செய்யு - 169
முருகு மாமாவுக்கு ரெண்டாவது ஆம்பிளை பிள்ளைதான்
வீரன். முருகு மாமாவின் குல தெய்வமான வீரஞ் சாமி நினைவாகவும், முருகு மாமாவின் அப்பா
வீராச்சாமி நினைவாகவும் இடப்பட்ட பெயர் இந்த வீரன். இந்த வீரன் மேல் மட்டும் முருகு
மாமாவுக்கு தனிப் பிரியம் உண்டு. முருகு மாமா பிரியம் வைத்தாலும் வீட்டில் சவளைப் பிள்ளைக்
கணக்காய்தான் இருந்தது வீரன். இத்தனைக்கும் சாப்பாடு ஒன்றும் கொறைச்சல் இல்லை. பொங்கி
வைத்தால் நாலு குண்டான் சோறு சாப்பிடும். அதன் வயிறு என்னவோ பாம்பு வயிறு என்று பார்ப்பவர்கள்
எல்லாம் சொல்வார்கள். ஊரிலோ, சொந்தப் பந்தத்திலோ ஒரு விஷேசம் என்றால் பந்திப் பரிமாறும்
வேலைக்கு முதல் ஆளாய்ப் போய் நின்று விடும் வீரன். பரிமாறி முடித்து விட்டுச் சாப்பிட்டது
என்றால் பத்து ஆள் சாப்பிட வேண்டிய சாப்பாட்டை ஒத்த ஆளாய்ச் சாப்பிடும். அம்புட்டுச்
சாப்பிட்டும் வயிறு கொஞ்சமாவது பெருத்திருக்க வேண்டுமே! ம்ஹூம்! என்னவோ பட்டினிக்
கெடந்த வயிறு கணக்காய் அப்படியேத்தான் இருக்கும் இன்னும் பத்து ஆளு சாப்பிட வேண்டிய
சாப்பாட்டை உள்ளே தள்ளலாம் என்ற அளவுக்கு.
பிறந்ததிலிருந்து இன்று வரை அதே ஒல்லியான
தேகம்தான் வீரனுக்கு. ஒரு பிட்டு சதை கூட வைக்கவில்லை உடம்பில். ஒரு பிட்டுச் சதையை
அதன் உடம்பில் கிள்ளி பிடித்து விட்டால் உங்களுக்குக் கட்டாயம் ஒரு கோடி பரிசு கொடுக்கலாம். இப்படி ஒடம்பு சிறுத்து இருந்ததால் சிறுத்து சிறுத்து
என்று ஆளாளுக்குக் கூப்பிட்டு நாளடைவில் சிறுத்து என்பது சித்தாகிப் போனது. வழக்கமாக
இது போன்ற பட்டப்பெயர்கள் வைத்தால் பிள்ளைகளுக்குப் பிடிக்காது. வீரனுக்கு இந்த விசயத்தில்
வித்தியாசமாக சித்து என்ற பெயர் பிடித்துப் போய் விட்டது. எந்த அளவுக்கு பிடித்துப்
போனது என்றால் பள்ளிக்கூடத்தில் சேர்த்த போது பெயரையே சித்துவீரன் என்று சேர்க்கும்
அளவுக்குப் பிடித்துப் போய் விட்டது. இப்படியாக வீரனாக இருந்த முருகு மாமாவின் பிள்ளை
சித்துவீரனாக பெயர் பெற்றது.
சித்துவீரனுக்குப் பேச்சு கொஞ்சம் துடிப்பாகவும்,
தடிப்பாகவும் இருக்கும். யாராக இருந்தாலும் எடுத்தெறிந்துப் பேசும் பேச்சுதான்.
"என்னடா பயலே? சாப்பிட்டீயா? எப்டி இருக்கே?" என்று கேட்டால் போதும்,
"ஏம் நீ சாப்பாடு போடப் போறீயா? ஒம் வூட்டுச் சாப்பாட்ட சொரிநாயி இருக்கே!
அது திங்குமா? நாம்ம எப்டி இருந்தா ஒனக்கென்ன? ந்நல்லா இல்லன்னா இந்தாடாம்பி லட்ச ரூவா
பணம். போயி ந்நல்லா சாப்பிடுன்னு பணம் கொடுக்கப் போறீயா? போறீயா ஒம்ம வேலயப் பார்த்துகிட்டு.
