14 Aug 2019

உதவ வந்தவனுக்கு நேர்ந்த உபத்ரவம்



செய்யு - 176
            "எம் பேரு ஆதிகேசவன். இஞ்ஞ பாக்குக்கோட்டையில செண்டாம்பாளையம் தெருவுல இருக்கேம்." என்கிறான் புதிதாக வந்து நின்ற அந்தப் பையன்.
            "சர்தான்! நாங்க இப்போ இருக்குற நெலமையில ஒனக்கென்னப்பா வேணும்?" என்கிறது லாலு மாமா.
            "ஒங்க எல்லாத்தி கூடவும் ஒரு முக்கியமான வெசயம் பேசணும்!" என்கிறான் அந்தப் பையன்.
            "நாங்க இப்போ தெகைச்சி போயி நிக்கிறேம்ப்பா. நாங்க இப்போ இருக்குற நெலமையில ஒங் கூட ன்னா முக்கிய வெசயத்தப் பேசுறதோ!" என்கிறது லாலு மாமா ஒருவித அசட்டுத்தனமான சலிப்போடு.
            "தெரியும்ங்க! அதெப் பத்திதாம்!" என்கிறான் அந்தப் பையன்.
            "ஒனக்கு சுந்தரியெ தெரியுமா?" என்கிறான் இடையில் புகுந்து பாலாமணி.
            "அத்து வந்து..." என்று ஒரு மாதிரியாக இழுக்கிறான் அந்தப் பையன்.
            "எதா இருந்தாலும் பயப்படாம சொல்லுப்பா! எங்க நெலமை தலைக்கு மேல போற தண்ணியில நிற்குற கணக்கா இருக்கு." என்கிறது லாலு மாமா.
            "நமக்கு ஞாயமா படல. அத்தாம் வந்தேம். இத்து சுந்தரி எழுதுன லட்டர். நீங்க படிச்சீ பாத்தீங்கன்னா ஒங்களுக்கே புரியும். பத்திரிகையலாம் அடிச்ச பெற்பாடு ஒங்களயெல்லாம் அவமானப்படுத்துற மாரி ஓடுறதுல விருப்பமில்ல. வூட்டு விட்டு ஓடுறதுனா ஒண்ணு முன்னயே ஓடணும். இந்த மாரி நெலமையில ஓடப் புடாது. அதாம் ஒங்ககிட்டயே எடுத்து வந்தேம்!" என்று லட்டரை நீட்டுகிறான் ஆதிகேசவன்.
            பாலாமணி அதை விருட்டென்று வாங்கி எல்லாருக்கும் கேட்கும் விதமாக சத்தமாக படிக்க ஆரம்பிக்கிறான்.
            "உயிருக்கு உயிரான ஆதிகேசவ்க்கு,
            நீ முன்பே சொன்னது போல அப்போதே வீட்டை விட்டு ஓடிப்    போயிருக்கணும். எங்க அம்மா காலுல விழுந்து அழுததுல புத்தி கொஞ்சம்             பிசகி விட்டது. இப்போ ஒவ்வொரு நாளும் நரக வேதனையா இருக்கு. என்னால   ஒன்னைத் தவிர யாரையும் மனசுல நெனைச்சுப் பார்க்க முடியல. வீட்டுல   சொல்றத கேட்டு கல்யாணம் பண்ணிகிட்டு என்னால நிம்மதியா இருக்க             முடியுமான்னு தெரியல. ஒன்னை மறந்து வாழ முடியும்னு எனக்கு நம்பிக்கை             இல்ல. மனசுல ஒன்னயையும், நிசத்துல இன்னொருத்தனையும் வெச்சுகிட்டு      வாழறது என்ன வாழ்க்கைன்னு தோணுது? இங்க இருப்பது எனக்குப் பிடிக்கல.   ஒன்னோட சேர்ந்து வாழறதுன்னு முடிவு பண்ணிட்டேன். என்னய எங்கயாவது             அழச்சிகிட்டுப் போயிடு. நீ எங்க கூப்ட்டாலும் வாரேன். வீட்டுலேந்து      எப்படியாவது தப்பிச்சி தஞ்சாவூரு பஸ் ஸ்டேண்ட் வந்துடுறேன். செவ்வாய்க் கெழம சாயுங்காலம் அங்க இருப்பேன். வந்துடு. நீ வருவேன்னு நம்பிக்கையோடு காத்திருப்பேன். என் வாழ்க்கையே நீதான். நீயில்லாத          வாழ்க்கைய என்னால வாழ முடியாது. நீ வந்தா அங்கேந்து ஒன்னோட புது          வாழ்க்கை. இல்லேன்னா உசுர முடிச்சுக்குவேன். நீ வருவே என்ற நம்பிக்கையோடு உன் உசுருக்கு உசுரான சுந்தரி."
