2 Aug 2019

சீரியல், நியூஸ் இன்றி அமையாது உலகு!



            டி.வி. பார்ப்பது என்பது சாதாரணமில்லை. எவ்வளவு கஷ்டம் என்பது பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும். கண் கொட்ட பத்து மணி நேரம், பனிரெண்டு மணி நேரம் என்று தொடர்ந்து உட்கார்ந்து பார்ப்பது என்றால் உட்கார்ந்து பார்ப்பவர்களுக்குத்தான் முதுகு வலி, கண் எரிச்சல் என்று அந்த அவஸ்தைகள் புரியும்.
            இப்படி வருஷசத்துக்கு முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் தொடர்ந்து உட்கார்ந்து பார்த்து அதனால் உடல்பருமன், சர்க்கரை, கொலஸ்ட்ரால் என்று அத்தனை உடல் உபாதைகளையும் ஏற்றுக் கொள்ளவும், அதைத் தொடர்ந்தும் விடாமல் டிவி பார்ப்பது என்றால் அதற்கே தனி மனோ தைரியம் வேண்டியதாகத்தான் இருக்கிறது.
            ரிமோட் வந்து விட்ட பின் சேனல் மாற்றி சேனல் பார்த்தாலும் அதனால் மனம் மற்றும் மூளையின் ஒருங்கிணைப்புக் குலையாமல் டிவி பார்த்து அதனால் சமநிலை மாறாமல் இருப்பதும் சாதாரணமா என்ன?
            இதில் விளம்பரங்கள் வேறு. எவ்வளவு பிரமாண்டமான விளம்பரங்கள் தெரியுமா! ஒரு நாளில் டிவி பார்த்தால் அந்த விளம்பரங்களையே எப்படியும் நூறு இருநூறு முறைக்கு மேலாக பார்க்க வேண்டியிருக்கிறது. அத்தனையையும் பொறுமையாகப் பார்த்தோ அல்லது சேனலுக்குச் சேனல் மாறி டைமிங்கிற்கு விளம்பரம் முடிந்ததும் பார்த்துக் கொண்டிருக்கும் சேனலுக்கு வருவதற்கு நீண்டகாலம் பயிற்சி தேவையாகத்தான் இருக்கிறது.
            சீரியல்கள் பெருக்கெடுத்த பிறகு அழுவாச்சி, கோவம், பழிவாங்கல், குடிகெடுத்தல், சைக்கோதனங்கள் என்ற அத்தனை சமாச்சாரங்களையும் பார்த்து விட்டு அந்த படிக்குக் கெட்டுப் போகாமல் இருப்பது அசாத்தியமான ஒன்றுதாம்.
            நியூஸ் சேனல்கள் என்றால் பார்த்ததையே அரை மணி நேரத்துக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் அலுக்காமல் கொள்ளாமல் என்னவோ புதிதாய்ப் பார்ப்பதைப் போல அதைப் பார்ப்பதற்கு தனி மனநிலையே வேண்டியதாகத்தான் இருக்கிறது. இதயம் பிரேக் ஆகாமல் பிரேக்கிங் நியூஸ்களைப் பார்ப்பதற்கு தனி இதயமும் தேவையாகத்தான் இருக்கிறது.
            என்னென்னமோ நிகழ்ச்சிகள்! என்னென்னமோ சமாச்சாரங்கள் எல்லாம் டிவியில் போடுகிறார்கள். அவ்வளவையும் பார்த்து விட்டு நல்ல விதமாக இருப்பதற்கு ரொம்பவே மனப்பக்குவம் தேவை.
            ஆகவே டிவி பார்ப்பவர்களைச் சாதாரணமாக எடை பொடுவதற்கில்லை.       
            டிவியின்றி அமையாது வீடுஎனின் யார்யார்க்கும் சீரியல் நியூஸ் இன்றி அமையாது உலகு அல்லவா!
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...