ச்சும்மா பேசணும்னே பேசுறது!" என்று ஒரு பிடி பிடிக்கும் சித்து வீரன். பள்ளிக்கூடத்திலும்
இதே கணக்காய்ப் பேசிக் கொண்டு எத்தனை நாட்கள் இருக்க முடியும்? ஒரு கட்டத்தில் அப்படித்
துடுக்குத்தனமாய்ப் பேசியதற்காக அடிக்க ஆரம்பித்தார்கள் வாத்தியார்மார்கள். அந்தப்
பேச்சையும் நிறுத்த முடியவில்லை, வாத்தியார்மார்களின் அடியையும் தாங்க முடியவில்லை
என்று ஆறாம் வகுப்பில் ஓடி வந்த அந்தக் கதையைக் கேட்டால்...
"ஏம்டா வூட்டுப்பாடம் பண்ணலே?"
என்று வாத்தியார்மார் கேட்டிருக்கிறார். "நாம் வூட்டுல போயி பாடம் பண்ணிட்டு
படிச்சிட்டு வாரதுக்குப் பள்ளிக்கூடத்துல ஒமக்கு எதுக்கும்ய்யா சம்பளம் கொடுத்து வாத்தியாரா
வெச்சிருக்காம் கவருமெண்டு. வூட்டுல போனா நாம்ம எம்ம வூட்டுவேலய பாக்குறதா? ஒம்ம பள்ளிக்கூடத்து
வேலய பாக்குறதா? ஏம்ய்யா நீங்கலாம் வூட்டுக்குப் போனா பள்ளிக்கூடத்து வேலயயா பாக்குறீங்க?
ஒங்க வூட்டு வேலயத்தாம்ன்ய்யா பாக்குறீங்க?" என்று அடித்துக் கேட்ட வாத்தியாரை
கம்பைப் பிடித்துக் கொண்டு கேட்டிருக்கிறது சித்துவீரன். இவன் ஒருத்தன் இப்பிடிக்
கிளம்பினால் ஒட்டுமொத்த வகுப்பும் அப்பிடியே கிளம்பி விட்டால் எப்பிடி சமாளிப்பது
என்று யோசித்து அந்த வாத்தியார் கம்பைப் பிடித்துக் கொண்டிருந்த சித்துவீரனின் கையிலிருந்து
கம்பை உருவி எடுத்துப் போட்டு விளாசித் தள்ளியிருக்கிறார். அந்த விளாசலுக்குப் பிறகு சைக்கிளில் போன அந்த
வாத்தியாரை அவருக்குத் தெரியாமல் ரோட்டோர மரத்துக்குப் பின் மறைந்து நின்று கல்லெறிந்து
மண்டையை உடைத்த சாகச வீரத்தோடு படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டது சித்துவீரன்.
அத்தோடு நின்று போனது அதன் படிப்பு. அப்புறம் என்ன? சந்தோஷமாய் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தது
சித்துவீரன்.
இருபத்தைந்து வயது வரையிலும் சித்துவீரனை
என்னடா இப்படி ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாயே என்று யாராலும் கேட்க முடியவில்லை.
"இப்பிடி ஊரைச் சுத்துறதுக்கு வேலையைக் கத்துகிட்டா நல்லா இருக்குமே!" என்று
லாலு மாமாதான் ஒருமுறைக் கேட்டுப் பார்த்தது. "இதல்லாம் ஒரு வேலையா? ஒரு நாளு
கவனிச்சேம்னா போதும். பட்டைய கெளப்பிடுவேம்! முட்டாப் பயதாம் இந்த வேலைய நாலைஞ்சு
வருஷம் அலைஞ்சு திரிஞ்சி அடிமையா கெடந்து கத்துப்பாம்!" என்றிருக்கிறது சித்துவீரன்.
"சரி! பையன் வெவரமாத்தான் இருக்குறான்!" என்று விட்டு விட்டது லாலு மாமாவும்.
இந்த நாட்கள்தான் ஒரே மாதிரியாகப் போகிறதா
என்ன? தீடீரென்று ஏதோ ஒரு நாளுக்குக் கிறுக்குப் பிடிச்ச மாதிரி, திடீரென்று அந்த
ஒரு நாளில் முருகு மாமாவுக்கு முன்னாடி வந்து, "பாரீன் போவணும். பணம் கொடு!"
என்றது சித்துவீரன். பையனுக்குப் பொறுப்பு வந்ததே என்று முருகு மாமாவுக்கு சந்தோஷம்
தாங்கல. அந்த சந்தோஷத்தோடேயே கையில இருந்த காசையும் போட்டு அங்க இங்கன்னு கடனை வாங்கிப்
பணத்தை ஏற்பாடு செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தது.
