செய்யு - 183
குடும்பத்தோட ஏழெட்டுப் பேரோடு ஒரு சின்ன
வீட்டுல இருக்குறப்பவே பயப்படுறவங்கலாம் இருக்காங்க. ஒண்டி ஆளா துணைக்கு யாருமில்லாம
பெரிய வீட்டுல தைரியமா இருக்குறவங்களும் இருக்காங்க. சித்துவீரன் வாங்கிப் போட்டுருக்குற
வீடு நல்ல பெரிய ஓட்டு வீடு. சுத்துக்கட்டு வீடு. அதுக்குள்ளயே ரெண்டு மூணு குடும்பங்க
குடியிருக்கலாம்.
இந்த நாட்டுல இருந்து சம்பாதிச்சு அம்மாம்
பெரிய வீடு வாங்க முடியாது. வெளிநாட்டுல போயி சம்பாதிச்சுதாம் நம்ம நாட்டுல அம்மாம்
பெரிய வீட்டை வாங்க முடியுது. அந்த வீட்டுல சுந்தரி குடியிருக்குறதுக்கு ஏத்த மாதிரியான
எல்லா ஏற்பாடுகளையும் பண்ணி வெச்சிட்டுதாம் சித்துவீரன் வெளிநாட்டுக்குக் கெளம்புச்சு.
அதுக்கு முன்னாடி முருகு மாமா வீட்டுக் கொல்லையைத் திடீரென்று ஒரு நாள் போய் நான்கு
ஆட்களை வைத்துக் கொண்டு குறுக்கே அடைத்து விட்டு ஒரு ரகளையை உண்டு பண்ணி விட்டு வந்தது
சித்துவீரன். சொத்து பிரிக்கிற வரைக்கும் அந்த எடம் தன்னுடைய இடம் என்று சத்தம் வேறு
போட்டது. அதற்குள் யாரும் புழங்கக் கூடாது என்று விரலை நீட்டி கொன்னு புடுவேன் என்கிற
ரீதியில் எச்சரிக்கையும் பண்ணி விட்டு வந்தது. முருகு மாமா அரிவாளைத் தூக்கிக் கொண்டு
வெட்ட ஓடாத குறைதான். ஊரில் இருந்தவர்களுக்கு அதைத் தடுக்க முடியாத குறைதான். ரொம்ப
பெரிய களேபரமா போயிடுச்சி. அப்பனை மகன் வெட்டுவானா? மகனை அப்பன் வெட்டுவானாங்ற நிலைமையா
ஆயிப்போச்சு. ஒரு வழியா ரெண்டு பேரையும் பிரிச்சி அனுப்பி விட்டாங்க சுத்தி நின்ன
ஊருக்காரங்க.
கொல்லைன்னாலும் கொல்லை முருகு மாமா வூட்டோட
கொல்லை பெருங்கொல்லை. பின்னாடி அது வெண்ணாத்தாங்கரை வரை நீண்ட கொல்லை. அந்த வெண்ணாத்தாங்
கரையை தெருவா வெச்சி அந்த பக்கம் முழுசும் இப்போ வீடுங்க வந்தாச்சு. இப்படி வடவாதி
மெயின்ரோட்டுக்கும் பின்னாடி வெண்ணாத்தாங்கரை வரைக்கும் ஒரு மனை கெடைக்கிறது இனிமே
ரொம்ப கஷ்டந்தான். கொல்லை முழுக்க வெண்ணாத்தோட வளமான வண்டல் படிஞ்ச எடம். தென்னை மரங்க பத்து பதினைஞ்சு இருக்கு. அதுங்க
காய்க்குற காய்ப்பு இருக்கே ஒரு குத்துக்கு இருநூறு, முந்நூறுன்னு காயெடுக்கலாம். மிளகாயை
இருவது குழி அளவுக்கு போட்டு வெச்சா சும்மா காய்ச்சி தள்ளிப்புடும். கத்திரி, வெண்டை,
கொத்தரைன்னு போட்டு வெச்சா விளைஞ்சு தள்ளிபுடும். பரங்கியையும், சுரையையும், பூசணியையும்
போட்டு வேலிப் பக்கமா இழுத்து விட்டுப்புட்டா காய்ச்சு தள்ளுறதை விட வேற இல்லேங்ற
அளவுக்குக் காய்ச்சுத் தள்ளிபுடும். இப்படி வளமான கொல்லை. அத்தோட வீடு வேணாலும் கட்டிக்கிற
மனையும் வேற. இந்த மாதிரி மனையில மெயின்ரோட்ட பாக்குற மாதிரி வடக்கு பாத்தாப்புலயும்
வீடு கட்டிக்கலாம். இல்லேன்னா வெண்ணாத்தங்கரைத் தெருவை வாசலா வெச்சி தெற்கப் பாத்தாப்புலயும்
வீட்டைக் கட்டிக்கலாம். வடக்கே பாத்தாப்புல மெயின் ரோட்டுலதான் இப்போ முருகு மாமாவோட
வீடு இருக்குது. வேணும்னா தெற்குப் பாத்தாப்புல
இன்னொரு வீட்டையும் கொல்லைப் பக்கத்த பாதியா பிரிச்சி அந்தப் பக்கத்துல கட்டிக்கலாம்.
