20 Aug 2019

கதையோட அச்சாரம்!



செய்யு - 182
            ரெண்டு பக்கமும் உயர்ந்து ஓங்குன கரைகள் இருந்தாலும் ஆறு என்னவோ அதுக்கு இடையில இருக்குற பள்ளத்துலதான் ஓடியாகணும். எப்பயாவது அந்த பள்ளத்துக்குள்ளயே ஓடிகிட்டு இருக்குறதுல ஒரு வெறுப்பு தட்டிப் போயி இந்த ஆறு வெள்ளமா பெருகி கரையை உடைச்சிகிட்டு ஓடுறதுண்டு. எத்தனை நாளுக்கு அப்பிடி ஓடிட முடியும்? மறுபடியும் கரையைக் கட்டி அதைக் கரைக்கு இடையில ஓட விட்டுடுவாங்க நம்ம மனுஷங்க. கரைக்கு இடையிலதாம் ஓடியாகணுங்றது ஆற்றோட விதி. வாழ்க்கையும் அப்படித்தான். இதுக்குன்னு சில வரைமுறைகள் இருக்குது ஆற்றுக்கு கரை இருக்குறது போல. அதுக்குள்ளதான் ஓடியாகணும். சமயத்துல அந்த வரைமுறைகளைத் தகர்த்துட்டு ஓடுனாலும் சரிபண்ணி அதுக்குள்ள ஓட வெச்சிடுவாங்க. அதுக்குன்னு குடும்ப கெளரவம், ஊரு கட்டுமானம், சாதி ஒழுங்கு, சம்பிரதாயம், சடங்கு, லொட்டு, லொஸ்க்குன்னு ஆயிரத்த வெச்சிருக்காங்க. அதைத் தாண்டி ஒவ்வொரு மனுஷனுக்கும் வறட்டுக் கெளரவம், சாதித் திமிரு, மண்டை கனம், சண்டித் தனம், நாட்டாமை குணம்னு வேற நிறைய இருக்கு. எல்லாம் ஒண்ணு சேர்ந்துகிட்டா ஒவ்வொரு மனுஷனும் அவனவன் விருப்பத்துக்கு வாழுற மாதிரி தெரிஞ்சாலும் ஒரு கட்டுமானத்துக்குள்ளதான் வாழ்ந்துகிட்டு இருக்கிறான்ங்றது புரிய வரும்.
            இத எதுக்கு இப்போ பேசணும்னு கேட்டீங்கன்னா... அப்படி ஒரு நிலைமை முருகு மாமா குடும்பத்துக்கு ஆகிப் போச்சி ஆறு கரை உடைச்சிகிட்டு போன மாதிரி. இனிமே அந்த நிகழ்ச்சிய முருகு மாமா குடும்பத்துக்குன்னும் சொல்ல முடியாது. சுந்தரிதான் சித்துவீரனெ பிரிச்சித் தனிக்குடும்பமா கொண்டு போயிடுச்சில்லே. அதால இது சித்துவீரன் குடும்பத்துக்கு ஆகிப் போன பிசகுதான்னு சொல்லணும். பிசகுன்னும் சொல்ல முடியாத அளவுக்கு அதெ வெளியில தெரியாம மறைச்சிட்டாங்க. பிசகு இல்லண்ணும் சொல்ல முடியாத அளவுக்கு அந்த விசயம் வெளியில தெரிஞ்ச சிலரும் இருக்காங்க. இந்த விசயம் நடக்குறதுக்கு முன்னாடி நடந்த இவ்வளவு நிகழ்ச்சிகளயும்தான் வெங்குவும், தம்மேந்தி ஆத்தாவும் பைப்படியில உக்காந்து பேசிகிட்டு இருக்காங்க. கொஞ்சம் முன்னாடி இந்தக் கதையைப் போயி படிச்சீங்கன்னா அது உங்களுக்குத் தெரியும்.  இப்படிக் குடும்பத்தை ஒடைச்சித் தனிக்குடும்பமா ஒரு பொண்ணு கொண்டுட்டுப் போனா அதெ ஒரு வார்த்தை வுடாம திரும்ப திரும்ப படிச்சி மனப்பாடம் பண்ற பள்ளிக்கூடத்துப் பிள்ளைக மாதிரி பல நாட்களுக்கு அதையே அட்சரம் பிசகாம இங்க கிராமங்கள்ல திரும்பத் திரும்பப் பேசிகிட்டே இருப்பாங்க.
