4 Aug 2019

பத்திரம் பண்றாங்க!



செய்யு - 166
            முருகு மாமாவுக்கு மனசுல ஒண்ணு இருக்கும். வார்த்தையில ஒண்ணு ஓடும். அதோட வார்த்தையை உள்ள வாங்கிகிட்டு அதோட மனச படிச்சிட முடியாது. முகத்துல ஒரு சிரிப்பு தெரியாது. அதெ மாதிரி கவலையும் தெரியாது. அப்படியே பாறாங்கல்லு கணக்கா இருக்கம். அதுல ஒரு கடுகடுப்பு நல்லாவே தெரியும்.
            பெத்தப் பொண்ணு தேசிகாவை அடக்கம் செய்து வீடு திரும்புனா முருகு மாமாவுக்கு துக்கத்தை விட நகையும் ரொக்கமும் திரும்ப வருமா என்ற ஏக்கம்தான் அதிகமா போயிட்டு இருக்கு. தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறவனுக்கு தூண்டிலு முள்ளு அப்படியே இருக்கு, மீனு வந்து புழுவைக் கவ்விட்டுப் போய்ட்டேங்ற வகையிலான கவலை அது.  சின்ன மீனப் போட்டு பெரிய மீன புடிக்கிறது அப்படின்னு கிராமத்துல சொல்லுவாங்களே அந்த வகையாவும் இதெ வெச்சிக்கலாம். ஒரு கெளரவத்துக்காக இருக்கறத விட அதிகமா தேசிகாவுக்குக் கல்யாணத்துல செஞ்சது மாதிரி காட்டுனாலும் முருகு மாமாவோட மனசுல ஓடுன கணக்கு வேறதாம். அவ்வளவு பெரிய பணக்காரனுங்ககிட்ட எவ்வளவு புடுங்குனாலும் கணக்குத் தெரியாது, வெளியிலயும் விசயம் வாராதுங்றதுதான் அதோட கணக்கு. அவனுங்க பணக்காரனுங்க இல்லேன்னு தெரிஞ்சாலும், நகைத் திருட்டுல கெட்டிக்காரனுங்கன்னு தெரிஞ்சதும் அதுவும் முருகு மாமாவுக்கு இஷ்டந்தான். எப்படியாவது நகையைத் திருடியாவது பொண்ண காப்பாத்துறானோ இல்லியோ பொண்ணு நச்சரிக்கிற நச்சரிப்புல நம்ம வூட்டுக்க நெறையா செய்வான் அப்டின்னு நெனைச்சது முருகு மாமா. அதெ அப்டியும் சாதிச்சிருக்கலாம்தாம். தேசிகாவோட மனசு வேற மாதிரில்ல போயிடுச்சி. அதுக்கு தான்ங்ற ஆணவம் அதிகம்னுதான் இஞ்ஞ சனங்க பேசிக்குவாங்க. முருகு மாமாவுக்கும் தான்ங்ற ஆணவம் அதிகம்னாலும் காரியம்னா காலுல விழுந்தாவது சாதிச்சாத்தான் அதுக்குத் தூக்கமே வரும்.
            புருஷன் இப்படி என்றால் பொண்டாட்டி வேற தினுசு என்கிற கதையாக வயித்துப் புள்ளகாரியை இப்படி இழந்துட்டு வந்து நிக்குறோமே என்ற வருத்தம் இல்லாமல் நீலு அத்தையும் நடமாட ஆரம்பித்து விட்டது. "என்னா பொம்பளைக இவ்வளவுவோ, கல்யாணம் ஆயிப் போனா அந்த வூட்டயே அப்டி கண்ணுல வெரல வுட்டு ஆட்டுறதில்லே! நம்ம வூட்டுக் குட்டி ன்னான்னா செத்துப் போயி அவனுங்கள சுண்ணாம்பு ஆக்கி வெச்சிருக்கு! செத்திடுச்சின்னு வுட்டுருவோம்மா. அதுக்குச் செஞ்சத ஒண்ணுக்கு ரண்டா அவனுங்ககிட்டேயிருந்து வாங்காம விட மாட்டேம். ஒரு குண்டுமணி கொறைஞ்சாலும் வெளக்கமத்த எடுத்துட்டுக் கிளம்பிடுவேம்! அவனுங்கள தொலச்சிக் கட்டிப்புடுவேம். எமகாதகனுங்க. சாவடிச்சிடுவேம். யில்லே நானு செத்துப் போயி அந்தக் கொலபழியே அவனுங்க மேல போட்டு வெளங்காம பண்ணிப் புடுவேம்" என்று பார்ப்பவர்களிடம் சொல்லிக் கொண்டு திரிகிறது அது.