அப்படிக் கட்டிகிட்டா வெண்ணாத்தங்கரை வாசல் பக்கமா அந்த வீட்டுக்கு அமைஞ்சிடும். அந்த
யோசனையிலதான் முருகு மாமாவோட கொல்லைக்கு நடுவுல வேலி வெச்சி அந்த மனையை ரெண்டா பிரிக்க
நினைச்சது சித்துவீரன். "நாந்தாம் ரெண்டு நாளு சொத்து பிரிக்க கால நேரம் கொடுத்தேனே.
நீ ஏம் இன்னும் பிரிக்கல? பிரிக்காது எந் தப்பா உந் தப்பா? உந் தப்புதானே. அதாங் பிரிச்சிக்
கொடுக்காத உந் தப்ப நாம்ம வேலி வெச்சி பிரிச்சி சரி பண்ணிக்கிறேம்!" அப்பிடிங்றது
சித்துவீரன் தரப்பு ஞாயம்.
"எவ்வேம் வூட்டு மனைக்கு எவம்டா வேலி
வைக்கிறது? இப்படி தெருவுல போற கண்ட கண்ட நாயெல்லாம் இது எம்ம வூட்டு மனைன்னு வேலி
வைக்க ஆரம்பிச்சா நாம்ம ன்னா நடுத்தெருவுலயா நிக்குறது? வெலிக்கால வெட்டி வீசுற மாரி
அவ்வேம் தலெய வீசி எறியணும்டா! இதுல அப்பன் என்னடா? மவேன் என்னடா? ஒண்ணு அவேன் தலெ
தலையில உருளணும், யில்ல எம் தலெ உருளணும்." அப்பிடிங்றது முருகு மாமா தரப்பு ஞாயம்.
நல்ல வேளையா சித்துவீரன் வேலி வைக்குற
நேரத்துல முருகு மாமா வயலப் பார்க்க ஓகையூரு போயிருந்துச்சி. யாருகிட்டயும் எதுவுஞ்
சொல்லாம ஆளரவம் கேட்காத அளவுக்குப் போயி சித்துவீரன் அது பாட்டுக்கு அது வேலிய வேக
வேகமா வெச்சிட்டு கிளம்பிடுச்சி. இதுக்கான ஏற்பாடுகள எல்லாம் அது ரெண்டு நாளா யாருக்கும்
தெரியாம ரகசியமா வேலி போத்துகள தயார் பண்றதிலேர்ந்து மூங்கில் முள்ளு, அதைக் கட்டுற
ஆளுகள வரைக்கும் ஏற்பாடு பண்ணியிருந்திச்சி. இப்படியே வெண்ணாத்தங்கரை பக்கமா வேலிய
பிரிச்சி வுட்டுட்டு கொல்லைக்கு வந்தா கிழக்காலயும், மேற்காலயும் ரெண்டு பக்கமும்தான்
வேலி இருக்குல்ல. நடுவுல கொல்லையை ரெண்டா பிரிக்கிற அளவுக்கு ஒரு முப்பது அடி அகலத்துக்கு
அது பாட்டுக்கு குறுக்கால வேலிய வெச்சிட்டுக் கிளம்பி வந்துடுச்சு.
