18 Aug 2019

கடந்து வந்த பாதை



            "இது ஒரு எழுத்துக்கு உரிய விசயமா? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்." சமீபகாலமாக இப்படித்தான் எழுத்தாளர் எஸ்.கே. வாசகர்களுக்கான சோதனைகளை தன் எழுத்தில் மூலமாக காத்திரமாக முன் வைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறைச் செல்லும் போதும் தனக்கு வித்தியாசமான அனுபவம் ஏற்படுவதாகவும், அதை நீட்டித்து எழுதினால் அது வாசகர்களுக்குச் சலிப்பான எழுத்தாகவும் அமையலாம் என்றாலும் இந்த உலகம் அப்படி ஒரு சலிப்பான நடையோடு நடைபோடுவதால் இந்த எழுத்து தவிர்க்க முடியாதது என்றும் கறாராகவும் சொல்கிறார்.
            எஸ்.கே. இப்போது அந்த வீட்டுக்கு நான்காவது முறையாகச் செல்கிறார். முதல் மூன்று முறை சென்ற போது இருந்த குழப்பங்கள் இப்போது இல்லை. இதை நீங்கள் கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். முதல் முறை சென்ற போது எஸ்.கே. மிகவும் குழம்பி இருந்தார். இத்தனைக்கும் அந்த வீட்டுக்குரிய பெண்மணி முகவரியை மிகத் தெளிவாக சொல்லியிருந்தார். அது எதற்கு உதவும் சொல்லுங்கள். நகரத்தில் ஒரு வீட்டைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை.
            அந்த இடத்துக்கு ஒரு சில முறை சென்று பழக வேண்டும். வடக்கு, தெற்குப் புரிவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. முகவரிக்கு வழி சொல்பவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்கள். அது சரியாக மூளையில் பதிய வேண்டும். கேட்கும் போது என்னமாய் தலை ஆடுகிறது? அது எதற்குமே உதவுவதில்லை. செல்லும் போது கேட்ட அத்தனையும் அப்படியே பரீட்சைக்குப் படித்துப் போன விடைகளைப் போல மறந்து விடுகின்றன. ரொம்ப கஷ்டமானது ஒரு முகவரியைக் கண்டுபிடிப்பது என்பது.
            வழியில் ஆக்டிவாவில் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியைக் கைகாட்டி நிறுத்தினார் எஸ்.கே. அவரிடம் காசியம்மாள் வீட்டுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண்மணி முகத்தில் அடித்தாற் போல் அப்படி ஒரு பதிலைச் சொல்வார் என்று எஸ்.கே. எதிர்பார்க்கவில்லை. "இந்த ஏரியாவுக்கு புதுசு சார்! வந்து நாலைஞ்சு மாசந்தான் ஆவுது!" என்றார். ஓர் ஏரியாவுக்குள் வழிகாட்ட நான்கைந்து மாதங்கள் இருப்பது போதாதா என்ன? எல்லா விசயங்களிலும் இயந்திரத்தனமாக இயங்கும் இந்த நகரத்து ஆட்கள், பதிலையும் அதே இயந்திர கதியில் சொல்லிவிட்டுப் புறப்படுகிறார்கள். போகும் போது அந்தப் புண்ணியவதி எஸ்.கே.வுக்கு ஒரு நல்லது செய்து விட்டுப் போனார். "அதோ அந்த முக்குல ஒரு பெட்டிக்கடை இருக்குது பாருங்க! அங்க போயி கேளுங்க சார்!" என்றார்.
            எஸ்.கே.வின் கெட்ட நேரம், எஸ்.கே. அந்தப் பெண்மணி சுட்டிக்காட்டிய திசையில் முக்குக்கடையைத் தேட ஆரம்பித்தார். நகரத்தில் சுட்டிக் காட்டும் ஒரு பெட்டிக் கடையையும் தேட வேண்டித்தான் இருக்கிறது. நேரம் பாருங்கள்! எஸ்.கே.வின் உள்ளுணர்வுக்கு உத்தேசமாக அந்த ஏரியா பிடிபடுவது போலிருந்தது. கிட்டதட்ட எல்லா தெருக்களும் ஒரே மாதிரியாக, வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. இப்படி யூனிபார்ம் போல் வீடு கட்டி குழப்ப நகரத்து ஆட்களால்தான் முடியும் என்று எனக்குக் கோபமாக இருந்தது எஸ்.கே.வுக்கு.
            முகவரி சொன்ன வீட்டு எண்ணை ஞாபகப்படுத்திக் கொண்டார் எஸ்.கே. நம்பர் 13 யும்,காசியம்மாள் என்ற பெயரையும்  ஒவ்வொரு வீட்டின் முன் கடப்பா கல்லில் அடையாளத்துக்காக செதுக்கப்பட்டிருந்த எண்கள் மற்றும் பெயர்களிலும் தேடினார். எஸ்.கே. அந்தத் தெருக்களை நாலுமுறை இப்படியும் அப்படியுமாக அலட்சியமாக சுற்ற வேண்டியிருந்தது.
            எஸ்.கே. அல்சைமர் வந்த அதிசயப் புலி போல அந்த கட்டிடக் கானகத்தைச் சுற்றிக் கொண்டிருந்தார்.
            கடைசியாக எஸ்.கே. பதின்மூன்றாம் எண்ணுள்ள வீட்டுக்கு முன் நின்றார்.  இப்படித்தான் மூன்று முறை செல்லும் போதும் விதவிதமாக அலைந்து அந்த வீட்டைக் கண்டுபிடித்தார். மூன்று முறை சென்றது ஒரு காரணத்துக்காக என்றால் நான்காவது முறையாக இப்போது செல்வது மறுமுறை செல்லும் போது இது மாதிரியான குழப்பங்கள் ஏதும் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக. அதாவது ஒரு பயிற்சி முறைக்காக. ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார் எஸ்.கே. பலமுறை செல்ல வேண்டியிருக்கும் வீடுகளுக்கு இப்படித்தான் செய்து கொள்கிறார் எஸ்.கே. இப்படித்தான் புரியாத விசயங்களை பள்ளிக்கூடம் படிக்கும் காலந்தொட்டே நான்கைந்து முறை படித்து மனப்பாடம் செய்து கொள்ளும் பழக்கம் எஸ்.கே.வுக்கு சிறுவயது முதலே இருந்தது. அது இப்போதும் தொடர்கிறது எஸ்.கே.வுக்கு. கடந்து வந்த பாதையை மறப்பவரா எஸ்.கே.?!
            இப்போது நீங்களே சொல்லுங்கள்! இது எழுத வேண்டிய எழுத்தா?
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...