1 Aug 2019

தலையில கல்லத் தூக்கிப் போடு!



செய்யு - 163
            அங்க மாப்பிள்ளையைச் சமாதானம் பண்ணிப்புட்டதாக நினைச்சி, இங்க தேசிகா பொண்ண சமாதானம் பண்ணப் பார்த்தா, பொண்ணு ஏகத்துக்கும் எகிறும்னு முருகு மாமாவும், லாலு மாமாவும் எதிர்பார்க்கல. தேசிகா பொண்ணு அது போக்குல வளர்ந்த பொண்ணு. அது போக்குல பேசி அது போக்குக்கு எல்லாத்தியும் இழுக்குற பொண்ணு. அத யாரும் எதுக்காகவும் இது வரைக்கும் கண்டிச்சி, அதட்டுனது மாதிரி ஞாபகத்துல இல்ல.
            "ஆம்பளைங்க கொஞ்சம் அப்படி இப்பிடிதாங் இருப்பாங்க! அத ஒண்ணும் பண்ண முடியாது. நாலஞ்சி வருஷத்துக்கு அப்பிடி இப்பிடி ஒரு ஆட்டம் இருக்கும். ஒரு புள்ளையோ குட்டியோ பொறந்து வளர ஆரம்பிச்சிட்டா மண்டையில இருக்குற மயிரு இல்லாம கொட்டிப் போகுற மாதிரி எல்லா ஆட்டமும் தானா நின்னுப் போகும். நாங்க மாப்பிள்ளகிட்ட எல்லாத்தியும் பேசிட்டுதாம் வந்திருக்கிறேம். இனுமே ஒனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது!" என்கிறது லாலு மாமா.
            "அவனோட படுத்துகிட்டு புள்ளை குட்டிங்க வேற பெத்துப்பேன்னு நெனச்சிட்டீங்களா! நாடுமாறி நாய்க்கு அது ஒண்ணுதாம் கேடா ன்னா? சரியான நக்குப் பொறுக்கி நாயி சித்தப்பா அவேம்! அவனுக்குப் போயி நம்மள கட்டி வெச்சீங்களே! ஆளுதாம் பாக்கிறதுக்கு பெரிய வீட்டுப் புள்ள கணக்கா இருக்காம். பண்றதெல்லாம் சின்ன புள்ள தனமான வேல. சரியான திருட்டுப் பயெ சித்தப்பா அவேம். அவனுக்கும் நமக்கும் ஒத்தே வராது சித்தப்பா!" என்கிறது தேசிகா.
            கட்டிக் கொடுத்த பொண்ணு இப்படி வந்து பேசுதே என்ற கவலையெல்லாம் முருகு மாமாவுக்கு இல்லை. அது அலட்சியமாக, "நீ அஞ்ஞ போயி இரு. நாம்ம அவனெ பொட்டிப் பாம்பா அடக்கிப்புடறேம் பாரு! ஏதோ பெரிய எடம்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேம். இப்போதாம் தெரியுதுல்ல அவேம் எதுக்கும் லாயக்கில்லாத மயிரான்னு. அவனெ கண்ணுல எப்டி வெரல விட்டு ஆட்டுறேம் பாரு. நீயி அஞ்ஞ போயி மட்டும் இரு. மத்தத நாம்ம பாத்துக்கிறேம்." என்கிறது முருகு மாமா.
            "ஏ யப்பா! அந்த வீடா? அதுல நம்மாள இருக்க முடியாது. முன்னாடி ஒரு வூட்டுல இருந்தேம் இல்லியா அஞ்ஞ வேணும்னா இருக்கேம். வீடா அது? மூணு பக்கமும் சாக்கடையா ஓடுது. எந்நேரத்துக்கும் மூக்கப் பிடிச்சிட்டே உட்கார்ந்திட்டு இருக்க வேண்டியதா இருக்கு. வீட்ட வுட்டு தெருப் பக்கம் போக முடியல. குறுக்கும் நெடுக்குமா பன்னியளும் குட்டியளுமா ஓடுதுங்க. நெருப்புப் பொட்டி இருக்குற வூட்டுல மாமானாரு, மாமியா, நாத்தனாருன்னு எத்தினி பேரு இருக்குறது. மூக்கு ரெண்டுலயும் பஞ்சை வைச்சி அடைச்சிட்டாப்ல முக்கிட்டு இருக்குற மாரி இருக்க வேண்டிதா இருக்கு! நம்மாள முடியாதுப்பா!" என்கிறது தேசிகா.
