18 Aug 2019

தண்ணி பட்ட பாடு!



செய்யு - 180
            கல்யாணம் பண்ணி முடித்ததும் சுந்தரிக்குள் ஒரு பொறுப்பு வந்திடுச்சிப் பாருங்க. தாலி ஏறுனா அது வாரதா பின்னே! சுந்தரி கல்யாணம் ஆயி வந்ததிலேந்து நீலு அத்தையையும், முருகு மாமாவையும் கவனிச்சுக்கிற கவனிப்பென்ன! தாங்குற தாங்குதான் என்ன! அதையெல்லாம் வார்த்தையில சொல்ல முடியாது. வீடியோ எடுத்துதான் காட்டணும். அதுக்குச் செலவு பண்ணணும்னா எப்படியும் பத்தாயிரம், பன்னெண்டாயிரம் இருந்ததாத்தான் வீடியோக்காரன் வருவான். அதால சுருக்கமா சொல்லணும்னா சுந்தரி சித்துவீரன கவனிக்கவே இல்ல. பொழுது முச்சூடும் மாமியாரு, மாமனார கவனிக்கிறதுதான் அதோட வேலையே. பச்சத் தண்ணியில குளிச்சிட்டு கெடந்த முருகு மாமாவும், நீலு அத்தையும் இப்போ வெந்நியிலதான் குளிச்சிகிட்டுக் கெடக்குறாங்க.
            சித்துவீரனுக்கே இது அதிசயமாத்தான் இருக்கு. கல்யாணம் ஆன பெண்டுக காலையில அவ்வளவு சீக்கிரமா எழுந்திரிக்க மாட்டாக. வீட்டுல இருக்குற பெண்டுக போயி கதவைத் தட்டித்தான் எழுப்பி வெளியில கொண்டு வருவாக. இது என்னமோ விடிஞ்சதும் விடியாதுமா எழுந்திரிச்சி வந்த கையோட குளிச்சி முடிச்சி, தலையில ஒரு துண்டைக் கட்டிகிட்டு, வாசல கூட்டி, சாணிய கரைச்சித் தெளிச்சி, கோலத்தைப் போட்டு, மாமானாருக்கும், மாமியாருக்கும் அதிகாலையில அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் காபி தண்ணியோட வந்து நிக்குது. அதுவும் இல்லாம புதுப்பொண்ணை யாரும் கொஞ்ச நாளைக்கு அதிகமாக வேலை செய்ய விடாம ரேண்டு மூணு பெண்டுக வந்து தங்கிட்டு அனுசரனையாக நடந்துக்க ஒரு தோது பண்ணிவிட்டுப் போவுங்க. இங்க என்னான்னா அதுக்கெல்லாம் தேவையே இல்லாதது போல வந்த பெண்டுகளோட நிலைமை ஆகிப் போச்சி. அந்த பெண்டுகளுக்கும் சேர்த்துல்ல நம்ம சுந்தரி குனிஞ்சி நிமிந்து வளைஞ்சி அலைஞ்சி வேலை பார்க்குது.  
            சித்துவீரனுக்கு இதைப் பார்க்கிறப்ப சந்தோஷம்னா சந்தோஷம் அப்படி ஒரு சந்தோஷம். நம்மள கவனிக்காட்டியும் என்னா? இப்பிடி எல்லாரையும் கவனிக்குற இந்த மாதிரி பொண்ண நாட்டுல எவன் கட்டியிருக்கான்? அதுவும் இந்தக் கல்யாணம் ஆன புதுப்பொண்ணு இருக்கே, அது கொஞ்ச நாளைக்கு அந்தாண்ட இந்தாண்ட கூட அசையாது. ஒலகத்துக்கே மவராணி கணக்கா ஆடி அசைஞ்சு நடந்துகிட்டு இருக்கும். அடுப்படியையே பார்க்காத மாதிரி இதெ எப்பிடி வைக்கணும், அதெ எப்பிடி வைக்கணும்னு அதிசயமா கேட்டுகிட்டு, அங்க, இங்க, எங்க போனாலும் கையில ஒரு கர்ச்சிப்பை வெச்சிகிட்டு, எதுக்கெடுத்தாலும் அந்தக் கர்ச்சிப்பால மூஞ்சைத் துடைச்சிகிட்டு அதுங்க பண்ற அலம்பல பாக்கிறதுக்கு சகிக்காது. எல்லாம் அந்தக் கொஞ்ச நாளைக்குத்தான். அதுக்குப்புறம் கையில் கரித்துணிய வெச்சிகிட்டு அடுப்படியே கதின்னு ஆக்கிப்புடுவானுங்க இந்த ஆம்பளப் பயலுகங்றது வேற விசயம்.
