23 Aug 2019

நாவலுக்கான அணுகுமுறை உத்திகள்



            சமூகம் குறித்த காத்திரமானப் பார்வைகளை நாவல்கள் தருகின்றன. ஒருவர் எழுத்தாளர் என்று அறியப்படுவதற்கு அண்மைக் காலத்தில் நாவல் எழுதுவது அவசியம் தேவைப்படுகிறது. எழுதுவது என்று சொல்வதை விடவும் 'வாய்ஸ் டைப்பிங்'கில் டைப்பித்தும் எழுதலாம். எப்படி எழுதினாலும் அது எழுதுவதுதான். அப்படி சுமாராக ஆயிரம் பக்கங்களுக்கு எழுதினால் ஒரு நாவல் தயார். இது சற்றே அதிகம் என்றால் ஐநூறு பக்கங்கள் குறைந்தபட்சம் தேவை.
            நாவல் எழுதுவதற்கு முன் அது எவ்வகை நாவல் என்று தீர்மானிக்க வேண்டும். துப்பறியும் நாவலா? சமூக நாவலா? வரலாற்று நாவலா? மர்ம திகில் நாவலா? மாயா ஜால நாவலா? அறிவியல் புனைகதை ரீதியிலான நாவலா? என்று ஏதாவது ஒரு வகையில் தீர்மானித்துக் கொள்வது நல்லது. அப்படித் தீர்மானித்து எழுதத் துவங்கி அதில் அனைத்து வகை நாவலின் அம்சங்களையும் இணைத்து விடுவதன் மூலம் தலைசிறந்த நாவலை உருவாக்கி விட முடியும். அதாவது ஒரு துப்பறியும் நாவலுக்குள் வரலாற்றுத் தன்மை, அறிவியல் புனைகதையின் வார்ப்பு, சமூக நாவலுக்கான கூறுகள், மர்ம திகில் மாயா ஜால தன்மைகள் இப்படி பல அம்சங்கள் நிறைந்து அது எவ்வகை நாவல் என தீர்மானிப்பதில் ஒரு குழப்பம் நீடிக்க வேண்டும். தலைசிறந்த நாவல்களில் இப்படி ஒரு தன்மை இருப்பதை ஆழ்ந்து நோக்க வேண்டும்.
            நாவலின் பாத்திரங்களுக்கு பெயர் சூட்டுவது முக்கியம். குப்புசாமி சந்திரசூடன், தேவபிரகாஷ் மைத்திரேயன், கனிஷ்கா சுந்தர பாண்டியன் என்று பெயர் சூட்டப்பட வேண்டும். படித்த நாவல் மறந்தாலும் பாத்திரங்கள் மறக்காமல் இருப்பதற்கு இதெல்லாம் உதவும்.
            திடீர் மரணங்கள் மற்றும் மர்ம மரணங்கள் நாவலுக்கு முக்கியம். நாவலைச் சுவாரசியப்படுத்துவற்கும், கதை கதையாக புதுக் கதைகளை அவிழ்த்து விடுவதற்கும் மரணம்தான் நாவலுக்கு உதவக் கூடியது. நாவலில் ஒருவர் மரணித்தால் புதுப்புது கதைகள் பிறக்கும் என்பது விதி.
            அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதைக் காட்டும் வகையில் அவ்வபோது அத்தியாயங்களுக்கு இடையே ஒரு பின்னோக்கிப் பார்க்கும் நனவோடை உத்தியை நாவலில் அவ்வபோது கவனித்து நடைமுறைப்படுத்த வேண்டும். தொடர்ந்து வசனங்களாக எழுதிக் கொண்டு போகும் போது அதை மாற்றி கதைப் போக்காகவும், தொடர்ந்து கதைப் போக்காக எழுதிக் கொண்டு போகும் போது அதை மாற்றி வசனங்களாகவும் எழுதிக் கொண்டு போக வேண்டும். நாவலைப் படிப்பவர்களுக்கு எப்போது இந்த நாவல் எப்படி எழுதப்படும் என்பது எப்போதும் புரியாத புதிராகத்தான் இருக்க வேண்டும்.
            நாவலின் சில இடங்கள் ஆவணத் தன்மையோடு செல்ல வேண்டும். இதற்கென வரலாற்று புத்தகங்களைத் தேடிப் பார்த்து அதில் படிக்க முடியாத அளவுக்குச் சலிப்பாக இருக்கும் பக்கங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தாலும் சரிதான். அது பிழையென்று ஆகாது.
            நாவலில் சில இடங்களில் பிரபலமான மனிதர்களின் வடிவில் சில பாத்திரங்களை உருவாக்கி உலக விட வேண்டும். படிப்பவர்களுக்கு ஆகா இது இந்தப் பாத்திரம் அல்லவா என்று சட்டென விளங்குகிற மாதிரியும், குழப்புகிற மாதிரியும் அது இருக்க வேண்டும்.
            நாவல் முக்கால்வாசி முடியப் போகும் இடத்தில் ஒரு ஞானசூன்ய சாமியார் பாத்திரத்தைப் படைத்துச் சொல்ல வேண்டிய அறிவுரைகளையெல்லாம் சொல்லி விட்டு நாவலாசிரியனான தனக்கும், அந்த சாமியாருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிமொழியாக கொடுத்து விட வேண்டும்.
            நாவலில் நகைச்சுவை மிக முக்கியம். இதற்கென ரொம்ப மெனக்கெடாமல் அன்றாட வாழ்வில் நாம் கேட்ட கடி ஜோக்குகள், நாம் நன்கு அறிந்த நபர்கள் செய்த அபத்தமான செயல்களையே பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் கற்பனை வறட்சி ஏற்பட்டால் பழைய திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளைப் படிப்பவர்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் குட்டு வெளிப்பட்டு விட்டால் அதற்காக கலங்கி விடாமல், அக்காலத்தே அப்படி நிகழ்ந்த ஒரு சமூகவியல் நிகழ்வையே அற்றைநாள் நகைச்சுவை நடிகர்கள் நகைச்சுவையாக்கி நடித்திருக்கிறார்கள் என்று சமாளிக்கும் மனோதிடமும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
            முடிந்தால் வர்க்கப் பேதம், சாதீயம், நிறுவனமயமாதல், முதலாளித்துவம், உலகமயமாதல், தாராளமயமாதல், காலனியத்துவம், உயர்சாதி மனப்பான்மைகள், கோட்பாட்டு இசங்கள் போன்றவற்றைத் தூவி நாவல் செய்வது அதற்கு ஒரு கிளாஸிக் தன்மையைப் பெற்றுத் தர உதவும்.
            கதைப் போக்கு என்பதற்காக பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. காலையில் கண் விழித்து டாய்லெட்டு செல்லும் வரை உள்ள கால அளவுக்கு உள்ள கதை போதுமானது. அப்படி டாய்லெட் போவதற்குள் அந்தப் பாத்திரத்தின் ஐம்பது, அறுபது வருட கால வாழ்வை முன்னே, பின்னே, பின்னே, முன்னே என்று கலந்து கட்டிச் சொல்லி விட வேண்டும்.
            இந்த உத்திகள் உங்களுக்குப் போதும் என்று நினைக்கிறேன் - ஒரு நாவல் எழுதுவதற்கும், படிப்பதற்கும் இந்த உத்திகள் போதாமையாக உணர்ந்தால் எழுதுங்கள். மேலும் உத்திகள் இருக்கிறது. அதையும் தெரிந்து கொள்ளலாம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...