16 Aug 2019

அடிச்சுத் தூக்கு!



செய்யு - 178
            "ஓடுன கழுதயே ஓடுன்னும் விட முடியல. பிடிச்சிக் கொண்டு வாரதுக்கும் மனசில்ல. மானம், மரியாதின்னு ஒண்ணொண்ணுக்கும் அவஸ்த பட வேண்டிக் கெடக்கு! ஓடறதுக்கான்ன வயசுமில்ல. ஓட வேண்டிய தேவையுமில்ல. அததும் அதது மனசுபடி நடந்துகிட்டா குடும்பம் எதுக்கு? புள்ள குட்டிங்க எதுக்கு?" என்கிறது ராசாமணி தாத்தா.
            "ஊரு ஒலகத்துல ஒண்ணும் நடக்காத கதையில்ல. முன்னாடி பத்துப் பதினைஞ்சி ஊருக்கு ஒண்ணு ரண்டு அப்டி இருக்கும். இப்போ நாலு வூட்டுக்கு ரண்டு அப்டிதான் இருக்குது, நடக்குது. விசயம் வெளில தெரியல. அப்டியே விட்டுடலாம்னு பாத்தா இஞ்ஞ தங்காச்சி வீடா இருக்குது. அஞ்ஞ அண்ணன் வீடா இருக்குது. எதுக்கு ன்னா பண்றது? ரண்டு பக்கமே அசிங்கமாப் போயிடும்! நம்ம வூட்டுல நாறாத கதையா? இப்போ உள்ள புள்ளைங்கல்லாம் அப்டித்தாம் இருக்குது!" என்கிறது லாலு மாமா.
            கார் பாட்டுக்கு தஞ்சாவூரை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது. அதன் சக்கரங்கள் வேகமாக உருண்டு கொண்டிருக்கின்றன. நல்லது நடக்கும் என்று நினைக்கும் போது ஒரு கெடுதல் நடந்து நிலைகுழையச் செய்வதும், கெடுதல் நடக்கும் போது ஒரு நல்லது நடந்து திக்குமுக்காடச் செய்வதும் என்று இந்த வாழ்க்கைதான் மனுஷனைப் போட்டு பாடாய்ப் படுத்தி விடுகிறது. இப்படி மாறி மாறி நடந்து கொந்தளிக்க வைப்பதுதான் வாழ்க்கை போலிருக்குது.
            "தஞ்சாரூ பழய பஸ் ஸ்டேண்டா? புதுசா? எதுக்கு வுடச் சொல்றது?" என்கிறது ராசாமணி தாத்தா.
            "புதுசுக்குத்தாம்! அஞ்ஞ போனத்தாம் திருப்பூரு, மதுர, மெட்ராஸ் இப்டின்னு போவ முடியும்னு கணக்குப் பண்ணி அஞ்ஞ போயிருக்கும் பொண்ணு." என்கிறது லாலு மாமா.
            "அஞ்ஞப் போயி பொண்ணு இல்லாம போயிட்டுன்னா ன்னா பண்றதுன்ன நெனைக்கவே யோஜனையா இருக்கு!"
            "கூப்பிட்டுப் போவ வேண்டியவம்தான் இஞ்ஞ வந்து மாட்டிகிட்டான்ல. அவனுக்கா அது காத்துட்டுதாம் இருக்கும். ஒரு எடம் வுடாம தேடுனா சிக்கிக்கும். கார வுட்டு எறங்கி முகத்தக் காட்டிடக் கூடாது. அது அப்படி ஒரு கணக்கும் பண்ணிட்டு உஷாரா இருக்கும். காருள்ள இருந்துட்டே பார்த்து கண்டுபிடிக்கணும். பாக்குக்கோட்டை பஸ்ஸூ வந்து நிக்குற எடம்தாம் முக்கியம். அஞ்ஞதாம் அது அந்தப் பயலெ எதிர்பாத்துட்டு நிக்கும். எம்மாம் தெகிரியத்தப் பாருங்க? பெத்து வளத்த நாம்ம மேல வைக்காத நம்பிக்கையே நேத்து வந்த பயெ மேல வெச்சிட்டு ன்னா நெஞ்சழுத்தத்தோடு கெளம்பிருக்கு? யோ யப்பா இதுங்கள நம்ப முடியாதுடா சாமி!"
