செய்யு - 177
பாக்குக்கோட்டையில் செண்டாம்பாளையம் என்பது
அடிதடியில் இறங்கும் ஆட்கள் வசிக்கும் பகுதி என்று சொல்வார்கள். என்னதான் அடிதடியில்
இறங்கினாலும் அதில் ஒரு ஞாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள் என்றும் அந்த ஆட்கள்
என்று பேசிக் கொள்வார்கள். செண்டாம்பாளையத்து ஆளைக் கைவைத்து விட்டார்கள் என்று தெரிந்தால்
போதும், கை வைத்தவன் கதி அதோ கதிதான். கையே போனாலும் பாரவாயில்ல இத்தோட விட்டானுங்களே
என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். அந்தத் தைரியத்தில்தான் ஆதிகேசவன் எவனையும்
துணைக்குக் கூப்பிடாமல் பாலாமணியின் வீட்டுக்கு வந்தது. இவனுங்க அதாங் இந்த ராசாமணி,
பாலாமணி, லாலு மாமா ஆகிய இவனுங்க மாபெரும் தந்திரக்காரனுங்க என்று தெரிந்திருந்தால்
ஒரு ரெண்டு பேரையாவது கூப்பிட்டு வந்திருப்பான் அடிபட்டுக் கிடக்குற ஆதிகேசவன்.
பாலாமணிக்கு மூளை இப்போது அவசரகதியாக
வேலை செய்கிறது. அடிபட்டவன் போய் நடந்ததைச் சொல்லி ஆட்களை அழைத்து வந்து ஞாயம் கேட்டால்
தொலைந்தது எல்லாம். ஞாயம் வேறு ஒரு கணக்குப்படி பார்த்தால் இப்போது அவன் பக்கம் அல்லவா
இருக்கு! கல்யாணம் ஆவப் போற பொண்ணை இழுத்துகிட்டு ஓட நினைக்குறதாம் தப்பு. அப்டி
ஓட நினைக்காமல், நடக்கப் போற கல்யாணம் கெட்டுடக் கூடாதுன்னு யோக்கியமா பொண்ணப் பத்தின
தகவல சொன்ன வந்து நின்னவனை ஏம்டா அடிச்சீங்கன்னு கேட்டால் என்ன பதில் சொல்றது?
பாலாமணி மறுபடியும் கீழே விழுந்து கிடந்த
ஆதிகேசவன் பக்கம் வருகிறான். அவன் வாய்ப்பக்கத்தில் காலால் மிதி மிதி என்று மிதிக்கிறான்.
ஏற்கனவே ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் வாயிலும் மூக்கிலும் மிதி விழ விழ ரத்தம் பொங்குகிறது.
அவன் தலையில் கையைப் பிடித்துக் கொள்ளும் நேரம் பார்த்து அடிவயிற்றைப் பார்த்து உதை
கொடுக்கிறான். பார்க்க பார்க்க சித்திரவதையாகத்தான் இருக்கிறது நெலைமை. அவன் மனசில்
வேறொரு கணக்கு ஓட ஆரம்பிக்கிறது.
பார்த்துக் கொண்டிருக்கும் சரசு ஆத்தாவுக்கு
படபடப்பாகப் போக, "நம்ம பொண்ணு பண்ண தப்புக்கு இவனெ ஏம்டா உதைக்குறே? பாவம்டா!
செத்துப் போயிடப் போறாம்! கொல கேஸாயிடப் போவுதுடா!" என்கிறது சரசு ஆத்தா.
"செத்த சும்மா கெட! அதுக்கு ன்னம்மா
தெரியும்? இந்தக் கோட்டிப் பயெ அத்து மனசெ கெடுத்துப் புட்டாம். ஏதோ மந்திரிச்சி
விட்டுருக்காம். அதாங் அது நெலைமை தெரியாம கல்யாணம் வெச்சப் பெறவும் இவ்வேம் பேச்சுக்கு
ஆடுது. எஞ்சவன் இவனிருக்க அம்பு கணக்கா போன அவளெ என்ன சொல்ல முடியும். இந்த நாயெ
மிதிச்சே கொன்னா அத்தோட புத்தி மாறிடும்மா! இந்த நாயீ உசுரோ இருக்குற வரைக்கும்
ஏவலு வுட்டுட்டே இருப்பாம்!" என்கிறான் பாலாமணி.
