17 Aug 2019

காவல் பெண்டுகள்



செய்யு - 179
            கல்யாணம் முடிப்பதற்குள் சுந்தரியை வைத்து காவல் காக்க வேண்டுமே.  கல்யாணம் முடிவதற்குள் இந்த ரெண்டு நாளும் ரெண்டு யுகம்தான். மறுபடியும் இந்தப் பொண்ணை ஓடிப் போகாமல் காபந்து செய்து கல்யாணத்தை முடித்து கழுத்தில் தாலி ஏறி விட்டால் நிலைமை சரியாகி விடும் என்று நினைக்கிறது லாலு மாமா. இதெல்லாம் நடக்குறதுக்கு தோதா மறுபடியும் ஓடிப் போகாமல் இருக்க வேண்டுமே! அதுதான் சந்தேகமாக இருக்கிறது அதுக்கு. இனிமேல் ஓடிப் போயிப் பிடித்துக் கொண்டு வந்தால் செய்தி வெளியே கசிவதற்கு ரொம்ப நேரம் ஆகாது என்று அதுக்குப் புரிகிறது.
            லாலு மாமா உடனடியாக ஈஸ்வரியையும், குயிலியையும் கொண்டு வந்து சுந்தரிக்குக் காவல் போடுகிறது. அதோட சின்ன தங்காச்சி பிந்துவும் கூட இருந்த பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்பாடு. இதைக் கண்காணித்துக் கொள்வதுதான் சரசு ஆத்தாவின் முதன்மையான வேலை. இப்படி பெண்டுகளை விட்டு வலுவான காவல் போட்டாலும் எல்லாருக்கும் ஒரு கண் சுந்தரி மேல் இருக்க வேண்டும் என்று சொல்கிறது லாலு மாமா.
            இதற்கு மேல் எப்படியும் சுந்தரியால் ஓடிப் போக முடியாதபடி அது வீட்டுக்கு வந்ததும் அடி மேல் அடியாக ஒடம்பு பூராவும் ஒரு இடம் பாக்கியில்லாமல் அடிபட்டது. சரசு ஆத்தா விளக்குமாற்றால் விளாசித் தள்ளியது. பாலாமணி கண்ணு ரெண்டையும் விட்டு விட்டு அடித்து விளாசாத குறைதான். சுந்தரியோட தங்கச்சி பிந்து இருக்கே! அது சும்மா இருக்க வேண்டுமே! அதுவும் ஏதோ தன் பங்குக்கு விறகு குச்சி ஒன்றை எடுத்து பின்னாலிருந்து ரெண்டு போடு போடுகிறது. எல்லாத்துக்கும் சேர்த்து சுந்தரி இளப்பமாகிப் போனது.
            ஆளாளுக்கு அடித்து ஐ.சி.யு.வில் சேர்க்கிற நிலைமையில்தான் இருக்கிறது சுந்தரி. இவ்வளவு அடியும் எதற்கு என்றால் மறுபடியும் ஓடிப் போக வேண்டும் என்ற எண்ணம் அதன் மனதில் எழக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால் சுந்தரி பேச வாயெடுத்தால் போதும், "அந்தச் செத்தப் பயல நாம்ம கட்டிக்க மாட்டேம்! எப்டியும் தப்பிச்சி ஓடிப் போயிடுவேம்! ஆதிதாம் எம்ம மனசுல இருக்காம். அவனத்தேம் கட்டிப்பேம்!" என்றபடி ஈஸ்வரி மற்றும் குயிலியின் கைப்பிடியிலிருந்து ஒரு நிமுண்டு நிமுண்டுகிறது. இப்போது ஈஸ்வரியும், குயிலியும் இதைக் கேட்டு விட்டு மடார் மாடரென்று முதுகில் நாலு போடு போடுகின்றன.
            "நீங்களே ஓடுகாலி நாயிகதாம்டி! நீங்க எதுக்குடி நம்மள அடிக்கிறீங்க?" என்று எதிர்கேள்வி போடுகிறது சுந்தரி. அதைக் கேட்டதும் ஈஸ்வரிக்கும், குயிலிக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்து இன்னும் நாலு அடி கூடுதலாகப் போடுகின்றன. இவ்வளவு அடிக்கு ஒரு பெண் உசுரோட இருப்பது கஷ்டந்தான். ஆனால் சுந்தரி உயிரோடு இருக்கிறது. அப்படியே பெய்யுற மழையில வெறைச்சுகிட்டு நிற்குற எருமைக்காடு கணக்கா வேற நிற்குது. அப்படி அது நின்னு கண்ணை உருட்டுறதப் பார்த்தா எல்லாருக்கும் கோபம் வருது. அந்தக் கோபத்துல வேற எல்லாரும் ஆளாளுக்கு காசா? பணமான்னு நாலு சாத்து சாத்துகிறார்கள்.