            கல்யாணமோ, சாவோ அது முடிந்தால் கறிவிருந்து இல்லாமலா? இங்கு கல்யாணத்தை விட கறிவிருந்துதான் முக்கியம். கல்யாணத்தில் கூட குறைச்சல் இருக்கலாம். கறிவிருந்தில் அதெல்லாம் கூடாது. எந்த குறையும் இருக்கக் கூடாது. இருந்தால் அது காலத்துக்கும் பேசப்படும் வரலாற்றுப் பிழையாக மாறி விடும் அபாயம்தான். அப்படி ஏதாவது நடந்து விட்டால் ஏதோ அசம்பாவிதம் நடந்த மாதிரி ஒவ்வொரு விஷேசத்திலும் அதையே பேசிக் கிடப்பார்கள் இந்த சனங்கள். அந்த அளவுக்குக் கறி விருந்துக்கு கெடந்து அடிச்சாப்பானுங்க. கல்யாணம் முடிஞ்ச அடுத்த நொடியிலேர்ந்தே கறி விருந்து எப்போ எப்போன்னு நிக்க ஆரம்பிச்சிடுவானுங்க!
            மாப்பிளை வீடு, பொண்ணு வீடு என்று ரெண்டு வீட்டிலும் கறி விருந்து உண்டு. இந்த கறி விருந்தைத்தான் சம்பந்தம் கலப்பது என்பார்கள். கல்யாணம் முடிந்த சில நாட்களுக்குள் இந்தச் சம்பந்தம் கலந்து விட வேண்டும். இல்லையென்றால் சம்பந்தம் கலக்க முடியாமலே போய் விடும். அதாங்க ரெண்டு குடும்பத்துக்கும் விரிசல் விழுந்து போய் விடும். முருகு மாமாவுக்கோ, ராசாமணி தாத்தாவுக்கோ புதிதாக சம்பந்தம் கலக்க என்ன இருக்கிறது? ஏற்கனவே கலந்த சம்பந்தம்தான். இருந்தாலும் முறை என்ற ஒன்று இருக்கிறதே! மேற்படி நாம்ம சொன்ன தகவல்களிலேர்ந்து உங்களுக்கு ஒரு விசயம் புரிஞ்சிப் போயிருக்கும். அதாவது, கல்யாணம் நல்லபடியாக நடந்தாலும், கறிவிருந்தும் நல்லபடியாக நடந்து முடிந்தால்தான் எல்லாம் சரியாக முடிந்ததாக அர்த்தம்.
