செய்யு - 168
பெருமாள்சாமி நெடுநெடுவென்று வளர்ந்த நல்ல
உயரமான ஆள். கருத்த உடம்பு. ஒல்லியான திடகாத்திரமான தேகம். திடகாத்திரமான தேகம் என்றுதான்
சொல்ல வேண்டும். பார்ப்பதற்கு உடைந்து விழுந்து விடுவது போல இருந்தும் இத்தனை நாட்களாகி
உடைந்த விழாமல் இருப்பதாலே அது திடகாத்திரமான தேகம்தான். மீசையை அரிவாள் போல ரெண்டு
பக்கமும் சீப்புப் போட்டு சீவி வைத்திருப்பார். பட்டசரக்கு, பவுடர் சரக்கு என்று உள்ளே
இறக்கி விட்டுக் கொண்டு மீசையின் ஆரோக்கியம் கருதி அதுக்கு நெய்யை விட்டு கவனமாக
பாத்துக்கிறதா சொல்லுவார். அஞ்சு நிமிஷத்துக்கு ஒருமுறை அதை ஒரு முறுக்கு முறுக்கி
விடுவார்.
பெருமாள்சாமி அடாவடிப் பேர்வழி எனப் பெயர்
பெற்றவர் என்பதை இனி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிரச்சனை என்று சொல்லி விட்டால்
போதும். எதார்த்தமாக அந்தப் பிரச்சனையில் வந்து ஆஜராவது போல ஆஜராயி விடுவார். தவிர
ஊர்ப் பஞ்சாயத்துக்குள் என்றால் அழைக்காமலும் ஆஜராவார். பஞ்சாயத்தை அஞ்சு நிமிஷம் பார்த்தார்
என்றால் யார் பக்கம் பேச வேண்டும் என்பதைக் கண்டுபிடித்து விடுவார் பெருமாள்சாமி. எந்தப்
பக்கம் பேசுகிறாரோ அந்தப் பக்கம் பஞ்சாயத்து முடிந்ததும் குவார்ட்டர் பிரியாணியோடு
ஆயிரம், அஞ்சாயரம் என்று பஞ்சாயத்துக்கு தக்கபடி பணத்தை பெருமாள்சாமிக்கு மொய் எழுதியாக
வேண்டும். இல்லையென்றால் மனுஷன் சாமி ஆடி விடுவார். பிற்பாடு அதற்கு ஒரு பஞ்சாயத்து
வைக்கும் அளவுக்கு ஆயி செலவு பத்தாயிரம், இருபதாயிரம் ஆகி விடும். பஞ்சாயத்துப் போக்கிரிகளின்
தத்துவமே அதுதான். அவர்கள் கேட்கும் போதே கேட்பதை பெருந்தன்மையாக தந்து விட வேண்டும்.
இல்லையேல் அதை விட பெரும் விலை கொடுக்கும்படி ஆகி விடும்.
வடவாதியின் மேற்கே ஆலைப் பாலத்தின் வழியாக
வெண்ணாற்றாங்கரையின் தென்னண்டைப் பக்கம் இருந்த பெருமாள் கோயில் பக்கத்தில் பெருமாள்சாமியின்
வீடு இருந்தது. அந்தக் கோயிலில் இருந்த பெருமாள்சாமியின் நினைவாகத்தான் பெருமாள்சாமிக்கு
அந்தப் பேர் வந்தது. ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் அந்தப் பெருமாள்சாமி காக்கும்
சாமி என்று பெயர் வாங்கியதும், இந்த பெருமாள்சாமி அழிக்கும் சாமி என்று பெயர் வாங்கியதும்தான்.
பெருமாள்சாமி பஞ்சாயத்துக்கு வந்து விட்டால்
எல்லாருக்கும் ஓர் உதறல் இருக்கத்தான் செய்கிறது. பழைய காலத்து பஜாஜ் ஸ்கூட்டரில் வந்து
இறங்கினார் என்றால் எந்த நேரத்தில் பெருமாள்சாமி என்ன செய்வார் என்பதை அனுமானிப்பது
ஒரு புயல்காற்றை அனுமானிப்பது போலத்தான். அவர் பக்கம் தீர்ப்பு சொல்வதற்காக எந்த
நிலைக்கு இறங்கியும் விளையாடுகிறார். இதனாலேயே சண்ட பிரசண்டமாக சண்டைபோட்டு பஞ்சாயத்துச்
செய்யும் பார்ட்டிகள் பெருமாள்சாமியைப் பிடித்துக் கொண்டு விடுகிறார்கள்.