"எலே! அதுக்கு அவனெ கொன்னுப்புட்டு
நீயி ஜெயிலுக்குப் போயிட்டா ன்னாடா ஆவுறது நம்ம குடும்பம்?" என்கிறது சரசு ஆத்தா.
"நாமளும் திருந்தணும்னுதாம் பாக்கிறேம்.
வுட மாட்டேங்றானுவோ! இவனெ கொன்னாலும் ஆத்திரம் அடங்காது பாரு." என்கிறான் பாலாமணி.
சொல்லி விட்டு லாலு மாமாவின் பக்கம் திரும்பி, "மாமா! நீங்களும் அப்பாவும் கார்ர
எடுத்துட்டு தஞ்சாவூரு பஸ் ஸ்டேண்டு போயி அவளெ கொண்டாந்துடுங்க. நாம்ம இவனெ கொண்டுட்டு
செண்டாம்பாளையம் போறேம்!" என்கிறான்.
"எவம்டா இவ்வேன்! புத்திப் பெசகுனவன்
மாரிப் பேசுறான். அவனுங்க ஆட்கள அடிச்ச சேதி தெரிஞ்சா கொன்னே புடுவானுங்க. ஏம்டா வம்ப
வெலைக்கு வாங்கிட்டு? பேசாம போலீஸ்ல புடிச்சி ஒப்படைச்சிட்டுப் போவீயா!" என்கிறது
ராசாமணி தாத்தா.
"போலீஸ்ல ஒப்படைச்சாதாம் தப்பு.
அவனுங்களுக்குக் காண்டாயிடும். இந்த நாயீ இனுமே பேச முடியாது. வாயில ஒதைச்ச ஒதைக்கு,
கம்பியில போட்ட அடிக்கு ஒரு மாசமானாலும் ஒண்ணும் பண்ண முடியாது. இப்டி மொனவிட்டே
கெடக்க வேண்டியதுதாங். இவனெ கொண்டு போயி அவனுங்க கையுல ஒப்படைச்சி பேசுற மொறையில
பேசுனா நாம்ம ஞாயமா நடந்துட்டதா நெனைச்சி வுட்டுடுவானுங்க. பின்னாடி ஏதாச்சிம் பெரச்சனைனாலும்
அவனுங்களுக்குக் காசிய கொடுக்காமலே காரியத்த முடிச்சிக்கலாம்." என்கிறான் பாலாமணி.
"ஏம்டா! இதெல்லாம் சரியா வந்திடுமா?
ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடாதுல்ல! உசுரு வெளையாட்டுடா இது! யோஜிச்சிப் பண்ணு. இவனெயெல்லாம்
அடிச்சிருக்கவே கூடாது. ஏதோ ஒரு வேகத்துல என்னென்னமோ நடந்துப் போச்சி. நீ யென்னடான்னா
வேலியில போற ஓணான எடுத்து வேட்டியில வுட்டுக்குறது நல்லதுன்னு பேசுறீயேடா!" என்கிறது
லாலு மாமா.
"பொம்பளெ விசயம்னா பொம்பளெ பக்கந்தாம்
பேசுவாங்க மாமா! எப்பிடி பத்த வைக்கணுமோ அப்பிடி பத்த வெச்சா இவனெ அவனுங்களே கொன்னே
புடுவானுங்க! அத்தே செஞ்சிட்டு வாரேம். நீஞ்ஞ போயி அவளெ கொண்டாங்க பாத்துக்கலாம்!"