            குடும்பத்தைப் பிரிக்கிறது பாவங்றது இந்தக் கிராம மக்களோட நம்பிக்கை. குருவிக் கூட்டைக் கலைக்கிறதும், குடும்பத்தைப் பிரிக்கிறதும் மாபவம்னு நினைக்குற மக்களுங்க இவங்க. இந்தப் பாவம்தான் இப்போ கிராமங்கள்ல ரொம்ப அதிகமாக நடந்துகிட்டு இருக்குது. இந்தக் கிராமங்கள பாத்து டவுனுங்க கத்துக்க நிறைய விசயங்கள் இருந்தாலும், டவுனப் பார்த்துதானே இந்தக் கிராமங்கள் கத்துக்க பிரியப்படுதுங்க. இந்தப் பாவகாரியங்கள்லாம் டவுன்ல நடந்து முடிஞ்சிப் போயி இப்போ அது வேற வேற காரியங்கள்ல இறங்குன பிற்பாடு, கிராமங்கள்ல அந்தப் பாவக் காரியங்க மெல்ல மெல்ல பரவிட்டு வருது. எனக்குத் தெரிஞ்சி இங்க தனிக்குடும்பங்கள் ரொம்ப கம்மிதான். ஊரு வுட்டு ஊரு குடிவந்த சனங்கதான் அப்படி தனிக்குடும்பங்களால இங்க இருக்குதுங்க. அவங்க பொழைப்புத் தேடி வந்தவங்களா இருப்பாங்க இல்லேன்னா கவர்மென்டு வேலைக்காக வந்தவங்களா இருப்பாங்க. மத்தபடி இங்க கிராமத்துல ஒவ்வொரு வூட்டுக்கும் தாத்தா, பாட்டிங்க இருக்கும். பெரும்பாலும் எல்லாம் கூட்டுக்குடும்பதான். ஒரு வேலைவித்துக்காக வெளியூரு போயிருக்குற சனங்களும் தீவாளி, பொங்கல்ன்னா இங்க வந்து குடும்பத்தோடு கொண்டாடிட்டுதான் போகும்ங்க. தனியா அங்கயே கொண்டாடுதுங்க.
            இப்படி இருக்குற நெலமையில சுந்தரி பண்ண வேலையைப் பத்திதான் ஊரெல்லாம் பேச்சா இருக்குது. அது அங்க பாக்குக்கோட்டையில அப்பங்காரன் குடும்பத்துக்கு உதவுறக்குதாம் அப்பிடிச் சித்துவீரனெ கொண்டுட்டுப் போயிருக்கிறதா தம்மேந்தி ஆத்தா சொல்லுது.
            "அதுவுஞ் சரிதான். இஞ்ஞ முருகு மாமா வூட்டுலேயே இருந்தா அஞ்ஞ பாக்குக்கோட்டைக்கு எப்பிடி சொதந்திரமா எதையும் செய்ய முடியும்? ஒரு பிடி அரிசி, மெளவா, மல்லிய எடுத்துக் கொடுத்துட முடியுமா? இந்தா அதெ இதெ வாங்கிக்கன்னு பத்து காசிய கையில கொடுக்க முடியுமா? அப்படிச் செய்யத்தான் நீலு அத்தை விட்டுடுமா? முருகு மாமாதான் அதைப் பாத்துட்டுச் சும்மா இருந்திடுமா? நீயி சொல்றதும் சரிதாங்"குது வெங்கு.
            "இப்போ தனியா பிரிச்சிட்டுப் போயிட்டா! அவ்வேம் அண்ணங்காரன் வேற டாக்கடருக்குல்ல படிக்கிறாம். இனுமே கூட கொறைச்சா அவ்வேம் படிப்புக்கும் ஒதவி பண்ணலாம் பாரு! அதுக்காவவும் இருக்கும்" என்கிறது தம்மேந்தி ஆத்தா. சொல்லிவிட்டு அத்தோடு விடுகிறதா என்றால்...
