. சொந்தமாய் வடவாதி பஸ் ஸ்டேண்ட் பக்கத்தில் வீடு இருக்கிறது. அதுக்கு முன்னாடி பட்டறை இருக்கிறது. போதாதா? முருகு மாமா தேடாமல் பெண் அமைந்து விடும் போலிருக்கிறது. நல்ல எடமாகப் பார்த்து வளைத்துப் போட்டால் சரியான தம்பிடிதான் என்று இருப்பதிலேயே பெரிய இடமாகப் பார்த்துப் பார்த்து சல்லடை போட்டு சலித்துக் கொண்டிருக்கிறது முருகு மாமா.
            அதே நேரத்தில் பாவந்தான் இந்த முருகு மாமா. ரகுவுக்குப் பெண் பார்ப்பதற்குள் எந்தப் பெண் அமையும் என்று தேடித் தேடி அலைந்த முருகு மாமாவுக்கு சித்துவீரனுக்கு எந்தப் பெண்ணை அமைப்பது என்று தடுமாற வேண்டிய நிலைமை. அவ்வளவு ஜாதகங்களும், விசாரிப்புகளுமாக வந்து குவிகின்றன. இதுல எத தேர்ந்தெடுக்குறதுன்னு தடுமாறிகிட்ட இருந்தப்ப முருகு மாமா வேடிக்கையாக ஒரு வார்த்தை சொன்னிச்சுப் பாருங்க, "இதுல எந்தப் பொண்ண இழுத்துட்டு வந்து இவனுக்கு கட்டி வைக்கிறதுன்னே புரியலியே. இவனே ஒரு பொண்ண இழுத்துட்டு வந்தாலும் தேவல! இல்லன்னா இந்தப் பொண்ண கட்டி வைங்கன்னு கையைக் காட்டுனாலும் தேவல! எதெ கட்டுறது? எதெ விடுறதுன்னு கண்ண கட்டுதுப்பா!" என்று. கடைசியில் அதுதான் நடந்திச்சி. அந்தக் கதையெ கேளுங்க!
            சித்துவீரன் பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தாவின் பெண்ணான சுந்தரியைத்தான் கட்டுவேன் என்று ஒத்தக்காலில் நிற்கிறது. அது அப்போதுதான் ப்ளஸ்டூ முடித்து விட்டு காலேஜ் போய் படிக்கலாம் என்று வீட்டில் இருக்கிறது. வயசும் பதினெட்டைக் கடக்காத நிலைமை. சித்துவீரனுக்கு முப்பது வயதை நெருங்கும் நிலைமை. வயசு வேறு ரொம்ப வித்தியாசம். முருகு மாமாவுக்கு இது சுத்தமாவே பிடிக்கல.
            "அவ்வேங்கிட்ட ன்னா இருக்குன்னு நீயி அவ்வேம் பொண்ண கட்டணும்னு நிக்குறே? கல்யாணம் கட்டணும்னாலும் பைசா காசி தேறாது. நீயிதாம் கைக்காசிய போட்டு கட்டிட்டு வாரணும். ஒரு பொண்ணா அவனுக்கு? கதெ அத்தோட முடியறதுக்கு? இன்னொன்னு வேற இருக்கு! அவனுங்க இருக்குற நெலையில அதோட கல்யாணம் ஒம் தலையிலதாம் விடியும். வாணாம் விட்டுப்புடு!" என்கிறது முருகு மாமா.
            "அந்தப் புள்ள பொறந்தப்பவே முடிவு பண்ணிட்டேம். அந்த புள்ளையத்தாம் கட்டிக்கணும்னு. கட்டுனா அந்தப் புள்ளையத்தாம் கட்டுவேம். ஒங்க இஷ்ட மயித்துக்கெல்லாம் கட்ட முடியாது. ஆவுற வேலயப் பாருங்க!" என்கிறது சித்துவீரன்.
            "ன்னடா இது அப்பங்காருங்ற மரியாதி ல்லாமப் போச்சு ஒனக்கு! அதாஞ் சொல்றார்ல. வெறும் பயெ வூட்டுல பொண்ண எடுத்து சிங்கி அடிச்சிட்டு நிக்கப் போறீயா? கொழந்த உண்டானா தலபிரசவம் பாத்து வெச்சிப் பாக்க கூட அஞ்ஞ வக்கில்ல தெரிஞ்சுக்கோ! எலே ஒண்ணுமில்லாம கெடக்குறானுவோடா அவனுவோ. அந்தக் குட்டிக்கு வயசும் இருக்குடா. ஒடனடியா இப்போ கல்யாணத்தப் பண்ணிச் சீரழியணும்னு அவனுவோ தலயிலயா எழுதிருக்கு. ஏம்டா நீயி அந்தக் குட்டிய கல்யாணத்த பண்ணிட்டு... நீயி சீரழியணும்னு ஒம்ம தலையிலயா எழுதிருக்கு?" என்கிறது இதையெல்லாம் கேட்டு விட்டு நீலு அத்தை.