என்று பாலாமணி ஒரு ஆட்டோவைக் கொண்டாரச் சொல்லி அதுல இந்த செண்டாம்பாளையத்துக்காரனைத்
தூக்கிப் போட்டுக் கொண்டு போகிறான். ஏதோ நல்ல சவாரி என்று நினைத்த வந்த ஆட்டோக்காரனுக்கு
இப்படி ரத்தம் சதையுமாக ஒருத்தனைத் தூக்கிப் போட்டுக் கொண்டு செண்டாம்பாளையம் போவதற்கு
பயமாகத்தான் இருக்கிறது. "யப்பா ஆள வுடுங்கப்பா!" என்று அவன் நழுவப் பார்க்கிறான்.
"இந்தப்பா! சவாரி இஞ்ஞ இருக்குற செண்டாம்பாளையத்துக்கு ஐநூரு ரூவா! வர்றீயா இல்லியா?"
என்கிறான் பாலாமணி. இருவது ரூவா தேறாத சாவரிக்கு ஐநூறு ரூபாய் என்றால்... ஆட்டோகாரனுக்கு
மனசு அலைபாயுது. சரி ஆவுறதெ பாத்துப் புடுவோம் என்று அடிப்பட்டவனைத் தூக்கி ஆட்டோவுல
போட்டுகிட்டு, பாலாமணிய முன்னால உட்கார வெச்சிக்கிட்டு கிளம்புறான். இருந்தாலும் காலையில
முழிச்ச மொகம் சரியில்லையா என்ற யோசனையோட அவன் செண்டாம்பாளயைத்தை நோக்கி ஆட்டோவை
வுட்டுக் கொண்டு இருக்கான். இந்த பாலாமணி இப்பிடிச் செய்வது எல்லாருக்கும் மிரட்சியாகத்தான்
இருக்கிறது.
பாலாமணி ஆட்டோவில் இப்படிப் போனதும்,
லாலு மாமாவும் ராசாமணி தாத்தாவும் அப்டியே வடமதுரை முக்கத்துக்குப் பக்கமா நடை நடந்து
அங்க அப்படியே ஒரு காரை எடுத்துக் கொண்டு தஞ்சாவூருக்குக் கிளம்புகிறார்கள். கிளம்பும்
போதே ராசாமணி தாத்தா கேட்கிறது, "ஏம்யா வாத்தியாரே! அந்த நாற முண்டே தஞ்சாவூர்லேந்து
வேற எஞ்ஞனாச்சும் போயிருக்காதுல்ல!"
"எஞ்ஞ போனான்னா? காருதாம் இருக்குல்லே!
பிடிச்சிக் கொண்டாந்து செமயா கவனிச்சாதாம் சரிபெட்டு வரும்! மொளைச்சு மூணு எலெ விடல
கழுதே! அரிப்பெடுத்து அலயுது! கல்யாணத்துக்குதாம் ரெண்டு நாளுதான இருக்குது. அதுக்குள்ள
ன்னா அவசரம் கருமம் பிடிச்சவளுக்கு?" என்கிறது லாலு மாமா.
"இந்த விசயமெல்லாம் அஞ்ஞ தெரிஞ்சா
என்னாகும்னு நினைக்குறே வாத்தியாரே!" என்கிறது ராசாமணி தாத்தா.
"அந்தக் கோமுட்டிப் பய சித்துவீரனுக்குத்
தெரிஞ்சா காரியம் கெட்டுடும். பைத்தியங் கொண்ட பய மாரி கெடந்து குதிப்பாம். அமுக்கிதாங்
காரியத்தப் பாக்கணும். அண்ணம் அண்ணிக்குத் தெரிஞ்சா வேற வெனையே வாண்டாம். கலியாணத்த
நிறுத்திப்புட்டுதாங் மறுவேல பாக்கும்ங்க. இத்து ஓடிப் போனது போவ வேண்டித்தானே. ஆனா
அத்து ஓடிப் போனது நமக்குத் தகவலு தெரியணும்னு இருக்குது பாருங். அதுலதாம் இருக்கு
வெசயம். கல்யாணம் நடக்கணும்னு இருக்கு. அதாலதாங் இப்டி நடக்குதுங். ஜோசிய கணக்கு ன்னா
சொல்லுது ஒங்களுக்கு?" என்கிறது லாலு மாமா.