            மதியானம் ஒரு மூணு மணி இருக்கும் அதைப் பிடிச்சு வூட்டுக்குக் கொண்டு வந்தப்போ. அடிதடி சடங்குகள வூட்டுல ஆளாளுக்கு முடிச்சி விட்ட பிற்பாடு ஆறு மணி வாக்குல வூட்டுல டீயைப் போட்டப்புயம் அது குடிக்க மாட்டேனுட்டு பிடிவாதாம இருந்துட்டு. இப்போ வரைக்கம் பச்சத்தண்ணி அதோட வாயில படல. அப்படியே செஞ்சு வெச்ச சிலையா முடியைப் பரப்பி விட்டுகிட்டு அலங்கோலமா உக்காந்திருக்கு.
            கொஞ்சம் அப்பிடி இப்பிடின்னு வீட்டுவேலைகளைப் பார்த்துட்டு ராத்திரி சாப்பாடு தயார் பண்ணி முடிச்சப்போ மணி பத்துக்கு மேல ஆயிட்டு. சுந்தரிய சாப்பிடச் சொல்லி தட்டுல நாலு இட்டிலிய எடுத்து வெச்சா அது சாப்பிடாம அப்படியே உட்காந்து இருக்கு. இட்டிலிய போட்டு வெச்சு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகியும் அப்படியே உட்கார்ந்திருந்தா காலையில எழுந்திரிக்கிறப்ப மயக்கம் போட்டு விழுந்தாலும் விழுந்துடும்தான். ஆளாளுக்கு மத்திசம் பண்ணிப் பார்க்குறாங்க. எதுக்கும் எறங்கி வரதா இல்ல சுந்தரி. "நம்மள போட்டு என்னா அடி அடிச்சீங்க! இப்போ கெஞ்சிட்டு கெடங்க!" என்கிற மாதிரி அது முகத்தை வெச்சுகிட்டு உட்கார்ந்துக்குது.
            லாலு மாமாதான் இப்போ சுந்தரியோட பக்கத்து வந்து உட்கார்ந்துட்டு, "சாப்புடறா எஞ் செல்லம்!" அப்பிடிங்குது. இதுக்குல்லாம் ஒண்ணும் கொறைச்சல் இல்லேங்கற மாதிரி ஒரு மொறைப்பு மொறைக்குது சுந்தரி.
            அப்படியே கெஞ்சுற மாதிரி லாலு மாமா, "சாப்புட்றா! ஒடம்பெல்லாம் வெடவெடன்னு ஆயிடும். சாப்புட்றா! கல்யாணப் பொண்ணு சாப்புடாம கெடக்கக் கூடாது! எல்லாம் ஒந் நல்லதுக்குதாம் பாடுபடுறாங்க!" என்கிறது. அதற்கு மேல் அதால் முடியவில்லை. கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டுகிறது. சின்ன பிள்ளை கணக்காய் உட்கார்ந்தபடி அழுகிறது. இந்த கையாலதான்ன அடிச்சேம் என்று அந்தக் கையால் தன் தலையில் நங்குநங்கு என்று போட்டுக் கொள்கிறது. கன்னத்திலும் பளார் பளார் என்று போட்டுக் கொள்கிறது. இது எல்லாவற்றையும் சுந்தரி பாறங்கல்லு கணக்கா பாத்துட்டு உட்கார்ந்து இருக்கே தவிர எந்த மாற்றத்தையும் காட்டாம அப்படியே இருக்கு. லாலு மாமா தட்டைக் கையில் எடுத்து இட்டிலியைப் பிட்டு சுந்தரியின் வாயில் ஊட்டி விடப் பார்க்கிறது.
            "இந்த எருமைக்கு இது ஒண்ணுதாம் கொறைச்சல்! பேசாம போண்ணே அந்தாண்ட! தின்னா திங்குது! திங்காட்டிப் போவுது!" என்கிறது சரசு அத்தா இதைப் பார்த்து.