இங்கே வேலியை வைத்து விட்டு சித்து வீரன்
அந்தாண்டை போன உடனே அந்த வேலியை ஓகையூர்லேந்து வந்து பார்த்த முருகு மாமா பிரித்து
வீசியது. பிரித்து வீசியதோடு இல்லாமல், கையில் இருந்த அரிவாளோடு சித்துவீரனை வெட்டிச்
சாய்க்கிறேன் என்றும் ஓடியது. விசயம் கேள்விபட்டு அங்கே ஏற்கனவே கூடியிருந்த ஊரு பெரிசுகள்
தலையிட்டு முருகு மாமாவைப் பிடித்துக் கொண்டதால் அப்படி இப்பிடின்னு நடக்கும்னு எதிர்பார்தத
அசம்பாவிதம் நடக்காமப் போயிடுச்சி. "வேற யாரும் இது மாதிரி வேலி வெச்சிருந்தா
இந்தப் பிரச்சனையில தலையிட ஞாயம் இருக்கும். அப்பன் மவனுக்குள்ள தலையிட என்ன இருக்குது?
இன்னிக்கு சண்டை போட்டுப்பானுங்க! நாளைக்கே கூடிக் குலாவிப்பானுங்க!" என்பதால்
இதைக் கொஞ்சம் ஆறப் போட்டாலே போதும் என்று அந்தப் பெரிசுகள் நினைத்திருக்கக் கூடும்.
இருந்தாலும் இந்தப் பிரச்சனையில ஒரு கண்ணு வெச்சிக்கணும் அப்பிடிங்றதும் அவங்க நெனைப்புக்கு
நல்லாவே புரிஞ்சிருக்கணும். "நல்ல வேள
வூட்டுக்கு நடுவே கோட்டப் போடாம வுட்டானே கோட்டிக்கார பயெ!" என்று பெருமூச்சு
வுட்டுக் கொண்டது நீலு அத்தை. வடவாதியில் இந்த வேலி வைத்த விவகாரம் ஒரு ரெண்டு வாரத்துக்கு
சுவாரசியமான விசயமாக பேசப்பட்டு என்ன நடக்குமோ என்கிற ரீதியில் புகைந்து கொண்டிருந்தது.
அடுத்து சித்துவீரன் என்ன பண்ணப் போகுது?
முருகு மாமா என்ன பண்ணும்? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் எல்லாருக்கும் ஒரு அல்லாட்டம்தான்.
சித்துவீரன் வெளிநாடு கிளம்ப வேண்டியிருந்தது. இந்த நெலைமையில் முருகு மாமா போலீஸ்
கம்ப்ளெய்ண்ட் ஏதும் கொடுத்து அது கேஸாகிப் போனால் வெளிநாடு போவது சிக்கலாகி விடும்
என்ற பயம் இப்போதான் லேசாக சித்துவீரனுக்கு வருது. அதற்கு ஏற்றாற் போல முருகு மாமாவும்,
"இன்னொரு தடவே அந்தப் பயெ இந்த எடத்துல காலடி எடுத்து வெச்சான்னா போலீஸ்ல கம்ப்ளெய்ண்டு
பண்ணி உள்ள தூக்கிப் போட்டுடுவேன்!" என்று மிரட்டல் விட்டுக் கொண்டிருந்தது.
உள்ளுக்குள் இருந்த பயமும், முருகு மாமாவிடமிருந்து வந்த மிரட்டலும் சேர்ந்து கொண்டதில்
அதற்கு மேல் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்ட சித்துவீரனுக்கு வாய்ப்பில்லாமல் போய்
விட்டது. அதோட நிலைமை வெளிநாடு செல்வதற்கு விசா எடுப்பதற்கும், பணம் புரட்டுவதற்கும்
அலைய வேண்டியதாகி விட்டது. வெளிநாட்டிலேர்ந்து கொண்டு வந்த பணத்தை ஏகத்துக்கும் கல்யாணத்தில்
தண்ணியாய் இறைத்து விட்டதில் அப்படி ஒரு நிலைமை ஆகி விட்டது சித்துவீரனுக்கு. பெரிசா
அடிதடி, வெட்டுக்குத்து ஆகும்னு எதிர்பார்த்த ஒண்ணு இப்படி பொசுக்குன்னு போயிடுச்சேன்னு
ஊருல ஒரு சில கவுட்டுக்கார பெரும் தலைங்களுக்கு கொஞ்சம் சப்புன்னுதாம் போய்ட்டுது.