            "ஆமாம்டி! அந்தக் காலத்துல பொறந்த வூட்டுலேந்து புகுந்து வூட்டுக்குக் கொண்டு வருவாளுவோ பொண்டுக. இந்தக் காலத்துல புகுந்த வூட்டுலேந்து பொறந்து வூட்டுக்கு ரொம்ப சாமர்த்தியமா கொண்டு போறாளுவோ பொண்டுக. பரவால்ல. ஒனக்கென்ன ஒரு பையனையும் பெத்து வெச்சிருக்க. ஒரு பெண்டையும் பெத்து வெச்சிருக்க. நாமதான் பாரு! ரெண்டு பையனுமா போயிடுச்சி" என்று தொடர்ந்து பேசுகிறது தம்மேந்தி ஆத்தா.
            "இப்பிடியும்மா இருப்பாளுவோ பொண்டுக? ரொம்ப நல்லவே மாரி நடந்துகிட்டாக்கா அந்த சுந்தரி. இப்பிடிப் பண்ணுவான்னு நாம்ம கனவுலயும் நெனைக்கல. பிரிச்சிக் கொண்டுட்டுப் போறதுல ரொம்ப சாமத்தியக்காரியா இருப்பா பொலருக்கே!" என்கிறது வெங்கு.
            "எங்கேயோ எப்பிடியோ போயி நல்லா இருந்தா சரிதாம் போ! சாமர்த்தியமா, சமத்தா இருந்து குடும்பத்த ஓட்டுனா சரிதாம். ஒம்மோட முருகு மாமம் குடும்பத்துக்கு அந்தப் பயெ சம்பாதிச்சிப் போட்டுதாம் ஆகப் போவுதா? ஒம் மாமம்தான் இண்டு இடுக்குக் கிடைச்சாலும் அதுல சம்பாதிக்கிற ஆளாச்சே. இருக்குற சொத்த வெச்சி இன்னும் ரண்டு தலைமுறைக்கு ஆளலாம்" என்கிறது தம்மேந்தி ஆத்தா.
            கிட்டதட்ட சுந்தரி நாடகமாடியது யாருக்கும் புரியாமல் இல்லை. இவ்ளோ சின்ன வயதில் அது இப்படிச் செய்தது எல்லாருக்கும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. ஏன் அது அப்படிச் செய்தது என்று எல்லாரும் ஆய்வறிக்கை ஒன்னு தாக்கல் செய்யாத கொறைதான். அந்த அளவுக்கு பேச்சிலே பலவிதமாக ஆராய்ச்சிப் பண்ணித் தள்ளுகிறார்கள். அவர்கள் அப்பிடி பேசுவதும் சுந்தரியின் காதுகளுக்கு அரசல் புரசலாகப் போகத்தான் செய்கிறது. அதெல்லாம் தன் காதுகளுக்கு விழாத கணக்கா சுந்தரி நடந்துக்குது. நீங்க பேசுனா ஒங்க வாய்தானே வலிக்கப் போவுது, கேட்கற எங்க காதுக்கு ன்னா ஆகப் போகுதுங்ற மாரி இருக்கு அதோட நடத்தை.
            சுந்தரி தனியாப் போச்சுன்னா அது தனியா இருக்குறதுக்குப் போச்சுங்றதுன்னுல்ல ஆகுது இங்க நிலைமை. இன்னும் கொஞ்ச நாள்தான் சித்துவீரன் வெளிநாடுப் போகப் போறாங்றதுதாம் நிலைமை. அதுக்குப் பிற்பாடு அது அந்த வீட்டுக்குள்ள தனியாத்தாம் இருக்கணும். அதோட மூஞ்சைப் பாத்தீங்கன்னா இன்னும் கொழந்தைத்தனம் மாறாத மூஞ்சால்ல வேற இருக்குது. இது எப்பிடி ஒத்த ஆளா, அந்த ஒண்டி வூட்டுல இருந்து சமாளிக்கும்? அது கொஞ்சம் புத்திசாலியா இருந்திருந்தா சாமர்த்தியமாக இஞ்ஞ முருகு மாமா வூட்டுல இருந்துகிட்டு, ஒரு புள்ளையோ குட்டியோ பொறந்ததுக்கு அப்புறம் பிரிச்சிகிட்டு போறததாம் நல்லதுன்னு இங்க ஆளாளுக்குப் பேசிக்கிறாங்க. ஒரு பேச்சுக்கு கொழந்தை இன்னும் ஒம்போது மாசத்துலயோ, பத்து மாசத்துலயோ பொறந்திடுதுன்னு வெச்சிக்குங்களேன்! அப்போ நெலைமை என்னாவுறது? கூட மாட இருந்து கொழந்தைய யாரு பாத்துப்போ? கொழந்தை மல்லாக்கப் புரண்டு படுக்குற வரைக்குமாவது பாத்துக்க ஆளு வேணுமா இல்லையா!