            "ஒனக்கு இப்போ வூடு பெரச்சினையா? மாப்ள பிரச்சனையா?" என்கிறது முருகு மாமா.
            "ரெண்டுந்தான் பெரச்சினை!"
            "வூடு பெரச்சினைன்னா வூட்ட மாத்திக்கலாம்!"
            "வூடு புருஷன் ரெண்டையும் மாத்திட்டா ரொம்ப ந்நல்லா இருக்கும்!" என்கிறது தேசிகா அதற்கு.
            இதை அப்படியே பக்கத்தில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிற நீலு அத்தைக்குக் கோபம் வந்து விட்டது. "அட என்னாடி இவ்வே? எம் பொண்ணா பொறந்துட்டு இந்த மாதிரி பேசுறே? நீயி போயி குடும்பம் நடத்துற நடையில வூட்டுல இருக்குறவம்லாம் துண்டக் காணும் துணியக் காணும்னு ஓடணும் பாத்துக்க. எந்தக் குடும்பத்துக்குப் போனாலும் அந்தக் குடும்பத்த நாம்மதாம்டி ஆளணும். புருஷன்னா ஒத்து வாரான்னான்னு பாரு. இல்லே ராத்திரி தூங்குறப்ப தலையில கல்ல தூக்கிப் போட்டுட்டு வா பாத்துக்கிறேம்!" என்கிறது நீலு அத்தை.
            இப்போதாம் தேசிகா முகத்தில் ஒரு மெலிசான சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. அந்தரத்திலேந்த விழுறவனுக்கு கீழே விழாம தோதா ஏதோ கையில அகப்பட்ட மாதிரி ஒரு நம்பிக்கை தெரியுது தேசிகாவுக்கு.
            "இப்போ சொல்றே பாரு இதாம் சரி! இப்படில்லா பேசணும்! நாமளும் அதத்தாம் நெனைச்சேம்! அதுக்குதாம் இப்படி ஏதாச்சிம் யோசனெ இருக்குமான்னு தெரிஞ்சிகிறதுக்காக கோச்சிட்டு வூட்ட விட்டுட்டு வந்தேம்!" என்கிறது தேசிகா.
            "இப்டி ஒரு வாரம் வூட்டுல இருந்து பேசித் தெளிஞ்சிட்டு போலாம்!" என்கிறது முருகு மாமா.
            "இனுமே எனக்கென்ன தெளிவு? எல்லாம் பேசித் தெளிஞ்சாச்சி. நம்மள இப்பயே கொண்டு போயி வுடுங்க!" என்கிறது தேசிகா.
            "இவ்வே எப்பயும் இப்படித்தாம். வெச்சா குடுமி, செரைச்சா மொட்டைதாம். இடையில இடையில கொஞ்சம் கிராப்பும் வெச்சிக்கணும்!" என்கிறது நீலு அத்தை. ஒத்தக்காலில் வீட்டுக்கு வந்த தேசிகாக இப்போ ஒத்தகாலில் புகுந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்று நிற்கிறது. அப்படி ஒத்தக்காலில் நின்று கிளம்பிப் போன தேசிகா அதற்குப் பின் மாப்பிள்ளை வீட்டையே ரெண்டு பண்ணியிருக்கிறது. மாப்பிள்ளையும், பொண்ணும் யாருக்கு யார் சளைத்தவர்கள் என்கிற கணக்காய்ச் சண்டைக்கு நின்றிருக்கிறார்கள். தெருவில் கட்டிப் பொரண்டு சண்டை போடும் வரைக்கும் நிலைமை ஆகியிருக்கிறது. இப்படிச் செய்தி வரும் போதெல்லாம் முருகு மாமாவுக்கும், நீலு அத்தைக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தது.
