11 Aug 2019

கல்யாண பொம்மையா பொம்பள?!



செய்யு - 173
            முருகு மாமாவுக்கும், நீலு அத்தைக்கும் சித்துவீரன் சுந்தரியைக் கட்டிக்கிறதுல அவ்வளவா விருப்பம் இல்ல. சுத்தமா விருப்பம் இல்லேன்னு சொன்னாலும் அதுவும் சரிதான். புள்ளை இவ்வளவு பிடிவாதாமா இருக்கானே. என்ன செய்யறதுன்னு புரியாம அவ்வேம் போக்குலயே விட்டுட்டாங்க. இங்க இப்பிடின்னா... அங்க பாக்குக்கோட்டையில வேற ஒரு சம்பவம் நடக்குது பாருங்க...!
            சித்துவீரனோட கல்யாணம் நிச்சயம்னு சொன்னதும் சுந்தரிக்கு அப்படியே பகீர்னு ஆகிப் போகுது. பாக்குறதுக்கு கெழட்டுப் பய கணக்கா இருக்குற ஒருத்தனோடயா தனக்குக் கல்யாணம்னு அதுக்கு ஒரு தெகைப்பு. அவனெ பார்த்தா தனக்கு அப்பா மாரி இருக்கான்னும் அதுக்கு ஒரு நெனைப்பு. இந்த சித்துவீரன் சித்தம் போக்கு சிவன் போக்குன்னு போகக் கூடிய பயல். இவனெ கட்டிகிட்டா அவ்வேன் போக்குக்குத்தான் போக வேண்டிருக்கும். அவ்வேன் என்ன சொல்றானோ அதுதான் எல்லாம். அவ்வேன் எப்படிச் சொல்றானோ அதுதான் வாழ்க்கை. அவனெ மீறவும் முடியாது. நம்ம எண்ணம் இதுன்னு சொல்லி புரிய வைக்கவும் முடியாது. ஒரு அடிமையா வாழ்ந்தா அவனோட சந்தோஷமா வாழலாம். நமக்குன்னு ஒரு கருத்து வெச்சுகிட்டு அவங் கூட நிம்மதியா வாழ்ந்திட முடியாது.
            எப்படிப் பார்த்தாலும் கல்யாணம் ஆவறதுக்கு கொஞ்சம் சின்ன வயசுன்னாலும் இப்பிடில்லாம் யோசனைப் போகுது சுந்தரிக்கு. சுந்தரின்னு இல்லே, இந்த வகையறாவுல சித்துவீரனப் பத்தி தெரிஞ்ச எந்தப் பொண்ணும் அவனெ கல்யாணம் கட்டிக்க சம்மதிக்காது. சித்துவீரன் அன்பா, பாசமா நல்லவிதமாத்தான் நடந்துப்பான். அது எதுக்குன்னா அவ்வேன் சொல்றபடி கேட்டுகிட்டு அவனுக்கு ஏத்தபடி நடந்துக்குறதுக்குதான். அவனுக்குப் பிடிக்காம கொஞ்சம் மாறி நடந்துகிட்டாலும் எதிரே இருக்குறவம் பாடு அவ்ளோதான். எப்பிடியெல்லாம் பழி தீர்க்கக் கூடாதுன்னு பழி தீர்க்குறதுக்கும் ஒரு மொறைதலை வெச்சிச் சொல்லுவாங்க இல்ல, அதைத் தாண்டி பழி தீர்த்துட்டு உட்கார்ந்துட்டுதான் மறுவேலை பார்ப்பான். அவனோட இந்தக் குணம் சொந்த பந்தங்களோட எல்லா சனத்தோட பொண்ணுகளுக்கும் தெரியும். அதால சித்துவீரன கட்டிகிறதுக்கு சாத்தனையே கட்டிக்கலாம்னு பொண்ணுங்க மிரளும். 
            இதெல்லாம் மட்டும்தான் சுந்தரிக்கு சித்துவீரன கட்டிக்கிறதுல பிரச்சனையான்னு பார்த்தா... அதைத் தாண்டியும் அதுக்கு சில சிக்கல்கள் இருக்கு. அது எட்டாப்புலேந்து ஒரு பையன வேற விரும்பிகிட்டு இருக்கு. ப்ளஸ்டூ படிச்சி முடிக்கிற வரைக்கும் அந்த விருப்பம் அப்படியே அரும்பி வந்துகிட்டே இருக்கு. காலேஜ் வரைக்கும் ஒண்ணா படிச்சி, எப்படியாச்சிம் வேலைக்குப் போயி கல்யாணம் கட்டிக்கிறதுன்னு திட்டம் வேற போட்டாச்சி. வாய்ப்பு கெடைக்கிறப்ப தியேட்டரு, அதிராம்பட்டினத்து லக்கூன்னு, வேதாரண்யத்து கோடியக்கரை அங்க இங்கன்னு சுத்தி வேற ஆசைய வளர்த்தாச்சி. மனசுக்குள்ள ஒருத்தன வெச்சிகிட்டு இன்னொருத்தன கல்யாணம் கட்டிக்கிறது எப்பிடின்னு யோசிக்குது சுந்தரி. வயசு கொஞ்சம் ஆனாலும் இந்த விசயத்தை வீட்டுல சொல்லலாம். இப்பவே சொன்னா மொளைச்சு மூணு எலை வுடறதுக்குள்ள லவ்வு கேட்குதான்னு பொடணியிலே போட்டுதான் தாக்குவாங்க. சுந்தரிக்கு மெல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம ஒரு நெலைமையா ஆகிப் போச்சி.