சித்துவீரன் வெளிநாடு போனதுக்கு அப்புறம்,
அப்போக்கைகப்போ பாக்குக்கோட்டையிலேர்ந்து சரசு ஆத்தா வந்து சுந்தரியோட இருந்துட்டுப்
போவும். அப்படி வரப்ப எல்லாம், "ஒத்தையா பொண்ண இப்படி பாக்க நாதியில்லாம கொண்டு
போயி வெச்சிருக்கீயே அண்ணே!" அப்பிடின்னு சரசு ஆத்தா முருகு மாமா வீட்டுக்கு
வந்து சத்தம் போட்டுட்டுப் போவும்.
"ஆத்தாளும் மவளுமா திட்டம் போட்டு பிரிச்சிகிட்டுட்டுப் போயி இப்போ வந்து
ஊரு ஒலகத்துக்காக பிலாக்கணம் பாடுறீயா? ஒம் மருமவன விட்டு சொத்தப் பிரிச்சி வாங்கிட்டு
வான்னு பெரச்சனைப் பண்ணி விட்டு, வூட்டுக்குப் பின்னாடி இருக்குற கொல்லையில பாதிய
மறிச்சி அடைக்க வெச்சியே! இம்மாத்தையும் பண்ணிட்டு பொண்ண ஒத்தையா உட்டுட்டேன்னா வந்து
பாட்டு படிக்கிறே சண்டாளி சண்டாளி!" என்று பதிலுக்கு முருகு மாமா சத்தம் போடும்.
"ஓம் மவன் பண்றதுக்கும் நமக்கும்
எந்தச் சம்பந்தமும் இல்லேண்ணே! அவனுக்கு இருக்குற சொத்துக்கு ஒம் வூட்டுச் சொத்து
வந்துதாம் கரையேறணும்னு இல்லே. அப்பங்ற ஒறவுல கொஞ்சம் அவனுக்குப் பங்கு இருக்குல்ல.
அது விட்டுடப் படாதுன்னுதான் அவனுக்கு ஒரு துண்டு நிலம் இருக்கட்டும்னு அப்பிடிப் பண்ணிருப்பான்.
யாரு ஒம் வூட்டு நிலத்த பங்கு போட்டுருக்கா? ஒம் மவன்தானே! நீ என்னா அதுல கொறைஞ்சிப்
போயிடப் போறே?" என்று சரசு ஆத்தா அதுக்குப் பதில் சொல்லும்.
"ஏய் சவுட்டு மூதி! மரியாதியா இந்த
எடத்த காலி பண்ணிட்டுப் போயிடு! இல்லே மானம், மரியாதி இருக்குற எடம் தெரியாமப் போயிடும்
பாத்துக்க!" என்று சொல்லும் அதுக்கு முருகு மாமா.
அதுக்கு மேல் அங்கே நிற்க மனசில்லாமல்
வடவாதி மெயின் ரோட்டிலிருந்து பஸ் ஸ்டேண்ட் பக்கத்தில் இருக்கும் மருமவன் வீட்டுக்கு
வந்து விடும் சரசு ஆத்தா. அப்போது நீலு அத்தை வீட்டிலிருந்தால் இன்னும் நாரசமாக இருக்கும்.
பெரும்பாலும் நீலு அத்தை வீடு தங்காது. வீடு வீடாகப் போயி எதையாவது பேசி அங்கு ஒரு
கலகத்தை உண்டு பண்ணி விடும். நன்றாக இருக்கும் வீடு நீலு அத்தைப் போய் பேசி விட்டு
வந்து பிறகு ரெண்டாகி விடும். ஊரு ஒலகத்துல ஒருத்தி நல்லா இருக்க விடாம பிரிச்சி வுடறுதாலதான்
நீலு அத்தைக்கு மருமவளா வந்த சுந்தரி குடும்பத்தைப் பிரிச்சிகிட்டு அதையே பிரிச்சி
வுடுற மாதிரி குடும்ப சூழ்நிலை அமைஞ்சுப் போச்சுன்னு ஊர்ல ஒரு பேச்சு உண்டுன்னா பாத்துக்குங்களேன்.