            லாலு மாமா கணித்தது கிட்டதட்ட சரியாகத்தான் இருக்கிறது. காரில் தஞ்சாவூரு புது பஸ் ஸ்டேண்டை நெருங்கியதும் லாலு மாமாவின் யோசனைப்படி பாக்குக்கோட்டை பஸ்கள் வந்து நிற்கும் இடமாகப் பார்த்து ஓரமாக காரை அப்படியும் இப்படியுமாக முன்னரும் பின்னருமாக ஒரு ரோந்து விட்டு, கொஞ்சம் நிறுத்தி, பிறவு முன்னரும் பின்னருமாக வழக்கம் போல ஒரு ரோந்து விட்டுப் பார்த்தால் முதலில் சுந்தரி தட்டுப்படுகிற மாதிரி தெரியவில்லை.
            லாலு மாமா களத்தில் இறங்குவது என்று முடிவு செய்து கொண்டு அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடிக்கு ஒரு துண்டை எடுத்துத் தலையில் சுத்திக் கொண்டு காரிலிருந்து இறங்கி, "நாம்ம இப்படி நடமாட்டமா ரவுண்டு பண்றேம். நீங்க அப்டியே காருல இருந்தபடி ரவுண்டு பண்ணுங்க!" என்று பஸ் ஸ்டேண்டைச் சுற்றி வருகிறது. சுற்றிச் சுற்றி வந்தால் பார்க்கிற எல்லா பெண்களும் சுந்தரியாக தெரிகிறதே தவிர சுந்தரியைக் காணவில்லை. அப்படியே பெண்களுக்கானக் கழிப்பிடம் பக்கமும் எட்டிப் பார்க்கிறது லாலு மாமா. யாரோ அதன் சுவர் ஓரத்தில் ஒளிந்தபடி எட்டிப் பார்ப்பது அதன் கண்களுக்குத் தெரிகிறது.
            ‍அது சுந்தரியாகத்தான் இருக்கும் என்று மனதில் கணிப்பு லாலு மாமாவுக்கு. அந்த கணிப்புக்கே அடேங்கப்பா எவ்வளவு சாமர்த்தியமாக இந்தப் பெண் நடந்து கொள்கிறது என்று லாலு மாமாவுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி அதை உறுதி செய்து கொள்வது என்ற யோசனையில் சுற்றும் முற்றும் பார்த்தபடி அது நிற்க பாக்குக்கோட்டை பஸ் ஒன்று வந்ததும், தலையில் துப்பட்டாவைப் போர்த்தியபடி ஓடிப் போய் பார்க்கிறது அந்தப் பெண். அந்தப் பெண்ணின் உருவம், நடை, ஓட்டம் எல்லாவற்றையும் வைத்து சுந்தரிதான் என்பதை உறுதிப் பண்ணிக் கொள்கிறது லாலு மாமா. பஸ்ஸிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்த பின் அதில் ஆதிகேசவன் இல்லையென்று தெரிந்ததும் வேக வேகமாக ஓடி வந்து கழிவறைக்குள் புகுந்து கொள்கிறது சுந்தரி.
            லாலு மாமா நைஸாக அந்த இடத்திலிருந்து கார் நிற்கும் இடத்திற்கு வந்து காருக்குள் ஏறிக் கொள்கிறது. காரை எடுத்துக் கொண்டு பஸ் ஸ்டேண்டிற்கு வெளியே வரச் சொல்லி தஞ்சாவூர் புது பஸ் ஸ்டேண்டுக்கு வெளியே இருக்கும் பெட்ரோல் பேங்கிற்கு முன் நிறுத்தி விட்டு விசயத்தைச் சொல்கிறது.