"அதல்லாம் ஊர ஏமாத்துறதுக்குக் கட்டம்
போடுறதுங் வாத்தியார்ரே! ஏத்தோ பொழப்பு ஓடுது. எதா இருந்தாலும் பயப்படுத்துற மாரி
சொல்லி, பரிகாரம் இருக்குன்னு சொன்னா... இந்தா காசி, அந்தா காசின்னு பணத்தெ அள்ளிக்
கொட்டி பரிகாரத்த முடின்னுங்றானுவோ. இப்டியே அஞ்ஞ போ, இஞ்ஞ போ, ராமேஸ்வரத்துக்குப்
போ, சீரங்கத்துக்குப் போ, காளகத்திக்குப் போன்னு அனுப்பி விட்டுகிட்டு நம்ம பொழப்பு
ஓடுது. அஞ்ஞ நமக்கு பரிகாரம் பண்ற கோஷ்டியோட ஒரு லிங்கு இருக்கு வாத்தியாரே. எல்லாம்
கமிஷம்தாம். எத்தனெ கேஸ அனுப்புறமோ அத்தினிக்கு கமிஷம். அது ஓடிட்டு இருக்கு. ஜோசியத்த
விட இதுல நல்ல காசின்னா பாத்துக்குங்!"
இவர்கள் ரெண்டு பேரும் இப்பிடிப் பேசிக்
கொண்டே இருக்க கார் பாக்குக்கோட்டையிலிருந்து தஞ்சாவூரை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இங்கே பாலாமணி செண்டாம்பாளையத்துக்கு ஆட்டோவில்
போனவன், நேராக செண்டாம்பாளையத்து நாட்டாமைக்காரன் வூட்டில் போய் நிறுத்தி வைக்கிறான்.
நிறுத்தியவன், "யோவ் நாட்டாமக்காரரே! வெளியில வாரும்!" என்கிறான் ரொம்ப
தெனாவெட்டாக வூட்டுக்கு முன்னாடி நின்றபடி. அவன் அப்படிப் பேசுவதை பார்க்கும் போது
ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்த ஆட்டோகாரனுக்கே பயமாகத்தான் இருக்கிறது. ஏதாவது ஒண்ணு
கெடக்க ஒண்ணு ஆகி விட்டால் ஆட்டோ பணாலாகி விடும். செண்டாம்பாளையத்துக்காரனுங்க செஞ்சா
பாக்குக்கோட்டையில் ஒருத்தனும் ஒரு கேள்வி கேட்க மாட்டானுங்க வேற. ஐநூறு காசுக்கு
ஆசப்பட்டு வந்து ஐம்பதாயிரத்துக்கு மேல போற ஆட்டோவ வுட்டுப்புடறதா என்ன?
வாசலுக்கு வெளிக்கே நின்னு ஒருத்தன் சத்தம்
போடுவதைக் கேட்டு செண்டாம்பாளையத்து நாட்டாமைக்கார ஐயா வெளியே வர்றார். வர்ற தோரணையே
பயங்கரமாக இருக்கிறது. அவரு கூடவே நல்ல தடிமுண்டங்க கணக்கா ரெண்டு பேரு ரெண்டு பக்கமும்
அடைச்சிகிட்டு வாராணுங்க. நல்லா வெள்ளை வேட்டியும், சட்டையுமா, தோளுல கெடக்குற தேங்காய்ப்பூ
துண்ட ஒதுக்கி விட்டுகிட்டு வந்தவர் வெளியில நிற்குற ஆட்டோவையும், ஆட்டோ முன்னாடி
நின்னுகிட்டு சவுண்டு கொடுக்குற பாலாமணியையும் மாறி மாறி பார்க்குறார். மொகம் மண்டை
பெருத்து நல்ல பெரிசா இருக்கு மொட்டத்தலையோட. அந்த மொட்டத்தலை, பெரிய மொகத்தோட
என்ன விசயம் என்பது போல கண்களால் ஒரு உருட்டு உருட்டுகிறார். பார்க்கவே பயங்கரமாத்தான்
இருக்கு.
