செய்யு - 167
இந்த உலகத்துல ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்.
ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசு. அதுதாம் இந்த உலகத்தோட இயற்கை போலருக்கு. ஒண்ணு போல
இன்னொன்னு இல்ல. இன்னொன்னு போல வேறொன்னு இல்ல. அச்சு அசலா ரெட்டப் புள்ளைங்களா
பொறக்குறதுங்களுக்குள்ளேயே வித்தியாசம் இருக்கத்தானே செய்யுது. ஒரு தாயி வயித்துல
பொறந்ததுலயே ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரிதானே இருக்கு. கிராமத்துல அஞ்சு வெரலும்
ஒண்ணா இருக்கான்னு இந்த விசயத்த அசால்ட்டா டீலு பண்ணிட்டுப் போயிட்டே இருப்பாங்க.
இப்போ எதுக்கு இந்த விசயத்தப் பத்தி பேசுறோம்னோ கேட்டா இந்த உலகத்துல பெருமாள்சாமி
மாதிரியான ஆளுகளும் இருக்காங்களான்னு கேட்டுடக் கூடாது பாருங்க. அதுக்குதாம். அவரு
ஒரு மாதிரியான ஆளுதாம். அந்த மாதிரியான ஆளுங்களைத்தானே பஞ்சாயத்து பண்றதுக்கு நம்ம
ஆட்களும் வரிஞ்சி கட்டிகிட்டுக் கூப்புடுறாங்க. அவங்களும் பஞ்சாயத்துக்கான ஆளுங்க அப்படிங்ற
மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிடுறாங்க. நாட்டுல நல்ல மனுஷன் எவன் இப்ப பஞ்சாயத்துப் பண்றான்.
ஊருல நாலு முடிச்சவிக்கிங்க, மொள்ளமாரிங்க கெடந்துட்டு அதுங்கதான பஞ்சாயத்துன்னா முன்னாடி
நிக்குது. அதுங்களுக்குத்தானே பய மக்களும் பயந்துகிட்டு சொல்றத கேட்டுக்கிட்டு வருதுங்க.
இந்தப் பெருமாள்சாமிக்கு ரெண்டு ஆம்பிளைப்
புள்ளைங்க அத்தோட ஒரு பொம்பளைப் புள்ளை. ஆளோட கேரக்டரைப் பத்தியெல்லாம் ஒண்ணும்
சொல்றதுக்கு இல்ல. எப்ப வேணாலும் எந்த வீடா இருந்தாலும் தொறந்த வூட்டுல நாயி கணக்கா
நொழைஞ்சிடுவாரு. தொறந்த வூட்டுல நொழைஞ்ச நாயி என்ன செய்யுமோ அத்தனையும் செஞ்சிடுவாரு.
அவரோட வூட்டுக்குள்ள அவருக்குப் பெரிசா மதிப்பில்ல. ஆனா ஊருக்குள்ள பாருங்க பெருமாள்சாமின்னா
'வந்துட்டான்டா ஜகஜ்ஜல பிரதாபன். எட்டுக்குடிய கெடுத்த எமகாதகன்'னு எழுந்திரிச்சி நின்னு
உச்சா போயிடுவாங்க.
ஊருக்குள்ள போக்கிரின்னாலும் குடும்பத்துக்குத்
தலைவனா செய்ய வேண்டிய காரியத்த செய்யத்தானே வேண்டிருக்கு. அதால கடமை தவறாம ரெண்டு ஆம்பிளைப்
புள்ளைங்களுக்கும் கல்யாணத்த பண்ணி வெச்சாரு. பொம்பளைப் புள்ளைக்கும் பண்ணி வெச்சாரு.
வழக்கமா பெருமாள்சாமி வேற வேற வூடுகள்ல பண்ற வேலைய சொந்த வூட்டுக்குள்ள பண்ண ஆரம்பிச்சாரு.
அதுல மூத்த மருமவ அவரோட கொடுமை தாங்க முடியாம மொதல்ல வூட்ட வுட்டு பொறந்த வூட்டுக்குப்
போயிடுச்சி. ஊருக்கே பஞ்சாயத்துப் பண்றவரு தம்மோட வூட்டுல ஒண்ணுன்னா வுட்டுடுவாரா?
