22 Aug 2019

அலங்குது கலங்குது!



செய்யு - 184
            சுந்தரி இப்போ தனியா வடவாதி பஸ் ஸ்டேண்டு பக்கத்துல இருக்குற வூட்டுல இருக்கு. ஆனா, சுந்தரிக்கு அப்பிடி தனியா இருக்குற தவிப்புல்லாம் இல்ல. அது ரொம்பவே சந்தோஷமாவே இருந்துச்சின்னு சொல்லலாம். சுந்தரிக்குக் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகியிருக்கும். அப்போ அது மாசமா இருக்குன்னு லாலு மாமா திருச்சில இருக்குற தன்னோட மூத்த மவளான ஈஸ்வரி வூட்டுல வெச்சி பலகாரமெல்லாம் செஞ்சிக் கொடுத்து, கோழி கறி எடுத்து குழம்பு வெச்சிக் கொடுத்து சாப்பிட வெச்சி, தஞ்சாவூர்லயும் தங்கூட ரெண்டு நாள் வெச்சிருந்துச்சு. வயித்துப் புள்ளக்காரி மனசு ஏங்கி தவிச்சிடக் கூடாதுன்னு லாலு மாமாவுக்கு ஒரு நெனைப்பு. அதுவும் புருஷங்காரன் வேற பக்கத்துல இல்லையா! அந்த நெனைப்பு எதுவும் வந்துடக் கூடாதுன்னு இப்படில்லாம் மெனக்கெட்டு லாலு மாமா பண்ணிச்சி. சரசு ஆத்தாவோட நெலைமை அங்க பாக்குக்கோட்டையில எப்பிடின்னு ஒங்களுக்குத் தெரியும். அங்க கொண்டு போயி வெச்சி அதைக் கஷ்டப்படுத்துறதை விட வடவாதியிலயே சுந்தரிய செளகரியமா இருக்க விட்டுடலாம்னு அது நெனைச்சுகிட்டு வந்து பாக்குறதும், போவறதுமா சரசு ஆத்தா இருந்துக்குது.
            லாலு மாமா இப்பிடின்னா முருகு மாமா அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்க்கல. நீலு அத்தையும் அப்பிடித்தான் இருக்குது. பொதுவா என்ன சண்டைன்னாலும் இந்த வட்டாரத்துல ஆம்பிளைக எட்டிப் பார்க்காட்டியும், பொம்பளைக ஆம்பிளைகளுக்குத் தெரியாம எட்டிப் பார்த்துட்டு ரெண்டு வார்த்த நல்லவிதமா சொல்லிப்புட்டு, ரெண்டு சொட்டு கண்ணுத் தண்ணிய சிந்திட்டு, அப்படியே அதோட மூக்கு ஓட்டை வழியா சேர்ந்து வர்ற மூக்கு சளிய சுவத்துல தொடச்சி விட்டுட்டுதான் வருவாங்க.  நீலு அத்தைக்கு சித்துவீரனையும், சுந்தரியையும் பொருத்த வரைக்கும் மனசு கல்லா போயிருட்டுது போலருக்கு. ஊருல எந்த நாயி எந்தக் குட்டிப் போட்டா என்னா? எவ வூட்டு ஆடு எந்த ஆட்டுக் குட்டிய போட்டா என்னா? அப்பிடிங்ற மாதிரி பிடிவாதமா உட்கார்ந்திருக்கு. போயி பார்க்க மனசு இல்ல.