"நீங்கலாம் பெரிய்ய ரவுடிய்யா இருக்கலாம்.
நாங்கலாம் முடியாத நாங்கள இருக்கலாம். அதுக்காக இன்னும் ரண்டு நாளுல்ல கல்யாணம் வெச்சிருக்குற
பொண்ண தூக்குறது ஞாயமாவா இருக்கு? முடியாத நாங்கன்னா ன்னா பண்ணாலும் அது பொறுத்துக்கணுமா?
ஞாயம்னு ஒண்ணு இல்லியா?" என்கிறான் பாலாமணி அப்படியே நடந்ததைத் தோசையைத் திருப்பிப்
போடுவதைப் போல.
"எவம்டா நீயி? எஞ்ஞ ஏரியாவுக்கு வந்து
எஞ்ஞ நாட்டாமைய பாத்து வெரல நீட்டுறே? ஒடம்புல உசுரு தங்காது பாத்துக்கோ!" என்று
கூட வந்த ரெண்டு ஆட்களும் பாலாமணி மேல் பாயப் பார்க்கிறார்கள். நாட்டாமைக்காரர்,
"செத்த நில்லுங்க்பபா! ன்னா நடந்திச்சேன்னெ தெரியாமா? நம்ம யாருன்னு அறிஞ்சும்
வந்து சவுண்டு கொடுக்குறான்னா ஏதோ தப்பா நடந்திருக்கு! பொறுங்க. வெசாரிப்போம்!"
என்று அசமடக்குகிறார்.
"யாரு நீ? ன்னா நடந்திச்சி? ன்னா
வலி வலிக்கிறே! எத்தா இருந்தாலும் வெவரமா சொல்லு! ஞாயம் ஒம் பக்கம் இருந்தா ன்னா செய்யணுமோ
செய்றேம். ஞாயம் இல்லன்னா ஒண்ணுல ரண்டு பாத்திடுவேம். உசுருக்கு உத்ரவாதம் கெடையாது!"
என்கிறார் நாட்டாமைக்காரர் இப்போது பாலாமணியைப் பார்த்து.
"எந் தங்காச்சி பேரு சுந்தரி. நிச்சயம்லாம்
பண்ணி கல்யாணம் ஆவப் போது. ரண்டு நாளு ஆனா கல்யாணம். இவ்வேம் அதாம் ஆதிகேசவம் ஒங்க
ஏரியா கொடுக்கு வந்து எஞ்ஞ வூட்டு பொண்ண இழுத்துட்டு ஓட நிக்குறாம். கையும் களவுமா
பிடிச்சேம். இதுக்கு மேல தப்பு பண்ணாதே! மரியாதியா போடான்னா போவ மாட்டேங்றாம். ரண்டு
நாளுல்ல கலியாணம் ஆவப் போற பொண்ண வுட்டுட்டு வூட்டுல யாருங்க நாண்டுட்டுச் சாவறது.
மொதல்ல இஞ்ஞயிருந்து கெளம்புடான்னு எவ்வளவோ சொல்லியாச்சி. கெளம்ப மாட்டேன்னாம்.
அதாம் நாலு போடு போட்டு ஒஞ்ஞகிட்டயே கொண்டாந்துட்டோம். மேக்கொண்டு ன்னா பண்றதுன்னு
எங்களுக்குத் தெரியல. நீங்கதாம் பாத்து நல்லது பண்ணணும். நீங்க நல்லது பண்ணுவீங்ற நம்பிக்கையிலதாம்
இஞ்ஞ வந்திருக்கேம்." என்கிறான் பாலாமணி. அந்த நாட்டாமைக்காரர் வந்து நின்ற நிலையிலேயே
ஒரு கணக்குப் போட்டு பார்த்து கணக்குப் பண்ணிக் கொள்கிறான் பாலாமணி. அவர் பேசி முடிக்கட்டும்
அந்தக் கணக்கைச் செயல்படுத்திப் பார்த்து விடுவோம் என்று திட்டம் பண்ணிக் கொள்கிறான்.