            "நாம்ம தூக்கி வளர்த்தப் பொண்ணு. அத்து மாரில்லாம் வுட்டுட முடியுமா? ஏஞ் சுந்தரி! ஒம்ம தாய்மாமனு நானு. அது மாரி விட்டுட முடியுமா? நீ சாப்ட்றா கண்ணு!" என்று கொஞ்சியபடியே மறுபடியும் மறுபடியும் ஊட்டி விடுவதற்கு முயற்சி எடுத்துப் பார்க்கிறது.
            இறுக்கமாக வாயை மூடியபடி இருந்த சுந்தரி திடீரென்று என்ன நினைத்ததோ வாயைத் திறக்கிறது. லாலு மாமா ஒரு வாய் ஊட்டி விட்டு விட்டு டம்பளரில் தண்ணீரை எடுத்து அதன் வாய்க்கு வைக்கிறது. கொஞ்சமாய் தண்ணீரை சுந்தரி விழுங்கியதும் மறுவாய் ஊட்டுகிறது. இப்படியாய் ஒரு சின்ன பிள்ளைக்கு ஊட்டுவதைப் போல ஊட்டி விட்டு, "எல்லாம் ஒன் நல்லதுக்குதான்! நீ நல்லா இருக்கணும்தாம் எல்லாரும் பாடுபடுறாங்க! செரமப்படுறாங்க! கஷ்டப்படுறாங்க! நீயி நல்லா இருக்கணும். நல்லவெதமான குடும்பம் நடத்தணும். புள்ள குட்டிகளப் பெத்துப் போடணும். அதுங்களோட கல்யாணத்தயும் நாம்மதாம் இப்பிடி முன்னின்னு நடத்தணும்!" என்றபடி எழுந்து போகிறது. கொஞ்சமாய் இப்போது சாப்பிட்டு முடித்ததும்தான் சுந்தரியின் உடம்புக்குள் ஒரு தெம்பு வந்து போகிறது. வாங்கிய அடியில் சாப்பாட்டை முடித்ததும் உடம்பு அசந்து வருகிறது. உடம்புக்குதான் அசதியாக இருக்கிறதே தவிர மனசு துறுதுறுவென்று இயங்கிக் கொண்டிருக்கிறது. தூக்கம் வர மறுக்கிறது.
            ஒரு கட்டுக்காவல்ல இருக்குற நிலைமைதான் இப்ப சுந்தரிக்கு. இருந்தாலும் அதோட மூளை வித விதமாக யோசனைப் பண்ணுது. அடிக்கடி டாய்லெட்டுப் போகணும்னு அடம் பிடிக்குது. டாய்லெட்டு என்ன அங்க வூட்டுக்குள்ளயா இருக்கு? அந்த ஒருசாரி வாடகை வூட்டுக்கு வெளியில பத்து அடித தள்ளி இருக்குது. சரின்னு இந்த சுத்தரிய இழுத்துக் கொண்டு போய் டாய்லெட்டுக்குள்ள விட்டுட்டு ஈஸ்வரியும், குயிலியும் கதவுக்கு வெளியில காவலுக்கு நின்னா சீக்கிரமா வெளியில வர மாட்டேங்குது. அப்படியே டாய்லெட்டுலயே அரை மணி நேரம், முக்கால் மணி நேரம்னு உட்காந்துக்குது. டாய்லெட்டுல வெளியில வந்த பத்து நிமிஷத்துல மறுபடியும டாய்லெட்டு வருதுன்னு உள்ளே புகுந்துக்குது. காவலு காக்குற மனுஷங்களுக்கு சுந்தரிய வெச்சுகிட்டு பெரும்பாடாத்தான் இருக்குது.
            நடுராத்திரி ரண்டு மணிக்கு, மூணு மணிக்கு எழுந்திரிச்சி உட்கார்ந்துக்குது சுந்தரி. அது எழுந்திரிச்சு உட்கார்ந்து இருக்கிறப்ப யாராவது எழுந்திரிச்சி உட்கார்ந்தா ஒடனே டாய்லெட்டுன்னு எழுந்து அது பக்கமா ஓடிப் போவுது. இதாலயே எல்லாருக்கும் தூக்கம் கெட்டுப் போவுது.