யாரயும் தொணைக்கு வெச்சிக்காம சிங்கிளா போற சிங்கம் மாதிரி கிளம்பிப் போயி ஒத்த
ஆளா அதெ வலுக்கட்டாயமாக பஞ்சாயத்துப் பண்ணிக் கொண்டு வந்தாரு. வந்த பொண்ணு பத்து
நாளுக்குள்ள தூக்கு மாட்டிகிட்டு தொங்கிட்டு. என்னடா இது பெருமாள்சாமி வூட்டுக்கு
நேர்ந்த சோகம்னு ஊருக்கு வெசனமா போயிடுச்சி.
கொஞ்ச நாளுல மொத மருமகளுக்குப் பிடிச்ச
கிறுக்கு ரெண்டாவது மருமகளுக்குப் பிடிச்சிடுச்சின்னு ஊரு பேச ரெண்டாவது மருமகளும்
புகுந்த வூட்டை விட்டுப்புட்டு பொறந்த வூட்டுக்குப் போயிடுச்சி. பெருமாள்சாமிக்குதான்
ஏற்கனவே ஏகப்பட்ட பஞ்சாயத்து அத்தோட மொத மருமவ விசயத்துலயும் சொந்தக் குடும்ப விசயத்திலேயும்
பஞ்சாயத்துப் பண்ணி அனுபவமாயிடுச்சா! அந்த கெத்துல ரெண்டாவது மருமவளையும் கொண்டுட்டு
வந்துடலாம்னு மறுபடியும் சிங்கிளா கிளம்புனாரு. வழக்கமாக அவரு பஞ்சாயத்துக்குக் கெளம்புற
தொரனையே படுபயங்கரமா இருக்கும். பட்டைச் சரக்கை அடிச்சிட்டுதாங் கெளம்புவாரு. அதால
அவருக்கு பட்டசரக்குப் போக்கிரின்னு ஒரு பேரும் இருக்கு. பட்டசரக்கு இல்லன்னா பவுடரு
சரக்குதாம். இப்போல்லாம் யாரு பட்ட சரக்கு தயாரிக்கிறாங்க? டாஸ்மாக்கு வந்த பெற்பாடு
அத தயாரிச்சி குடிக்கிறதுலயும் சோம்பலு வந்துப் போயிடுச்சி மக்களுக்கு. சோம்பல பார்க்காம
சுறுசுறுப்பா காய்ச்சுனாலும் போலீஸூ வந்து அள்ளிகிட்டுப் போயிடுது. அதுவும் இல்லாம
நோகாம காச கொடுத்தா பாட்டில்ல சரக்க கொடுக்குறான்னு வாங்கிக் குடிச்சிட்டுப் போயிடுறானுங்க.
பெருமாள்சாமியும் கொஞ்ச நாளைக்கு டாஸ்மாக்கு சரக்கை அடிச்சிப் பாத்தாரு. நாக்குக்கு
ஏதோ விட்ட கொறை, தொட்ட கொறையா இருந்திருக்கு.
பட்டசரக்கு தயாரிக்கிற ஆளுங்களா பார்த்து
மொதல்ல பஞ்சாயத்து பண்ற கணக்கா ரவுசு வுட்டுப் பார்த்திருக்காரு. அதுக்குல்லாமா பட்டசரக்கு
தயாரிக்கிற ஆளுங்க அசருவானுங்க. 'போடா எஞ் பொங்கச் சோறுன்'னு வெரட்டாத கொறையா விரட்டியிருக்கானுங்க.
அதுவும் இல்லாம அவனுங்க டாஸ்மாக்கு வந்த பெறவு பட்டசரக்கு தயார் பண்ணி போலீஸூக்கு
விசயம் தெரிஞ்சிப் போயி, கேஸாயி இப்பதாம் திருச்சி ஜெயிலு வரைக்கும் போயிட்டு வந்திருக்கானுங்க.
அந்தக் கோபம் வேற அவனுங்களுக்கு. பார்த்தாரு பெருமாள்சாமி டக்குன்னு காலுலயே விழுந்திருக்காரு.