அவரோட மொட்டதலைக்கும் மொழங்காலுக்கும் ஒரு முடிச்ச உண்டு பண்ணிக் கொள்கிறான்.
"யாரு அவ்வேம்? நம்ம மயிலா பையனுதான.
படிக்கிறாம் அது இதுன்னு பொண்ணுங்க பின்னால சுத்துறதா சொல்லிட்டு இருந்தீங்கள்ளே!
அவம்தானே!" என்றபடி பக்கத்தில் நின்ற ரெண்டு பேரிடமும் விசாரணையைப் போடுகிறார்.
அந்த ரண்டு பேரும் ஆமாம் என்பது போல கேட்பதற்கெல்லாம் தலையை ஆட்டுகிறார்கள்.
"ம்!" என்றபடி ஒரு கனைப்பு கனைக்கிறார்
நாட்டாமைக்காரர்.
"இந்தாரு தம்பி! நாங்களால் போக்கிரிங்கதாம்.
அதுக்கா ஞாயத்த விட்டுட்டு போக்கிரித்தனம் பண்றதில்ல. நீஞ்ஞ சொல்றது உண்மைன்னா அவம்
பக்கம்தேம் தப்பிருக்கு. இந்த மாரி விசயத்துலலாம் கையி வைக்கக் கூடாதுன்னே ஏரியா பசங்களுக்கு
சொல்லிட்டு இருக்கேம். இந்தப் பயதாம் இந்த மாரி கேஸூல மொத ஆளு நம்ம ஏரியாவுக்கு.
எது நடந்திருந்தாலும் கல்யாணம் ஆவப் போற பொண்ணு வூட்டுக்கு இந்தப் பயெ போனது தப்பு.
போலீஸூ அது இதுன்னு போவாம நம்மட்ட வந்திருக்கவே ஒங்களப் பத்தி புரியுது. இது மாரில்லாம்
பண்ணா ஆத்திரந்தாம் வரும். அதுல நாலு அடி அடிக்கிறதெ தப்புன்னு சொல்லறத்துக்கில்ல.
அவனெ இஞ்ஞ எறக்கிட்டுப் போங்க. நாம்ம பாத்துக்கிறேம். இனுமே ஒங்க சம்பந்தமா எந்தப்
பிரச்சனைக்கும் இவ்வேம் வர மாட்டாம். வந்தான்னு அவ்வேம் ஒடம்புல உசுரு தங்காது!"
என்கிறார் நாட்டாமைக்காரர்.
பாலாமணிக்கு ஆச்சரியம்தான். காரியம் இவ்வளவு
சுலுவுல அதுவும் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் முடியும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
இப்போது அவன் மனசில் தாங்க முடியாத சந்தோஷம். சந்தோஷம் என்றால் மனசு முழுவதும் அப்படி
ஒரு சந்தோஷம். இப்போ இந்த மொட்டத்தலை மொழக்காலு முடிச்ச எடுத்து விட்டா ஆயுசுக்கும்
நம்ம மேல சந்தேகம் வாராதுன்னு முடிவு பண்ணிகிட்டு பாலாமணி அவுத்து வுட ஆரம்பிக்கிறான்.
"நாம்ம ஆயுர்வேதத்துல டாக்கடருக்குப்
படிச்சிட்டு இருக்கேம்ங்கய்யா. ஒங்களுக்கு கை, காலு நோவு, எலும்பு தேய்மானம், சுகரு,
பிரெசரு இந்த மாரி எது இருந்தாலும் சொல்லுங்க. சோட்டாணிக்கல்லுல ஒரு அருமையான எடம்
இருக்கு. வைத்தியசால. எத்தா இருந்தாலும் ஒரு மூணு மாசம் அஞ்ஞ தங்குனா கொணம் பண்ணி
அனுப்பிட்டுவாங்க!" என்கிறான் பாலாமணி.