            "அட என்னப்பா வாத்தியாரு நீயி! பாத்த மாத்திரத்தில நாலு போடு போட்டு இழுத்துட்டுப் போறதெ விட்டுப்புட்டு இப்பிடி வெளிய கொண்டாந்து நிறுத்திகிட்டு பிலாக்கணம் பண்ணிட்டு... நாம்ம போறதுக்குள்ள அவ்வே வேற எஞ்ஞயாவது ஓடி தொலையறுதுக்கா? பாத்தவுடனே கோழிக்குஞ்ச அமுக்குற மாரி அமுக்கிக் கொண்டாந்துடணும்!" என்கிறது ராசாமணி தாத்தா.
            "ஒங்க யோஜனையெல்லாம் இப்ப சரிபட்டு வாராது பாருங்க! இந்தாருங்க! பஸ் ஸ்டாண்டுக்குள்ள போற பஸ்ஸை ஒண்ணு பிடிச்சி அப்டியே நாம்ம ரண்டு பேரும் ஏறிப்பேம். யப்பா காருகாரா நீயி அந்தப் பஸ்ஸை பாலோ பண்ணி வந்துட்டே, பஸ்ஸூக்குப் பக்கத்துல வண்டிய சட்டுன்னு எடுத்துட்டு கெளம்புற மேனிக்கு வண்டிய நிப்பாட்டிக்க. நாம்ம பஸ்ல கூட்டத்தோட கூட்டமா எறங்குற மாரி எறங்கி ஓடிப் போயி பிடிச்சோம்னா பிடிச்சி அப்டியே காருக்குள்ள போட்டு கொண்டுட்டு போயிடலாம்!" என்கிறது லாலு மாமா.
            "இப்பிடித்தாம் பிடிக்கணுமா அந்த ஓடிகாலிய? எல்லாம் நேரம்!" என்று தலையில் அடித்துக் கொள்கிறது ராசாமணி தாத்தா.
            இதற்காகவே பெட்ரோல் பாங்கிற்குப் பக்கத்தில் பாக்குக்கோட்டையிலிருந்து வரும் பஸ்ஸானது வேகத்தை நிறுத்தித் திரும்பும் அந்த கண நேரத்தில் சட்டென்று ஏறிக் கொள்கிறார்கள் ரெண்டு பேரும்.
            "எவம்டா இது இப்டி ஓடுற பஸ்ல ஏறுறது?" என்று பஸ்ஸில் இருக்கும் கண்டக்டர் சத்தம் கொடுக்கிறார்.
            பஸ்ஸூக்குள் ஏறிய லாலு மாமா வேக வேகமாக கண்டக்டரிடம் போயி "ரண்டு பாக்குக்கோட்டை டிக்கெட் கொடுங்க!" என்று ஐம்பது ரூபாய் தாளை நீட்டுகிறது. கண்டக்டர் ஒரு முறை முறைத்து விட்டு, "பஸ் எடுக்குறப்ப டிக்கெட் போடுறதா? சவாரிய முடியறதுக்குள்ள மறு சவாரிக்கு டிக்கெட் போடுறதா? வண்டி கெளம்புறப்ப எடுய்யா! பஸ்ஸாயில்ல? பத்து நிமிஷத்துக்கு ஒரு பஸ்ஸூ இருக்குது! இப்பிடி ஓடியாந்து ஏறுறே? கை காலு முறிஞ்சி கீழே வுழுந்தா ன்னா பண்ணுவே? பஸ்ஸூ மேல கேஸப் போட்டு பத்தாயிரம், இருபதாயிரம் புடுங்குவேல்லய்யா!" என்கிறார்.