பட்டசரக்கு தயார் பண்ற ஆளுங்களுக்கு என்னவோ போல ஆயிப் போச்சி. பெருமாள்சாமிய கூப்பிட்டு
வெச்சி, "ஒரு தடவே முன்னால ஒன்னய வெச்சி தயாரிச்சிக் காட்டுறோம், கத்துகிட்டு
நீயே தயாரிச்சிக்கனும். மறு தபா வந்தெல்லாம் தொந்தரவு தரக் கூடாது"ன்னு சொன்னத
ஏத்துகிட்டு, பாடஞ் சொல்ற வாத்தியாரு முன்னாடி பவுசா நின்னு கத்துக்குற கணக்கா குனிஞ்சி
நின்னு கத்துகிட்டாரு.
கத்துகிட்டு பெருமாள்சாமி கொஞ்ச நாளைக்கு
தாம் மட்டுமே தயார் பண்ணித்தான் குடிச்சிகிட்டு இருந்தாரு. இவரயொடுத்த கேஸூங்க அந்தந்த
ஊருல நாலைஞ்சு இருக்கத்தான செய்யும். அதுங்க
இவரு பட்டசரக்கு தயாரிக்கிற சேதி தெரிஞ்சதும் ரகசியமா பெருமாள்சாமிய பிடிக்க ஆரம்பிக்க
இது தயாரிக்கிறதுல இவ்வளவு காசு பணமாங்ற ஆசை அவரைப் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சி. இந்த
பட்டசரக்குல கொஞ்சம் வித்தியாசமா பேட்டரி செல்லு உடைச்சிப் போட்டு, சாரைப்பாம்ப பிடிச்சி
வெட்டிப் போட்டு அதையெல்லாம் போட்டுக் காய்ச்சுனா அந்த சரக்கோட கிக்கே வேற லெவல்ல
இருக்குமாம். இதெ எப்பிடியோ மோப்பம் பிடிச்சுகிட்டு ஊருல கெடக்குற பேட்டரி செல்லுகளையெல்லாம்
பசங்கள வுட்டு ஒண்ணுக்கு ரெண்டா காச கொடுத்து பொறுக்கி வெச்சாரு பெருமாள்சாமி. பெருமாள்சாமிட்ட
பேட்டரியோட போனா நல்ல காசுன்னு பசங்களுக்குத் தெரிஞ்சிப் போயி அவருக்கு பிள்ளைங்க
மத்தியில பேட்டரி பெருமாள்சாமின்னு பேரு வந்துப்
போச்சி.
கொஞ்சம் வெடலைப் பசங்களா பார்த்து எங்க
பார்த்தாலும் சாரப் பாம்ப விடாதே பிடின்னு சொன்னதுல ஊருல ஒத்த சாரைப் பாம்பு இல்லாம
அத்தனையும் பிடிச்சாச்சி. இதால வெடல பசங்க மத்தியில பெருமாள்சாமிக்கு சாரைக்கெடா பெருமாளுன்னு
பேரு உண்டாயிடுச்சி.
இப்படி பேட்டரி செல்லு, சாரைப்பாம்புன்னு
போட்டு சரக்குக் காய்ச்ச ஆரம்பிச்சதுல நாலா பக்கத்திலேர்ந்தும் ஆளுங்க பெருமாள்சாமிய
தேடி வர ஆரம்பிச்சிட்டாங்க. இது என்னடா பெருமாள்சாமியத் தேடி ஊரு ஊரா பஞ்சாயத்துப்
பண்ணி வைக்கச் சொல்லி ஆளுங்க வந்தா எதுக்குடா ஊருல போலீஸூ ஸ்டேஸனு இருக்கணும்னு போலீஸூ
மோப்பம் பிடிக்க ஆரம்பிச்சி இவரு பட்டசரக்கு தயார் பண்றத கண்டுபிடிச்சிடுச்சி. கண்டுபிடிச்சதுக்குப்
பிறவு போலீஸூ சும்மா இருக்குமா. ஸ்டேஸன்ல அன்னிக்கு இருந்த சிறப்புப் பிரிவு எஸ்.ஐ.