"டாக்கடருக்கா படிச்சிட்டு இருக்கீங்க!
நமக்கு மொழங்காலு வலிதாம்பி பாடா படுத்துது. மூணு மாசம்லாம் அஞ்ஞ போயி தங்குனா நம்ம
பொழப்பு நாறிப்பூய்டும். இப்போ கைவசம் தர்ற மாரி மருந்து இருந்தா தாங்க. தின்னுப்
பாப்பேம். ந்நல்லா கொணமாயிடுச்சின்னா பாத்துப்பேம்." என்கிறார் நாட்டாமைக்காரர்.
"உள்மருந்தா கேட்குறீங்க! பண்ணிப்புடலாம்ங்கய்யா!
அப்புறம் இந்தப் பெரச்சனை?" என்று இழுத்துப் பார்க்கிறான் பாலாமணி.
"இதல்லாம் பெரச்சனையில்ல. நம்ம முழங்காலுவலிதாங்
இப்போ பெரிய பெரச்சனை. அதுக்கு வழி பண்றேங் அப்படிங்றப்ப, அதுவும் நாம்ம சொல்ற மொறையிலங்றப்ப.
இத்தயெல்லாம் பாத்துக்க மாட்டேனா? இத்து இந்த ஏரியாவோட புத்தி.காதல் கத்திரிக்கா கஸ்மாலம்னு.
நமக்குப் பிடிக்கா. இந்த வயசுலலாம் காசு சம்பாதிக்கிறதுல குறியா இருக்கணும். பொம்பளங்க
கையப் பிடிக்கிறதுல இருக்கக் கூடாது. இந்தத் தத்தாரிப் பயலுக்கு வயசும் வேறல்ல இல்ல.
இல்லேன்னா குட்டிய கொண்டா கலியாணத்து முடிச்சிப்புடுவேம்னு சொல்லிப்புடுவேம். இந்த
வெசயத்துக்குலாம் நாம்ம ஞாயம் பண்றதேயில்ல. உதைச்சி வுடுறதாங். அத்தே நீங்களே பண்ணிருக்கீங்க
பெறவு ன்னா? பாத்துக்கலாம்!"
பாலாமணிக்கு ஏக குஷியாகி அடித்துக் கொண்டு
போன ஆதிகேசவனை வூட்டுத்திண்ணையிலயே தந்திரமாக எறக்கிப் படுக்கப் போட்டால் அவன் மேல்
காறித் துப்புகிறார் நாட்டாமைக்காரர், "ஊருல கல்யாணம் நிச்சயம் ஆவாம ஆயிரங் பொண்ற
இருக்குல்ல. அதுல ஒண்ண பிடிச்சிக்க வேண்டித்தானே. நிச்சயம் ஆன பொண்ணுதாம் பிடிக்குதோ
மோரகட்டைக்கு!" என்றபடி.
அப்படியே வூட்டுப்பக்கம் வந்து ஏதோ ஒரு
மருந்தை எடுத்துக் கொண்டு ஓடிப் போயி கொடுத்துவிட்டு வருகிறான் பாலாமணி. இனி ஆதிகேசவனே
உண்மையை நிலைமைய எடுத்துச் சொன்னாலும் அந்த ஏரியாகாரனுங்க எவனும்நம்ப மாட்டானுங்க
என்று தோன்றுகிறது பாலாமணிக்கு. இதெல்லாம் பாலாமணியின் சாமர்த்தியம் என்று சொல்வதா?
அல்லது ஆதிகேசவனின் அம்மா மயிலாவுக்கும், நாட்டாமைக்காரர் குடும்பத்துக்கும் கொஞ்ச
நாட்களுக்கு முன்பு நடந்திருந்த வாய்த்தகராறால் ஏற்பட்டிருந்த மனத்தாங்கலுக்காக நாட்டாமைக்காரர்
கண்டு கொள்ளாமல் விட்டு விட்ட உள்ளடி உள்குத்து வேலை இது என்பதா?
*****
No comments:
Post a Comment