            எல்லாரின் கண்களுக்குள்ளும் மாப்பிள்ளை வீட்டுக்காரனுங்க நகையும் பணமும் கொடுப்பதாகச் சொன்ன பதினாலு நாட்கள் என்ற கால எல்லைக் கணக்குச் சுழல ஆரம்பிக்கிறது. மில்லுகாரர் எல்லாத்தையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருந்தாலும் இந்தக் காலத்தில் பண விசயத்தில் யாரை நம்ப முடிகிறது என்று கலக்கம் லாலு மாமாவுக்கு இருக்கிறது. முருகு மாமாவையும் லாலு மாமாவையும் பார்க்கும் போது முகத்தில் ஒரு வாட்டம் இருப்பது நன்றாகவே தெரிகிறது. அது எதனால் வந்த வாட்டம் என்பதை அவர்கள் ரகசியமாய் உட்கார்ந்து பேசுவதைக் கேட்கும் போதுதான் புரிந்து கொள்ள முடிகிறது.
            "பொண்ணு போய்ட்டேங்ற கவலையா இருக்காண்ணே?" என்கிறது லாலு மாமா.
            "ரண்டு மூணு நாளைக்கு அப்படித்தாம் இருந்துச்சி. தொலைஞ்சதும் சரிதான்னு படுதுடாம்பி. இருந்துகிட்டு மனுஷன் எளவ எடுத்துகிட்டு. இருந்தா மனுஷனுக்குப் புரயோஜமா இருக்கணும். ச்சும்மா ச்சும்மா இஞ்ஞ வந்து அழுதுகிட்டு குந்திகிட்டு. அவனெ கொன்னுப் போட்டு வந்து குந்திகிட்டு அழுதுட்டு இருந்தாலும் சந்தோஷப்படுவேம். அதுவுமில்லாமல இதுவுமில்லாம அதுக்குத் தொலைஞ்சிப் போனதே நல்லதாப் போச்சி!" என்கிறது முருகு மாமா.
            "ன்னா சொல்ல வாரேன்னு ஒரு மண்ணும் புரியலையே!" என்கிறது லாலு மாமா.
            "ஆமாம்டா போ! பொண்ணுங்க இருந்தால்லே செலவுதாம்டா! பசங்கதாம் செரி. கல்யாணத்த பண்ணோமா காச வாங்கி உள்ள வுட்டோமான்னு கதெ முடிஞ்சிடுது. பொண்ணுங்க இருக்கே! ச்சேச்சே காசயும் வுட்டு, பொண்ணயும் வுட்டு யோசிச்சுப் பார்த்தா அப்போ பொண்ணுங்க பொறந்தா அழுவுறப்பவே வாயில நெல்ல அள்ளிப் போட்டுக் கொன்னுபுடுவாங்க. இருந்தா இந்த மாரி இம்சைதாம் பாரு!"
            "அதுக்குன்னு நம்ம வூட்டுப் பொண்ணயே நாம்ம தூக்கி வளத்த பொண்ணயே அப்படிச் சொல்றீயேண்ணே! ஒனக்கு என்ன பொண்ணு செத்ததுல புத்திப் பெசவிப் போய்ட்டா!"