ரெண்டு கான்ஸ்டபுள விட்டு கொண்டுட்டு வரச் சொல்லியிருக்காரு. ரெண்டு கான்ஸ்டபுள பார்த்ததும்
பெருமாள்சாமி வெட்டருவாளா தூக்கிட்டு "ஒங்கள கொன்னே புடுவேம்டா!" ன்னு வெரட்டியிருக்காரு.
ரெண்டு கான்ஸ்டபுளும் தப்பிச்சோம் பொழைச்சோம்னு ஓடி வந்து ஸ்டேஷன்ல சொன்னா சிறப்புப்
பிரிவு எஸ்.ஐ.க்குத் தாங்க முடியாத கோபம். அவரு நாலைஞ்சு போலீஸ்கள ஜீப்புல போட்டுகிட்டு
போயி நின்னா அதெ வெட்டருவாளா தூக்கிக் காட்டுறாரு பெருமாள்சாமி. பார்த்தாரு எஸ்.ஐ.
துப்பாக்கியத் தூக்கிக் காட்டச் சொல்லிட்டாரு.
"எதா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்ங்யா!"ன்னு
பெருமாள்சாமி வெட்டருவாளைத் தூக்கிப் போட்டுகிட்டு ரொம்ப தெனாவெட்டா எஸ்.ஐ.கிட்ட
வந்து பேசுறாரு பாருங்க.
"நம்மள பகைச்சுக்க வாணாங்கய்யா! ஊருக்குள்ள
நமக்குச் செல்வாக்கு அதிகம். ஒங்க கெரவம் போற பாதையில நீங்க போங்க. நம்ம கெரவம் போற
பாதையில நாம்ம போயிக்கிறேம். பாதை மாறுனா வரலாறு மாறுங்கய்யா. ஒங்க டிபார்ட்டுமென்டுல
நமக்குத் தெரியாத ஆளுன்னு கெடையாது. ஒண்ணுகெடக்கு ஒண்ணு ஆயிப் போச்சின்னா நாம்ம பொறுப்புக்
கெடையாது. ஐயாவுக்குக் கொழந்தை குட்டிங்களாம் இருக்கும். ஒரு உசுருக்குக் கூட உத்திரவாதம்
நம்மாள தர முடியாது பாத்துக்குங்க. பேயாம போயிட்டே இருக்குங்க. ஒங்க துப்பாக்கிச்
சுடுற நேரத்துக்குள்ள கிட்ட வந்து அருவாளால போட்டுத் தள்ளிபுட்டு போயிட்டே இருப்பேம்!"
அப்பிடின்னுருக்காரு.
எஸ்.ஐ. கொஞ்சம் பதட்டம் ஆனது போல காட்டிகிட்டு,
"தப்பா நெனைச்சுகாதீங்க பெருமாளுசாமி சாரு. கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கு மட்டும்
வந்துட்டு ஒரு காயிதம் எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுங்க!" அப்டின்னுருக்காரு.
"அந்த பயம் இருக்கணும்!"னு சொல்லிகிட்டே
போலீஸ்காரங்களோட விசயம் தெரியாம ஸ்டேஷன் போயிருக்காரு பெருமாள்சாமி. அங்க வெச்சி
போலீஸூ வெளுத்து எடுத்துருக்கு. கேஸைப் போட்டு கோர்ட்டுல ஆஜர் பண்ணி ஏற்கனவே ஊருல
பட்டசரக்கு காய்ச்சிட்டு இருந்தவனுங்கள திருச்சி சிறைக்கு அனுப்புன மாதிரி இவரையும்
அனுப்பி வெச்சிடுச்சிட்டாங்க போலீஸூல.
ஒம்போது மாசம் வரைக்கும் அங்கேயே கெடந்துட்டு
ஏதோ வக்கீல வெச்சி அங்கேயிருந்து வெளிய வந்தவருதாம் பெருமாள்சாமி. அதுக்கு அப்புறம்
அவருக்கு மட்டும் பட்டசரக்குக் காய்ச்சிக்கிறதுன்னு ஒரு ஒழுங்கு முறையை வகுக்குத்துகிட்டாரு.