            "நாம்ம சீரழியுறேம். சின்னா பின்னமா போயித் தொலயிறேம். ஒங்களுக்கு ன்னா? சுந்தரிய கட்டுறதுன்னு நாம்ம முடிவு பண்ணியாச்சி. பிடிச்சிருந்தா கல்யாணத்துக்கு வாங்க. இல்லாட்டியும் நீஞ்ஞ பாட்டுக்கு இருந்துக்குங்க. கல்யாணம் பாட்டுக்கு நடக்கும்." என்கிறது சித்துவீரன்.
            "அந்தக் குடும்பம் இருக்குற நெலயில இப்போ நீயி கல்யாணத்த பண்ணிகிட்டே அந்தக் குடும்பத்தையே நீயிதாம் சொமக்க வேண்டிருக்கும் பாரு! யோசிச்சி நெதானமா முடிவு பண்ணு. ரகு மேரியில்ல ஒம் நெலமை. ஆயிரம் பொண்ணு வரிசையில நிக்குது. தேடி வாரங்ற சீதேவிய வுட்டுப்புட்டு மூதேவிய புடிச்சிட்டு வாராதே. ஒரு பொண்ண அவனுங்ககிட்ட கொடுத்துக்கிட்டு நாம்ம பட்ட பாட்டை, நீயி ஒரு பொண்ண அஞ்ஞயிருந்து எடுத்துட்டுப் பட வாணாம். அசரப்படாத. ஒணர்ச்சிக்கு எடம் கொடுக்காத. உக்காந்து யோஜன பண்ணு!" என்கிறது சித்துவீரனுக்கு மனசுக்கு ஏறுகிற மாதிரி முருகு மாமா.
            "முடிவு பண்ணதுல மறுக்கா ன்னா முடிவு பண்றது? யோஜன பண்ணி வெச்சதுல மறுக்கா மறுக்கா ன்னா யோஜன பண்றது? எத்தினி தடவெ நீங்க கேட்டாலும் நம்ம பதிலு இதுதாம். ஒரு பொண்ண கொடுத்து வீணா போயிட்டுங்றீங்களே! யாரு அந்தப் பொண்ணு. எம்ம அத்ததானே. அது சீரழிஞ்சி நிக்குறப்ப அத்தோட பொண்ண யாரு கட்டிக்கிறது? நாம்மதானே கட்டிக்கணும். நாமளே கட்டிக்கலன்னா யாரு கட்டிப்பா?" என்கிறது பதிலுக்கு சித்துவீரன்.
            "ஏலே எடுபட்ட பயலே! அவளவளுக்கும் யாரு இன்னாருன்னு எழுதியிருக்கும்டா. அதெ பத்தி நீயி கவலப்படாதே. அந்தப் பாக்குக்கோட்டையான் எவ்வேம் தலையாவது தடவியாது கட்டி வெச்சிடுவாம். அவ்வேம் தலைய தடவுற எடத்துல நீயா போயி தலய காட்டிட்டு நிக்காதே. மொட்‍டையடிக்குறவனுக்கு முன்னாடி போயி முஞ்சை நீட்டிட்டு நிக்காதேடா! சொன்னா கேளு!" என்கிறது நீலு அத்தை.
            "நமக்கு அவ்வேதாம். அவளுக்கு நாம்தாம். அப்பிடித்தாம் எழுதியிருக்கு. எவனும் நம்ம தலய தடவ முடியாது. எல்லாத்து தலயையும் நாம்ம தடவிப்புடுவேம்." என்கிறது சித்துவீரன்.
            "இந்தாருடா சொன்னா கேளுடா! பொண்ணுக்கு ஒண்ணுஞ் செய்ய மாட்டானுங்கடா. நீயே கட்டிட்டுப் போன்னு ஒம் தலயில கட்டிட்டு விட்டுடுவானுங்கடா. அஞ்ஞ ஒரு டிக்கெட்டு கொறைஞ்சா ஆக்குற சோத்துல கொஞ்சம் மிச்சப்படும்னு நிக்குறானுவோடா. அஞ்ஞ போயி கட்டிட்டு வாரன்னு நிக்குறீயே?" என்கிறது நீலு அத்தை.
            "பொண்ணுக்கு ஒண்ணும் இல்லேன்னா நாம்ம போட்டுக் கட்டிட்டு வார்றேம். ஆரு பொண்ணு அது? அத்தை மாமம் பொண்ணுதானே. அப்டி கட்டிட்டு வந்து அஞ்ஞ கொஞ்சம் சோறு மிச்சமானாலும் சரிதெம். நாம்ம கட்டுறது கட்டுறதுதாம். அதுல ஒண்ணும் மாத்தமில்லே! வெட்டி மசுரு பேச்சுலாம் நம்மட்ட வாணாம்!" என்கிறது சித்துவீரன்.
            இதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால், சித்துவீரனின் இந்த முடிவில் முருகு மாமாவுக்குதாம் விருப்பமில்லையே தவிர, லாலு மாமாவுக்கு ரொம்ப இஷ்டம். சித்துவீரனின் இந்த முடிவால் அதன் மேல் லாலு மாமாவுக்கு தனிப் பிரியமே வந்து விட்டது. சரசு மேலயும் லாலு மாமாவுக்கு தனிப் பிரியம்தான். இப்போது அதனுடைய பொண்ணுக்கு இப்படி சம்பந்தம் அமைவது அதுக்கு ஏக சந்தோஷத்தைக் கொடுத்தது. ரெண்டு பொட்டப் பிள்ளைகளை வைத்துக் கொண்டு எப்படி கரையேத்துவது என்று தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் சித்துவீரன் இப்படிச் சொன்னது லாலு மாமாவை வரிந்து கட்டிக் கொண்டு வேலையைப் பார்க்க வைத்தது.
            இந்த விசயத்தைப் பாக்குக்கோட்டைக்கு எடுத்துக் கொண்டு போய் சொன்னது லாலு மாமாதான். பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தாவுக்கும், சரசு ஆத்தாவுக்கும் விசயத்தைக் கேள்விப்பட்டதும் தாங்க முடியாத சந்தோஷம்தான் என்றாலும் ராசாமணி தாத்தாவுக்கு உள்ளுக்குள் ஒரு சொரேர் இருந்து கொண்டே இருக்கிறது. சுந்தரிப் பொண்ணுக்கு ஏனோ முகம் ஒரு மாதிரியாக வாடிப் போய் விட்டது. இந்த விசயத்தை மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் ஒரு மாதிரியான நிலைமை அதுக்கு. இப்டி ஒல்லியா எலும்புக்கு தோல மாட்டி வுட்டவன் கணக்கா இருக்குறவனுக்கா கழுத்தை நீட்டணும்ங்ற நெனைப்பா என்னான்னு தெரியல.
            "வயசு இல்லேன்னு பாக்காதே. பதினேழு ஆயிடுச்சி. வயசுக்கு வந்தப் பொண்ண பொறந்த வூட்டுல வெச்சிக்கிறத வுட புகுற வூட்டுக்குக் கொண்டு போயி வெச்சிடறதுதாம் செரி! ஒன்னோட யோகம் பாரு மாப்பிள்ள தேடி வாருது. அதுவும் அண்ணம் பையனா தேடி வார்றான். வெளியிள கிளியில கொடுக்கணும்னா யோஜிச்சுதாம் பாக்கணும். குடும்பம் எப்டியோ? மாமனாரு மாமியாரு எப்டியோ? நாத்தனாரு எப்டியோ?ன்னு. ஒங்க அண்ணம், அண்ணிய ஒனக்குத் தெரியாதா ன்னா? அவ்வேம் வீரனெ பத்தி நீயி அறியாததா ன்னா? நீயி தூக்கி வளத்த புள்ளீகதானே அவனுங்க! கல்யாணத்தெ சட்டுபுட்டுன்னு முடிச்சிப்புடறதுதாம் நல்லது. அவ்வேம் மனசு மாற மாட்டாம். ஆனா சுத்தி இருக்குறதுங்கள பத்திச் சொல்ல முடியாது. அததுக்கு நேரம் வாரப்ப அததெ முடிச்சிப் புடணும். தாமசம் பண்ணக் கூடாது. பெறவு நாம்ம நெனைச்சாலும் சில வெசயங்கள முடிக்க முடியாது. பாத்து ஒரு நல்ல முடிவா சொல்லு!" என்கிறது லாலு மாமா.
            "எங் அண்ணேம் பையனெ கட்டி வைக்குறதுக்கு யாருக்கென்ன கசக்குது? அவ்வே பொறந்தப்பயே அஞ்ஞ வூட்டுக்கு அனுப்பி வெச்சிருப்பேம். அது மொறையில்லல்ல. எப்ப அனுப்பணும்னு சொல்லுண்ணே. அனுப்பி வெச்சிடறேம்?" என்கிறது சரசு ஆத்தா.
            "எவடி இவ்வே? ன்னா நெனச்சிட்டுடி சொல்றே? விடிஞ்சா கலியாணம், கட்டுறா தாலியன்ன ஆருட்டடி பணங் காசி இருக்கு? ஒடனே எப்டி கல்யாணத்தப் பண்றது? பைசா காசி வேண்டியதில்லியா?" என்கிறது ராசாமணி தாத்தா. ராசாமணி தாத்தாவின் மனசில் இருந்த சோரேர் இப்போது விளங்குகிறது.
