மனிதன் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறான்.
அதற்கேற்றபடி செய்வதற்கான சந்தர்ப்பங்களோ, சூழ்நிலைகளோ இல்லை. வேலைகள் வந்து வந்து
குமிகின்றன. எந்த வேலையை எப்படிச் செய்வது, எப்போது செய்வது என்று புரிவதில்லை.
சுற்றியுள்ள மனிதர்கள் வேறு எப்போது பார்த்தாலும்
நெகட்டிவாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எரிச்சலாக அடைகிறான். அந்த எரிச்சலைக் காட்டி
விட முடியாது. காட்டினால் அதை விட பேரரிச்சல் அடைந்து அவனைச் சுற்றியிருப்பவர்கள் அவனை எரிந்து விடுகிறார்கள். இம்சைதான். இந்த இம்சைகளைத்
தாங்கிக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை என்றாகி விட்டது என்று அவன் புலம்பத் தொடங்குகிறான்.
சலிப்பும், துயரும்தான் இந்த வாழ்க்கையில்
மிஞ்சுகின்றன. இதற்காகவா இவ்வளவு போராடுகிறேன் என்றாகி விடுகிறது அவனுக்கு.
இதில் யாரையும் குறை சொல்லி எதுவும் ஆகப்
போவதில்லை. சுற்றியிருப்பவர்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அது அவர்களது சுபாவம் ஆகி விட்டது. அதைச் சகித்துக் கொள்ள முடியாதது துன்னுடைய சுபாவமாகி
விட்டதா என அவனுக்குப் பயமாக இருக்கிறது.
யாருடைய மனநிலையையும் மாற்றி விட முடியும்
என்று அவனுக்கு நம்பிக்கையில்லை. அவரவர்களுக்கு அவரவர் மனநிலை ஒரு பாதுகாப்பு வளையத்தைப்
போல இருக்கும் போலிருக்கிறது. அதை உடைத்து அதிலிருந்து அவர்களை மீட்பது என்பது அசாதாரணம்.
பரிதாபகரமான நிலையில் இருப்பதற்காகவே ஒவ்வொருவரும்
தங்களது மனநிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். அப்படி உருவாக்கிக் கொண்டு தங்களைக்
காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் கூக்குரலிடுகிறார்கள். அவர்களின் மனநிலையை உடைக்காமல்
அவர்களைக் காப்பாற்ற முடியாது என்பது புரிகிறது அவனுக்கு. அவர்களைப் பொருத்த வரையில்
அவர்களின் மனநிலையும் உடையக் கூடாது. பரிதாபகரமான நிலையிலிருந்தும் அவர்கள் வெளியே
வர வேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் ஒன்றாகச் செய்வது என்பது இயலாதது. அதனால்தான்
இந்த உலகில் யாரும் யாராலும் மீட்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவரவர்களாகப்
பார்த்து அவரவர்களை மீட்டுக் கொண்டால்தான் உண்டு என்பது அவனுக்குப் புரிகிறது.
மனிதன் தன்னை மீட்டுக் கொள்ள முடியுமா
என்று பார்க்கிறான். முதன் முறையாக தனக்குத் தானே உபதேசித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை
உணர்கிறான். யாருடைய உபதேசத்தையும் யாரும் கேட்பதில்லை என்பதை அவன் தன் மனதை வைத்தேப்
புரிந்து கொள்கிறான். உபதேசத்தை நிறுத்திக் கொண்டு பார்க்கிறான்.
எதையும் தவிர்க்க முடியாது என்பதையும்
அததை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்பது பிடிபடுகிறது. அவனால் முடிந்தவற்றை எதிர்கொள்கிறான்.
முடியாதவற்றை விட்டு விடுகிறான். யாரும் அவனைக் கண்டுகொள்வதில்லை என்பது இப்போதுதான்
அவனுக்குப் புரிகிறது. அவனும் இப்போதும் யாரையும் கண்டுகொள்வதில்லை.
*****
No comments:
Post a Comment