இந்தப் பெத்தவங்க கொழந்தைகளா இருந்தப்போ
அவங்க பெத்தவங்களுக்கு அப்படிதாம் இருந்திருப்பாங்க. இருந்தாலும் அவங்க இப்போ பெத்தவங்களாக
ஆயிட்டதால அவங்களும் அவங்க பெத்தவங்க எப்புடி இருந்தாங்களோ அப்படியே ஆயிட்டாங்க.
இந்தப் பெத்தவங்கக் காலத்துல அவுங்க வீடு
தங்காம ஊரு சுத்துறதுன்னு, வெளையாட்டுன்னு அவங்களப் பத்தி அவங்கள பெத்தவங்க கவலைபட்டாங்களாம்.
அவுங்க புள்ளைய வளர்த்தக் காலத்துல பேட்டையும்,
பந்தையும் தூக்கிட்டு சதா சர்வ காலமும் இப்புடிக் கிளம்பிடுறானுவோளேன்னு அவங்க புள்ளைங்கற
நெனைச்சிக் கவலைப்பட்டிருக்காங்க.
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கேபிள் டிவி
வந்ததுக்கு அப்புறமா பெத்தவங்களுக்கு பிள்ளைக இப்படி எந்நேரமும் டிவியைப் பார்த்துகிட்டே
உட்கார்ந்துக்குதேன்னு கவலையா இருந்திருக்கு. அதால பத்தாவது பனிரெண்டாவது படிக்குற
பிள்ளைங்க வீட்டுல டிவியைப் பத்திரமா பீரோலுக்குள்ள வெச்சி பூட்டுன சம்பவமெல்லாம்
நடந்திருக்கு.
இப்போ பாருங்க! எந்நேரமும் புள்ளைங்க
ஸ்மார்ட் போன்னு சொல்லப்படுற திறன்பேசிய வெச்சிகிட்டு அதுலயே காலத்துக்கும் கெடக்கிறதா
பெத்தவங்களுக்குக் கவலை. இந்தத் திறன்பேசிய தூக்கிப் போட்டுட்டு புள்ளைங்க கொஞ்சம்
ஓடி ஆடி விளையாண்டா தேவலாம்னு நினைக்குறாங்க பெத்தவங்க. இதே பெத்தவங்கதான் ஒரு காலத்துல
ஓடி ஆடி ஊரு சுத்தி புள்ளைங்க விளையாண்டப்பா உருப்படாமா போயிடுவாங்களோன்னு கவலையும்
பட்டாங்க.
காலம் மாற மாற கவலைகளோட வடிவமும் மாறிகிட்டே
இருக்கு. எந்தக் காலம் வந்தாலும் பெத்தவங்களுக்குப் புள்ளைங்களப் பத்தி கவலைப்படாம
இருக்க முடியாது. நுட்பமா பார்த்தீங்கன்னா பிள்ளைங்கள பத்திக் கவலைப் பட்டதாம் அவங்களுக்கு
ஒரு மனநிறைவு. இப்பிடிக் கவலைபடுறதுல எல்லாம்மா மனநிறைவு காண்பாங்கன்னு கேட்காதீங்க.
உண்மை அதுதான். அதெ அவங்க அக்கறை அப்படிங்ற வார்த்தையால சொல்லிப்பாங்க.
இந்த திறன்பேசியில பிள்ளைங்க மூழ்கிக்
கிடக்கிறத நல்லதா பார்க்கிறதா? கெட்டதா பார்க்கிறதா?ன்னு கேட்காதீங்க.
பிள்ளைங்களோட சுபாவம் அப்படித்தான். எதாவது
ஒண்ணுல மூழ்கித்தாம் கெடக்கும். அக்கறையோட அதுங்களோட பேச்சுக் கொடுத்து இறங்குனாத்தாம்
அதுல ஒரு மாற்றம் ஏற்படும். முன்னாடி காலத்துல பெத்தவங்க பிள்ளைங்க லெவலுக்கு இறங்கிப்
பேச மாட்டாங்றது ஒரு கொறைன்னா, இப்போ காலத்துக்கு பிள்ளைங்களோட பேச பெத்தவங்களுக்கு
நேரமே இல்லைங்றது ஒர குறையா போயிட்டு இருக்குது. குறைய நம்ம மேல வெச்சிகிட்டு பிள்ளைங்கள
குறை சொல்லக் கூடாது பாருங்க.
பிள்ளைங்களா இருந்தாலும் பெரியவங்களா இருந்தாலும்
அணுக்கமா உட்கார்ந்துகிட்டு அதுகள புரிஞ்சிகிட்ட மாதிரி பேசுனா அந்தப் பேச்சைத்தான்
புள்ளைங்க கேட்க நினைக்குமே தவிர திறன்பேசிய பார்க்காதுங்க. அதுல முக்கியமானது அணுக்கமா
அதுகள புரிஞ்சிகிட்ட பேசுற மாதிரி, அதுகள புரிஞ்சிக்கிற அளவுக்கு நாமளும் அதுகள பேச
விட்டுக் கேட்கணும். நாம்ம பாட்டுக்கு ஒன் வே கணக்கா பேசிகிட்டே இருந்தா புள்ளைங்க
எழுந்து ஓடியே போயிடும். அப்புறம் போயே போச்சின்னு கவலைப்பட முடியாது.
மத்தபடி ஒவ்வொரு காலத்திலயும் புள்ளைங்க
ஏதுலயாவது ஒண்ணுல மூழ்கித்தான் கிடக்கும்.
ஊரு சுத்துறதயும் விளையாடுறதையும் டிவி
வந்து கெடுத்துச்சின்னா, டிவி பார்க்கிறதை திறன்பேசி வந்து கெடுத்திருக்கு. இதுவும்
நிரந்தரமில்ல. நாளைக்கு திறன்பேசி பார்க்கிறதையும் எதாவது வந்து கெடுக்கத்தான் செய்யும்.
ஆனா பாருங்க! நாமாளும் புள்ளைங்களும் ஒருத்தரையொருத்தர் புரிஞ்சிகிட்டு அணுக்கமா உட்கார்ந்து
பேசுறதை எது வந்தும் கெடுக்க முடியாது!
*****
No comments:
Post a Comment