11 Aug 2019

மிக மிக எளிமையான காய்கறிச் சாகுபடி



            உலகத்தில் மிக எளிமையான காய்கறி என்றால் அது கீரைதான். எளிமையான காய்கறிச் சாகுபடி என்றாலும் அது கீரை வளர்ப்புதான். மற்ற காய்கறிகளைப் பயிரிட மெனக்கெடுவது போல இதற்கு எந்த மெனக்கெடலும் தேவையில்லை. வீட்டைச் சுற்றி இடமே இல்லாவிட்டாலும் ஒரு தொட்டியை வாங்கி வைத்தோ அல்லது ஒரு சாக்கில் மண்ணைக் கொட்டி வைத்தோ தெளித்து விட்டால் அது பாட்டுக்கு வளரும்.
            கிராமத்துப் பாட்டிகள் இந்த விசயத்தில் கில்லாடிகள். எப்படியும் வீட்டுக்கு வேலி என்ற ஒன்று இருந்தாக வேண்டும். அந்த வேலிப் போத்தில் அப்படியும் இப்படியுமாக பத்து பதினைந்து முருங்கைப் போத்துகளை நட்டு விடுவார்கள். அதில் எப்படியும் நான்கைந்து தேறிக் கொள்ளும். வருஷம் முழுமைக்கும் முருங்கை கீரை அதிலிருந்து வந்து விடும். முருங்கைக்காய் கூடுதல் உபயம்.
            கொத்துமல்லி, புதினா, தண்டுகீரை இவைகளைப் போட்டு வைத்து சமையலை மணக்க வைத்து விடுவார்கள். இதற்கென கொல்லைப் புறத்தில் இடத்தைத் தயார் செய்து அதைப் பயிர் செய்வதுதான் பாட்டிகளின் முக்கிய வேலை. காலையும் சாயுங்காலமும் வாசல் தெளித்துக் கோலம் போட வேண்டும் அல்லவா! அப்போது இந்தக் கீரைகளை அப்படியே நலம் விசாரிப்பது போல தண்ணீரை ஒரு தெளி ளெதித்து விட்டு அத்தோடு ஒரு பேச்சு பேசி விட்டு பொழுதைச் சுவரசியமாக்கி விடுவார்கள். வீட்டில் ஒரு பொட்டு காய்கறி இல்லையென்றாலும் தண்டுகீரையைப் பிடுங்கிப் போட்டு பிரமாதமாய்ச் சமைத்து விடுவார்கள். கொல்லையில் பார்த்தால் இதற்கென்று ஆளுயரத்துக்கு, இடுப்பு உயரத்துக்கு தண்டுகீரைகள் என்னவோ தென்னை மரம் போல நின்று கொண்டே இருக்கும்.
            மாதத்துக்கு ஒரு முறை முளைக்கீரையையும், சிறுகீரையையும் விதை போட்டு, முளைக்க வைத்து கீரை மசியல் வாரத்துக்கு இரண்டு முறை செய்து கொடுத்து விடுவார்கள். கூடுதலாக விளையும் அந்தக் கீரைகளை அக்கம் பக்கத்தில் ஐந்துக்கும், பத்துக்கும் கொடுத்து அதில் சிறுவாட்டையும் சேர்த்து விடுவார்கள்.
            கிராமத்தில் கீரை போடாத பாட்டியை பார்க்க முடிவது அபூர்வம். இப்போது கிராமத்தில் பாட்டியையும் பார்க்க முடியவில்லை. கீரையையும் பார்க்க முடியவில்லை. கிராமத்துத் தெருக்களில் கீரைக்காரர் கீரை விற்றுப் போய்க் கொண்டிருக்கிறார். வாடி வதங்கியபடி வந்து கொண்டிருக்கும் அந்தக் கீரையை சுற்றி நின்று பேரம் பேசி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள்!
            கீரை அவ்வளவு சீக்கிரமா வளரும். அவ்வளவு சீக்கரமா உடலையும் வளர்க்கும். நாம் வளர்க்க வேண்டுமே! அப்படி வளர்த்தால் கொஞ்சம் குனிந்து நிமிர்ந்து வேலை பார்த்த மாதிரியும் இருக்கும்! வீட்டுக்குக் காய்கறியும் கிடைத்த மாதிரியும் இருக்கும்! உணவில் சத்தான கீரையைச் சேர்த்த மாதிரியும் இருக்கும்!
            நாம் விளைவித்த கீரையைப் பறித்து நாமே சுவைத்துச் சாப்பிடுவதைப் போல இந்த உலகில் அமுதமும் வேறொன்று இருக்குமா என்ன!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...