            "யாருக்குடா புத்திப் பெசவி போச்சுடாம்பி? பொண்ணுங்க இருந்தால செலவுதாம்டா! அந்தப் பயெ கொளுத்தி விட்டதும் ஒரு வெதத்துல சரிதாம் போ! கணக்கு முடிஞ்சிப் போச்சில்ல. இனுமே பொண்ணுன்னு ஒரு செலவு இல்ல பாரு. இந்தச் சந்திரா வெவகாரத்துல எடுத்துக்கோ இன்னிக்கு வரிக்கும் செலவுதாம். ன்னா வரவு இருக்குச் சொல்லு. கல்யாணம் ஒரு செலவு. தாலி பெருக்கிப் போடுறது ஒரு செலவு. வளைகாப்பு ஒரு செலவு. கொழந்தைப் பொறந்தா ஒரு செலவு. அதுகளக்கு காது குத்தி வெச்சா ஒரு செலவு. தீவாளி சீரு, பொங்கலு சீருன்னு வருஷா வருஷம் செலவு. தொலைஞ்ச வரிக்கும் நல்லதுதாம் போ!"
            "ஏண்ணே ஒனக்குப் பிடிக்கலேன்னா பண்ணாம இரு. அதுக்கு ஏம் இப்பிடிப் பேசுறே? நல்லாத்தானே இருந்தே நீயி! ஒனக்கு என்னமோதாம் ஆயிப் போச்சி பொண்ணு செத்துப் போனதிலேந்து!"
            "வேற எப்டிடா பேசச் சொல்றே? ஒன்ன மாரி நாம்ம ரெட்டைச் சம்பளக்காரனாவா இருந்தேம்? ஒத்த ஆளு. ஒண்டியா பாடுபட்டு ஒவ்வொண்ணுத்தியும் கர சேக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிப் போவுது. இன்னும் எத்தினிக் காலத்துக்கு அதுகளுக்கே செலவு செஞ்சி அழிஞ்சிப் போறது? இப்பதாம் மூத்தவனுக்கு கையில காலுல விழுந்து வேல வாங்கிக் கொடுத்தேம். அதுக்குள்ள அது பண்ண வேலயில அதோட வேலயே போயிடும் போல ஆயிடுச்சி. ஒரு வேல யில்லாம அவ்வேம் கல்யாணம் எவ்ளோ நாளு தள்ளிப் போயி... இந்த ரண்டாவது பயல அஞ்ஞ இஞ்ஞ பணத்த வாங்கி பாரீனுக்கு அனுப்புறதுக்குள்ள அவனுக்கு ஊரு கழுதெ வயசாச்சி. மூணாவது பயதெம் ஏத்தோ கொஞ்சம் படிக்கிறாம். ஏத்தோ வேலைக்கிப் போயி தேறிக்குவாம் போலருக்கு. இத்தையல்லாம் நம்ம நெலமயில யிருந்த அனுபவிச்சுப் பாத்தாத்தாம் தெரியும்! இந்தப் பஞ்சு பய மாரியா? மருந்து குடிச்சிட்டு சாவுறதுக்கும் நமக்கு வழியில்ல. யோகக்காரம்டா அவ்வேன். எந்தச் சொமையையும் தலையில ஏத்திக்காம போயிச் சேந்துட்டான். பண்டி நாயி ஒரு தேவ திங்க செலவு பண்றதுக்குள்ள மகவராசனா போயிச் சேந்துப்புட்டான். பெத்ததுதான் பெத்தான் மூணும் ஆம்பிளப் புள்ளய பெத்தாம். ஒன்ன மாரியா நம்மள மாரியா ரெண்டு பொட்டைகளாப் பெத்துத் தொலைச்சாம்? புள்ளீங்கலாம் அது அது இருந்தாத்தாம். தொலையுதுன்னா சனியன் தொல்லை விட்டுச்சுன்னு தலைமுழுவிட்டுப் போய்ட்டே இருக்கணும். நம்ம வமிசத்துக்கே சரி ஆம்பிள புள்ளீகளா இருக்கணும்டா! பொம்பள புள்ளீக ஒத்து வாராது. பாத்தியா கல்யாணத்தக் கட்டிக் கொடுத்து காசெ எழக்குற கணக்கா ஆயிடுச்சி. பொண்ணு எடுக்குற கணக்கா ஆம்புள புள்ளீகளா இருக்கோணும். பொண்ணு கொடுக்குற கணக்கா பொம்பள புள்ளீக இருக்கவே கூடாது பாத்துக்க. இருந்தா நமக்குதாம் செலவு. நமக்குதாம் எழப்பு."