            பொண்ணோட மனசும், அந்த மனசுக்கு ஏத்த மாதிரி முகம் போற கணக்கும் யாருக்குத் தெரியுதோ இல்லையோ அம்மாகாரிக்குத் தெரியாம போயிடுமா என்ன? சுந்திரி குட்டி கல்யாணம்னு பேச ஆரம்பிச்ச நாள்லேர்ந்து ஒரு தினுசா இருக்காளேன்னு சரசு ஆத்தா யோசிச்சுகிட்டே இருக்கே. ரொம்ப சின்ன வயசுலேயே கல்யாணம் கட்டிக் கொடுக்கப் போறாங்களேன்னு பயப்படுறாளோன்னு அதுக்கு ஒரு நெனைப்பு. சரசு ஆத்தா காலத்துல அந்த வயசு சின்ன வயசில்லதான். இந்தக் காலத்துல அது ரொம்ப சின்ன வயசுதானே. பொண்ணுங்க காலேஜ் அது இதுன்னு போயி படிச்சி வேலைக்கும் போயி இருப்பத்தஞ்சி வயசுக்கு மேல கல்யாணம் பண்றது இப்போ சாதாரணமா போயிடுச்சில்ல. இந்தச் சுந்தரிக்குப் படிக்கிறதுல ஏதாச்சிம் கனவு இருக்குமோ? இவ்ளோ சின்ன வயசுல கல்யாணம் கட்டிக் கொடுத்து புருஷங்காரனுக்கு சமைச்சி கிமைச்சிப் போட்டு குடும்பத்து சுமக்க முடியுமோன்னு பயமா இருக்குமா? அதுவே பாக்குறதுக்கு சின்னபுள்ள கணக்கதாம் இருக்கு! அதுவே கல்யாணம் கட்டிட்டு நாளைக்கு ஒரு சின்னபுள்ளயே பெத்துக்குறதுன்னா... அவளோட கூடப் படிச்சக் குட்டிங்கள பாத்தா சிரிப்பாளுவோன்னு அப்டி ஏதும் யோசனையா இருக்குமோ? இப்படி அது சுந்தரியோட முகம் போற போக்க வெச்சி பலவிதமான சிந்திச்சிப் பார்க்குது. அதுக்கும் ஒண்ணும் பிடிபடுறதா தெரியல.
            யோசிச்சி யோசிச்சி மாய்ஞ்சிப் போறதுக்கு பொண்ணுகிட்டேயே ஒரு வார்த்த கேட்டுகிட்டா என்னான்னு சரசு ஆத்தா லேசா வார்த்தையும் வுட்டுப் பார்க்குது. சுந்தரிப் பொண்ணு என்னான்னா என்னமோ நேத்துதாம் சமைஞ்ச பொண்ணு கணக்கா உட்கார்ந்திருக்கு. அது சமைஞ்சப்ப கூட இப்பிடி மிரண்டு உட்கார்ந்ததில்ல. "ஏம்டி சுந்தரி! திடீர்னு கல்யாணம்னு சொன்னதும் பயமா இருக்கா? ரொம்ப சின்ன வயசுலயே குடும்ப பாரம் தாங்கப் போறோமோன்னு தெகைப்பா இருக்கா?"ன்னு கேட்டுப் பார்ககுது சரசு ஆத்தா.
            சுந்தரிக்கு என்ன பதில் சொல்றதுன்னு குழப்பமா இருக்குது. அம்மாகாரி இப்படி எதாச்சிம் கேட்க மாட்டாளான்னு ஒரு எதிர்பார்ப்பு முன்னாடி இருந்துச்சு சுந்தரிக்கு. இப்ப அம்மாவே கேட்டதும் ஏம் இதை இவ்வே கேட்குறான்னு கோபமா வர்ற மாதிரியும் இருக்கு. என்னா பதில் சொற்துன்னு புரியாமா ஒரு மாதிரியா தலையை ஆட்டி வைக்கிறா சுந்தரி.