            கல்யாணம் நல்லபடியாக நடந்து கறி விருந்தில் அடிதடி நடந்து பிரிந்த குடும்பங்கள் எல்லாம் உண்டு. கல்யாணத்தில் அடிதடி நடந்து கறிவிருந்தில் சமாதானம் ஆன குடும்பங்களும் உண்டு. பெரும்பாலும் கல்யாணத்தை விட கறி விருந்து முக்கியம். இவனுங்க இதுல அலம்பல்கள பார்க்கிறப்போ கறி விருந்தை முடிச்சிட்டுக் கூட கல்யாணத்தை வெச்சிக்கலாம்னு தோணும். அதுலயும் ஒரு வித்தியாசம் பாருங்க! கல்யாணத்தில் தெரியாமல் கொள்ளாமல் தண்ணி அடிக்க வேண்டியிருக்கும். கறி விருந்து என்பது தண்ணி அடிப்பதற்கு லைசென்ஸ் கொடுத்தது போன்று. அதாலதான் எவனும் கல்யாணத்தை விரும்ப மாட்டான். கறி விருந்தை அம்புட்டு விரும்புவான். கறி விருந்து தொடங்குவதற்கு முன் தண்ணி பார்ட்டி தொடங்கி விடும். அப்படி தண்ணியைப் போட்டு விட்டு வயிறு கபகபவென்று இருக்கும் போதுதான் விருந்தைப் போட வேண்டும் இந்த ஆம்பிளைச் சனங்களுக்கு. அப்போது ஒவ்வொருத்தனும் சாப்பிடுவதை நீங்கள் பார்க்க வேண்டுமே! ஏதோ புராணத்தில் பகாசுரன் என்ற ஒருவன் இருந்தானாமே! அவன் தோற்றான் போங்கள்! அப்படி வயிறு புடைக்க... அப்படிக் கூட சொல்ல முடியாது. வயிறு வெடிக்கச் சாப்பிடும் ஒவ்வொன்றும்.
            இதில் விருந்து சாப்பிட உட்காரும் ஒவ்வொருவனுக்கும் இலையைப் போட்டவுடன் பணத்தை எடுத்து வைக்க வேண்டும். கறி விருந்துக்கு இலையைப் போட்டுப் பணத்தையா சாப்பிடுவானுங்க என்று கேட்டு விடாதீர்கள். அது ஒரு பழக்கம்பானுங்க, மொறைம்பானுங்க. வேண்டாம்னாலும் விட்டுத் தொலைய மாட்டானுங்க. அதுக்கு ஒரு அடிதடி ஆயிடுங்றதால இதெல்லாம் கண்டுக்கிடாம வைக்கிற மொய்யை எடுத்துகிட்டு கறிவிருந்தைக் கொட்டிகிட்டு பதுவிசாய் வந்து விட வேண்டும். இந்த இடத்தில் புரட்சி அது இது என்று பேசினால் பேசுனவனைக் கறியாக்கி கறி விருந்து போட்டுருவானுங்க இந்தப் பொல்லாப் பயலுங்க.
            இலையைப் போட்டதும் அதில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தைப் பார்க்கும் மாப்பிள்ளை வீட்டு சனங்கள். ஆளுக்குத் தக்கப்படி பணம் வைக்கப்பட்டிருக்கும். அது என்ன வைக்கப்பட்டிருக்கும்? வைக்கப்பட்டிருக்க வேண்டும்! வைத்திருக்கும் பணம் தங்கள் முறைக்குக் குறைந்தது என்று நினைத்து விட்டால் அதில் ஒரு சண்டை நடந்து சமாதானமாகித்தான் மறுபடியும் கறிவிருந்து தொடங்கும். இப்பிடி ஒவ்வொண்ணுக்கும் குறை சொல்லிகிட்டு அடித்துப் பிடித்துக் கொண்டு முடிந்தால் அது கறி விருந்து. இல்லையென்றால் அது என்ன கறிவிருந்து? அப்படி நடந்தால் சப்பென்று போய் விடும் இந்த ஆண்களுக்கு. இந்தப் பிரச்சனையெல்லாம் வரக் கூடாது என்றுதான் தண்ணியைக் கறிவிருந்து தொடங்குவதற்கு முன்னே ஊற்றிக் கொடுத்து விட்டு விடுவார்கள். மப்பில் வைக்கும் பணத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் வைக்கும் கறித்துண்டங்கள், மீன் வறுவல், சிக்கன் பொறியல்கள் பெரிதாக இருக்க வேண்டும். ஒனக்கு வைத்த கறித்துண்டில் ரெண்டு மில்லிகிராமு அதிகம், எனக்கு வெச்சத்துல ரெண்டு மில்லி கிராமு கம்மின்னு அதுக்கும் ஒரு சண்டை வரும். எல்லாத்திலேயும் கவனமாக இருக்க வேண்டும் இந்தக் கறி விருந்தில். ஆடு, கோழி, மீனு எல்லாம் உசுர விட்டு கறி விருந்து வைக்கிறதுன்னா சும்மாவா! இது நல்லபடியா நடந்து முடியணும்னு மனுஷனும் உசுரை விட்டுத்தான் ஆவணும். வேற வழியில்ல.