            கண்டக்டர் பேசுவதைக் கண்டுகொள்ளும் நிலைமையில் இல்லை லாலு மாமா. அது பின்னால் வரும் காரைக் கணக்குப் பண்ணிக் கொள்கிறது. பஸ் அப்படியே பஸ் ஸ்டேண்டில் திரும்ப ஆரம்பித்ததும் பஸ்ஸிலிருந்து இறங்க ஆயத்தமாகும் கூட்டத்தோடு கூட்டமாக தலையில் துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு தயாராக ஆரம்பிக்கிறது. தலையெழுத்து என்று ராசாமணி தாத்தாவும் தலையில் துண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு லாலு மாமாவுக்குத் துணையாக தயாராக ஆரம்பிக்கிறது.
            பஸ் நின்றதும் கூட்டம் குறைவாக இருந்தாலும் அந்தக் குறைவான கூட்டம் திபுதிபுவென்று இறங்குகிறது. ராசாமணி தாத்தா முன்பக்க படிக்கட்டின் வழியாகவும், லாலு மாமா பின்பக்க படிக்கட்டின் வழியாகவும் இறங்கியபடியே, கூட்டத்தோடு கூட்டமாக இறங்கும் போதே அப்படியே  துப்பட்டாவால் முக்காடிட்டு ஓடி வந்து பார்க்கும் சுந்தரியையும் பார்த்து வைத்துக் கொள்கிறார்கள். படிக்கட்டிலிருந்து இறங்கியது கண்ணிமைக்கும் நேரத்தில் லாலு மாமா ஓடிப் போய் சுந்தரியின் கையைப் பிடித்து விடுகிறது. அப்படியே பின்னால் வந்து ராசாமணி தாத்தாவும் சுந்தரியின் தோள்பட்டையைப் பிடித்து விடுகிறது.
            சுந்தரிக்கு நிலைமைப் புரிந்து விட்டது. அப்படியே கீழே உட்கார்ந்து கையை விலக்கிக் கொண்டு ஓடப் பார்க்கிறது. அதற்குள் ராசாமணி தாத்தா தோள்பட்டையில் இருந்த பிடியை விட்டு விட்டு தலையில் கிடந்த துண்டை ஒரு முறுக்கு முறுக்கி சுந்தரியின் கழுத்தில் போட்டு முறுக்கி விடுகிறது.
            கழுத்தில் கயிறு விழுந்த ஆட்டைப் போல மாட்டிக் கொள்கிறது சுந்தரி. கழுத்தில் விழுந்த துண்டிலிருந்து எழுந்த வாக்கில் நகர நினைத்தால் துண்டு கழுத்தை இறுக்குகிறது சுந்தரிக்கு.
            ராசாமணி துண்டைப் போட்டு இறுக்கியது வசதியாகப் போக லாலு மாமா சுந்தரியின் கைகைளைப் பின்பக்கமாக வளைத்து முதுகில் நங்கென்று ஓங்கி ஒரு போடு போடுகிறது. ராசாமணி தாத்தாவும் முறுக்கிய துண்டை ஒரு கையால் பிடித்தபடி மறுகையால் கன்னதில் பளார் பளார் என்று நாலு அறை வைக்கிறது. சுந்தரிக்கு வலி தாங்க முடியவில்லை. கத்திக் கொண்டே, "நம்மள யாராச்சிம் காப்பாத்துகங்களேம்!" என்று சத்தம் போடுகிறது.
