செய்யு - 164
"போலீசு வராம பொணத்தை எடுக்க மாட்டோம்னு!"
சொன்னதுக்கு அப்புறம்தான் மாப்பிள்ளை வீட்டுக்காரனுங்க ஒரு வழிக்கு வாரனுங்க.
"போன உசுரு போயாச்சி. இனுமே திரும்ப
வாராது. போன கதெய பேசுறத விட ஆவுற கதெய பேசலாங்" அப்புடிங்றானுங்க.
"இத்தே ஒங்க வூட்டுல இப்படி ஒரு பொண்ணு
போயிட்டா இத்தே போல பேசுவீங்களா? பொண்ணு தானா செத்தது போல தெரியல. நீங்கதாம் மண்ணெண்ணெய
ஊத்தி கொளுத்தி விட்டுருக்கீங்க! போலீசு கேஸூன்னு போனா குடும்பத்தோட உள்ள போகுற
மாரி ஆயிடும்." என்கிறது லாலு மாமா.
"யோவ்! ஒங்க குடும்பத்துப் பொண்ணு
எங்க குடும்பத்த கூண்டோட மாட்டி விடத்தாம்யா இப்படி பண்ணிகிட்டிருக்கா. செத்தும் சாவடிக்கிறா
நாற முண்டை. குத்தம் உள்ள நெஞ்சுதாம்யா குறுகுறுக்கும். நீங்க எந்த போலீசுகிட்ட வேணாலும்
போங்க. எந்த கேஸ்ஸ வேணாலும் போடுங்க. நாங்க தயார்தாம்யா!" என்று அதிலும் ஒரு
முறுக்குக் காட்டுகிறார்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்.
"இந்தாருங்க! இப்படி ஆளாளுக்கு பேசிட்டு
இருந்தா ஒரு முடிவு எட்டாது. ஒங்க ஏரியாலேந்து முக்கியமான ரண்டு பேரு வாங்க. வீட்டுத்
தரப்பிலேந்து ரெண்டு பேரு வாங்க. நாங்க எங்க ஏரியாலேந்து ரண்டு பேரு வாரோம். இவுங்க
வூட்டுத் தரப்புலேந்து ரண்டு பேரு வரட்டும். அப்பிடி ஒதுங்கிப் போயி உணர்ச்சிவசப்படாம
ரண்டு பக்கமும் பாதகம் இல்லாம பேசி முடிப்போம்!" என்கிறார் மில்லுகாரர்.
வடவாதிப் பகுதிக்கு நியாயஸ்தர் வரிசைகளில்
மில்லுகாரரும் ஒருத்தர். நல்ல ஓங்கு தாங்கலான உருவம். பேச்சும் கரகர என்று இருக்கும்.
சாம்பல் நிற வேட்டியைக் கட்டி மேலே பழுப்பு நிற ஜிப்பாவைப் போட்டிருப்பார். வெற்றிலைப்
பாக்கைப் போட்டு ஒரு நோட்டம் விட்டுக் கொண்டே மென்று துப்பினார் என்றால் ரெண்டு
பக்கத்தையும் சமாதானம் பண்ணி விட்டு விடுவார். ரெண்டு பேரும் ஒத்துப் போகும் வகையில்
ஒரு முடிவை எட்டுவதுதான் அவரைப் பொருத்த மட்டில் நியாயம். அதற்குத் தகுந்தாற் போல
ரெண்டு பக்கமும் பேசி விட்டு விடுவார். எதார்த்தம் தெரிந்தவர். ரொம்ப நீதி, நியாயம்
என்று இறங்கி கண்ணுக்குத் தெரியும் எதார்த்தத்தைக் கோட்டை விட்டு விடக் கூடாது என்பதில்
கணக்காய் இருப்பவர். இந்த வடவாதிப் பகுதிக்கு அவர்தான் முதன் முதலில் நெல் அறவை மில்லைக்
கொண்டு வந்தவர். இப்போது மில்லில் நெல் அறவையைப் பொருத்த மட்டில் பெரிய ஓட்டம் இல்லை
என்றாலும் மல்லி, மிளகாய்ப் பொடி அரைக்கும் கூட்டம் கணிசமாக அரைத்துக் கொண்டிருக்கிறது.