பெருமாள்சாமியின் மீது வடவாதி காவல் நிலையத்தில்
பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதெல்லாம் இந்நேரம் உங்களுக்குச் சொல்லாமலே
புரிந்திருக்கும். கைது செய்து போடும் ஒவ்வொரு முறையும் மன்னார்குடி, திருச்சி, தஞ்சாவூர்
என்று எந்த ஜெயிலில் போட்டாலும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் போவது அவரது வழக்கமாகவும்
ஆகி விட்டது. சமயத்தில் கைது பண்ணி ஸ்டேஷனிலே போட்டால் ரா முச்சூடும் இருந்து விட்டு
அதற்கான சுவடே இல்லாதது போல வெளியே வந்து ரவுசு பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்.
இந்தப் பெருமாள்சாமியைத்தான் முருகு மாமாவின்
அப்பா வீராச்சாமி வழி வகையில் பங்காளிகள் சொத்துப் பிரிக்கும் பஞ்சாயத்தில் கொண்டு
போய் நிறுத்தி யாருக்கும் ஒன்றுமில்லாமல் அடித்து அத்தனை நில புலன்களையும் முருகு
மாமாவின் அப்பாவான வீராச்சாமியின் பேரில் கொண்டு வந்தது முருகு மாமா.
"இந்தாருங்கடா முருகோட அப்பா வீராச்சாமி
தலயெடுத்துதாம் குடும்பம் தலைபட்டிருக்கு. அது மட்டும் இல்லேன்னா ஒண்ணுக்குப் பத்தா
இன்னிக்கு சொத்து இல்ல. மூத்தவங்க மொறையில சொத்தோட எல்லா அதிகாரமும் அதுகிட்டதாம்
இருக்கு. அதால அது சம்பாதிச்சது போக எஞ்சிருப்பதுலதாம் சொத்தப் பிரிச்சாகணும். இதுல
எவனாவது தில்லுமுல்லு பண்ண நெனைச்சா வவுந்துடுவேம் வவுந்துடுவேம்!" என்று பெருமாள்சாமி
கையோடு கொண்டு போன வெட்டு அரிவாளைக் காட்டி மீசையை முறுக்கியிருக்கிறது. அவ்வளவுதான்
பங்காளி வகையறாக்கள் எல்லாம் வாயைப் பொத்திக் கையைக் கட்டி நின்றிருக்கிறது.
கிட்டதட்ட அப்போதே எண்பதினாயிரம் மதிப்புள்ள
சொத்தை அறுபத்தைந்தாயிரம் வரைக்கும் வீராச்சாமி பேருக்குக் கொண்டு வந்து மீதமிருந்த
பதினைஞ்சாயிரம் மதிப்பை பங்காளிகள் எல்லாருக்கும் ஆளுக்குத் தகுந்தபடி ஆயிரம், ரெண்டாயிரம்னு
கொடுத்து சரி பண்ணியிருக்கிறது முருகு மாமா. மொத்தத்தில் ஒன்றுமில்லாமல் போகும்
எதிர்பார்த்த பஞ்சாயத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் எனப் பார்த்ததில் அவர்கள் எல்லாருக்கும்
ஏக சந்தோஷமாகப் போய் விட்டது. எப்படிப் பார்த்தாலும் தலை ஒன்றுக்கு பத்தாயிரம் பனிரெண்டாயிரம்
என வர வேண்டிய பங்கை ஆயிரம் ரெண்டாயிரத்தோடு முடித்துக் கொண்டது முருகு மாமா. பங்காளி
வகைகளுக்குப் போன ரொக்கம் கம்மியாக இருந்தாலும் பெருமாள்சாமிக்குப் போன பங்கு ஐயாயிரம்.
இதில் சாமியாத்தாவுக்குப் பங்கு பிரித்த வகையில் வர வேண்டிய ஆயிரத்து ஐநூறைத் தருவதாக
முருகு மாமா சொல்லி ரெண்டு மூணு மாமாங்கமாவது ஆயிருக்கும். தம்பிங்க எங்க கொடுக்காமல்
போயிடப் போறானுவோ என்று அதுவும் இருந்து விட்டது. நம்ம அக்காவுக்கு ஏன் கொடுக்க
வேண்டும் என்று தம்பிகளும் இருந்து விட்டார்கள். எப்போதாவது நினைவுக்கு வந்தால் சாமியாத்தா
இதைப் பற்றிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கும். சொல்வதையும் சொல்லி விட்டு,
"அதைத் தாண்டி ஒங்க தாத்தன்! அந்தப் பயலுககிட்ட ஏகப்பட்ட வேலைகள வாங்கிட்டார்டோய்!"
என்பதையும் சேர்த்துக் கொள்ளும்.
வைத்தி தாத்தா இருந்தவரை வயல் வகையறாக்களை
அதிகம் பார்த்தது கிடையாது. பேருக்கு வயலுக்குப் போய் வரும். நடவு, அறுவடை என்றால்
முருகு மாமாவோ, லாலு மாமாவோ போய்தான் நின்றாக வேண்டும். வயலில் வேலை நடக்கிறது என்பதைக்
கூட ஏதோ கடமைக்கு, வாசல்படிகட்டில் சைக்கிளிலிருந்து காலை ஊன்றியபடி, "டேய் முருகு!