            "நாங்கலாம் பொடிசுகளா இருந்தப்ப பதினாலு, பதினைஞ்சி வயசுலயல்லாம் கல்யாணம் ஆகிடும்டி. வயசுக்கு வந்திட்டாவே அடுத்த வருஷமோ அதுக்கு அடுத்த வருஷமோ கல்யாணம்தான். ஒண்ணொண்ணும் கல்யாணத்த கட்டிகிட்டு பத்து பதினைஞ்சின்னு பெத்துக்கும்ங்க. நாம்தான் அதுல கம்மி. மூணோட நிறுத்திக்கிட்டேம். நல்ல வேளையா மூணோட நின்னிச்சி. இல்லேன்னா ஒங்கப்பம் சாமியாரு சம்பாதிச்சிப் போடுற சம்பாத்தியத்துக்கு எல்லாம் பட்டினியிலயே செத்துப் போயிருக்கும். அப்போ நம்ம காலத்துல பொம்பளைங்களுக்கு நடந்த சங்கதி இப்பதாம்படி ஒனக்கு நடக்கப் போவுது. பொண்ணா பொறந்தவ பொறந்தாளா, சமைஞ்சாளா சட்டுபுட்டுன்னு புகுந்த வூட்டப் பாத்து போனாளான்னு இருக்கணும்பாங்க. ஒனக்கு யோகம்தாம்டி. மாப்புள தேடாமல தேடிட்டு வாரது. அதுவும் யாரு? எம்ம அண்ணம் பையேன். அவனுக்குப் பொண்ணு கொடுக்கு நானு நீயின்னு அவனவனும் போட்டிப் போட்டுட்டு இருக்காம். தெரியும்ல. துபாயி போயி சூதானமா சம்பாதிச்சிச் சொந்தமா வூடு வாங்கிப்புட்டாம். பட்டறைப் போட்டுட்டாம். நெலம் புலம்லாம் வேற வாங்கப் போறதா பேசிக்கிறாங்க. ஒனக்கு சாப்பாட்டு தண்ணிக்கு ஒரு கொறையும் இருக்காது. நகெ நட்டுல்லாம் அவனெ போட்டு ஒன்னய கொண்டுப் போவப் போறாம். நாம்தாம் பாவி ஒனக்கு ஒரு குண்டுமணி தங்கம் போடக் கூட வக்கில்லாம போய்ட்டேம். அதால ன்னா? நீயி மவராசிய இருக்கப் போறே. நம்மள மாதிரியா? இப்டி ஒரு வூட்டுல, சாப்பாட்டுக்கு தட்டுபட்டுட்டு, ஒரு தேவை திங்கன்னா வூட்டுல இருக்குறத தேடி கண்டுபிடிச்சி அடவு வெச்சிட்டுப் போயி வந்துகிட்டு? அந்த நெலைமை ஒனக்கு யில்ல புள்ள!" என்று பெண்ணின் மனக்கலக்கத்தைப் போக்குற அளவுக்குப் பேசிட்டதா நெனைக்குது சரசு ஆத்தா.
            சுந்தரிக்கு இப்போதாம் பேச்சு அப்பிடியே வயித்துலேந்து கிளம்பி, தொண்டைக்கு வந்து, வாய் வழியா பல்லு வரைக்கும் வந்து எட்டிப் பார்க்குது. அது எழுந்திரிச்சி நிக்குது. அது நிக்குற தினுசே ஒரு மாதிரிதாம் இருக்கு. அது கேட்குது பாருங்க! "ஏம்மா! கல்யாணம் ஆயி சாப்பாடு, தண்ணி நல்லா இருந்தா ஆயிடுமா? மனசுக்குப் பிடிக்க வாணாமா?" என்கிறது சுந்தரி.
            இதைக் கேட்டதும் சரசு ஆத்தாவுக்குத் தூக்கி வாரிப் போடுது. "என்னாடி ஒனக்கு மனசுக்குப் பிடிக்க வேண்டிக் கெடக்கு? மனசாம்ல மனது!" என்று சட்டென்னு அதுவும் வார்த்தைகளைத் தூக்கிப் போடுது.