ரேஷன் கடையில் கோதுமை கொடுக்கும் காலங்களில் ஓட்டம் கொஞ்சம் பலமாக இருக்கும். மத்தபடி
தீபாவளிக் காலங்களில் பலகாரத்துக்காக மாவரைக்கும் கூட்டம் கும்மினால்தான் உண்டு. இப்போது
பார்க்கையில் மில்லுகாரரின் மில்லு பல நேரங்களில் வெறுச்சோடித்தான் கிடக்குது. இந்த
மில்லு ஆரம்பித்த காலங்களில் எப்படி இருந்தது தெரியுமா?
மில்லுகாரரு வடபாதியில் மில் ஆரம்பித்த
நேரத்தில் நெல் அறவைக்கு ஏகக் கிராக்கி. வடவாதி மற்றும் சுற்றுப்பட்டியில் வண்டி கட்டிக்
கொண்டு கூத்தாநல்லூரு, வேலுக்குடி, மாவூரு என்று போயி நெல் அறவை செய்து கொண்டிருந்த
கூட்டம் ஒட்டு மொத்தமாய் வடவாதிக்குத் திரும்பி விட்டது.
இப்போது வீட்டுக்கு வீடு கடையில் அரிசி
வாங்கித் தின்பதைப் போலவா மக்கள் அப்போது தின்றது? கடையில் அரிசி வாங்கிப் பொங்கித்
தின்பதை என்னவோ குடும்பத்துக்கே ஆகாத காரியம் போல பார்த்த காலம் அது. வயலில் பாடுபட்டு
நெல்லைக் கொண்டு வந்து பத்தாயத்திலோ, குதிரிலோ கொட்டி வைத்து மாசா மாசம் அதிலிருந்து
நெல்லை எடுத்து ஆவாட்டி, பதமாக காய வைத்து, மூட்டைக் கட்டிக் கொண்டு சனம் ஒவ்வொன்றும்
மில்லில் போய் அறவை செய்து கொண்டு வரும். வயல் இல்லாத மக்களும் வயல் இருப்பவர்களிடம்
அறுப்புக்கு முன்கூட்டியே பேசி வைத்துக் கொண்டு நெல்லை விலைக்கு வாங்கி வந்து வீட்டில்
இருக்கும் பத்தாயத்தில் நிரப்பிக் கொண்டு அந்த நெல்லைத்தான் ஆவாட்டி அறவை செய்து சாப்பிடும்.
எவனாவது கடையில் அரிசி வாங்கிப் பொங்கித்
தின்கிறான் என்ற செய்தி ஊருக்குள் தெரிந்து விட்டால் போச்சுது நிலைமை. "கடையில்லல
அரிசி வாங்கித் திங்குறான் வக்கத்தப் பய! போக்கத்தப் பயெ ஒரு மூட்ட நெல்ல வாங்கியாவது
அவிச்சிச் சாப்புட்டா ன்னா தரித்திரம் பிடிச்சப் பயே!" என்று ஒரே அடியில் சாய்த்து
விடுவார்கள். கடையில் அரிசி வாங்கித் தின்பது அவ்வளவு கேவலமாய் இருந்த கால கட்டத்தில்
மில்லுகாரருக்கு எப்படி ஓட்டம் ஓடியிருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்.
மூட்டைகள் வரிசை வரிசையாய் மில்லின் முன்
குவிந்து கிடக்கும். அங்க நெல் அறவை செய்த கதையை ஏன் கேட்கிறீர்கள்? இந்த ரெஷன் கடையில
வரிசையாய் நிற்குற மாதிரி மூட்டைக்குக் பக்கத்துல முட்டையைப் போட்டுட்டு அடை வைக்கிற
கோழி கணக்கா மூட்டை மேலயே உட்கார்ந்து கிடக்கணும். ஏ யப்பா இவ்வளவு கூட்டம் அள்ளுதுன்னே...