சமயத்துல இந்தப் பட்டசரக்க காய்ச்சிறதுக்கான சரக்குகள சேகரம் பண்றது பெரும்பாடா போயிடும்.
அது மாதிரி நாளுல குடிக்காம இருக்க முடியாதுன்னுதான் காரைக்காலு வரைக்கும் போயி பவுடரும்
வாங்கி வெச்சிருக்காரு இந்தப் பெருமாள்சாமி. பவுடரை வெச்சி இன்ஸ்டான்ட் காபி மாதிரி
இன்ஸடான்ட் சரக்க தயார் பண்ணி "சொந்தமா தயாரிச்சிக் குடிக்குறதுல இருக்குற திருப்தியே
தனிதாம்டா சாமி!"ன்னு குடிச்சுக்குவாரு. இந்த சரக்கு விசயத்துல சரக்கு அடிக்கிற
ஒவ்வொருத்தனும் இப்படித் தற்சார்போட இருக்கணுங்றது அவரோட பொதுநல ஆசையும் கூட. அது
சரி! ரெண்டாவது மருமவளுக்குப் பஞ்சாயத்து வைக்கப் போற நேரத்துல பட்டசரக்கப் பத்தி
இவ்ளோ பேசிப்புட்டோம் பார்த்துக்குங்க. நேரா விசயத்துக்கப் போயிப்புடுவோம்.
ரெண்டாவது மருமவளுக்கான பஞ்சாயத்துப் பண்ற
நாள குறிச்சிகிட்ட பெருமாள்சாமி பட்டசரக்கா அடிச்சிட்டுப் போறதுங்கற முடிவுல ராத்திரி
முழுக்க உட்கார்ந்து தயார் பண்ணித்தான் அடிச்சிட்டுக் கிளம்புறாரு. இதுக்குன்னே அடுப்பாங்கரை
ஓரமா அவரு தயார் பண்ணியும் வெச்சிருக்காரு. பேட்டரி செல்லு, சாரைப் பாம்பு துண்டம்லாம்
போட்டு நல்லா காய்ச்சின சரக்கு சும்மா கிக்கு அவருக்கு ஏறுது. ரெண்டாவது மருமவ வூட்டுல
போயி பழைய பஜாஜ் ஸ்கூட்டருல எறங்குன வேகத்துக்கு ரவுசை ஆரம்பிச்சிட்டாரு. ஊரு கூடி
வந்து ரவுசு பண்ற கணக்கா ஒத்த ஆளா இவரு பண்ற ரவுசைப் பார்த்துட்டு பொண்ணு வூட்டுக்காரனுங்க
பொண்ணை ரகசியமா கூப்பிட்டு வுட்டு ஏதோ சொல்லிவுட்டுட்டு, பெருமாள்சாமியப் பார்த்து,
"ஒங்க வூட்டுப் பொண்ணு நீங்க அழச்சிட்டுப் போங்க"ன்ன அனுப்பி விடுறானுங்க.
இவரு பின்னாடி ஸ்கூட்டருல உட்கார வெச்சி ரெண்டாவது மருமவள அழைச்சிட்டு வாராரு. அழைச்சிட்டு
வாராருன்னா எப்பிடி? ரோட்டுல பள்ளமா இருக்குற எடமா பார்த்து அதுல வுட்டு வுட்டு எறக்கி
ஏத்திகிட்டு, வேகத்தடை வர்றதுக்கு முன்னாடியே நாலைஞ்சு சடேன் பிரேக்க போட்டு, வேகத்தடை
இல்லாத எடத்திலயும் அங்கங்கே பிரேக்கைப் போட்டு ஒரு மார்க்கமாத்தான் அழைச்சிட்டு வாராரு.
வடவாதி போலீஸ் ஸ்டேஷன்கிட்ட வர்றப்ப மருமவப்
பொண்ணு, "மாமா! கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க. ரொம்ப நேரமா முட்டிகிட்டு வருது.
இந்தக் கருவக் குத்து பக்கமா ஒதுங்கிட்டு வாரேம்!" அப்பிடிங்குது.