            எவ வந்து பார்க்காட்டியும் எனக்கென்ன? யாரு வந்து விசாரிக்கட்டியும் எனக்கென்ன? அப்பிடின்னு சுந்தரியும் இங்க கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கு. ஆனாலும் இவ்வளவு சின்ன வயசுல வயித்துப்புள்ளகாரியா இவ்ளோ அழுத்தமா இருக்குறதுங்றது ரொம்ப சிரமந்தான். வயித்துல புள்ள தரிச்ச உடனயே பொண்ணுங்களுக்கு ஒரு பயம் தன்னை அறியாம வந்துடும். அப்போ புருஷங்காரன், மாமனாரு, மாமியாருல்லாம் பக்கத்துலயே இருக்கணும்னு அதோட மனசு நெனைக்கும். பெத்த ஆயியும், அப்பனும், உடன்பொறந்த சனங்களும் அடிக்கடி வந்து பார்க்கணும்னு ஒரு எண்ணம் தோணிகிட்டே இருக்கும். நல்லவிதமாக கொழந்தைப் பொறந்துடும்னு ஒரு நம்பிக்கை இருந்தாலும், எங்கே பிரசவத்துல பொட்டுன்னு போயிடுவோமோ? பொறக்கப் போற குழந்தை நல்ல விதமா வந்து பொறக்குமோன்னு ஒரு பயம் மனசுக்கு ஓரத்துலயே இருந்துகிட்டு இருக்கும். அதால வயித்துப்புள்ளக்காரியா இருக்குற பொம்பளைகள அதுங்க வயித்துக்குள்ள ஒரு புள்ள இருக்குறது தெரியாம அதையும் ஒரு புள்ள மாதிரி கவனிச்சுப்பாங்க. மனசுல ஒரு சின்ன கொறையோ, ஏக்கமோ இல்லாத அளவுக்கு சுத்தி இருக்குறவங்க கவனிக்கிற கவனிப்புல ஆயுசு பூரா இப்படி புள்ளதாச்சிக்காரியா இருந்தா போதும்னு அந்த பொண்ணுங்களே நெனைக்க ஆரம்பிச்சிடும். அப்பிடிதாம் இந்த வட்டாரங்கள்ல கவனிக்கிறது வழக்கம். அதுவும் இல்லாம ஒரு பொண்ணு வயித்துல புள்ள ஒண்ணு தரிச்சதுன்னா சொந்த பந்தத்துல இருக்குற அம்புட்டு பகையும், மனத்தாங்கலும் அழிஞ்சுப் போயி வயித்துப்புள்ளகாரிய போயி பார்க்கணுமேன்னு பலகாரத்த செஞ்சுகிட்டுக் கிளம்பிடும்ங்க இந்த சனங்க. அப்பிடி இல்லேன்னா அதுங்களோட வூட்டுக்கு கொண்டாந்து வெச்சி வெத வெதமா சமைச்சிப் போட்டு பலகாரங்கள செஞ்சிப் போட்டு அந்தப் பொண்ணு சாப்பிடுறத பாத்து மனசு மருகிப் போகுங்க.
            புள்ள தரிச்ச சேதி தெரிஞ்சா முருகு மாமாவும், நீலு அத்தையும் ஓடி வந்து பார்த்துப்பாங்கன்னு சனங்க நெனைச்சு பொய்யாப் போகுது. சரி பெரிய மாமன் பாக்காட்டியும் என்னா, சின்ன மாமன் நாமம் பார்ப்போம்னுதான் லாலு மாமா சுந்தரிய அழைச்சிகிட்டுப் போனது. அது திருச்சிக்கு அழைச்சிகிட்டுப் போயி தஞ்சாவூருக்குக் கூப்டாந்த போது அந்த நேரத்துல, அப்போ ஆயுர்வேத டாக்கடருக்குப் சென்னையில படிச்சிட்டு இருந்த வேலன் தஞ்சாவூருக்குப் படிப்புச் செலவுக்காக பணம் வாங்க வந்திருந்தான்.  அவனையும் ரண்டு நாளைக்கு தங்குடான்னு சொல்லி சுந்தரிய தஞ்சாவூரெல்லாம் சுத்திக் காட்டச் சொல்லிச்சி லாலு மாமா. அவனும் ஒரு பழைய பைக்குல அதெ அழைச்சுகிட்டு தஞ்சாவூரு பெரிய கோயிலு, அரண்மனை, சிவகங்கைப் பூங்கா, தொல்காப்பியரு சதுக்கம், மகாராஜா சில்க்ஸ், குறிஞ்சி ரெடிமேட்ஸ் அங்க இங்கன்னு சுத்திக் காட்டுறான். அவ்வேம் ஓட்டிகிட்டு இருந்த பைக்கு இருக்குல்ல, அது லாலு மாமா தஞ்சாவூரு வந்தப்போ வெலை ரொம்ப சீப்பா கெடைக்குதேன்னு வாங்கிப் போட்டது. அது ஒரு பழைய டிவியெஸ் சுசுகி பைக்.
            லாலு மாமாவுக்கு ஒரு பொருள் சீப்பாவோ, சல்லிசு வெலைக்கோ கிடைச்சிடக் கூடாது. அது உபயோகப்படுமோ படாதோன்னுல்லாம் யோசிக்காது. ஒடனே அதை வாங்கிப் போட்டுடும். இப்பிடி அது உடைஞ்சும் ஓடுற மிக்ஸி, கன்டெம்ப்ட் ஆகியும் சுத்துற கிரைண்டரு, பீரோ மாதிரி வெச்சுக்க வசதியா இருக்குற பிரிட்ஜ், துணிமணிகளைத் துவைக்காட்டியும் பரவாயில்ல அதுக்குள்ள போட்டு வெச்சிக்கலாம்னு வாங்கி வெச்சிருக்குற துணி துவைக்குற வாஷிங் மெஷின்னு ஏகப்பட்டத வீட்டுக்குள்ள வாங்கிப் போட்டு வெச்சிருக்கு. அதோட வீட்ட இப்போ போயி நீங்க பார்த்தாலும் அது பழைய காயலான் கடை ரேஞ்சுக்கு இருந்தாலும் அதெல்லாம் வீட்டுல இருக்குறத அது ஒரு பெருமையா நினைச்சுக்குது. அப்படி வாங்கிப் போட்ட சில பொருட்களல சமயத்துல இது மாதிரியே கோணபுத்திக் கணக்கா திரியுற ஒண்ணு ரெண்டு பேரு ஐம்பது, நூறுக்கு கூடுதலா வெலை கொடுத்து வாங்கிட்டுப் போற கொடுமையும் வேற நடக்குது. அப்படி யாரவாது வாங்கிட்டுப் போனா லாலு மாமா அந்த மாசம் பூரா அதையே பெருமையா சொல்லி மாய்ஞ்சிப் போயிடும்.