துபாய் போன சித்துவீரன் அந்தப் துபாயையே
மயக்குற மற்றும் மயக்குற அளவுக்கு அங்கிருந்து போனில் பேசுவது போலவும், பெரிய பெரிய
கட்டிடங்களுக்கு முன் பற்பல இடங்களில் ஸ்டைலாய் நின்று கொண்டிருப்பது போலவும் போட்டாக்களாய் எடுத்து அனுப்பித் தள்ளிக் கொண்டிருந்தது.
இவ்வேம் துபாய்க்கு வேலைக்குப் போனான்னா? சினிமா சூட்டிங் எடுக்கப் போனான்னான்னு
ஆளாளுக்குச் சந்தேகம்தான். ஏன் அப்படி போட்டாக்களாய் அனுப்பித் தள்ளிக் கொண்டிருந்தது
என்பது பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தாவின் மகளான சுந்தரிக்கே வெளிச்சம். அந்தப் போட்டாக்களைப்
பார்த்த சொந்தக்கார சனங்கள் எல்லாம், "நம்ம சனத்துல மொத மொதல்ல போனுல பேசுன
ஆளு இவம்தாம்டா! நம்ம வமிசத்துக்கே புதுப்பெரும தேடிக் கொடுத்துட்டான்!" என்று
பார்த்து புல்லரித்துப் போனது. பெரும் பெரும் கட்டிடங்கள் முன் நின்று எடுத்துக் கொண்ட
போட்டாக்களைப் பார்த்து பெரும்வேலையில் போய் சேர்ந்திருப்பான் போலிருக்கிறது என்றும்
விடாமல் பேசிக் கொண்டது.
இவ்வளவு பெருமைப்பட பேச வைத்த சித்துவீரன்
பாரீன்லிருந்து திரும்பி வந்த போது, "பயணத்துக்கு வாங்குன கடனை அடைக்கணும்டா!
நீ யென்னடா வெளிநாடு போயி பணம் அனுப்பவன்னு பார்த்தா, போட்டோவா அனுப்பிட்டு இருக்கே.
கடங்காரனுக்குப் பணத்தைக் கொடுக்குறதா? போட்டாவைக் கொடுக்குறதா? இப்ப பயணத்திலேர்ந்து
வந்திருக்கீயே? எம்மாம் பணம் வெச்சிருக்கே?" என்றது முருகு மாமா.
"பணமா? அதெல்லாம் ப்பூ! அப்போ பணம்
சம்பாதிக்க வெக்கிறதுக்குதாம் பெத்தியா? நாம்ம ன்னா ஒனக்கு பணம் காய்ச்சி மிஷினா? ஏம்
யெல்லா அப்பனுங்களும் இப்டி இருக்கீங்களோ! புள்ளைகங்கள ரசிச்சி வாழ வுடுங்கய்யா!"
என்று கையை விரித்துக் காட்டியிருக்கிறது சித்துவீரன்.
"ரண்டு வருஷமா சம்பாதிக்காம ன்னடா
பண்ணே? ரசிச்சுகிட்டே இருந்தீயா? அப்டியே ரசிச்சுகிட்டே அஞ்ஞயே கெடந்துட வேண்டியதுதாமே.
இஞ்ஞ ஏம்டா வந்தே?" என்றது முருகு மாமா.
"சம்பாதிச்சா பாரீன்ல செலவு இல்லியா?
சாப்புட வாணாமா? துணி மணி எடுத்துக்க வாணாமா? அஞ்ஞ இஞ்ஞ போக வாணாமா? அதுக்குல்லாம்
யாரு பைசா தருவா? அனுப்புன போட்டோ எல்லாத்தியும் இப்டி பிரேம் பண்ணி மாட்டிருக்கீயே!
அந்த போட்டோ எடுக்குறதுக்கு எம்மாம் செலவு ஆயிருக்குத் தெரியுமா? நீயென்னமோ பிளைட்டு
பிடிக்க காசு கொடுத்து அனுப்பிச்சிட்டே. அஞ்ஞ செலவுக்கு ஒத்த பைசா தந்தீயா? அஞ்ஞப்
போயி எறங்கி செலவுக்கு எம்மாம் கஷ்டப்பட்டுப் போயிட்டேம் தெரியுமா? எனக்குச் சரியா
வேல தெரியலேன்னு ரொம்ப நாளய்க்கு ஹெல்ப்பராவே வெச்சிகிட்டு சரியா சம்பளமே கொடுக்கலே
தெரியுமா? மனுஷம் உசுரோடப் போயி சாவாம திரும்பி வந்திருக்கேம்னு சந்தோஷப்படறத வுட்டுப்புட்டு
பணம் வாரலியேன்னு வெசனம் காட்டுறீயே!" என்றிருக்கிறது சித்துவீரன்.