வர்ற கூட்டம் கொஞ்சமாச்சும் குறையும்னு நினைக்கிறீங்க! ம்ஹூம் அது பாட்டுக்குக் கூட்டம்
அள்ளும். தலையில தூக்கிட்டு வாரவங்க, சைக்கிளுல கேரியர்ல வெச்சிக் கொண்டு வாரவங்க,
மாட்டு வண்டியில நாலஞ்சு பேரா சேந்துகிட்டு தூக்கிப் போட்டுகிட்டு கொண்டு வாவரங்கன்னு
நெல்லு மூட்டையோட வாரவங்க உசுரோட இருக்குற வரைக்கும் விடாம மூச்சு விடற கணக்கா வந்துகிட்டேதாம்
இருப்பாங்க.
வரிசையா மூட்டையோட கெடக்குற கூட்டத்துல
சமயத்து நாம்ந்தான் முன்னாடி, நீம்தான் முன்னாடின்னு அதுல வேற வாய்ச் சண்டை, கைச் சண்டை
அப்பைக்கப்போ நடக்கும். போடுற சண்டையையும் போட்டுகிட்டு அறவை முடிஞ்சத்துக்கு அப்புறமா,
"சரிதாம் போ! நீயும் பேசுன. அவனுந்தாம் பேசுன. நீ ரண்டு வார்த்த கூட பேசுனெ.
அவேம் ரெண்டு வார்த்த கொறைச்சுப் பேசுனாம். நீ ரண்டு வார்த்த கூட பேசுனதால நீ ன்னா
உசந்துப் போயிட்டே? நீ ரண்டு வார்த்தய கூட பொறுமையா கேட்டுகிட்டதால ன்னா கொறைஞ்சுப்
போயிட்டே? ந்தா அரைச்ச கூலி அரிசியில நீ ஒரு காலு படி, நீயி ஒரு காலு படி எடுத்துகிட்டு
எடத்த காலி பண்ணு. இத்தோட பேச்சு முடிஞ்சிடணும். வெளியில போயி தொடந்துகிட்டு இருக்கக்
கூடாது!" என்று அதுவரை சண்டையைக் கண்டும் காணாதது போல இருக்கும் மில்லுகாரர்
சண்டையும் முடிஞ்சி நெல் அறவையும் முடிஞ்சதுக்கு அப்புறம் ஒரு மாதிரியாய் சமாதானம்
பண்ணி விடுவார். சனங்கள் அறவைக் கூலியில் மிச்சமாகிக் கிடைக்கும் கால் படி அரிசிக்காக
சண்டையை நிறுத்துகிறதா? மில்லுக்காரரின் ஒரு மாதிரியான தோரணையான பேச்சுக்காக சண்டையை
நிறுத்துகிறதா? என்பது அப்போது அறியப்படாத சந்தேக ரகசியந்தான்.
சமயத்துல மில்லுகாரரு கூட்டம் தாங்க முடியாம
போறப்ப அவரே வந்து நெல்லு மூட்டையை நெல்ல அரைக்குற டிரைவருக்குத் தொணையா தூக்கிக்
கொட்டுவாரு. பல சமயத்துல பணத்தை, அறவை கூலி அரிசியை வாங்கி வைக்கிற மூலையில இருக்குற
ரூமை விட்டு நகர மாட்டாரு. அங்கேயிருந்தே "வாரவனவெல்லாம் அப்டியே நின்னுகிட்டே
இருந்தா எப்டி? டிரைவருக்கு ஒத்தாசையா மூட்டையே தூக்கி கீக்கிக் கொட்டுனாத்தான வேலெ
ஆகும்"னு சவுண்டு விடுவாரு.
சனங்க இப்படித்தான் முணுமுணுத்துக் கொள்ளும்.
"இந்த ஆளு என்னப்பா ஒரு நேரத்துல டிரைவருக்கு சப்போட்டா தூக்கிக் கொட்டுனா சம்பளம்
கொடுத்துதானே வேலைக்கி டிரைவரை வெச்சிருக்கேன். நீயேம் தூக்கிக் கொட்டுறேங்றாரு?
சரி இப்டிப் பேசுறாரேன்னு ஒதுங்கி நின்னா டிரைவருக்குச் சப்போட்டா தூக்கிக் கொட்டக்
கூடாதாங்றாரு! இந்த ஊருல இன்னொரு மில்லு வந்தாத்தாம்பா இந்த ஆளோட கொட்டம் அடங்கும்!"