            "ம்ஹூம்! எந்தக் காலத்துல ஒம்மகிட்ட பணங்காசி இருந்துச்சி. கட்டுன நாளிலேந்து அதுதாம்னே நெலமே. இப்ப மட்டும் திடீர்னு பணங்காசி ன்னா மரத்துல காய்ச்சியா வந்திடப் போவுது? நெலமே தெரிஞ்சித்தாம் எம்ம அண்ணேம் மவ்வேம் பொண்ணக் கட்டிக்கிறாம்னு சொல்றாங். இப்போ போயி பணங்காசி அது இதுன்னு? இன்னும் நாலு வருஷம் ஆனா மட்டும் பணங்காசி வந்திடப் போவுதா ன்னா? அப்பயம் இப்டித்தாம் இருக்கப் போவுது. அதுவும் இப்டி இருக்கப் போவுதா யில்ல இன்னும் மோசமா போவப் போவுதான்னு தெரியல! வூடு தேடி வார்ற சம்பந்தத்த வுட்டுப்புட்டு நிக்குறதா? எஞ்ஞ தேடுனாலும் இந்த மாரி மாப்பிள்ள நமக்குக் கெடைக்காது." என்கிறது பதிலுக்கு சரசு ஆத்தா.
            "பையம் வேற டாக்கடருக்குப் படிக்கிறாம்ல!" என்கிறது ராசாமணி தாத்தா.
            "ம்! படிக்கிறாம் படிக்கிறாம்! ஒம்மகிட்ட பணங்காசி வாங்கியா படிக்கிறாம்? அவனா அஞ்ஞ இஞ்ஞ கிளினிக்கு ஓடிப் போயி வேல பாத்துட்டு படிக்கிறாம். ஒரு வேள சாப்டுகிட்டு நாலு வேள டீய குடிச்சிகிட்டு சமாளிக்கிறாம். ஒம்மள நம்பி படிக்க நெனைச்சா அவ்ளோதாம். அதால ஒம்ம நம்பில்லாம் பொண்ணோட கல்யாணத்த தள்ளிப் போட முடியாது. கல்யாணம் யோகம்னு ஒண்ணு வந்துட்டா ஆரு தடுத்தாலும் அத்து நடந்தே தீரும். அத்தே எதனாலயும் தடுக்க முடியாது!"
            "ன்னாடி ஜோசியம் பாக்குற நம்மகிட்டயே அளந்து வுடுறீயா? ஜாதகம் கீதகம் பாக்க வேணாங்றீயா?"
            "நீரு ஜாதகம் பாத்துட்டு வார்ற லட்சணம்தாம் ஊருக்கே தெரியுதே. மொதல்ல ஒம்ம ஜாதகத்தப் பாருங்க. பெறவு அடுத்தவங்க ஜாதகத்த பாக்கலாம்!" என்கிறது சரசு ஆத்தா.
            "ஒரே பொம்பள ராஜ்ஜியமா போயிடுச்சிடி. நீங்களா ஒரு முடிவு பண்ணிட்டீங்க. யாரு சொல்லி இனுமே கேக்கப் போறீங்க!" என்கிறது அதற்கு ராசாமணி தாத்தா.
            "செரி! இது வாணாம். நீங்கதாம் ஒரு ந்நல்ல மாப்பிள்ளயா பொண்ணுக்கு தேடிட்டு வாங்களேம். கட்டி வெச்சிடுவேம். அதுக்கும் வக்கில்ல. இதுக்கும் வக்கில்லன்னா ன்னா பண்றது? கையில சிக்குற மீனெ அமுக்கிக்கிட வேண்டியதுதாங்!" என்கிறது சரசு ஆத்தா.
            "சித்தே சும்மா இருங்க! ஒங்களுக்குள்ள அடிச்சிகிட்டு. ஆவுற செலவ்வே நாம்ம பாத்துக்கிறேம். இந்தாருங்க முடிஞ்சப்ப கொடுங்க." என்கிறது லாலு மாமா.
            "ஒண்ணய நம்பித்தாண்ணே இந்தக் காரியத்துல நாம்ம ஆமாம்னு சொல்றேம்! பெறவு இந்த மனுஷன நம்பியா சொல்றேம்!" என்கிறது சரசு ஆத்தா. இந்தப் பதிலில் லாலு மாமாவுக்கு தாங்க முடியாத குஷி வந்து விடுகிறது.
            "இந்தாளு கெடக்குறாரு வுடுண்ணே. நீயா பாத்து நல்ல வெதமா முடிச்சி வுடுண்ணே!" என்று சரசு ஆத்தா சொல்லவும் லாலு மாமாவுக்கு கால்கள் பூமியில் நிற்காத கொறைதாம்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...