"ஏலே! ஒன்னய வெளிநாட்டுக்கு ஊரு சுத்திப்
பார்க்கவும், சினிமா சூட்டிங்கு பண்ணவுமா அனுப்பி வெச்சேம்? பைசா பாக்கத்தாம்டா அனுப்பி
வெச்சேம்! பயணம் போவணும்னு பைசா வேணும்னு கேட்டப்ப புள்ளைக்குப் புத்தி வந்திடுச்சு
பொழைச்சுக்கும்னு நெனைச்சா இப்டி பொழைக்கத் தெரியாத பய கணக்கா வந்து நிக்குறீயே!
அடேய் பயணம் போய்ட்டு வந்துட்டா ஆயிடுமா? பைசா சம்பாதிச்சு வந்தாதாம்டா பிரயோஜனம்.
வெறும் பய கணக்கா வந்து நின்னா அதுக்கு எதுக்குடா அஞ்ஞப் போகணும். இஞ்ஞயே தண்டச்சோறு
தின்னுட்டுக் கெடந்திருக்கலாம்டா. பைசாவாவது மிச்சமாயிருக்கும்!" என்றது முருகு
மாமா.
"வேல தெரிஞ்சிப் போயிருந்தா ந்நல்லா
சம்பாதிச்சிருக்கலாம்!"
"ஒன்னய யாருடா வேலய தெரிஞ்சிக்க வாணாம்னு
சொன்னது? ஊருல இருந்த மட்டும் தண்டச்சோறு கணக்கா ஊர சுத்திட்டுத் திரிஞ்சே! ஒரு நாளு
பாத்தா போதும்னு வேலய அசால்ட்டா கத்துப்பேம்னு லாலுட்ட கேட்டப்ப சொல்லிருக்கே. அது
சரி! ஊருலேந்து போறப் பயல்லாம் வேலய கத்துகிட்டாடா போறாம்? அஞ்ஞ போயி நெலமைக்குத்
தகுந்த மாரி கத்துக்க வேண்டியதுதாம்டா! என்னம்மோ எல்லா பயலும் பொறற்தப்பயே எல்லாத்தியும்
கத்துகிட்டு பொறந்த மாதிரில்ல பேசுறாம். இது ஒரு வெளக்கம்னு சொல்ல வந்திட்டே! ஒனக்கெல்லாம்
எவம்டா பொண்ணு கொடுப்பாம்? எப்டிடா ஒனக்குக் கல்யாணத்த கருமாதிய பண்றது?" என்றிருக்கிறது
முருகு மாமா.
"ஏதோ அப்பனாச்சே! பாரீனு போறதுக்குப்
பணம் தந்தீயேன்னு நெனைச்சுதாம் மரியாதையா பேசிட்டு இருக்கேம். நீயொன்றும் கல்யாணத்தயும்
கருமாதியயும் பண்ண வாணாம். நாமளே பண்ணிப்பேம். நீ ஒரு பொண்ண பாத்து கல்யாணத்த பண்ணி
வெச்சிட்டு பெறவு குடும்பம் நடத்தத் தெரியலேன்னு வந்து நொட்டுறதுக்கா?" என்றிருக்கிறது
சித்துவீரன். முருகு மாமாவுக்கு அப்படியே ஜிவ்வென்று ஏறியிருக்கிறது கோபம்.
"டேய் நாயே! பயணத்துக்கு ஆன செலவ
எடுத்து வெச்சிட்டு மறுபேச்சுப் பேசுடா!" என்றிருக்கிறது.
"சொத்துல நமக்கு உள்ள பங்கு இருக்குல்ல.
அதெ வித்து எடுத்துக்கோ. ஒங்கிட்ட எம் பங்குன்னு நயா பைசா கேக்க மாட்டேம்." என்றிருக்கிறது
சித்துவீரன்.
"ஏம்டா அப்பன் சொத்துல திங்கணும்னு
நெனைக்குறீயே! எவனோ எடுத்த வாந்திய நக்கணும்னு நிக்குறீயே! ஒனக்கு வெட்கமா இல்லியா?"
"நீ மட்டும் ன்னா யோக்கியதையா? எவனோ
பேண்ட பீயத்தான திங்குறே! எம்ம பாட்டனோட சொத்த ஒருத்தனுக்கு ஒண்ணு கொடுக்காமா அள்ளிப்
போட்டுகிட்டு தின்னையே! ஒனக்கு வெட்கமா இல்லியா? அப்பனுக்கு யில்லாத வெக்கம் புள்ளைக்கு
மட்டும் எப்டிய்யா வரும்?" என்றிருக்கிறது சித்துவீரன்.