அப்படிப்பட்ட ஆளுதான் இந்த மில்லுக்காரர். ஆளு நல்ல தோரணையா இருந்தாலும் இப்படியும்,
அப்படியுமா மாறிப் போயிட்டே இருப்பார். எந்த நேரத்துல எந்த பக்கத்தில் நிற்பாருன்னு
சொல்ல முடியாது. அந்தந்த நேரத்துக்கு என்ன தோணுதோ அந்த நிலையில நிற்பாரு. வெறுமனே
நிலையில நிற்பாருன்னு சொல்றத விட அந்த நிலையில நிலையா நிற்பாரு. அதாங்க பிடிவாதமா
நிற்பாரு. அதாங் அந்த மனுஷம்கிட்ட பிடிக்காத ஒண்ணு. மத்தபடி நல்ல மனுஷன்தான். அவரு
நின்ன நிலை பிற்பாடு தப்புன்னு அவருக்கு புரிஞ்சா சம்பந்தப்பட்ட மனுஷங்களுக்குத் தனியா
கூப்பிட்டு அது தெரியாத மாதிரி உபகாரமா எதாவது செஞ்சிக் கொடுப்பாரு. ரெண்டு படி அரிசி,
ரண்டு மரக்கா அரிசி இந்த மாதிரி அவரு மனசுக்குத் தோதுபட்ட மாதிரி கொடுப்பாரு. கொடுத்துட்டு,
"ன்னம்மோ ஒன்னய பாக்குறப்பவே கொடுக்கணும்னு ரொம்ப நாளா நெனச்சிகிட்டு இருந்தேம்.
இப்பதாம் நேரம் வந்திச்சு பாரு!" அப்படிம்பாரு பாருங்க. அதுல அது கிடைச்ச ஆளு
அப்பிடியே டக்கு அவுட்டு ஆயிடுவாம். "மவராசா ந்நல்லா இருக்கணும்!"னு அவரு
மின்னாடி சொல்லிப்புட்டு, பார்க்கிறவங் மின்னாடியெல்லாம் "மில்லுகாரு உணர்ச்சிவசப்பட்டு
பேசுவாரு. பேசிபுட்டு கை நெறைய அள்ளிக் கொடுப்பாரு!"னு அவ்வேம் பாட்டுக்கு அளந்து
விட்டுகிட்டுப் போவான்.
மில்லுகாரரு நெல்லு அறவை மில்லை வெச்சே
நல்லா சம்பாதிச்சாரு. வீட்டைக் கட்டுனாரு. நெல புலமா பார்த்து வாங்கிப் போட்டாரு.
இந்த ஊருக்கு முதன் முதலா காரு வாங்கி வந்தாரு. டிராக்டரு, டிரக்னு என்னென்மோ வாங்கிப்
போட்டு வெச்சிருக்காரு. எல்லாமே மில்லுலேந்து வந்த வருமானம்தான். அந்த அளவுக்கு மக்கள்
கூட்டம் கூட்டமா நெல்லு அரைச்சதுன்னு சொன்னா இப்பவும் சொல்றேன் நீங்க சத்தியமா நம்ப
மாட்டீங்க!
இந்தச் செய்யுவோட அப்பா இருக்காரே சுப்பு
வாத்தியாரு அவரு இப்பதாம் டிவியெஸ் பிப்டியில வெச்சு நெல்லு மூட்டையக் கொண்டு போறாரு.
