10 Aug 2019

நடைபெறுதலும் விடைபெறுதலும்



            எளிமையான வாழ்வில் எந்தக் கஷ்டமுமில்லை. கஷ்டப்பட்டாலும் ஆடம்பர வாழ்வுதானே பிடித்திருக்கிறது. அதுதான் கஷ்டம்.
            வாழ்வை எளிமைக்கு மாற்றாமல் இங்கிருக்கும் வாழ்வியல் நோய்களைத் தீர்க்க முடியாது. ஆடம்பரத்தை விடாமலே நோயைத் துரத்த நினைக்கும் போது நோயும் ஆடம்பரமாக மாறி விடுகிறது. இங்கு இருப்பதெல்லாம் ஆடம்பர நோய்கள்தான்.
            உடல் உழைத்து வியர்த்தால் தீர்ந்து விடும் சர்க்கரை நோயும், கொழுப்பு நோயும், உடல் பருமன் நோயும் மாத்திரைகளால் கொண்டாடப்படுகின்றன. நோயே அல்லாத ஒன்றை மாத்திரை எனும் மருந்தால் தீர்ந்தால் நல்லது என்று நினைக்க, அது மென்மேலும் நோய்களை உடலில் உண்டு பண்ணிக் கொண்டு மென்மேலும் மாத்திரைப் பசி கொண்டும், மருந்துகளின் ருசி கொண்டும் அலைகிறது.
            உடல் உழைப்புக்குக் கணிசமான நேரம் ஒதுக்குவது உடம்பை மட்டுமா வளப்படுத்துகிறது? உற்பத்தியை வளப்படுத்துகிறது. சுய தேவையைத் தானே பூர்த்திச் செய்து கொள்ளும் ஒழுங்கைக் கற்றுத் தருகிறது. சுற்றுச்சூழலைக் காக்கிறது. குறைந்து போன மனித உடல் உழைப்புதாம், பெருகிப் போன மனித நோய்களுக்குப் பெரும் காரணமாக இருக்கிறது.
            இந்த வியாதிகள் உடல் சார்ந்து உழைக்க வேண்டும் என்ற எச்சரிக்கை மணியை அடிப்பதைத்தான் மனிதச் சமூகம் தவறாகப் புரிந்து கொண்டு அதற்கு மருந்து, மாத்திரைகள் மூலம் சிகிச்சை எடுக்கிறது. பெரும்பாலான தற்கால வியாதிகள் மருந்தில்லா மருந்தான உடல் உழைப்பைத்தான் மருந்தாக எதிர்பார்க்கின்றன. அதுவும் கடையில் வாங்கும் பண்டச் சரக்காகக் கிடைத்தால் தேவலாம் என்று நினைக்கிறது இக்கால மனிதச் சமூகம்.
            வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் வரையுள்ள பணியிடத்துக்கு ஒருவர் நடந்தே செல்லலாம். பத்து கிலோ மீட்டர் வரையுள்ள பணியிடத்துக்கு ஒருவர் மிதிவண்டியில் செல்லலாம் எனும் போது அதற்கான நமது நேரம் வேகமாகச் செல்லும் வாகனங்களின் கவர்ச்சியிலும், சொகுசிலும் தொலைந்து போகிறது. காசு பணம் மிச்சமாவது மட்டும் இதில் கணக்கில் சேர்வதில்லை. உடல் நலம் காக்கப்படுவதும், வியாதிகளின் எண்ணிக்கை மிச்சப்படுவதும், உடல் உறுதி மேம்படுவதும் கணக்கில் சேர்கிறது. எரிபொருளை நிரப்பாமல் மேற்கொள்ளும் இப்பயணத்தால் சுற்றுச்சூழலில் கலக்கப் போகும் நச்சுக் காற்று உருவாகமலே தடுக்கப்படுகிறது. காற்று மாசுக்கு நம் பங்களிப்பு இல்லாமல் போகிறது. நடக்கும் போதும், மிதிவண்டியில் போகும் போதும் மனதில் உண்டாகும் மாற்றங்கள் சொல்லில் வரைய முடியாத வகை.
            நடக்க நடக்க வாழ்வில் ஏதோ ஒன்று நடக்கிறது.
            மிதிவண்டியை மிதிக்க மிதிக்க ஆரோக்கிய சக்கரம் வேகமாகச் சுழல்கிறது.
            நடக்கத்தான் கால்கள். வீசத்தான் கைகள். கால்கள் நடக்க, கைகள் வீச நடக்கும் அந்த நடையில் உடலின் இயக்கம் முழுமையாக நடைபெறுகிறது. உலகின் இயக்கமும் மானுட சமூகத்துக்கு நோயின்றி நடைபெறுகிறது. அப்படி நடக்க நடக்க வியாதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெறுகிறது.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...