            ரொம்ப சண்டையின்னு மாப்பிள்ளையே ஒரு முறை வடவாதி வந்து விட்டுப் போன போது அந்த சந்தோஷம் உச்சத்தைத் தொட்டது முருகு மாமாவுக்கும் நீலு அத்தைக்கும். அந்த சந்தோஷத்திலேயே "புருஷன் பொண்டாட்டி சண்டையில நாம தலையிட முடியாது!" என்று கழுவுற தண்ணியில நழுவுற மீனு கணக்கா முருகு மாமாவும், நீலு அத்தையும் ஒதுங்கினாற் போல ஒரு பதிலைச் சொல்லி மாப்பிள்ளைப் பையனை விரட்டி விட்டார்கள். அவர்களின் மனதில் தேசிகாவின் கை அங்கே ஓங்கிக் கொண்டிருப்பது போலவும், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களின் கை ஒடுங்கிக் கொண்டிருப்பது போலவும் ஒரு நினைப்பு இருந்திருக்க வேண்டும்.
            லாலு மாமாவும் தஞ்சாவூரிலிருந்து எப்போதாவது திருவாரூர் பக்கம் போகும் போது தேசிகாவின் வூட்டுப் பக்கம் ஒரு எட்டு போய் விட்டுதான் வரும். முருகு மாமா அந்தப் பக்கம் போவதில்லை என்றாலும் நீலு அத்தை அடிக்கடிப் போய் வர ஆரம்பித்தது. அப்படி போகும் போதெல்லாம் தன் பங்குக்கு தேசிகாவின் மனசில் ஒண்ணு கெடக்க ஒண்ணு எதாச்சியும் ஊனி விட்டுத்தான் வரும். அத்தோடு அக்கம் பக்கம் முழுவதும் தேசிகாவைப் பற்றிய பேச்சைத்தான் கேட்டிருக்கின்றன லாலு மாமாவும் நீலு அத்தையும். "அவனே சரியான கேடிப் பயெ. அவனெ தாண்டுன கேடியா இந்தப் பொண்ணு இருக்கு. ன்னா பேச்சு பேசுது! ன்னாம்மா அடிச்சிப் புடிச்சி ஆம்பளண்ணும் பார்க்காம துண்டை தோளுல போட்டு முறுக்கி வுட்டுட்டு சண்டெ போடுது. பையஞ் சரியான முடிச்சவிக்கின்னா பொண்ணு சரியான மொள்ளமாரிதாம். முடிச்சவிக்கிக்கும் மொள்ளமாரிக்கும் சரியான பொருத்தாம்தாம்!" என்று பேசியிருக்கிறார்கள். சரிதான் கொடுத்த சாவி நன்றாகத்தான் வேலை செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சி ரெண்டு பேருக்கும்.
            மாப்பிள்ளைப் பையனும் முன்பு போல இல்லாமல் இப்போது ரொம்ப அடக்கத்தில் வந்த விட்டதாகக் கேள்வி. திருச்சிக்குப் போய் பார்த்துக் கொண்டிருந்த வேலையை நாகப்பட்டிணத்துக்கு மாற்றிக் கொண்டு அங்கே ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டார்கள். குடும்பமே இப்போது தேசிகாவின் கையில் வந்து விட்டதாகப் பேச்சு. எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருப்பது போலத்தான் தெரிந்தது. ஆம் தெரிந்தது. அவ்வளவுதான். உள்ளுக்குள் வேறு ஏதோ நடந்து கொண்டிருந்தது.
            தேசிகாவுக்குக் கல்யாணம் ஆகி எட்டு மாதத்துக்கு மேல் ஆகியிருக்கும். தேசிகா மண்ணெண்ணெயை ஊத்திகிட்டு பத்த வெச்சிகிட்டதா ஒரு நாள் செய்தி வருது. சொந்த பந்தம், ஊரு சனம் எல்லாம் அடிச்சி புடிச்சிகிட்டு வடவாதி மில்லுகாரரோட டிராக்டரைக் கொண்டு வந்து டிரக்கை அதுல மாட்டி அதுல கெளம்பிப் போனா மாப்பிள்ள வூட்டக்காரனுங்க முகத்துல எந்த பதற்றமும் இல்ல, சாவுக்கலையும் இல்ல. எவன் வூட்டுலயோ எழவு நடக்குற மாதிரி, "என்னான்னு தெரியல! ஏதுன்னு தெரியல! காலயில எழுந்திரிச்சிப் பார்த்தா ஒடம்பு மண்ணெண்ணய ஊத்திகிட்டு அப்டியே தீப்பொழம்பா அப்டியும் இப்டியுமா பொண்ணு ஓடுது. என்னா பண்றது ஏது பண்றதுன்னு தெரியாமல அணைக்கப் பார்த்தா அதுக்குள்ள எரிஞ்சி முடிச்சிடுச்சி!" என்கிறார்கள்.