வயல்ல வேல நடக்குதுடா! நமக்கு வேல கெடக்கு. நீயோ லாலுவோ போயி நின்னு கொண்டாந்துடுங்க!"
என்று சேதி சொல்ல வந்தவர் கணக்காக காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு ஓடுவதைப் போல
சொல்லி விட்டு போய்க் கோண்டே இருக்கும் வைத்தி தாத்தா. எங்கே அத்தான் ஆன வைத்தி
தாத்தா பாகம் பிரித்த வகையில் வர வேண்டிய ஆயிரத்து ஐநூறைக் கேட்டு விடுமோ என்று நினைத்தோ
அல்லது சமபங்காய்க் கொடு என்று கேட்டு விடும் என்று நினைத்தோ அவர்கள் வைத்தி தாத்தாவுக்கு
அப்படி அடங்கிக் கிடந்து சொன்னதையெல்லாம் கேட்டுக் கிடந்தார்களோ என்னவோ! ஆனால் வைத்தி
தாத்தா அந்தப் பாகப் பிரிவினை பற்றியெல்லாம் கேட்டதில்லை. அதைப் பொருத்த வரையில் யாருக்கும்
எதையும் செய்ததில்லை. யாரிடமும் எதையும் கொடு என்று கேட்டதில்லை. யார் வீட்டிலும்
போய் குந்தி ஒரு வாய் டீத்தண்ணி குடித்ததில்லை. ஏதோ துறவிகளுக்கு உவமை சொல்வார்களே
தாமரை இலைத் தண்ணீர் போல என்று. அப்படித்தான் வைத்தி தாத்தாவின் அணுகுமுறைகள் உறவு
முறைகளிடம் இருந்தது.
நாம்ம அப்படியே தேசிகாவின் பஞ்சாயத்து
விசயத்துக்கு வந்திடுவோம். அது வேற ஏற்கனவே தள்ளிப் போயிட்டு இருக்கு. நாம்ம அங்க
இங்க பேசிட்டு வாரதுலயும் அது தள்ளிப் போயிட்டே இருக்குப் பாருங்க.
பெருமாள்சாமிய கொண்டு போனாத்தான் மாப்பிள்ள
வூட்டுக்காரனுங்க ஒரு வழிக்கு வருவானுங்கங்றதுல முருகு மாமாவும், லாலு மாமாவும் உறுதியாகிக்கிறாங்க.
இப்போ மில்லுகாரர்கிட்ட விசயத்தக் கொண்டு போவனுமேன்னு ரெண்டு பேரும் மில்லுகாரரு
வூட்டுக்கே போறாங்க.
மில்லுகாரரு வூட்டுக்கு முன்னாடி பெரிய
கீத்துக் கொட்டகைப் போட்டு அதுல அவரோட காரு நிக்குது. காருக்குப் பக்கத்துல ஒரு
ஈஸி சேரைப் போட்டுகிட்டு அவரு பாட்டுக்கு பேப்பரைப் படிச்சிட்டு இருக்காரு.
முருகு மாமா, லாலு மாமா ரெண்டு பேரையும்
பார்த்ததும் பக்கத்துல கிடக்குற நாயைத் தடவி விட்டுகிட்டு பேசாம படுங்றார். ரெண்டு
பேரையும் பக்கத்துல கிடக்குற பெஞ்சுல உட்காரச் சொல்லி கையைக் காட்டுறார்.
கொஞ்சம் அமைதி நிலவுது.
அப்புறம் லாலு மாமா, "ரொம்ப நாளு
ஆயிகிட்டே இருக்கு. சூட்டோட சூடா அடிச்சாதாம் கடப்பாரைய வளைக்க முடியும்பாங்க. நாளான
கஞ்சி பழங்கஞ்சிதாம். கடைசியில அவனுங்க பாட்டுக்கு டேக்கா வுட்டுட்டுப் போயிட்டே இருப்பானுங்க!"
என்கிறது லாலு மாமா.
"நாமளும் யோஜிச்சிகிட்டுதாம் இருக்கேம்.
நாம்ம எறங்கி இது வரைக்கும் இப்டி ஆனதில்ல. மொத மொறையா வுட்ட கொறை, தொட்ட கொறையா
நிக்குது. திருவாரூர்ல நமக்கு ஆளுங்க இருக்கு. கொண்டாந்து எறக்கிப் புடுவேம். அதுக்கப்புறம்
மவனுங்க அவனுங்க தலயெடுக்க முடியாது. அதாம் யோஜனையா இருக்கு!" என்கிறார் மில்லுகாரர்.