            "அடிப் பாவி மவளே! இப்பிடி நம்பிக்கை துரோகம் பண்ணீட்டியேடி. ன்னாடி கொற வெச்சுது ஒனக்கு இஞ்ஞ. இத்தினி வருஷம் பெத்த வளர்த்த நாங்க முக்கியமில்ல ஒனக்கு. ‍நேத்தி வந்த ஒருத்தனுக்கா உசுர வுட்டுப்புடுவேம்னு எழுதியிருக்கீயே! இதல்லாம் எந்துரூ ஞாயம்ங்றேம்? போங்க அவளெ காப்பாத்துங்க!" என்கிறது பதறி அழுதபடி சரசு ஆத்தா.
            "அஞ்ஞயே கெடந்து சாவட்டும் ஓடுகாலி நாயி. அவளுக்குப் போயி சப்பகட்டு கட்டிட்டு வார்றே! ஒன்னயும் சேத்துக் கொன்னாத்தாம் சரிபெட்டு வருவே. வூட்டு வுட்டு ஓடுனவளுக்கு உசுரு எதுக்கு? உருசு போனா மசுரு போச்சிப் போ!" என்கிறது ராசாமணி தாத்தா.
            "என்னங்க இப்பிடி பேசுறீங்க? பத்திரிகையிலாம் கொடுத்து ஆயிடுச்சி. இப்போ போயி இழுத்துட்டு ஓடுனா ஒங்களுக்கு அசிங்கம்தானேன்னுதான இவ்ளோ எறங்கி வந்து அதெ கொண்டாந்து நல்லபடியா நீங்க நெனைச்சது போலவே கல்யாணத்த பண்ணி ‍வையுங்கன்னு லட்டரைக் கொண்டாந்தெல்லாம் காட்டுறேம். நீங்க என்னான்னா செத்துப் போவட்டுங்றீங்களே! இதுக்கு நாம்ம ஒங்ககிட்ட சொல்லாமலே தஞ்சாவூரு போயி இழுத்துட்டு ஓடியிருந்திருக்கலாம் போலருக்கே!" என்கிறான் ஆதிகேசவன்.
            இதைக் கேட்டதும், "ன்னாடா சொன்னே பொறுக்கி நாயே! இழுத்துட்டு வேற ஓடிடுவியா? பொட்டப் பயலே! ஏய் பொறுக்கிப் பயலே! கொன்னே புடுவேம்டா தெரிஞ்சிக்க!" என்கிறது பாலாமணி.
            "நீங்க பேசுறது மரியாதி இல்லேங்க. நாம்ம ஞாயமா மரியாதியா ஒங்களுக்குப் பங்கம் வந்துடக் கூடாதுன்னு முன்ன பின்ன பாக்காம சுந்தரிக்கு ஒரு நல்லது நடக்கணும்னு மனசுல எதயும் வெச்சிக்காம வந்திருக்கேம். இப்டில்லாம் பேசக் கூடாதுங்க." என்கிறான் ஆதிகேசவன்.
            "இப்டில்லாம் வந்து பேசி நடந்துகிட்டா சுந்தரியெ ஒனக்குக் கட்டி வெச்சிடுவேம்னு டிராமாத்தான ஆடுறே நாதாரிப் பயலே! உரிச்சி எடுத்து ஒன்னய உப்புக் கண்டம் போட்டுடுவேம்டா ஓடுகாலிப் பயலே! டேய் பொட்ட எம்மாம் கெப்புறு ஒனக்கு? இந்தப் பாக்குக்கோட்டையில நாங்க பாதி ரெளடிடா பேதிக்குப் பொறந்தவனே!"
            "வார்த்தெ தடிக்குது. இது நல்லதுக்கு இல்லீங்க! எதுவா இருந்தாலும் பேசுறதுக்கு மின்னாடி ஒரு தடவெக்கு ரண்டு தடவெ யோஜிச்சிப் பேசுங்க! பேச்சுல வார்த்தைய விட்டுப்புட்டா துப்பாக்கிலேந்து குண்ட விட்டுப்புட்ட மாதிரிங்க. வெடிக்கக் கூடாத எடத்துல வெடிச்சிச் சேதராமா போயிடும்ங்க!" என்கிறான் ஆதிகேசவன்.