            வேலன் தஞ்சாரூ வந்தா அங்க, இங்க போறதுக்கு வசதியா இருக்குமேன்னு ஒரு கணக்குல்லதான் அந்தப் பைக்கை வாங்கிப் போட்டுடுச்சி லாலு மாமா. வாங்குன அதெ கொஞ்சம் லாலு மாமா சீரு பண்ணியிருக்கணும். வண்டி ஓடுற கண்டிஷன்ல இருந்தா போதும்னு வேற வேல எதையும் பார்க்கல அது. அந்த பைக்குக்கு முன்னாடி பின்னாடி ஷாக் அப்சார்லாம் போயி லோட லொடன்னு சத்தத்தோடதான் ஏதோ பேருக்கு உசுர சுமந்துகிட்டு ஓடிகிட்டு இருந்துச்சு அந்த பைக்கு. இப்போ எப்படி அந்த பைக்கு அவ்ளோ சீப்பு ரேட்டுக்குக் கிடைச்சதுங்ற சூட்சமம் ஒங்களுக்குப் புரிஞ்சிப் போயிருக்கும். லாலு மாமா இந்த பழைய பைக்க வாங்கிப் போட்டாலும், மத்தபடி தன்னோட எம்யெட்டிய தஞ்சாரூ வந்தப்போ அதயும் சேர்த்து எடுத்துட்டு வந்திடுச்சி. தஞ்சாரூல யாரும் காணாத அதிசயமாக இது மட்டும் அந்த எம்யெட்டிய ஓட்டிகிட்டுப் போவும். இதுல என்ன அதிசயம்னு கேட்டுப்புடாதீங்க. அதெ தயாரிக்கிறத அந்தக் கம்பெனிக்காரனே விட்டதுக்கு அப்புறம் லாலு மாமா அதெ ஓட்டிட்டுப் போறது அதிசயம்தானே. அநேகமாக தமிழ்நாட்டுல அத நீங்க எங்கயும் பார்க்க முடியாட்டியும் தஞ்சாரூ வந்தா லாலு மாமா ஓட்டிட்டுப் போறத பார்க்கலாம். சாதாரண எம்யெட்டியா அது. அதுலதாம் வேணி அத்தை விழுந்தும் விழாமலும் போயிருக்கு. அதுல போயிதாம் கடைசியில உசுரையும் விட்டுருக்கு. அந்த ஞாபவத்துக்கு வேற யாரா இருந்தாலும் அந்த எம்யெட்டிய வெச்சிக்க மாட்டாங்கதாம். லாலு மாமா வெச்சிருக்கிருக்குங்றது வேற விசயம்.
            வேணி அத்தைப் போயி சேர்ந்ததுக்கு அப்புறம் லாலு மாமா தஞ்சாரூக்கு வந்து இப்போ குயிலியோட இருந்தாலும் அசைவ சமையல்னா அதுதாம் சமைக்கும். மத்த நாளுகல்லதான் குயிலி சமைக்கும். அசைவ சமையல்னா ஒரு கோதாவோட களத்துல இறங்கி ரகளைப் பண்ணிப்புடும் லாலு மாமா. அதுக்கு ஒரு காரணமும் இருக்கு. அதைச் சாப்புடுறதுக்குன்னே நல்ல போதைச் சரக்கா வாங்கி வந்து சமைச்சி முடிச்சிபுட்டு  சாப்புடுறதுக்கு முன்னாடி மாய்ஞ்சி மாய்ஞ்சி குடிச்சித் தள்ளும். குடிச்சி கொஞ்ச நேரத்துக்குல்லாம் வயிறு கபகபன்னு இருக்குறதா ஒரு சவுண்டு வுடும். அசைவச் சாப்பாட்டை எடுத்து வெச்சி ஒரு புல் கட்டு கட்டும். கட்டி முடிச்சிட்டு ஒரு அரை மணி நேரம் ஆனா மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சுதுன்னா போதைச் சரக்கை ஒட்டகம் தண்ணிய இழுக்குற கணக்கா உறிஞ்சித் தள்ளிடும். அதுக்கு அப்புறம் படுத்துச்சுன்னா அவ்ளோதாம். ஆளு ப்ளாட்டுதான். எழுப்புறதுக்கு நாலு நாளு ஆயிடும். அப்படி படுக்குறதுக்கு முன்னாடி அது ஒரு வாசகம் சொல்லும் பாருங்க, "என்னதான் இருந்தாலும் திட்டையில குடிச்ச கள்ளுகுடிக்கு ஈடாகுதுடா எந்தச் சரக்கும்!" பாவந்தாம் லாலு மாமா. திட்டையில்லன்னு இல்ல, தமிழ்நாட்டுல எங்கேயும் கள்ளு இறக்குறது இல்ல. அந்தக் கள்ளு கிடைக்காத ஏக்கத்துல கூட லாலு மாமா கூடுதலா குடிச்சித் தள்ளிருக்கலாம். யாருக்குத் தெரியும் லாலு மாமாவோட மனசு!