            கல்யாண வேலையைப் பார்க்கிறதா? இதுக்குக் காவல் காக்குற வேலையைப் பார்க்கிறதா?ன்னு எல்லாருக்கும் குழப்பமாத்தான் இருக்கு. ஒருவழியா எல்லாத்தையும் சமாளிச்சுக் கல்யாணத்தை முடிக்கிறதுக்குள்ள எல்லாருக்கும் போதும் போதும்னு ஆயிப் போச்சி. பொண்ணு அழைப்புக்கு அதைத் தயார் பண்ணி, கல்யாண மேடையில உட்கார தோதா பட்டுப் புடவையைக் கட்டி அலங்காரம் பண்ணி அனுப்புறதுக்குள்ள ஈஸ்வரியும், குயிலியும் பட்டப்பாடு நாயி படாத பாடா போயிடுச்சி. கல்யாண மண்டபத்துல வேற அதெ கொண்டு போயி வெச்சிகிட்டு மேல கீழ பார்க்க விடாம யாருக்கும் எந்த சந்தேகமும் வராத அளவுக்கு சாமர்த்தியமாக சமாளிச்சது பெரும் காரியம்தான். இதுக்கு இடையில லாலு மாமா வேற ஓடி வந்து பத்து மாசக் கொழந்தைய்ய கொஞ்சுற கணக்கா சுந்தரிய கொஞ்சிகிட்டு, அது இது குடும்ப கெளரவம்னு சொல்லி அத்தோட மனசு மாத்தி பக்கத்துலயே நின்னுகிட்டு, அப்படியே கல்யாண சோலிகளையும் பாத்துகிட்டு பம்பரமாய்ச் சுழலாத குறைதான் அதுக்கு. அதே நேரத்துல கல்யாணத்தப்ப பொண்ணு முகத்துல இருந்த வாட்டத்தை யாரும் கவனிக்க தவறல. எல்லார் கண்ணுலயும் அத்தோட வாட்டம் பட்டிச்சி. இருந்தாலும் அதப் பத்தி அவங்கவங்க ஒரு விளக்கம் சொல்லிகிட்டாங்க. யாருக்கும் கெட்டவிதமான எந்தச் சந்தேகமும் வரல.
            ரொம்ப சின்ன வயசுலயே கல்யாணம் ஆகிப் போறத நினைச்சு பொண்ணு சுணக்கமா இருக்கிறதா நினைச்சி சொந்தக்கார சனமும் அத பெரிசா கண்டுகில்ல. மணவறையில உட்கார வெச்சா கன்னத்துல கோடு கோடா கண்ணீர் அப்படியே வழியுது சுந்தரிக்கு. அத பாக்குற சித்துவீரன் அப்பா அம்மாவ பிரியுற ஏக்கம்தான்ங்ற மாதிரி புரிஞ்சிக்கிறான். இவ்ளோ பாசமான புள்ளைய கட்டிக்கிறோம்ங்ற சந்தோஷம் அவனுக்கு. அதெ வேற அப்பிடி இப்பிடின்னு கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லார்கிட்டேயும் சொல்லிகிட்டு சந்தோஷப்பட்டுக்கிறான். இப்படி ஆளாளுக்கு கற்பனை பண்ணிக்கிற அளவுக்கு விசயத்தை வெளியில தெரியாம மறைச்சத நெனைச்சி லாலு மாமாவுக்கு ஒரு பக்கம் கொஞ்சம் பெருமிதமா வேற இருக்குது.
            பாக்குக்கோட்டையில கல்யாண மண்டபத்துல வெச்சி கல்யாணத்தை முடிச்சி சுந்தரிய வடவாதிக்கு கொண்டு வந்து விட்டதும்தான் எல்லார் முகத்திலயும் ஒரு சந்தோஷக் கலை தெரியுது. "யப்பாடா ஒரு கடமை முடிஞ்சது!"ன்னு சரசு ஆத்தா நெனைச்சிக்கிது. "ஒரு சனியன் நல்லபடியா ஒழிஞ்சது"ன்னு ராசாமணி தாத்தா நினைச்சுக்கிது. "கல்யாணத்த முடிச்சி விட்டாச்சி. இனி அது அவ்வேம் பாடு. அது பாடு. நம்ம சோலி முடிஞ்சது. தல தப்புனது தம்புராம் புண்ணியம்தாம் போ!" என்கிறது லாலு மாமா.
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...