            "ன்னாடா இது எஞ்ஞ ஏரியாவுக்கே வந்து, எஞ்ஞ வூட்டுக்கே வந்து எங்கள மெரட்டுறீயா? உருரோட வூடு போயிச் சேர முடியாது. ஒழுங்கு மரியாதியா எடத்தெ காலிப் பண்ணிடு. இல்லே மவனெ ஒன்னய உண்டு இல்லேன்னே பண்ணிப்புடுவேம்!" என்கிறது ராசாமணி தாத்தா.
            "இந்த மெரட்டல்லாம் நம்மகிட்ட வாணாம். நாமளும் இந்தப் பாக்குக்கோட்டைக்காரம்தான். சம்பவத்துல எறங்குனேம்னு தெரிஞ்சா நம்ம ஏரியா பசங்கல்லாம் பிரிச்சி மேய்ஞ்சிடுவாங்க. ஏத்தோ நம்மாள குடும்பத்துல பெரச்சன வேணாம்னு நினைச்சா, ன்னம்மோ பெரிசா பீலா வுடுறீங்களேடா! எங்க யம்மா சொன்னிச்சி, அந்தப் பொண்ண வூட்டக்குக் கொண்டாடா! நடக்குறத பாத்துப்பேம்னு. அதெ செஞ்சிருக்கணும். அதெ விட்டுப்புட்டு ஞாயமா வந்து நின்னேம் பாரு!" என்கிறான் ஆதிகேசவன்.
            "எலே ன்னாடா பெரிசா சவுண்டு வுடுறே? இது எஞ்ஞ ஏரியாடாம்பி! பாக்குக்கோட்டை புல்லா நமக்கு ஆளிருக்கு. செதைச்சே புடுவேம் பாத்தக்கோ!" என்கிறது லாலு மாமா.
            "ன்னடா வுட்டா ன்னம்மோ கதெ அளந்துட்டுப் போறீங்க? ஒண்ணு பொண்ணு வேணும்னா வூட்டக்கு அழச்சிக்குங்க. இல்லே சொல்லுங்க எஞ்ஞ வூட்டுக்கு நாம்ம அழச்சிப்பேம்!" என்கிறான் ஆதிகேசவன்.
            "அடிச் செருப்பால நாயே! எஞ்ஞ வந்து ன்னாடா பேசுறே?" என்று பாலாமணி பக்கத்தில் கிடந்த இரும்புக் கம்பி ஒன்றை எடுத்து ஆதிகேசவனின் தொடையில் ஓங்கிப் போட்டது. அந்தக் கம்பி பெண் மக்கள் வூட்டுக்கு விலக்காகும் போது பெண்கள் பக்கத்தில் போட்டு படுப்பதற்காக சரசு ஆத்தா வைத்திருக்கும் நல்ல தடித்த இரும்புக் கம்பி.
            இங்கே இப்பிடி ஒரு பழக்கம் இருக்கிறது. வூட்டுக்கு விலக்காகும் பெண்கள் அந்த மூன்று நாட்களும் வெறுந்தரையிலோ அல்லது பழந்துணியையோ போட்டு வீட்டின் ஒதுக்குப்புறமாக படுத்துக் கொண்டு பக்கத்தில் விளக்குமாற்றையோ அல்லது இது போன்ற ஆளடி நீளத்துக்கு இரும்புக் கம்பியையோ போட்டுதான் படுத்துக் கொள்ள வேண்டும். விளக்குமாற்றை விட இதுபோன்ற இரும்புக் கம்பிதான் கல்யாணம் ஆகாத வீட்டுக்கு விலக்காகும் பெண்களுக்கு காப்பு என்று அதற்கு ஏற்ற மாதிரி ஒரு இரும்புக் கம்பியைத் தயார் செய்து இந்தப் பெண்மக்கள் வைத்துக் கொள்ளும். கல்யாணம் ஆகி வீட்டுக்கு விலக்காகும் பெண்கள் இரும்புக் கம்பி இல்லாவிட்டாலும் விளக்குமாற்றைப் பக்கத்தில் போட்டு படுத்துக் கொள்ளும். ஆனால் கல்யாணம் ஆகாதப் பெண்களுக்குக் கட்டாயம் இரும்புக் கம்பிதான்.  இப்படிப் போட்டு படுத்தால் காத்து, கருப்பு அண்டாது என்றும் அப்படி அண்டினாலும் இரும்புக் கம்பியையோ, விளக்குமாற்றையோ எடுத்து ஒரு போடு போட்டால் ஓடி விடும் என்று ஒரு நம்பிக்கை. இப்பிடிப் போட்டு படுத்து காலையில் எழுந்ததும் முதல் வேளையாக அந்தக் கம்பியை அல்லது விளக்குமாற்றை  ஓரம் செய்து விட்டு, படுத்திருந்த இடத்தை தண்ணீர் விட்டு மெழுகி சுத்தம் செய்த விட வேண்டும் என்பதையும் ஒரு பழக்கமாக வைத்திருக்கின்றன இந்தப் பெண்மக்கள்.  