ஊருல இப்பயும் நெல்லு அரைக்கிறதுல அவரு ஒரு ஆளு. டிவியெஸ் பிப்டி வாங்குன அதுக்கு முன்னாடி
இதுக்குன்னே பஞ்சராயி வெளில கழட்டிப் போட்ட ஒரு சைக்கிளு டியூப்பை பொக்கிஷம் மாதிரி
எடுத்து வெச்சிருப்பாரு அவரு. கேரியல்ல கொஞ்சம் அகலப்படுத்துற மாதிரி ஒரு மரச்சட்டத்தை
வெச்சிருப்பாரு. அந்த மரச்சட்டத்தை கேரியல்ல சணல வெச்சிக் கட்டி, கேரியல்ல சைக்கிள்
டியுப்பைக் கொடுத்து ஒரு மூட்டையைத் தூக்கி வெச்சி அப்டியே சைக்கிளு டியூப்பை மூட்டையைச்
சுத்திக் கொண்டு வந்து சீட்டோட மாட்டி விட்டுட்டார்னா நெல்லு அரைக்கக் கிளம்பிட்டார்னு
அர்த்தம். அந்த ஒரு நெல்லு மூட்டையை சைக்கிளுல வெச்சி ஆடாம அசையாம உக்காந்து பேலன்ஸா
ஏறி மிதிக்கிறதுன்னா அதுக்கு ஒரு தெறமைதான் வேணும். சமயத்துல கொஞ்சம் அசால்ட்டா இருந்தா
மூட்டையோட வெயிட்டு தாங்காம சைக்கிளு பின்னாடி அண்ணாத்திக்கும். கொஞ்சம் கவனக்குறைவா
பேலன்ஸ் பண்ணாம விட்டுட்டா சைக்கிளு இப்படியும் அப்படியுமா ஆடி மூட்டையோடு சேர்த்து
கவுத்து விட்டுட்டு அதுவும் கவுந்து கெடக்கும். நம்ம கிராமத்துல எல்லா அசாமிங்களும்
அப்டிதாம் அண்ணாத்திக்காம, கவுந்துக்காம சைக்கிளுல வெச்சிக் நெல்லு மூட்டைய நெல்லு
அரைக்க கொண்டு போயிட்டு இருந்திச்சி. இப்போ நெல்லு அரைக்கிற ஆளுங்க கொறைஞ்சிப்
போச்சி. கடைக்கு ஒரு போன அடிச்சா போதும் வீட்டுலயே அரிசி மூட்டையைக் கொண்டாந்து
போட்டுறானுங்க. இது இப்போ உள்ள நெலைமை. இந்த நெலைமையிலும் நம்ம கிராமத்துல சுப்பு
வாத்தியாரும் ஒரு சில அசாமிங்களும் இன்னும் நெல்லு அவிச்சி ஆவாட்டி அதெக் கொண்டு போயி
அரிசிய அரைச்சுதாம் சாப்பிட்டுகிட்டு இருக்குங்க. பழக்கத்த விட முடியாத கொறை. கடை
அரிசில சமைச்சுப் போட்டா இத்தே மனுஷம் சாப்பிடுவானாங்ற மாதிரி மனசுல இருக்குற முறுக்கும்
ஒரு காரணம்.
அப்படிப்பட்ட வடவாதி மில்லுகாரர இதால ஒரு
நல்லது கெட்டுதுன்னா காரெ வெச்சாவது ஊருல இருக்குறவங்க கொண்டுட்டுப் போயிடுவாங்க.
அப்டி இப்டி பேசி எதா இருந்தா என்ன அதெ பேசி முடிச்சி விட்டுடுவாரு. சமயத்துல கை காசைப்
போட்டும் எதாச்சிம் பண்ணி விட்டுடுவாரு.
இப்போ ரெண்டு பக்கத்திலயும் ஆளுங்கள கூப்பிட்டுட்டாரே
தவிர ரெண்டு பக்கத்து சார்பாவும் மில்லுகாரர்தான் பேசுவாரு. இதாம் அவரோடு சுபாவம்.பேருக்குதான்
ரெண்டு பக்கத்தையும் கூப்புடுவார். ரெண்டு பக்கமுமே பேச முடியாத அளவுக்கு அவரே பேசுவாரு.
இடையில எவனாவது பேசுனா, அவன் நிறுத்துற எடத்திலேந்து பிடிச்சு ஒரு அரை மணி நேரத்துக்கு
மில்லுகாரரு பேசுனார்னா இடையில பேசுனவன் ஏம்டா பேசுனோம்னு நொந்து போயிடுவான்.
"இப்போ மில்லுகாரரு பேச ஆரம்பிச்சிட்டாருடோய்!"னு
ஊருல இருந்த சனங்க அவரு ரெண்டு பக்கத்து ஆளுங்களயும் ஓரங் கட்டுறதப் பார்த்துட்டு பேச
ஆரம்பிக்கிறாங்க. அட ஆமாம்! மில்லுகாரரு பேச ஆரம்பிச்சிட்டாரு!
*****
No comments:
Post a Comment