22 Aug 2019

கல்வியில் நிகழும் சுய அந்நியமாதல்



நீட் தேர்வு முடிவுகளால் தன்னுயிர் நீத்த மாணவிகள்
            1. அரியலூர் அனிதா (2017),
            2. விழுப்புரம் பிரதீபா (2018),
            3. திருப்பூர் ரிதுஸ்ரீ (2019),
            4. பட்டுக்கோட்டை வைஷியா (2019),
            5. கூனிமேடு மோனிஷா (2019)
                        செய்தி ஊடகங்கள் தந்த விவரங்களின் அடிப்படையில் இதுவரை ஐந்து மாணவிகள் தன்னுயிரை நீட் தேர்வு முடிவுகளை ஏற்றுக் கொள்ள இயலாமல் நீத்துள்ளனர்.
            உயிர் நீத்தவர்கள் ஐவரும் மாணவிகளாக இருப்பது யோசிக்கத் தக்கதாக இருக்கலாம். பெண்கல்வி பெறும் விகிதம் அதிகமாகிக் கொண்டு வருவதாகச் சொல்லும் சூழ்நிலையில், பொதுத்தேர்வுகளில் மாணவர்களை விடவும் மாணவிகள் அதிகமாக மதிப்பெண்களையும், தேர்ச்சி விகிதத்தையும் பெறுவதாக சொல்லப்படும் காலக் கட்டத்தில் ஒரு நுழைவுத் தேர்வுக்காக மாணவிகள் தன்னுயிர் நீத்திருப்பது கவனத்திற்குரியதாகவும் இருக்கலாம்.
            நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைப் பின்பற்ற வாய்ப்பில்லாத சூழலில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டமைப்புகள் உடைய கல்விக் கூடங்களை அமைத்துத் தராத பின்னணியில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படாத சூழ்நிலையில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பது பாரபட்சமான முடிவுகளைத் தரும் என்பதற்கான ஒன்றாகவே மேற்காணும் மாணவிகளின் தன்னுயிர் நீத்த நிகழ்வுகளைக் காண வேண்டியிருக்கிறது.
            நுழைவுத் தேர்வுகளின் தகுதி என்பதும், தகுதித் தேர்வுகளின் தகுதி என்பதும் அண்மை காலமாக அதற்கு வழங்கப்படும் பயிற்சிகளால் வருகிறது என்பது நிரூபிக்கத் தக்கதாக இருக்கிறது. சான்றாக பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று தேர்வானவர்களின் பட்டியலைத்தான் ஐ.ஏ.எஸ்., தேர்வுகள் தொடங்கி, தமிழ்நாடு தேர்வாணைய நான்காம் நிலைத் தேர்வுகள் வரை நாளிதழ்களிலும், காட்சி ஊடக விளம்பரங்களிலும் காண முடிகிறது. அரிதாகவே ஒரு சிலர் கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் சில ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்னர் தேர்வு பெற்றிருப்பதை அதே ஊடகங்கள் தெளிவுபடுத்துகின்றன.
            நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த போதும் இதை மெய்ப்பிக்கும் வகையில் மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் வரை செலவு செய்து பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் முதன்மையான இடங்களைப் பெற்றதை நாளிதழ்களும், காட்சி ஊடகங்களும் உறுதி செய்தன.
            நிலைமை இப்படி இருக்கும் போது நுழைவுத் தேர்வுக்கென பணம் செலுத்தி பயிற்சி பெற்று தேர்வு பெறுபவர்களையும், பணம் செலுத்த வாய்ப்பில்லாமல் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற இயலாமல் நுழைவுத் தேர்வை எதிர்கொண்டு தேர்வு பெறாமல் போனவர்களையும் எப்படி ஒரே தராசில் நிறுத்து சமனிலை காண முடியும் என்பது விவாதத்திற்குரிய வினாவாகிறது.
            பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் போது வேற்றுமை தொழில் பயிற்சியால் வருகிறது என்று வள்ளுவர் ஆணித்தரமாக கூறுகிறார்.
            ஆக நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் என்பது எல்லா குழந்தைகளால் அடையக் கூடியதே. அதில் வேற்றுமை என்பது அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியால் வருகிறது என்பது நிரூபணம் ஆகிறது.
            இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆர்வத்தை ஒரு கூறாகக் கொண்டு கணக்கிட்டாலும், நீட் தேர்வு முடிவுகளால் தன்னுயிர் நீத்த மாணவிகள் ஐவரும் தன்னுயிர் தந்து மருத்துவத்தைப் பயிலவும் ஆர்வம் உடையவர்களே.
            சமமான, தரமான கல்வி என்பது நமது அரசியலமைப்பின் முதன்மையான குறிக்கோளாக இருப்பதால் சமமான பயிற்சி முறைகள், சமமான பாடத்திட்டங்கள், சமமான கற்பித்தல் கட்டமைப்புச் சூழ்நிலைகள் ஆர்வமுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வழங்கிய பின்னர் அவர்களுக்கு நுழைவுத்தேர்வு வைப்பதே பொருத்தமாக இருக்கும். சமமற்ற பாரபட்சத்தை உருவாக்கக் கூடிய ஒரு நுழைவுத் தேர்வோ, தகுதித் தேர்வோ உயிர்களைப் பறிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யாது.
            நுழைவுத் தேர்வு முடிவுகளால் தன்னுயிர் நீத்த மாணவிகள் மட்டுமே ஊடக கவனம் பெற்று வேளியுலகுக்குத் தெரிய வந்துள்ளனர். அதனால் மனநலம் பாதிக்கப்பட்டு தன்னிலை இழந்து திரியும் மாணவர்களின் விவரம் வெளியுலகின் கவனத்துக்கு இன்னும் வரவில்லை என்பதை நோக்கும் போது நுழைவுத் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு உண்டாக்கும் கல்வியில் நிகழும் சுய அந்நியமாதலை ஆராய வேண்டியிருக்கிறது. நுழைவுத் தேர்வோ, தகுதித் தேர்வோ மாணவச் செல்வங்களின் பலி மண்டபங்களாக ஆகாமல் இருப்பதற்கான உரிய கல்விச் சிந்தனைகளுக்கு நம் கல்வித் திட்டத்தில் இன்னும் அதிக இடம் தர வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறுத்து விட முடியாது.
            நம் கல்வித் திட்டம் நம் குழந்தைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும். கல்வித் திட்டத்துக்கு ஏற்ப குழந்தைகளைத் தயாரிக்க வைப்பது என்பது தொடர்ந்து கொண்டிருக்கும் அடிமைக் கல்வி முறையின் எச்சமாக அமையலாம் என்பதை நாம் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டியிருக்கிறது.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...