            இந்தக் கறிவிருந்து - சோறு, ஆட்டுக்குறிக் குழம்பு, கோழிக்கறிக் குழம்பு, மீன் குழம்பு, வஞ்சனங்கள் என்று இருப்பதும் உண்டு. பிரியாணி, தாளிச்சா, வஞ்சனங்கள் என்று இருப்பதும் உண்டு. பிரியாணி என்றால் இதற்கனவே நூறு கிராம் அளவுக்கு கறித்துண்டுகளை ஆட்களின் எண்ணிக்கைக்கேற்ப கறிக்கடையிலிருந்து வெட்டி வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள். அந்தக் கறித்துண்டுகளை மறுபடியும் துண்டு போட மாட்டார்கள். பிரியாணிச் சோற்றை எடுத்து வைக்கும் போது சோற்றுக்கு மையத்தில் அந்தக் கறித்துண்டு இருக்கும்படி வைத்து அத்தோடு ஒரு முட்டையையும் வைத்து பாய்மார்கள் தட்டு தட்டுகளாய் அடுக்கி வைத்து விடுவார்கள். நம்ம சனங்கள் கியூவுல நிக்குற மாதிரி வரிசையா நின்னு தட்டுகள கை மாத்தி கை மாத்தி ஒவ்வொரு இலைக்கும் வைக்கிறதைப் பார்க்கணுமே. என்னவோ ரெண்டு நாடுகளுக்கு இடையே பெரிய வர்த்தகப் பரிமாற்றம் நடக்குற மாதிரி இருக்கும். இதுபோன்ற பிரியாணி சமையல் என்றால் கட்டாயம் பாய்மார்கள் இதற்கென்றே இருக்கிறார்கள். அதுவும் கூத்தாநல்லூர் பாய்மார்கள்தான் இதற்கு பேமஸ். அவர்களைக் கொண்டு வந்துதான் சமைப்பார்கள். அந்தக் கைப்பக்குவமும், கலவையும், அதற்கென்றே அவர்கள் கொழுப்பையும், உருளையைும், கத்திரியையும் போட்டு வைக்கும் தாளிச்சா இருக்கிறதே அடேங்கப்பா! பிரியாணிக்கு தாளிச்சா சுவையா? தாளிச்சாவுக்கு பிரியாணி சுவையா? என்று தலைசுற்றும் அளவுக்கு ஒன்றுக்கு ஒன்று ஈடு கொடுக்கும். இந்தக் கறிவிருந்து பிரியாணி வகையறா கறி விருந்தாக அமைந்து போனது.