            மண்ணெண்ணெயை ஊற்றிப் பற்ற வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவ்வளவு கோழை மனசு உள்ள பொண்ணா தேசிகா? சின்ன வயதில் முருகு மாமா தோளுக்கு மேலே தூக்கி விட சரியாக பஞ்சு மாமா முகத்தில் ஒண்ணுக்கு அடித்தப் பொண்ணாயிற்றே அது. அது நினைத்தால் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரையும் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொளுத்தி விடும் அளவுக்கு விவகாரம் பிடிச்சப் பொண்ணுதான் அது. அது எப்படி மண்ணெண்ணெயை ஊற்றிப் பற்ற வைத்திருக்கும்? என்பதே எல்லாருக்கும் கேள்வியாக இருக்கிறது. அப்படி பேசிகிட்டு இருக்கிறப்பயும் கூட்டத்துல ரெண்டு மூணு பேரு ரகசியமா ஒதுங்கி, "பஞ்சன் மேல ஒண்ணுக்கு அடிச்சுதுல இந்தப் பொண்ணு. அந்த வெனையத்தான் இப்டி மண்ணெண்ணெய்ல எரிஞ்சி அனுபவிக்கிறாப்ல ஆயிடுச்சி!" அப்டின்னும் பேசிக்குதுங்க.
            "பொண்ணு மண்ணெணெய்யை ஊத்தி பத்த வெச்சிகிட்டப்ப நீங்க எங்கடா இருந்தீங்க?" அப்டின்னு மாப்பிள்ளை வூட்டக்காரனுங்கள டிராக்டரோட டிரக்ல ஏறி வந்த நம்ம பக்கத்து ஆளுங்க கேட்டா, "இதோ இப்டி ரோட்டுப் பக்கமா வெளிலதாம் படுத்திருந்தேம்!" அப்டிக்கிறானுங்க. சாக்கடை அப்டியே குடலைப் போரட்டுற மாதிரி ஓடிட்டு இருக்கற ரோட்டுப் பக்கத்துல அவனுங்க எப்பிடி படுத்திருப்பானுங்கன்னு சந்தேகமாகவும் இருக்கு.
            மாப்பிள்ளக்காரன் பொண்ணோடதான படுத்திருப்பானேன்னு கேட்டால, அவேம் சீக்கிரமா எழுந்திரிச்சி டீ வாங்க கடைக்குப் போயிட்டதாச் சொல்றாங்க. அவன் வந்து பார்க்கிறப்ப பொண்ணு அப்படியே கரிக்கட்டையா எரிஞ்சிக் கிடக்கிறதா சொல்றாங்க.