அந்தக் கம்பியை மற்ற நாட்களில் ஒரு ஓரமாகப் போட்டு வைத்திருப்பார்கள். அப்படி அங்கே ஓரமாகக் கிடந்த அந்தக் கம்பியால் ஒரே அடிதாம் அடித்தது பாலாமணி. பலமான அடியாக இருக்க வேண்டும் அந்த அடி. ஆளடி நீள இரும்புக் கம்பியால் வேகமாகப் போட்டால் என்னாகும் கதை? அப்படியே காலைப் பிடித்துக் கொண்டு சுருண்டு  உட்கார்ந்து விட்டான் ஆதிகேசவன். உட்கார்ந்து விட்ட ஆதிகேசவனை அடிபட்டு செத்து விட்ட பாம்மை மேலும் மேலும் அடிப்பதைப்  போல பாலாமணி நெருங்கி வந்து உதை உதையென்று உதைத்துத் தள்ளுகிறான். யாருக்கும் பாலாமணியைத் தடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ராசமாணி தாத்தா வந்து ஆதிகேசவனின் முகுதில் நங்கென்று ஒன்று போடுகிறது. லாலு மாமாவும் தன் பங்குக்கு அவன் கன்னத்தில் பொளேர் பொளேர் என்று போடுகிறது. எல்லா தாக்குதல்களும் சிறு சிறு இடைவெளிக்கிடையில் கண்ணிமைக்கும் நேரத்தில் வேக வேகமாக நடந்தேறியதில் நிலைகுழைந்து போகிறான் ஆதிகேசவன்.
            "யேய்! எஞ்ஞ ஏரியா செண்டாம்பாளையத்துக்குத் தெரிஞ்சா வெவகாரமா ஆயிடும்டா. வூடு தேடி உதவ வந்தவனெ இப்பிடி ஆளாளுக்கு போட்டு அடிக்கிறீங்களேடா! ஒங்க மேல இருந்த நம்பிக்கையாலதாம்ட ஒருத்தனையும் ஒரு மண்ணையும் அழச்சிட்டு வாராம நாம்ம மட்டும் தனியா வந்தேம். எவனாவது ஒருத்தன அழச்சிட்டு வந்திருந்தேம்னா தெரிஞ்சிருக்கும். வூட்ட அப்டியே பிரிச்சி மேய்ஞ்சி சம்காரமே பண்ணிருப்பானுங்க பசங்கோ!" என்று ஆதிகேசவன் சொன்னதும் பாலாமணி மிகச் சரியாக ஆதிகேசவனின் வாய்க்கு மேலே காலை வைத்து உதைத்தது. உதைத்த வேகத்தில் முன்பல் ஒன்று உடைந்து ரத்தம் கொட்டியது. உள்மூக்கும் உடைந்திருக்க வேண்டும். அதன் வழியாகவும் ரத்தம் கொட்டியது.
            "இருடா ஒங்க ஏரியாக்காரனெயே கொண்டார்ரேம். ஒன்னய ன்னா பண்ணப் போறானுவோ பாரு!" என்று வெளியே கிளம்புகிறது பாலாமணி. லாலு மாமாவும், ராசாமணி தாத்தாவும் இப்போது மீண்டும் சராமாரியாகப் போட்டு ஆதிகேசவனைக் காலால் மிதித்துத் தள்ளுகிறார்கள். அடி வாங்கி அலங்கோலமாகக் கிடக்கும் ஆதிகேசவனின் நிலையைப் பார்க்கையில் பாவமாக இருக்கிறது. உதவி செய்ய வந்தவனுக்கு இப்படி ஓர் உபத்திரவமா என்பது போல இருக்கிறதான் நிலைமை.
            நடப்பதையெல்லாம் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே நிற்கிறது சரசு ஆத்தாவும், பிந்துவும். இவனுங்க அடிக்கிற அடியிலயும், உதைக்கிற உதையிலயும் வூட்டுல ஒரு பொணம் விழுந்துருமோன்னு பயமாக இருக்கு அந்த ரெண்டு பேருக்கும்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...