            அடிக்க ஆரம்பிப்பதில் உள்ள கெட்ட குணம் ஒன்று என்னவென்றால் ஒரு அடி அடித்தோமா, விட்டோமா என்று நின்று போகாது. ஒரு அடி ரண்டு அடியாக, ரண்டு அடி நாலு அடியாக, நாலு அடி எட்டு அடியாக எவ்வளவு அடித்தாலும் ஆத்திரம் தீராது. அடித்தோமா? விட்டோமா? என்று மனசும் அமைதி கொள்ளாது. அதுக்கு அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படித்தான் ஒரு ரண்டு அடி அடித்தோமா விட்டோமா என்றில்லாமல் அடித்‍து அடித்தே அது கொலை வரைக்கும் கொண்டு போய் விட்டு விடும். எப்படியோ சுந்தரியைப் பிடித்துக் கொண்டு போக வேண்டும் என்பதுதான் ஆரம்பத்தில் ரெண்டு பேரின் திட்டமாக இருந்து. அது எப்படியோ மாறி இப்போது ஏதோ ஆத்திரத்தில் நிலைகொண்டிருக்கிறது. அடி என்றால் ஒங்க வூட்டு அடியா? எங்க வூட்டு அடியா? சரமாரியாக சுந்தரிக்கு அடி விழுந்து கொண்டு இருக்கிறது. ராசாமணி தாத்தாவுக்கும், லாலு மாமாவுக்கும் அடிக்க அடிக்க ஆத்திரம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறதே தவிர குறைய மாட்டேன்கிறது. கண்ணுமண்ணு தெரியாமல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
            கூடி வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்துக்கு ஒரு குணம் இருக்கு. கொஞ்ச நேரம் அடிக்கிறதைப் புரியாம அதிர்ச்சியோட வேடிக்கைப் பார்க்குறவங்க, ஓவரா அடிக்க ஆரம்பிக்கிறப்ப, அடிபடுறவங்க மேல பரிதாபத்தோட தடுக்க ஆரம்பிச்சிடுவாங்க. என்ன ஏதுன்னு விசாரிக்க ஆரம்பிச்சிடுவாங்க. நிலைமை இப்போ அப்படித்தான் ஆகிப் போவுது. கூட்டத்துல ஒரு சில பேரு, "ஏன்யா அடிக்கிறீங்க?" என்று சத்தம் விடுகிறார்கள். ஒரு சில பேரு ரண்டு பேரையும் தடுக்கப் பாக்கறாங்க. அப்படி தடுக்கப் பாக்குறவங்களயும் தாண்டி பாஞ்சிகிட்டு ரண்டு பேரும் அடிச்சிகிட்டே இருக்காங்க. அவங்க மேலயும் ரண்டு அடிகளப் போட்டா அவங்க சும்மா இருப்பாங்களா?
            சரமாரியாக லாலு மாமாவும், ராசாமணி தாத்தாவும் யாரை அடிக்கிறோம், என்ன செய்கிறோம் என்று தலைகால் புரியாமல் அடிக்கத் துவங்க பஸ்ஸிலிருந்து இறங்கியவர்கள், சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் லாலு மாமாவையும் ராசாமணி தாத்தாவையும் சுந்தரியிடமிருந்து விலக்கிப் பிரிக்கப் பார்க்கிறார்கள்.
            "நம்மல விடுங்கய்யா! ஓடுகாலி ஓடிப் போயிடப் போறா? ரண்டு நாளுல்ல கல்யாணம்!" என்று லாலு மாமா சத்தம் போடுகிறது.
            எவ்வளவு நேரம்தான் தடுக்குற கூட்டமும் பொறுமையாக இருக்கும்? நேரம் ஆக ஆக இப்படி பஸ் ஸ்டாண்ட் மத்தியில் தடிமாடு மாரி இருக்கும் ரெண்டு பேரும் ஒரு பெண்ணைப் போட்டு அடித்தால் கூட்டம் எப்படி புரிந்து கொள்ளும்? எதற்கு அடிக்கிறார்கள்? ஏன் அடிக்கிறார்கள்? என்பது புரிபடுவதற்குள் "பொது எடத்துல பொம்பள புள்ளைய போட்டு அடிக்கலாம்டா? நாதாரி நாயிகளா!" என்று கட்டக் கடைசியாக நான்கைந்து பேர் லாலு மாமா மற்றும் ராசாமணி தாத்தாவின் முதுகில் நாலைந்து போடு போடுகிறார்கள்.