            சித்துவீரன், சுந்தரி கல்யாணம் முடிந்ததும் பாக்குக்கோட்டையில் பொண்ணு வீட்டுக் கறிவிருந்து நடக்கிறது. அந்தக் கறிவிருந்தில் சுந்தரி கவனித்த கவனிப்பு இருக்கிறதே! சித்துவீரனைக் கட்டிக் கொள்ள முடியாது என்று அலம்பல் செய்த சுந்தரியா இது என்று பார்த்தால் அசந்து போயிருப்பீர்கள். கறிவிருந்துக்கு வந்த ஒவ்வொரு ஆளாகப் போய் பார்க்கிறது சுந்தரி. வாயார வாங்க வாங்க என்று வரவேற்கிறது. இப்படியெல்லாம் அது செய்யக்கூடிய பெண்ணே அல்ல அது என்பது எல்லாருக்கும் தெரியும். கல்யாணம் ஆனது அதற்குள் இப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டதாகத்தான் எல்லாரும் பேசிக் கொண்டார்கள். நீங்களே பாருங்களேன்! சுந்தரி வந்தவர்களுக்கு எல்லாம் தண்ணீர் கொண்டு கொடுப்பதென்ன! காபியைக் கொண்டு போய் கொடுப்பதென்ன! இதைப் பார்க்குற நமக்கு காலு வலிக்குது! ஒடம்பு நோவுது. அந்த அளவுக்கு ஒரு வேகம். தண்ணியை தம்ப்ளர்களில நிரப்பிகிட்டு அதையெல்லாம் ஒரு தட்டுல வெச்சுகிட்டு வர்ற வேகம் ஆளுங்கள நெருங்குன உடனே கொறையுது. ரொம்ப பவ்வியமாக வேகம் குறைஞ்சி சுந்தரி எடுத்து நீட்டுது. கொடுத்து முடிச்சி அடுத்தடுத்த ஆளுகள நோக்கிப் போறப்ப வேகம் கூடுது. ஆட்கள நெருங்குறப்ப வேகம் கொறைஞ்சு பவ்வியமாகுது. அந்த வேகமும், அந்த நெதானமும் பாக்குற ஒங்களுக்ளுக்கு தலைச்சுத்திப் போயிடும். அடேங்கப்பா தாலிதான் பெண்டுகளை எப்படிப் பெட்டிப் பாம்பாய் மாற்றி விடுகிறது, அது ஏறுவதற்கு முன் அவர்களை எப்படிச் சீறும் பாம்பாய் மாற்றி விடுகிறது என்பதை சுந்தரி விசயத்தில் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
            "இப்பிடி கல்யாணம் கட்டிட்டு இந்த மாதிரி இருக்குறதை விட்டுட்டு இந்தப் பொண்ணு ஓடிப் போக நினைச்சுச்சே! நல்லவேளை நாம்ம இருந்தவாசி எல்லாத்தையும் மறைச்சு சாமர்த்தியமாக முடிச்சாச்சி. அண்ணன் குடும்பத்துக்கும் ஒரு நல்ல மருமவ கெடைச்சிச்சு. தங்காச்சி குடும்பத்துக்கும் ஒரு பாரம் கொறைஞ்சிடுச்சி!" என்று லாலு மாமா மனசுக்குள் நினைத்துக் கொள்கிறது.
            முருகு மாமாவுக்கே ஒரு நொடி மனசு மாறிப் போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட பெண்ணையா வேண்டாம் என்று நினைத்திருந்தோம் என்று நினைத்துக் கொண்டது. மறுபடியும் மறுபடியும் இதையே சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க! அப்படியென்றால் சுந்தரி எப்படி விழுந்து விழுந்து கவனிக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். நாம்ம பார்த்திருந்தாலும் அப்படி ஒரு பெண்ணை சித்துவீரனுக்குப் பார்த்திருக்க முடியாது என்று ஒரு பூரிப்பு முருகு மாமாவுக்குள். "ஆரம்பத்தில் இந்த லாலு பயல் தேவையில்லாமல் மூக்கை நுழைத்துக் கல்யாணத்தை முடித்து வைப்பதில் முனைப்பாக இருக்கிறானே!" என்ற வருத்தம் அதற்கு இருந்தது. இப்போது லாலு மாமா செய்ததை நினைத்து அதற்குச் சந்தோஷமாக இருக்கிறது. என்ன நடக்கணுமோ அது சரியாகத்தான் நடந்திருக்கு என்று நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறது முருகு மாமா.