"நல்ல பொண்ண பெத்து இஞ்ஞ வுட்டுருக்கேன்னு
பார்க்க வந்தியாக்கும்! நீயி இருந்த வரைக்கும் இஞ்ஞயிருந்து வாரப்ப போறப்ப எல்லாம்
அமுக்கிக்கிட்டு பாக்குக்கோட்டையில கொண்டு போயி சேர்த்தே. நீ அள்ளிட்டுப் போனது
பத்தாதுன்னு ஒம் பொண்ண விட்டு வேற ஒட்டுமொத்தமா துடைச்சிட்டு அள்ளிட்டுப் போயிருக்கிறே!
இருக்குற மூணு பேருல ஒருத்தன் சுகரு வந்து வெளங்காமப் போயி விருத்தாச்சலத்துல கெடக்கிறாம்.
ரெண்டாவது பயலே நீயி வளைச்சிப் போட்டு கொண்டுட்டுப் போயிட்டே. மூணாவது இருக்குறவனையும்
எவ்வே வளைச்சிட்டுப் போறாளே! அதுக்குன்னுதான் இன்னொன்னையும் வேறல்ல நீயி பெத்து வெச்சிருக்கே.
ஏதோ தெரியாத்தனமா ஒண்ணை ஒம் வூட்டுலேந்து எடுத்தாச்சி. இன்னொன்னை எடுக்குற நெலைமை
வந்துச்சுன்னா எம் மூணாவது பயலே வெசத்தை வெச்சே கொன்னுபுடுவேம்! அவ்ளோ ஆத்திரமா வருதுடி
ஒன்னயப் பாக்கிறப்ப! இதுல வேற வெட்கங்கெட்டதனமாக இஞ்ஞ வந்து நிக்குறே! போடி திருட்டுத்
தேவிடியா!" என்று சத்தம் போடும் நீலு அத்தை.
"ஏய் அண்ணி! நீயி ஏதோ ஆத்திரத்துல
பேசுற! பேசிட்டுப் போ! ஒனக்குப் பக்கத்துல இருக்குற ஒரே மருமவ எம் பொண்ணுதாம். ஒரு
ஆத்திர அவசரம்னா ஒனக்கு அவதாம் வந்து நிக்கணும்!" என்று பதில் சொல்லும் அதுக்கு
சரசு ஆத்தா.
"அப்பிடி ஒரு ஆத்திரம் அவசரம் வந்துரும்னா
நாம்மா கட்டையில போயி சேர்ந்திடறோம்டி! அந்தச் சாவுகிராக்கி வந்து பாக்குற அளவுக்கு
நம்ம ஒடம்புல உசுர தங்க கூடாதுடா எஞ் வீரஞ் சாமி! ஒண்ணும் இல்லாதவ கனவு கண்டாளாம்.
அந்தக் கனவுல எதிர்வூட்டுக்காரிக்கு எட்டு ஏக்கரா நெலத்த எழுதித் தரதா சத்தியம் செஞ்சாளாம்ங்ற
கதையால்ல இருக்கு! எல்லாம் வெளிநாட்டுல அவ்வேன் பணம் அனுப்புவாங்ற திமிருடி! எத்தனை
நாளிக்கு இந்தத் திமிரு இருக்குதுன்னு பாக்குறேம்!" என்று சொல்லும் நீலு அத்தை.
இப்பிடி இடையில் சரசு ஆத்தா வந்து பார்ப்பது
போல, லாலு மாமாவும் தஞ்சாவூரிலிருந்து பார்த்து விட்டுப் போவும். தங்காச்சிப் பொண்ணு
இப்படி தனியா இருக்குறாளேங்ற கவலை லாலு மாமாவுக்கு இருந்துச்சி. அதுக்கு அண்ணன் வீட்டுப்
பக்கம் பேசுறதா? தங்காச்சி வீட்டுப் பக்கம் பேசுறதான்னு உண்டான குழப்பத்துல ரண்டு மனசாகி
இங்கைக்கும் அங்கைக்கும் மாறி மாறி அலையும். இங்க பாக்குக்கோட்டை சரசு ஆத்தா இருக்கிறப்ப
வந்தா, "போயும் போயும் அஞ்ஞ கொண்டு போயி இழுத்து வுட்டிட்டீயே!" அப்பிடிங்கும்
சரசு ஆத்தா. "ஏம்டா ஒனக்கு எம் மவனுக்குக் கட்டி வைக்க வேற பொண்ணே கெடைக்கலையா?"
அப்பிடிங்கும் முருகு மாமா.
*****
No comments:
Post a Comment