"வூடு பக்கத்துலதான போயிடுலாம்!"ங்றாரு
பெருமாள்சாமி.
"அது வரிக்கும் தாங்காது மாமா! வண்டி
நாறிடுங்!" அப்பிடிங்கது மருமவ.
"செரி! எந்தப் பக்கம் போகப் போறே?"
அப்டிங்றாரு பெருமாள்சாமி.
"வூடு வரைக்கும் கொஞ்சம் பொறுங்க!"அப்பிடின்னு
மருமவ சொன்னதுதாம் தாமசம். பெருமாள்சாமிக்கு ஜிவ்வுன்னு ஏறிப் போவுது.
"சுத்த பத்தம் முக்கியம். போயித்
தொலஞ்சிட்டு வா!" அப்டின்னு ரோட்டு ஓரமா மருமவ போற தெசையே பார்த்துட்டு நிக்குறாரு
பெருமாள்சாமி. நிக்குறாரு நிக்குறாரு பெருமாள் சாமி. அரை மணி நேரம் ஆகியும் ஆளக் காணொம்.
சரி உள்ளே புகுந்தே பாத்திடுவோம்னு இவரு நெனைக்கிறப்ப ரெண்டு போலீஸூகாரங்க வந்து,
"கொஞ்சம் ஸ்டேஷனு வரைக்கு வாரீங்களா! இல்லே ஐயாவ அழச்சிட்டு வாரணுமா?" அப்டின்னு
கேட்குறாங்க.
"ஏம் மருமவப் பொண்ணு இஞ்ஞ கருவக்காட்டுப்
பக்கமா ஒதுங்கியிருக்கு. அது வாரட்டும். அழச்சிட்டுப் போயி வூட்டுல வுட்டுட்டு வாரேம்.
எனக்கென்ன ஸ்டேஷன்னா பயமா?" அப்பிடிங்றாரு பெருமாள்சாமி.
"யோவ்! ஒம் மருமவ பொண்ணுதாம்யா
ஒம் மேல புகாரு பண்ணியிருக்கு! வாய்யா ஸ்டேஷனுக்கு!"ன்னு போலீஸூகாரங்க சொன்னதும்
ஒண்ணும் சொல்ல முடியாம ஸ்டேஷனுக்கு வர்றாரு பெருமாள்சாமி.
சரி கருவக்காட்டுப் பக்கம் போன மருமவப்
பொண்ணு அப்பிடி என்ன பண்ணுனான்ன யோசனை பெருமாள்சாமியோட மனசுல ஓடுது.
கொஞ்சம் மறைவா போனதும் அந்த மருமவப்
பொண்ணு அப்பிடியே போலீஸ் ஸ்டேஷன் பக்கமா நடந்து போயி பெருமாள்சாமி மேல பாலியல் புகாரு
பண்ணிடுச்சி.
நம்ம வடவாதி ஸ்டேஷன்ல மாமனாரு மேல மருமக
கொடுத்துப் பதிவான முதல் பாலியல் புகாரு அதுதாம். நீங்க நெனைக்குறது போல பொய்யான
வழக்குலாம் இல்ல அது. மொத மருமவப் பொண்ணு இதெ மாதிரி பொறந்த வூட்டுக்குப் போயி
திரும்ப வடவாதி வந்து தூக்கு மாட்டிகிட்டதா சொன்னோம்ல முன்னாடி. அதுக்குக் காரணமே
இதுதாம். இந்த ரெண்டாவது பொண்ணு கொஞ்சம் தைரியமா இப்பிடி ஒரு முடிவு எடுத்ததால விசயம்
வெளியே தெரிஞ்சிது. அந்தப் பொண்ணு ஸ்டேஷன்ல உக்காந்து பேசப் பேசத்தாம் தெரியுது ரொம்பதாம்
பாலியலு தொந்தரவு கொடுத்திருக்காரு மனுஷன்.
அதுக்குள்ள பொண்ணு வூட்டுக்காரனங்களும்
பேசி வெச்சிகிட்டது மாதிரி ஸ்டேஷனுக்கு வந்திட்டாங்க. வசமாக சிக்கிகிட்டாரு பெருமாள்சாமி.
அதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு மூணு மாசம் போயி ஜெயிலுக்குள்ள கிடந்தாரு. ஏற்கனவே
போலீஸ மிரட்டுன கோபத்துல இந்த புகாரும் சேர்ந்ததுல அவர மிதிமிதின்னு மிதிச்சுதாம்
போலீஸ் ஜெயிலுக்குள்ள தள்ளினுச்சிங்றத ஒங்களுக்குச் சொல்ல வேண்டியதில்ல.
ஒரு வழியா ஜெயில்ல வெளியில வந்த பெருமாளுசாமிய
புள்ளைங்க ரெண்டு பேரும் வூட்டுக்கு வந்ததும் வாரதுமா போட்டு நெம்பி சுளுக்கு எடுத்தானுங்க.
இனி இந்த மனுஷனோட ன்னா வாழ்றதுன்னு அவரோட பொண்டாட்டி பையனுங்க ரெண்டையும் அழைச்சுகிட்டு
அதே தெருவுல ஒரு வூட்டப் பிடிச்சி தனியா போயிடுச்சி. ரொம்ப நாளு அதுக்கு அப்புறம்
தனியாத்தான் கெடந்தாரு பெருமாள்சாமி. சோறு தண்ணிக்கு ரொம்பவே செரமப்பட்டுப் போனாரு.
ஆனா அவரு நேரம் பாருங்க. அவரோட பொண்ணு புருஷனோட வாழப் பிடிக்காம வாழ வெட்டியா திரும்பி
வந்து அவரோட தங்கிகிச்சி. அதுக்கு அப்பான்னா பிரியம். அதால அம்மா, அண்ணன்களோட தங்காமா
அப்பாவோட தங்கிடுச்சி. தங்கச்சி தங்களோட வாரணும்னு அதுக்கும் சேர்த்து அண்ணங்காரனுங்களான்ன
பெருமாள்சாமியோட புள்ளைங்க ரெண்டு பேரும் வந்து பெருமாள்சாமிய போட்டுப் புரட்டி எடுத்தானுங்க.
சொந்தப் புள்ளைங்களே அடிக்கிறப்ப ஊருக்கே பஞ்சாயத்து வைக்கிற அவரு யாருட்ட போயி பஞ்சாயத்து
வைக்க முடியும்? ஆச்சா போச்சான்னு பாய்ஞ்சுப் பாத்தாரு. அருவாள எடுத்து வெட்டிப்புடுவேன்னு
மெரட்டிப் பார்த்தாரு. பையன்ங்கிட்ட பாச்சா பலிக்காம அடிய வாங்கிக்கிறத தவிர வேற வழியில்லாமப்
போயிடுச்சி. கடைசியா பொண்ணுக்காரி வந்து, "இதுல நீங்க ஏம்டா தலையிடுறீங்க! எம்
அப்பன் வூட்டுலதாம்டா நானு இருக்கேம். அதுல என்னடா ஒங்களுக்கு? போயி பொழைக்கிற வழியப்
பாருங்கடா போக்கத்தப் பயலுங்களா!" அப்பிடின்னு சொன்னதும் அவனுங்க தங்கச்சிக்
காலுல விழாத கொறையா அழுது பார்க்கிறானுங்க. எங்க கூட வந்திடுன்னு கெஞ்சிக் பாக்குறானுங்க.
ம்ஹூம்! அவனுங்க நெனைக்கிற மாதிரி நடக்குறதா தெரியல. பொண்ணு உறுதியா வார மாட்டேன்னு
சொன்னதும் வேற வழியில்லாம அவனுங்களும் வுட்டுட்டு வந்துட்டானுங்க.
எவ்வளவோ அடிகளை இப்பிடி சொந்தக் குடும்பத்துல
வாங்குன பெருமாள்சாமியோட உருவத்தப் பத்திச் சொல்லாமலே இவ்வளவு சொல்லுற மாதிரி ஆயிடுச்சே!
அவரோட உருவத்தையும், அவரு இருக்குற வாழிடத்தையும் கொஞ்சம் பாத்துப்புடுவோமே!
*****
No comments:
Post a Comment