அதற்கு மேல் பேசுவது உசிதமில்லை என்று
அதன் பிறகு பேச்சை நிறுத்தியது முருகு மாமா. மனசுக்குள், "எக்கேடோ கெட்டுப் போ!"
என்று அதற்கு மட்டும் கேட்கும் அளவுக்கு முணுகிக் கொண்டது.
பிறவு ஒரு ரெண்டு வருஷம் ஊரிலே கிடந்து
அப்படி இப்படி என்று தச்சு ஆசாரி வேலைக்குப் போயி மறுபடியும் பாரீன் கிளம்பிப் போன
சித்துவீரன் இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறது. திரும்பி வந்த சித்துவீரன் பாரீனில்
தச்சுஆசாரி வேலைக்குப் பயன்படுத்தும் எல்லா மிஷின்களையும் கொண்டு வந்து அதை வைத்துதான்
வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. கரண்டில் ப்ளக்கைச் செருகி விட்டு ஸ்விட்சைப் போட்டு
துளை போடும் மிஷினால் அது துளை போடுவதைப் பார்க்கவே நெடுநாட்கள் அதைச் சுற்றி ஒரு
கூட்டம் கூடிக் கொண்டிருந்தது. "மனுஷனோட துணையில்லாம மெஷினே வேலைப் பாக்குதுன்னா...
பாரின்லாம் முன்னேறுறாம்னா அதுக்கு இதுதாம்யா காரணம்!" என்று அதைப் பார்த்தவனெல்லாம்
அளந்து விட்டுக் கொண்டிருந்தான். அது வைத்திருந்த ஆணி அடிக்கும் சுத்தியலே வித்தியமாக
இருந்தது. சுத்தியலின் கைப்பிடி நீளமாக முழுவதும் இரும்பால் ஆனதாக கைப்பிடியில் பிடித்துக்
கொள்வதற்கென்று ரப்பரில் மோல்டிங்கெல்லாம் வைத்து அம்சமாக இருந்தது. "நம்மூரு
சுத்தியல்னா பத்து இறுக்கு இறுக்கணும். இதுன்னா ரெண்டே இறுக்குதான். ஆணி பட்டுன்னு
எறங்கிப் படிஞ்சிடும். வெளிநாட்டுக்காரன் வெளிநாட்டுக்காரன்தான். அவம்தான் மூளைக்காரன்.
நம்ம பயல்களெல்லாம் சும்மா. சாம்பார குடிச்சுகிட்டு சம்பாரு சட்டி கணக்கா கெடக்கத்தாம்
லாயக்கு. சோத்த தின்னுகிட்டு வெறும் குண்டானா படுத்துக் கெடக்கத்தான் லாயக்கு. கண்டுபிடிச்சா
அவனுங்க மாதிரில்ல கண்டுபிடிக்கணும்." என்று அதைக் காட்டிக் கொண்டு விளக்கமும்
கொடுக்கும் சித்துவீரன்.
முதல் முறை துபாய் போய் அதை நன்றாக அனுபவித்து
விட்டு, ரெண்டாவது முறைப் போனதில் பணம் சம்பாதித்துக் கொண்டு வந்திருக்கும் போல
சித்துவீரன். வடவாதி பஸ் ஸ்டேண்டு பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டை வாங்கிப் போட்டது.
அத்தோடு அதுக்கு எதிரே இருந்த இடத்தையும் வாங்கிப் போட்டு ஒரு தச்சுப் பட்டறையையும்
போட்டுக் கொண்டது.
பையன் ஏதோ கொஞ்சம் புத்தியாய்ப் பொழைத்துக்
கொண்டான் என்று இப்போதுதான் முருகு மாமாவுக்குத் திருப்தியாய் இருந்தது. ரகு சர்க்கரை
ஆலையில் வேலையில் இருக்க, சித்துவீரன் வூட்டை வாங்கி பட்டறையைப் போட்டதும் ரெண்டு
பேருக்கும் கல்யாணம் பண்ணி விட வேண்டும் என்று நினைத்தது முருகு மாமா. அதற்கு முன்
தேசிகாவின் கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று நினைத்துதான் நிலைமை இப்படி ஆகி
விட்டது. தேசிகாவுக்குக் கல்யாணம் ஆன போது சித்துவீரன் துபாயில் இருந்தது. அது வந்த
நேரம் தேசிகா இறந்து பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. இப்போது பஞ்சாயத்துக்கும்
பெரிய மனுஷன் கணக்காய்க் கிளம்பியும் விட்டிருக்கிறது.
*****
No comments:
Post a Comment