            "இல்லே அது பாக்குறதுக்கு அப்டியே தேவாங்க கணக்காதான இருக்குது! உருவு அழிஞ்சி செத்துப் போன பொணம் கணக்கா அத்தோட மூஞ்சியும் ஒடம்பும்..." என்று சுந்தரி சொன்னதும்,
            "அடிச் செருப்பால நாயே! ன்னாடி எம் அண்ணம் மவேனுக்குக் கொறைச்சல்? இஞ்ஞ பீத்தப் பாயில படுத்துகிட்டு, மாட்டு மூத்திரத்த குடிச்சிட்டுக் கெடக்குறவளுக்கு அஞ்ஞ பட்டு மெத்தையில படுத்துக்கிட்டு மாட்டுப் பால குடிக்கிறதுக்கு அலுக்குதாக்கும்! கல்யாணம் ஆயி ந்நல்லா சமைச்சிப் போட்டின்னா ஒரு சுத்து பெருத்துடுவாம். பெறவு பாரு அவ்வேம் லட்சணத்த. குடும்பத்துக்காக மாடா ஒழைச்சி, துபாய்ல போயி வெயில்லயும், வெக்கையிலயும் கெடந்து கருத்துப் போயி உருக்கொலைஞ்சி வந்திருக்காம். அவனெப் போயி..." என்று சரசு ஆத்தா சொல்வதற்கு,
            "அது ஒண்ணும் துபாயி போயில்லாம் உருக்கொலைஞ்சி வாரல. உருக்கொலைஞ்ச மாதிரிதான் பொறந்தே இருக்கு. அதெப் போயி நம்மள கட்டிக்கச் சொல்றீயே?" என்கிறது சுந்தரி.
            "ஒன்னய எல்லாம் படிச்சுத் தொலைன்னு பள்ளியோட அனுப்புனேம் பாரு. எம் புத்திய செருப்பாலயே அடிக்கோணும். மனசு பவுசா இருக்கான்னு பாரு. மொகமும் ஒடம்பும் பவுசா இருக்கான்னு பாக்காதே. மனசு பவுசு இருக்கே, அது காலத்துக்கும் அழியாது. ஒடம்போட பவுசும், மொகத்தோட பவுசும் வயசு ஆனா போற எடம் தெரியாது. அவ்வேம் ஒண்ணய ராணி மாரி வெச்சிப்பாம். நாம்ம பட்ட பாடு நீயி பட வாணாம். நீயாவது அவனெ கட்டிட்டு ந்நல்லா யிரு. கல்யாணம் ஆவுற வரிக்கும் அப்டிதாம் இருக்கும். அஞ்ஞ இஞ்ஞ அவளவளும் குடும்பம் நடத்துறதப் பாத்தின்னா ஒனக்கே புத்தி வந்திடும். அனுபவப்பட்டவ்வே சொல்றேம். கேட்டுச் சூதானமா நடந்துக்கோ." என்கிறது சரசு ஆத்தா.
            சுந்தரி ஒரு நிமிடம் மெளனமாக அப்படியே சிலை போல நிக்குது.
            "ன்னாடி அப்டியே பொம்ம மாரி நிக்குறே?" என்கிறது சரசு ஆத்தா.
            "பொம்மதாம் நானு. பொம்மயேதாம் நானு. பொம்மைக்கு ன்னா தெரியும். பொம்மை ன்னா பேசும். தாலிய கட்டுனா தாலிய வாங்கிக்கும். எவ்வேம் கூட படுக்கச் சொன்னாலும் போயி படுத்துக்கும். அதுக்கு ன்னா மனசா இருக்கு? அதுக்கு ன்னா உணர்ச்சியா இருக்கு? அதுக்கு ன்னா உசுரா இருக்கு? நாம்ம பொம்மதாம். நீங்க உக்காருன்னா உக்காரணும். நில்லுன்னா நிக்கணும். எவம் கூடயவாது படுன்னா படுக்கணும். நாம்ம பொம்மதாம். சத்தியமா பொம்மதாம்!" என்கிறது அதற்கு சுந்தரி.
            "அடிச்சேன்னா வெச்சுக்க பல்லு மோரையெல்லாம் புட்டுப்புடுவேம். ன்னா பேச்சுடி பேசுறே? ன்னாடி ஒன்னயே கொலையா பண்ணிட்டு? இந்த அராத்து அராத்துறே?"
            "இதுக்கு நீயி கொலையே பண்ணிப்புடலாம். பெத்தத் தாயி கையால செத்தேம்ங்ற நிம்மதியாவது இருக்கும்!"
            "ஏம்டி இப்டி நம்மள சாவடிக்கிறே? இத்தனி வருஷ காலமா கல்யாணம் கட்டினதிலேந்து ஒங்கப்பஞ் சாமியாரு சாவடிச்சாம். அவ்வேம் கொஞ்சம் இப்போ அடங்கிக் கெடக்குறானேன்னு நீயி ஆரம்பிச்சிட்டீயா? ஒனக்கு என்னதாம்டி நெனைப்பு? நீயி என்னத்தாம்டி சொல்ல வர்றே? எத்தா இருந்தாலும் நேரடியா சொல்லித் தொலை!" என்கிறது சரசு ஆத்தா தலையில் படார் படார் என்று அடித்துக் கொண்டபடி.
            "நமக்கு இந்தக் கல்லாணம் வாணாம். அதெ நமக்குப் பிடிக்கல." என்கிறது சுந்தரி பல்லைக் கடித்துக் கொண்டு!
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...