"நம்ம பெருமாள்சாமியக் கொண்டு போகலாமான்னு
ஒரு யோஜன. அதாம் கலந்துகிட்டுப் போகலாம்னு வந்தேம்!" என்கிறது முருகு.
"அவனயா?" என்று சொல்லி விட்டு
பேப்பரைக் கீழே வைத்து விட்டு தாடையைச் சொரிகிறார் மில்லுகாரர்.
"நாங்க ஏதும் தப்பா சொல்லிபுட்டோமா?"
என்றபடி பேருக்குப் பாவனைக் காட்டுகிறது லாலு மாமா.
"அவ்வேம் ஒண்ணு கெடக்கு ஒண்ணு செஞ்சி
வைப்பாம். நம்ம பஞ்சாயத்துல இப்டி ஆகிப் போச்சின்னு ஜில்லா முழுக்க நம்ம பேர்ல அடிபடும்னு
பாக்கிறேம். நம்ம சர்வீஸ்ல இந்த வகைக்கு நடந்தததில்ல!" என்றபடி இப்போது வயிற்றைத்
தடவி விட்டுக் கொள்கிறார் மில்லுகாரர்.
"நீங்க இருக்குறது தெரிஞ்சா கொஞ்சம்
நெதானாமாத்தான் நடந்துப்பாரு பெருமாளுசாமி!" என்கிறது லாலு மாமா.
"நம்மகிட்டலாம் மரியாதி தெரிஞ்ச பயதாம்.
அதயெல்லாம் கொறயா சொல்லல. பஞ்சாயத்துன்ன எறங்கிட்டான்னா அவஞ் சுழி அப்டி. நாமல்லாம்
ஒங்கள மாதிரி உள்ளவங்களுக்கு நியாயம் பண்ணி வைக்கிறதுதாம். அதுக்காக ச்சும்மா இப்டி
இருவது ரூவா பத்திரத்தக் காட்டி எழுதி வாங்கிகிட்டு ஒரு மெரட்டல் காட்டி காரியம் சாதிக்கிறதுதாம்.
இதெக் கொண்டு போயி போலீஸூ ஸ்டேசன்ல கொடுத்தாலோ, கோர்ட்டுல கொடுத்தாலோ கட்டப்பஞ்சாயத்துன்னு
நம்மள தூக்கி உள்ள பிடிச்சிப் போட்டுடுவாம். அதாங் யோஜனை. அவனெ கொண்டு போனாத்தாம்
காரியம் ஆகும்னா அப்றம் ன்னா பண்றது? ஒங்கக் குடும்பத்துக்கு அவ்வேம் ஒண்ணும் புதுசு
இல்ல. அவனெ வெச்சி முப்பது நாப்பது வருஷம் இருக்குமா அப்போயே சொத்துத் தகராறுல சாமத்தியமா
பஞ்சாயத்துப் பண்ண ஆளுங்கதானே நீய்ங்க!" என்கிறார் மில்லுகாரர்.
"ஒங்க மேல நம்பிக்க யில்லாம யில்ல.
ஆனா அவனுங்க அவ்ளோ மோசமானவனுங்க. நல்லவனுங்களுக்கு நீங்க பண்ணது போதும். மோசமானவனுங்களுக்கு
மோசமானவய்ங்கதாம் சரி. இது ஒரு யோஜனதாம். ஒங்களளுக்குப் பிடிக்கலேன்னா ஒங்க மொறயிலயே
போயிடலாம். நம்ம பக்கம் யாருக்கும் அட்டியில்ல!" என்கிறது சாமர்த்தியத்தைக் கை
விடாமல் லாலு மாமா.
"அப்டிலாம் ஒண்ணுமில்ல. இப்டி நாலு
தடவெ அலஞ்சிகிட்டுக் கெடக்குறதுக்கு அவனெ வைச்சு ஒரே தடவயில முடிச்சிடலாம். ஒண்ணு கெடக்க
ஒண்ணு ஆகாம இருந்தா சரிதாம். அவனுக்கு எது நடந்தா ன்னா? பல ஊரு செயில்ல பாத்துட்டு
பல ஊரு தண்ணிய குடிச்சிட்டு வந்தவேம். நாம்ம அப்டி இருக்க முடியாது பாருங்க!"
என்கிறார் மில்லுகாரர்.
இப்படிதாம் முருகு மாமா, லாலு மாமா, பெருமாள்சாமி
மற்றும் மில்லுகாரர் என நான்கு பேரும் மில்லுகாரரின் காரில் கிளம்பிப் போய் அதிரடியாய்ப்
பேசி ஒரு முடிவுக்குக் கொண்டு வருவது என்று கிளம்ப முடிவானது. அவர்கள் கிளம்பும் போதும்
தானும் வருவேன் என்று காரில் தொத்திக் கொண்டது சித்துவீரன்.
*****
No comments:
Post a Comment