            ஆமா அதுதாங் இங்க கவலையாக்கும்? ஏம் சரசு ஆத்தா வந்து பார்த்துக்காதா? சுந்தரியோட தங்காச்சி பிந்துவ கொண்டாந்து கூட வெச்சிக் கொஞ்ச நாளைக்குப் பாத்துக்கலாம். அவ்வேன் சித்துவீரன் வெளிநாட்டுல போயிச் சம்பாதிக்கிற சம்பாத்தியத்துக்கு தாதியாளா ஒரு ஆளெ பிடிச்சிக் கூட சம்பளத்துக்குப் போட்டுக்கலாம். எல்லாத்துக்கும் காசு பணம்தான். காசு பணம் இருந்தா சொந்தங்களோட இருக்க வேண்டியது அவசியமில்ல. அது இல்லேன்னாதான் கூட, மாட, ஒத்தாசைக்குன்னு சொந்த பந்தங்களோட இருக்கணும்னு ஆகிப் போச்சு நெலைமை. யோசிச்சுப் பார்த்தா காசு, பணம் இல்லாத காலகட்டத்துல சொந்தப் பந்தங்களோட நெருக்கமும், உறவும், பாசமும் அதிகமாத்தான் இருக்குது. காசு, பணம் பெருகுற காலத்துலதான் அவங்களோ நெருக்கமும், உறவும், பாசமும் கொறைஞ்சிப் போவுது. ஒண்ணு வந்தா ஒண்ணு இல்லாமப் போவுது. வறுமையில சேர்ந்திருந்தவங்க காசு, பணம்னு ஆகிப் போனா காரணமில்லாம பிரிஞ்சிப் போறாங்க. காசு, பணம் அவங்களா பிரிச்சி வுட்டுடுதா? காசு, பணத்தைக் காரணமா வெச்சி அவங்கப் பிரிஞ்சிப் போறாங்களா? என்பது அவுங்கவுங்களுக்கே வெளிச்சம்.
            உறவுகளுக்கு இடையே இந்த காசு, பணம் புகுந்துகிட்டு அது உறவுகளுக்கு இடையே ஒரு இடைவெளியைத்தான் உருவாக்குது. காசு, பணம் இல்லாட்டி உறவுகதான் துணை. காசு, பணம் இருந்தா காசு பணம்தான் துணைங்றது போல ஆகிப் போயிடுது நெலைமை. காசு, பணத்தை விட்டெரிஞ்சா ஆயிரம் சொந்த, பந்தங்க வரும்னு வேற அப்போ நாக்கு திமிரா பேச ஆரம்பிச்சிடுது. இந்தக் காசு பணம் வந்தா இளைச்சு இருக்குற ஒடம்புக்கு மட்டுமா கொளுத்துப் போவுது? நாக்குக்கும்தான் கொளுத்துப் போவுது. அது வரைக்கும் அடங்கி ஒடுங்கிப் பொட்டிப் பாம்பா இருக்குற பாம்பு அதுக்குப் பெறவு படம் எடுத்து ஆடுற பாம்பால்ல ஆடுது.
            அது சரி! ஏன் இந்தச் சுந்தரி இப்பிடி முருகு மாமா குடும்பத்திலிருந்து தனியாகப் பிரித்து, அதுவும் சித்துவீரன் வெளிநாடு போக இருக்கும் நிலையில் அப்படிக் கொண்டு போனது என்பதற்கானக் காரணம் சில நாட்கள் கழித்துதான் வெளிப்பட்டது. அப்படி வெளிப்பட்ட உண்மைகளும் இங்கு பல பேருக்குத் தெரியாது. அதை அப்படியே அம்மி விட்டார்கள். அதைக் கொஞ்சம் பேசிப்புட்டு மத்த கதைகளுக்குப் போகலாம். அது பேச முடியாத கதைதான். பேசுவதற்குச் சங்கடமான கதைதான். இருந்தாலும் அதைப் பேசாம நகர்ந்துட முடியாது. பின்னால நடந்துப் போன பல விசயங்கள பெரியவங்க எவ்வளவோ பேசியும் நிமுக்க முடியாம போனதுக்கு இந்தச் சம்பவங்கதான் அச்சாரமா ஆயிப் போச்சு.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...