            சரி பொண்ணு பத்தி வெச்சிகிட்டு அங்கயும், இங்கயும் ஓடுனதா சொல்றாங்களேன்னு அந்த வூட்டக்குள்ள புகுந்து பார்த்தா அதுக்கான அடையாளம் ஏதும் தெரியல. அப்படியே எரிஞ்சி ‍ஒரே எடத்துல கெடக்கிற மாதிரிதாம் கெடக்குது ஒடம்பு அப்படியே கரிக்கட்டைக் கணக்கா. ஒரு ஆத்திரத்துல மண்ணெண்ணெயை ஊத்தி எரிச்சிகிட்டாலும், ஒடம்பு எரியறப்போ எப்படியாவது பொழைச்சிக்கணும்ங்ற எண்ணம் மனசுக்கு வந்துடும். மனசுக்கு அவ்ளோ சீக்கிரத்துல சாகணும்ங்ற எண்ணம் வரவே வராது. அப்போ இந்த மனசு எப்படியாவது எரியறதிலேந்து காப்பாத்திக்கணும்னு இப்படியும் அப்புடியுமா ஓட வெச்சி அதுல இதுல அணைய வெச்சி தப்பிக்கிறதுக்கான வேலைக அத்தனையையும் பார்க்க வெச்சிடும். அவ்ளோ வைராக்கியமா எரியுற தீயில ஒடம்பை எரிய விட்டுடாது மனசு. ஒருவேளை அப்படியே மண்ணெண்ணெயை ஊத்திகிட்டு எரிச்சிகிட்டாலும் இந்த அளவுக்கா ஒடம்பு எரியுங்றதும் சந்தேகமாத்தான் இருக்கு. இது மண்ணெண்ணெயை ஊத்தி எரிச்ச மாதிரி தெரியல. பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய்னு எல்லாத்தியும் கலந்து ஊத்தி எரிச்சி வுட்ட மாதிரிதாம் தெரியுது. ஒண்ணு அடிச்சிப் போட்டு ஊத்தி வுட்டு எரிச்சி வுட்டுருக்கணும். இன்னொன்னு கட்டிப் போட்டு எரிச்சி வுட்டுருக்கணும். என்ன நடந்திச்சின்னு எரிஞ்சிப் போன தேசிகாவுக்கும், எரிச்சி விட்ட ஆசாமிங்களுக்குத்தாம் தெரியும். எரிஞ்சிப் போன தேசிகா வந்து எப்படி எரிஞ்சேங்றது சொல்லப் போறதில்ல. எரிச்சவங்களும் அதைச் சொல்லி மாட்டிக்க மாட்டாங்க.
            மாப்பிள்ளை வீட்டுக்காரனுங்க அவ்வளவு மனத்தாங்கலிலும் திடீரென்னு அடக்க ஒடக்கமாய் நல்லவனுங்க கணக்கா அமைதியா இருந்தது இதுக்குதானாங்ற சந்தேகமும் மனசுல ஒரு பக்கம் சொந்த பந்தங்களுக்கு ஓடிட்டுதாம் இருக்கு.
            "ஏம்டா பொண்ண கொல்லணும்னு முடிவு பண்ணவய்ங்களா! அடிச்சி தூக்குல தொங்க வுட்டுருந்தாலும் மனசு ஆறிருக்குமேடா! இப்டியா எரிச்சி கரிக்கட்டையா போட்டு வெச்சிருப்பானுங்க. ஏம்டா சோத்துல வெசத்த கிசத்த வெச்சுலாம் ஒங்களுக்குக் கொல்லத் தெரியாதாடா? எங்க கண்ணுக்குத் தெரியாம கொன்னுப் போட்டுட்டு பொண்ண காணும்னு கூட சொல்லியிருக்கலாம்டா! ஏம்டா இப்படிப் பண்ணீங்க! பெத்த வயிறு பத்தி எரியுதுடா இப்டி எரிஞ்சிக் கெடக்குற பொண்ண பார்க்கிறப்ப!" என்று ஓலமிட்டு அழுகிறது நீலு அத்தை.
            "இந்தாம்மா எங்கள ன்னம்மோ கொலகாரங்க மாரில்ல பேசுறே? ஒம் பொண்ணு மண்ணெண்ணெயை ஊத்திகிட்டு எரிஞ்சதுக்கு யார ன்னா சொல்றே? மரியாதி கெட்டுடும் பாத்துக்கோ!" என்கின்றனர் மாப்பிள்ள வூட்டுக்காரர்கள்.
            "பொண்ண எரிச்சிட்டு எங்களேயே மெரட்டுறீங்களாடா மயிரான்களா?" என்கிறது முருகு மாமா.
            "எரிச்சோம் கிரிச்சோம்னு சொன்னே அப்பொறம் நல்லாருக்காது பாத்துக்கோ!" என்று ‍எதிர்குரல் வந்து ரெண்டு பக்கமும் சண்டையாக ஆகும் போலிருந்தது நிலைமை.
            "சந்தேக மரணம்னு போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்தாதாம் சரிபட்டு வருவானுங்க!" என்கிறது செய்தி கேள்விப்பட்டு தஞ்சாவூரிலிருந்து வேக வேகமாக வந்த லாலு மாமா.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...