            "நீயி சொல்றதும் ஒரு வெதத்துல சரிதாம்! ன்னா பண்றது ரண்ட பெத்துத் தொலைச்சிட்டேம். தலயெழுத்து. நமளுக்கு இன்னும் ஒரு கடமெ யிருக்கே!"
            "நம்ம வூட்டுப் பொம்பள புள்ளீகன்னா அஞ்ஞ போறப்ப அந்தக் குடும்பத்தயே அசச்சுப் பாத்துடணும். அதெ இன்னொரு குடும்பத்திலேந்து நம்ம குடும்பத்துக்குப் பொண்ணு எடுத்தோம்னா அப்டியே பொட்டிப் பாம்பா அடக்கிப் புடணும். அதாங் சூட்சமம்!"
            "இதுல இது வேற இருக்கா?"
            "ஆமாம்‍ போ! ன்னாத்தாம் வாத்தியாரு வேல பாத்தியோ? இந்த சந்திரா குட்டி, தேசிகா குட்டி ரண்டயும் அப்படித்தாம் வளத்தேம். இதுல சந்திரா குட்டி பயந்த குட்டி. ஏத்தோ குடும்பத்த ஓட்டிகிட்டு கெடந்தா ஆச்சுன்னு விட்டாச்சி. தேசிகா குட்டிதான் பயப்பட மாட்டா. ஆனா பாரு ரண்டு குட்டியையும் ஒரே மாதிரிதாம் அப்டித்தாம் சொல்லி சொல்லி வளத்தது. அஞ்ஞ புருஷம் வீடு போனா வீடு ஒம்ம கன்ரோலுக்கு வாரணும்னு. இந்த தேசிகா குட்டித் தேறிடுவா அப்டின்னுதாம் எதிர்பார்த்தேம். நமக்கு அஞ்ஞேயிருந்து வரும்படி வருமுன்னு ஒரு நம்பிக்கெ. அந்த நம்பிக்கையில மண்ணள்ளிப் போடோ. அவளெ செத்து வாரப்படி ஆயிட்டு. கெரகக் கோளாறு. ன்னா மசுரு பொண்ணுவோளோ இவளுவோ! ஊரு ஒலகத்துல பொட்டச்சிக இல்லே? இவளுக மாரியா? புகுந்த அந்த வூட்டத் தொடச்சி அப்டியே பொறந்த வூட்டுக்குக் கொண்டாந்து கொடுத்துடுறாளுவோ. இந்த நக்கிப் பொறுக்கி இஞ்ஞயிருந்து அஞ்ஞ கொண்டு போயி போட்டுட்டு செத்துப் போயிடுச்சி. இதயல்லாம் யோஜன பண்ணித்தாம் நகெயும் நட்டும் அம்புட்டுப் போட்டிச்சி. செஞ்சிச்சி. நாம்ம கில்லாடின்னா அவனுங்க நம்மள தாண்டுன கில்லாடியா இருப்பானுங்க போல. நம்மளயே ன்னம்மா படம் காட்டி வுட்டுட்டானுங்க. அப்டி ஆகும்னு பொன்னியம்மா சத்தியம்மா சொல்றேம்டா எதிர்பார்க்கல. காருல வாரவேம், மச்சு வூட்டுல இருக்கிறவேம் ஏமாத்த மாட்டாம்னு நெனைச்சா அவ்வேம் அந்தக் காரு வூட்டயே ஏமாத்திதாம் கொண்டாந்து இருக்காங்றது இப்பதானே புரியுது. சரி ஆவுறு கதெயப் பேசுவோம். மில்லுகாரர ஒரு எட்டுப் பாத்துட்டு வந்தாத்தாம் சரிபடும். கொஞ்ச நாளிக்கு அவ்வேன் வூட்டுக்கு அப்டி இப்டின்னு அலயுற மாரி காட்டுனாத்தாம் காரியத்த முடிச்சிக் கொடுப்பான் கோட்டிக்காரப் பயெ. மண்டெ கிறுக்குப் பிடிச்சப் பயெம்டா அவ்வேன்!" என்கிறது முருகு மாமா.