            "யோவ்! ஓடிடப் போயிடுதுங்கய்யா! வுட்டா பிடிக்க முடியாதுங்கய்யா! கொஞ்சம் ஒத்தொழைப்பு பண்ணுங்கய்யா! காரியம் கெட்டுடப் போவுது!" என்கிறது ராசாமணி தாத்தா இப்போ.
            "எவம்ய்யா எங்கள அடிக்கிறது?" என்று சுளீரென்று முதுகில் நாலு அடிபட்டவுடன் இப்போதுதான் லாலு மாமா அடிப்பதை விட்டு விட்டு எகிறிப் பார்க்கிறது.
            கூட்டத்துக்குக் கொஞ்சம் நிலைமை புரியத் தொடங்குவது போல இருக்கு. அப்படியே எல்லாரையும் விலக்கிக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் ஓரமாக வருகிறார்கள். அடிவிழு ஆரம்பித்ததும்தான் ராசாமணி தாத்தாவுக்கும், லாலு மாமாவுக்கும் கொஞ்சம் நிலைமை புரிய ஆரம்பிக்கிறது. ராசாமணி தாத்தா நிலையை விலக்கிக் கெஞ்சுகிறது, "பொண்ண பெத்த தகப்பன்யா நாம்ம! அவரு பொண்ணுக்குத் தாய்மாமன். கல்யாணம் நிச்சயம் ஆயி ரண்டு நாளுல கல்யாணம் இருக்குங்கய்யா. அதுக்குள்ள இது ஓடி வந்திட்டு. இப்பிடிப் பண்ணா எந்தத் தகப்பங்காரனுக்கு, தாய்மாமங்காரனுக்குப் பிடிக்கும் சொல்லுங்க?" என்கிறது.
            "பொண்ண பிடிச்சோமா? கொண்டு போனோமான்னு இருக்கணும். அது வுட்டுப்புட்டு பொது எடத்துல வெச்சி இப்டி நாயடி பேயடி அடிச்சா யாருய்யா பாத்துட்டு இருப்பாங்க. இப்போ பொண்ண வூட்டுக்குக் கொண்டு போவணும் அவ்ளோதானே. அடிக்காம கொள்ளாம கொண்டு போங்க!" என்று சொல்லியபடியே கூட்டம் சுந்தரியை ரெண்டு பேரிடமும் ஒப்படைக்கிறது.
            "இந்த கேடுகெட்ட நாயால நாம்மலாம் வேற தேவையில்லாம அடிவாங்கி மானம் மரியாதிப் போவுது!" என்கிறது ராசாமணி தாத்தா.
            சுந்தரியைப் பிடித்து காரின் பின்சீட்டின் நடுவில் உட்கார வைத்து ரெண்டு பக்கமும் ராசாமணி தாத்தாவும், லாலு மாமாவும் ஆளுக்கொரு பக்கமாக உட்கார்ந்து கொண்டு காரைக் கிளம்பினால் காருக்குள் இருக்கும் சுந்தரிச் சொல்கிறது, "நாம்ம கட்டுனா அவனத்தேம் கட்டுவேம்! ஒங்களால ன்னா மசுரப் புடுங்க முடியும்?"
            "இந்நேரம் ஒம்ம அண்ணன் அவனுக்கு சமாதி கட்டிருப்பாம்! வா! வந்து அவ்வேம் சமாதிய கட்டிக்கோ! பொண்ணாடி நீயி? ஓடுகாலி நாயி!" என்கிறது ராசாமணி தாத்தா.
            "இஞ்ஞ ஒண்ணும் சொல்ல வாணாம். எல்லாத்தியும் வூட்டுல வெச்சிப் பாத்துப்பேம்!" என்கிறது லாலு மாமா.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...