            லாலு மாமாவோட ரெண்டாவது பொண்ணு குயிலி தஞ்சாரூர்ல பாதி நாளு, திருச்சியில அக்கா வூட்டுல பாதி நாளுன்னு இருக்கும். அது எந்த நாளுல்ல எங்க இருக்கும்னு அதுக்கே தெரியாத அளவுக்கு இங்க அங்கேன்னு மாறி மாறி இருக்கும். அத்தோட தோழிங்க யாருக்கும் கல்யாணம்னு தெரிஞ்சா அங்கேயே டேராவப் போட்டுத் தங்கிடும். சுந்தரிய திருச்சிக்கும், தஞ்சாரூக்கும் லாலு மாமா அழைச்சிட்டு வந்த நேரம் குயிலி அஞ்சல் வழியில படிக்குற படிப்புக்கு திருச்சிலேந்து பரீட்சை எழுதிட்டு இருந்ததால சுந்தரியோட சேர்ந்துகிட்டு அது தஞ்சாரூக்கு வர முடியாம போயிடுச்சி. திருச்சியில இருந்த வரைக்கும் அதுவும், ஈஸ்வரியுமா திருச்சிய சுத்திக் காட்டுனுச்சுங்க. என்னடா இது குயிலிய வெச்சி தஞ்சாவூர சுத்திக் காட்டலாம், வாய்க்கு ருசியா சமைச்சுப் போடலாம்னு நெனைச்சு அது முடியாம போயிடுச்சேன்னு நினைச்ச லாலு மாமாவுக்கு அதுக்குத் தோதா வேலன் வந்து சேர்ந்தது வசதியாப் போச்சி. அவ்வேன் தஞ்சாவூரை நல்லா பழைய பைக்குல வெச்சி சுத்திக் காட்டுறாங்றதை முன்னாடியே சொல்லியாச்சில்ல. லாலு மாமா சுந்தரி இருந்த ரெண்டு நாளுக்கும் பிராய்லர் கோழிய வாங்கிப் போட்டு வித விதமா சிக்கன் கிரேவி, சிக்கன் சிக்ஸ்டி பைவ், சிக்கன் சுக்கா, சிக்கன் பிரியாணி, கோழிக் குழம்புன்னு செஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி புரோட்டா, சப்பாத்தி, சோறு, தோசை, இட்டிலின்னு பண்ணிப் போடுது. ரெண்டு நாளுல்ல இருந்த ஆறு வேளைக்கும் அதுதாம் சாப்பாடு சுந்தரிக்கு.
            தஞ்சாவூரை அங்க இங்க சுத்திப் பாக்குறது, வேளா வேளைக்கு வூட்டுல வந்து கோழிக்கறிய ஒரு வெட்டு வெட்டுறது, இதுதாம் வேலை சுந்தரிக்கும், வேலனுக்கும். அப்படி சுத்தி பார்த்துட்டு லொடா லொடான்னு வண்டியில வர்றப்ப சுந்தரி வயித்த வலிக்குதுங்குது. வண்டிய விட்டு இறக்கி ஓர் ஓரமா கொண்டுட்டுப் போறதுக்குள்ள வயிறு கலங்குற மாதிரி இருக்குது சுந்தரிக்கு. அது கலங்குற கலக்கத்தப் பார்க்கிறப்ப அதோட கர்ப்பமே கலங்குற மாதிரிதான் இருக்குது டாக்கடருக்குப் படிக்கிற வேலனுக்கு. சுந்தரியோட முகத்துல பிரசவ வலி கண்டுட்ட வேதனை அப்பட்டமா  தெரியுது.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...