            முருகு மாமாவும் லாலு மாமாவும் அப்படி இப்படி என்று மில்லுகாரர் வீட்டுக்கு அலைந்து, அது இதுவென்று அலைந்து பார்த்துக் காரியத்தை முடிக்கப் பார்க்கிறார்கள். எத்தனுக்கு எத்தன் பூமியில் உண்டு என்கிற கணக்காக பதினாலு நாட்கள் முடிந்த பின்னாடி இன்னும் ஒரு பதினாலு நாளு வேணும் என்கிறான் மாப்பிள்ள வூட்டுக்காரன் தரப்புல.
            சரி ஒரு தடவ ஒரு மாப்பு வுட்டுப் பார்ப்போம்னு இருவது ரூவாய் பத்திரத்த எடுத்து அத அப்டியே எழுதி அந்தத் தரப்புல கையெழுத்து வாங்கிக்கிறாரு மில்லுகாரரு. பொறுத்தது பொறுத்தாச்சி இன்னும் ஒரு பதினாலு நாளு என்று முருகு மாமாவை தேத்தி விடுறாரு மில்லுகாரரு. சரிதாம் போ இன்னும் ஒரு பதினாலு நாளுலல்ல ன்னா கொறைஞ்சிப் போயிடுதுங்ற மாதிரி முருகு மாமா மில்லுகாரருகிட்டே பேசிட்டு வந்து இங்க அவரப் பிடிச்சி கன்னா பின்னான்னு திட்டுது. "இந்தப் பயெ நெனைச்சா வாங்கித் தர முடியாதா? ஒடனே வாங்கிக் கொடுத்துப்புட்டா அவனுக்கு மவுசு போயிடும்னு நெனைக்கிறாம் போலருக்கு. அவ்வேம் பவுசுக்கட்ட தேயோ! இந்த நாயில்லாம் எதுக்கு சட்டய வேட்டிய கட்டிட்டு காருல திரியுறாம்? இவ்லாம் பொறந்த மேனிக்கி ஊருல திரிய வேண்டிய பயெ! நம்ம நேரம் பாருடாம்பி அவ்வேம் காலுல காரியம் ஆவ வேண்டி வுழுந்து கெடக்க வேண்டிருக்கு. ஊருக்கு வந்த காலத்துல அப்டி ன்னம்மோ வத்தலும் தொத்தலும் பாக்க சகிக்காது தீஞ்ச கருவாட்டுக் கணக்கா. இப்போ ன்னம்மா ஊதிப் போயிக் கெடக்குறாம். வெட்டிப் போட்டா நாலு ஊரு திங்ற அளவுக்கு சதெ." என்று கருவிக் கொள்கிறது முருகு மாமா.
            இந்த மாப்பிள்ளை வூட்டுக்காரர்கள் பதினாலு நாளு, பதினாலு நாளுன்னு மாப்பு வாங்குறதுலயே நிக்குறானுங்களே தவிர கொடுக்குற பாடா தெரியல. மில்லுகாரரு பொறுமையா இருங்கன்னு அச மடக்கிப் பார்க்குறாரு. அப்படி இப்படின்னு இதுலயே மூணு மாசம் ஓடிடுச்சி. முருகு மாமாவுக்கும், லாலு மாமாவுக்கும் சந்தேகம் தட்ட ஆரம்பிச்சிடுச்சி. ரண்டு பேரும் போயி அதுக்கு அப்புறந்தாம் பெருமாள்சாமியைப் போயிப் பார்க்கிறாங்க.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...