            அங்க பாக்குக்கோட்டை கறிவிருந்துக்கு இங்க கூத்தாநல்லூர்லேந்து கொண்டு போன பாய்மார்கள்தான் சமைச்சாங்க. அதுக்கான ஏற்பாடுகள மறைமுகமாகப் பண்ணி விட்டதெல்லாம் சித்துவீரன்தான். மாப்பிள்ளையே பொண்ணு வீட்டுக்கான கறிவிருந்தை ஏற்பாடு பண்ணி விடுறதெல்லாம் இந்தச் சமூகத்துல நடக்காத விசயம்தான். இருந்தாலும் என்ன பண்றது? சித்துவீரனுக்கு அந்த அளவுக்கு சுந்தரி மேல ஆசை. யாரும் பொண்ணு வீட்டப் பத்தி நாக்குல வந்தத நரம்பில்லாம பேசிப் புடக் கூடாது பாருங்க. அதால ஆக இது எல்லாம் சுந்தரிக்காகத்தான்.
            அதே கூத்தாநல்லூர் பாய்மார்கள வெச்சி இங்க வடவாதியிலும் கறி விருந்து. ரெண்டு கறிவிருந்தும் ஒரே மாதிரிதான். அங்க சாப்பிட்டதுதான் இங்கயும். இங்க சாப்பிட்டதுதான் அங்கயும். ஒரே வித்தியாசம் என்னவென்றால் தண்ணி பாட்டில்தான். பாக்குக்கோட்டையில் நடந்தப்ப அது அங்க வாங்குன தண்ணி பாட்டில். இங்க வடவாதியில நடந்தப்ப அது இங்க வாங்குன தண்ணி பாட்டில். அத வாங்கி எடுத்துட்டுப் போறப்ப போலீஸ்ல பிரச்சனை வந்துடக் கூடாதுல்ல. இல்லேன்னா அதையும் இங்க வடவாதியிலிருந்தே நம்ம ஆட்கள் வாங்கிட்டுப் போயிருக்கும். மத்தபடி பிராண்டுகள் கூட ஒண்ணுதான். ரெண்டு எடத்திலயும் வெட்டுன ஆடுகள் இங்க வடவாதியில இதுக்குன்னே சொல்லி வெச்சி வாங்குன ஆடுகள். கோழிங்க கூட இங்க அக்கம் பக்கத்து கிராமத்துல சொல்லி வாங்கிட்டுப் போனது. மீனெல்லாம் கூட நாகப்பட்டினத்திலேந்து இங்க வந்த மீனுங்கதான். இதுக்குன்னு ஆளுகளத் தனித்தனியாப் போட்டு வாங்குனது. எல்லாம் சித்துவீரனோட ஏற்பாடுதான். இதுல அதுக்கு ஒரு தனி சந்தோஷம். கர்வம்னு சொன்னாலும் தப்பில்லே. ஆனா காசுதான் கறி விருந்துன்னு கரியாப் போகுது. இப்படியெல்லாம் செய்யாமலும் சித்துவீரனால இருக்க முடியாது. ஏன்னா சுந்தரிய தான் எந்த அளவுக்கு விரும்புறேம்னு அது காட்டியாகனும் இல்லையா! காசெல்லாம் வெளிநாட்டுலேந்து சம்பாதிச்ச காசு. வெளிநாட்டு மாப்பிள்ளைன்னும் காட்டிக்க வேணாமா? அதுவும் ஒரு டாக்கடரு ஆகப் போறவோட மச்சான் வேற இல்லையா! அதுக்காகவே அப்படிச் செலவு பண்ணிச்சி சித்துவீரன்.
            இந்தக் கறிவிருந்துல போதைத் தண்ணியும் தண்ணிப்பட்ட பாடாயிருந்துச்சு. காசும் தண்ணிப் பாட்டபாடாயிருந்துச்சு. ரகளை சுத்தமா இல்ல. அது ஒண்ணுதாம் ஆச்சரியம். ஏன்னா எவனாவது ரகளைப் பண்ணுனா அதை விட சித்துவீரனோட ரகளைல்ல பெரிசா இருக்கும்! அதெ நெனைச்சு பயந்துதாம் வழக்கமாக கறி விருந்துல ரகளை பண்றதைப் பழக்கம வெச்சிருக்கிறவனும் இந்த கறி விருந்துல ரகளை நடந்தா என்ன, நடக்காட்டி என்னன்னு அவ்வேவேம் பாட்டுக்குப் போறான்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...